எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய சுவிட்சர்லாந்து, ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரத்தப் புற்றுநோய்க்கு வித்திடும் அறிகுறிகளை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும்.
எலும்புகளின் மையத்தில் உள்ள மென்மையான திசுவே எலும்பு மஜ்ஜை என்றழைக்கப்படுகிறது. இது ரத்தச் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. ரத்த சோகை, தொற்றுநோய்கள், கட்டுப்பாடற்ற ரத்தப் போக்கு ஆகியவற்றின் காரணமாக எலும்பு மஜ்ஜையில் சிக்கல்கள் ஏற்படும். எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக ரத்தப் புற்றுநோய் ஏற்படக்கூடும். ஆனால், எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ரத்தப் புற்றுநோய் தீவிரம் அடைந்த பிறகே அதற்கான அறிகுறிகள் தென்படும். தீவிரம் அடைந்த பிறகு சிகிச்சை பலனளிக்காமல் போகக் கூடும்.
ஆனால், தற்போதைய நவீன ஆய்வுகளின் காலகட்டத்தில் எலும்பு மஜ்ஜையில் ரத்தப் புற்றுநோய்க்கு வித்திடும் நுட்பமான மாற்றங்களுக்கான அறிகுறிகளைக் கூட பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்க முடியும் என சுவிட்சர்லாந்து, ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக சையின்ஸ்டெக்டெய்லி (Sciencetechdaily) தெரிவித்துள்ளது. எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை தெரிந்துகொள்ள ஆழமான மரபணு ஆய்வுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய மூலக்கூறு விவரங்களை கண்டறிய வேண்டும். இதன் மூலம் மருத்துவ ஆய்வகங்களில் மிக தாமதமாக தெரிந்துகொள்ளக் கூடிய அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
உடல் உறுப்புகளின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு இணைப்பு திசு செல்கள், நோயெதிர்ப்பு செல்களின் தாக்கம் எவ்வாறு செயல்படுகின்றன என்று புரிந்துகொள்வது என்பது நோய் தடுப்பு சிகிச்சைக்கு உதவி புரிவதாக இருக்கும். எலும்பு மஜ்ஜையை பாதுகாக்க இரும்பு சத்து, புரதம், வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டசத்துகள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். புகைபிடித்தல், மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிப்பதுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.