உடல் பருமன் முகநூல்
ஹெல்த்

இந்தியா| 20% மக்கள் உடல் பருமனால் பாதிப்பு.. தேசிய ஆய்வு அதிர்ச்சி தகவல்.. எதிர்கொள்வது எப்படி?

இந்தியாவில் அதிகரித்துவரும் உடற்பருமன் பிரச்சனை... ஆய்வுகள் சொல்வது என்ன?

PT WEB

இந்தியாவில் 20 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் உடல் பருமன் பிரச்னையால் தவித்து வருவதாக தேசிய அளவிலான ஆய்வுகள் கூறுகின்றன. உடல் பருமன் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது? என பார்க்கலாம்.

அண்மையில் தேசிய குடும்ப நல ஆய்வுகளை மேற்கொண்ட மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை, அதுகுறித்த அறிக்கையை வெளியிட்டது. இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் உடல் பருமன் பிரச்னையுடன் இருப்பதாக குறிப்பிடுகிறது அந்த புள்ளி விவரம். அதாவது, நாடு முழுவதும் 24 விழுக்காடு பெண்களும், 23 விழுக்காடு ஆண்களும் உடல் பருமன் பிரச்னையுடன் இருப்பதாகக் கூறுகின்றன அந்த ஆய்வின் முடிவுகள்.

உடல் பருமன்

இந்த அளவுக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது என்றால், இதைத் தீர்க்க மருந்துகள் இல்லையா என்ற கேள்விகள் எழலாம். மருந்துகள் உள்ளன, சந்தையிலும் கிடைக்கின்றன. இந்த மருந்துகள் பொதுவாக, இரும்புச் சத்து, ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த உதவுகிறது. வயிறு வெறுமையாக இருப்பது போன்ற உணர்வுக்குத் தடையாக இருந்து, நிறைவுபெறும் உணர்வை விரைந்து கொடுக்கிறது.

ஆனால், எடை குறைப்புக்கான மருந்துகள், இந்தியாவில் அதிக அளவில் விற்பதில்லை என்கின்றன மருந்து நிறுவனங்கள். அதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் காரணம், வாந்தி - மயக்கம், வயிறு மற்றும் குடல் கோளாறுகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவது. மருந்தை எடுத்து பழகிவிட்டு நிறுத்தினால், மீண்டும் எடை அதிகரிக்கும். மற்றொன்று உடல் பருமன் மருந்துகளுக்காக, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகுவது. பக்க விளைவுகள், செலவுகள் காரணமாகவே, உடல் பருமனுக்கான மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்வதில்லை.

உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில், டென்மார்க்கில் எடை குறைப்புக்காக மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் 50 விழுக்காடு பேர், ஓராண்டுக்குள் மருந்தை நிறுத்தி விட்டது தெரியவந்தது.

உடற்பயிற்சி

உடல் பருமனை எப்படி குறைப்பது..

உடல் எடையைக் குறைக்க, மருந்துகளை எடுத்துக் கொள்வது மட்டுமே தீர்வு இல்லை. அவற்றை மட்டுமே நம்பி இருக்காமல், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை நீடித்த மன உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மருந்து என்பது உடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு உதவி தான். ஆனால் உடல் நலம் ஒரே நாளில் கிடைத்து விடாது. அது ஒரு பயணம். வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.