”தமிழன்தான் உலகின் ஆதிக்குடி” - தமிழர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தும் ஆக்ஸ்ஃபோர்ட் அறிக்கை !
சென்னனூர் அகழாய்வில் கிடைத்த ஒவ்வொரு பொருளும், தமிழன்தான் உலகின் ஆதிக்குடி என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்துள்ளதாக, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. இந்தப் பெருமைமிகு விஷயங்களை குறித்து பெருஞ்செய்தியாகப் பார்க்கலாம்..
தமிழர் நாகரிகம்தான் உலகின் உயர்ந்த நாகரிகம் என்பதை, வையகத்துக்கு உரைக்க தமிழ்நாடு முழுவதும் அகழாய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் கீழடி அகழாய்வின் மூலம் கிடைத்த சான்றுகள் குறித்த அறிவியல் ஆய்வு முடிவுகள் வந்தபோது, உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழரும் பெருமையில் திளைத்துப் போனோம்.
இந்திய நாட்டின் வரலாறே, தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று, பெருமிதத்தை பேரானந்தமாக வெளிப்படுத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என அனைத்து காலகட்டத்திலும், தமிழ்நாட்டில் நாகரிகத்தில் முன்னேறிய மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அப்படி ஒரு பேரானந்தம் தரும் மேலும் ஒரு விஷயம்தான் இப்போது கிடைத்திருக்கிறது.
சென்னனூர் அகழாய்வில் கிடைத்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூர்தான், இந்த பெருமையை தமிழர்களுக்கு தந்திருக்கிறது. கற்கால கண்டுபிடிப்புகளுக்குப் புதையல் களமாக திகழ்கிறது இந்த சென்னனூர்.
அகழ்ந்து ஆராயும்போது, சுமார் ஒரு மீட்டரிலேயே கற்காலப் படிவுகளின் குவியல்கள் கிடைத்துள்ளன. தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஆண்டு முதல் சென்னனூர் பகுதியில் அகழ்வாய்வுகளை நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த மூலக்கற்கள் மற்றும் மண் மாதிரிகள், ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வகம், பண்டைய பொருட்களின் வயதை ஒளிச்சாய்வு நுட்பத்தின் மூலம் மதிப்பீடு செய்யும்.
அந்த வகையில், Optically Stimulated Luminescence எனும் நவீன தொழில்நுட்பத்தில், கற்கள் மற்றும் மண் மாதிரிகளின் காலம் துல்லியமாக கணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள்தான் தமிழர்களை உச்சாணிக் கொம்பில் அமர்த்தியுள்ளது.
சென்னனூரில் கிடைத்த கற்களும் கூரிய கல் கருவிகளும் மைக்ரோலிதிக் காலத்தைச் சேர்ந்தவை என்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வகத்தின் அறிக்கை. அதாவது, நுண்கற்காலத்தைச் சேர்ந்தவை என்பதுதான் இதன் பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், சென்னனூரில் கிடைத்த கல் பொருள்களின் வயது, 8450 BCE என்கிறார்கள் ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வக நிபுணர்கள். அதாவது, அந்தக் கல்லின் காலம், (கி.மு. 8450).
அப்படியென்றால், தமிழ்நாட்டில், சென்னனூரில் கிடைத்த கல் பொருள்களின் வயது பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகம் என்று நிரூபிக்கிறது அறிவியல். காலம் குறித்த இந்த உறுதிப்படுத்தல் மூலம், தமிழ்நாட்டில் கல்லறைப் பண்பாடு தொடங்கி, வேளாண்மை சார்ந்த குடியிருப்புப் பண்பாடு வரை, மக்களின் பரிணாம வளர்ச்சியை துல்லியமாகத் தெளிவாக வரையறுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.