அமெரிக்கா
அமெரிக்கா முகநூல்
ஹெல்த்

பால் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ்? உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சில தினங்களுக்கு முன் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

பறவைக்காய்ச்சல்

முன்னதாக, அமெரிக்காவில் உள்ள கோழிகள் மற்றும் பசுக்களுக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், பசும்பாலிலும் இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் பச்சையாக பாலை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களில் உள்ள 29 பண்ணைகளில் இருக்கும் கோழிகள் மற்றும் மாடுகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பசு மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்5என்1 வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், “கறந்த பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவது பாதுக்காப்பது. கறந்த பாலில் இருக்கும் வைரஸ்களை அழிக்க வேண்டியது அவசியம்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சலுக்கான வைரஸ் முதன்முதலில் தோன்றியது எங்கு?

1996 ஆம் ஆண்டும் சீனாவில்தான் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரினம் அல்லது அவற்றின் எச்சங்கள் மூலமாக நேரடி தொடர்பு ஏற்பட்டால் இத்தொற்று மனிதர்களுக்கும் ஏற்படும். இருப்பினும் மனிதர்களிடமிருந்து மனிதருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என்பதற்கான ஆதாராம் தற்போது வரை கிடைக்கப் பெறவில்லை.