Lancet Global Health ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கையின் மூலம் இந்தியாவில் 10இல் நான்கு நீரிழுவு நோயாளிகளுக்கு தாங்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகம் ஹார்வார்ட் டி.ஹெச். சான் பொதுசுகாதாரப் பள்ளி மற்றும் மும்பையைச் சேர்ந்த மக்கள்தொகை அறிவியல்களுக்கான சர்வதேச மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 45 வயதைக் கடந்த 57,610 இந்தியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
45 வயதைக் கடந்த இந்தியர்களில் 20 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. ஆண்கள், பெண்கள் இருவரும் சமமான அளவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரண்டு மடங்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றில் கிராமவாசிகளுக்கும் நகரவாசிகளுக்கும் இடையில் மிகப் பெரிய அளவிலான வேறுபாடுகள் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
உலகில் 20 முதல் 79 வயதுடைய நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் மூன்று விழுக்காடு உயிரிழப்புகள் நீரிழிவு தொடர்பான காரணங்களால் நேர்கின்றன. இவை 2019 ஆண்டு கணக்குகள்தாம். இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
எந்த ஒரு நோய்க்கும் விரைவான கண்டறிதல் மிகவும் அவசியமானது. குறிப்பாக நீரிழிவு போன்ற நோய்களை விரைவாகக் கண்டறியத் தவறினால் பல தீவிர உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்திவிடும். உயிருக்கும் ஆபத்து நேரலாம். எனவே விரைவான கண்டறிதலை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவப் பரிசோதனைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். நோயைக் கண்டறிந்த பிறகு உரிய சிகிச்சைகளை மேற்கொள்வது, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற அறிவுரைகளை கட்டாயமாகப் பின்பற்றுவது, போன்றவை நீரிழிவு நோயின் தாக்கங்களை குறைத்து ஆரோக்கியமான வாழ்வுக்கும் ஆயுள் நீட்டிப்புக்கும் உதவும். நீரிழிவு நோய் மருந்துகளும் எளிதாகவும் அனைத்து பிரிவினருக்கும் உகந்த விலையிலும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.