சிறப்புக் களம்

உலக கடித தினம் இன்று : அரசியல் முதல் இலக்கிய உலகம் வரை.. கனலை மூட்டிய கடிதங்கள்!

EllusamyKarthik

அன்புள்ள அப்பாவுக்கு, அம்மாவுக்கு, மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு என்பது மாதிரியான முன்னொட்டுடன் கடிதங்கள் எழுதப்பட்டு வருகின்றன. மக்கள் தொடர்பியலூக்கான சேவையில் முன்னோடி இந்த கடிதங்கள். 

இன்று உலக கடித தினம். கையால் எழுதும் முறையை பாராட்டும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மனித வாழ்க்கையின் நவரச உணர்வுகளையும் தன்னகத்தே தாங்கி செல்லும் இந்தக் கடுதாசிகள் குறித்து பார்ப்போம். 

ஆதி காலங்களில் மன்னர்களின் எண்ண ஓட்டங்களை இந்த கடிதங்களின் வாயிலாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புறாக்கள் கடத்தி சென்றதையும் நாம் கேள்விப்பட்டதுண்டு. தொடர்ந்து அப்படியே தபால் துறை மூலம் கடிதங்கள் கொண்டு சேர்க்கப்பட்டன. இன்றைய டிஜிட்டல் உலகிலும் EMail வடிவில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகின்றன.

கடிதத்தின் வரலாறு!

கடிதத்தின் தொடக்கப் புள்ளியாக பண்டைய இந்தியா திகழ்ந்துள்ளதாக சில தகவல்கள் சொல்லப்படுகின்றன. அப்படியே கிரேக்கம், ரோமாபுரி என படிப்படியாக பல்வேறு நாடுகளில் இந்த வழக்கம் தொடர்ந்து உலக முழுவதும் பரவலாகி உள்ளது அதன் பயன்பாடு. 

தனிப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியான கடிதங்கள் வணிகம், விடுதலை, அரசியல், மொழி வளர்ச்சி என பல்வேறு விதமான பயன்பாட்டுக்கு உதவி உள்ளது. 

பிரபலங்களும் கடிதங்களும்!

மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி, பகத்சிங், மகாகவி பாரதியார், வ.உ. சிதம்பரனார் என பலரும் கடிதங்கள் மூலமாக மக்களிடம் தங்களது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் அவை அனைத்தும் விடுதலை மற்றும் தேச நலன் சார்ந்தே இருந்துள்ளன. காந்தியின் கடிதங்கள் ‘Famous Letters of Mahatma Gandhi’ என புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விடுதலை வேட்கைக்கு வித்திட்டதும் காந்தியடிகளின் கடிதங்கள் தான். மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தின அவை. 

இதில் காந்தி, நேதாஜி, அம்பேத்கர் மற்றும் பாரதியார் மாதிரியான பிரபலங்கள் தங்கள் குடும்பம் மற்றும் மனைவிகளை கடிதங்கள் மூலமாக தொடர்பு கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. நேரு சிறையில் இருக்கும் போது தன்னுடைய மகளான இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இன்றளவும் கருதப்படுகிறது. தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் என்ற தலைப்பில் இயற்கை வரலாறு மற்றும் உலக நாகரிகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை விளக்கி எழுதிய 30 கடிதங்களை நேரு எழுதியிருந்தார். அவை தொகுக்கப்பட்டு புத்தகமாக உள்ளது.

பொதுவுடைமை கருத்தியல் கோட்பாட்டை உருவாக்கிய முன்னவர்களான கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் எங்கெல்ஸ் இருவரும் கடிதப் போக்குவரத்து வழியேதான் பல்வேறு தத்துவார்த்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அவை புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இன்றளவும் வாசிக்கப்பட்டு வருகிறது. கார்ல்ஸ் மார்க்ஸ் - ஜென்னி மார்க்ஸ் (மனைவி) இடையேயான கடிதங்களும் மிகவும் பிரபலமானவை.

கறுப்பின மக்களின் மீதான நிறவெறிக்கும் இனவாதத்திற்கும் எதிராகப் போராடி, கைது செய்யப்பட்டு, 27 வருட சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா, தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுக்கு, சிறை அதிகாரிகள், அரசாங்க அமைச்சர்களுக்கு, இறந்த சுதந்திர போராளிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் எனப் பல கடிதங்களை எழுதினார். சிறையில் இருந்தபடியே அந்த கடிதங்கள் மூலம் புரட்சி வேட்கையை குறையாமல் பார்த்துக்கொண்டார்.

இந்திய விடுதலைப் போராட்டம் என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வரும் இளைஞர் பகத்சிங் தான். சிறைக்குள்ளிருந்தும், சிறைக்கு வெளியில் இருந்தும் பகத்சிங் எழுதிய கடிதங்கள் பல. சிறையில் இருக்கும் போது பஞ்சாப் ஆளுநருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “இந்திய விடுதலைப் போராட்டம் இந்திய மக்களுக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான போர். நாங்கள் போர்க்கைதிகள். எங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட காரணமும் நாங்கள் அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாகத் தான் கூறுகிறது. எங்களை போர்க்கைதிகளுக்கு தண்டனை கொடுப்பது போல துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள்” என்று பகத்சிங் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் மிகவும் புரட்சி கனலை மூட்டியது.

தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு வித்திட்ட முக்கியமான தலைவர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா. தம்பிகளுக்கு கடிதம் என அவர் எழுதிய கடிதங்கள் தற்போது தொகுப்புகளாக உள்ளன. தன்னுடைய அரசியல் கருத்துக்களை தொண்டர்களிடம் எடுத்துக் கொண்டு போக கடிதங்களை பயன்படுத்தினர்.

தமிழ் இலக்கியம் மற்றும் அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன கடிதங்கள்!

டி.கே. சிதம்பரநாதன் எழுதிய கடிதங்கள், கி.ராஜநாராயணனுக்கு சக எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியும் கடிதங்கள் மூலமாக மக்களை தொடர்பு கொண்டனர். 

தமிழ் நவீன இலக்கிய உலகில் பிதாமகனாக திகழ்ந்தவர் புதுமைப்பித்தன். புதுமைப் பித்தன் தனது மனைவி கமலாவிற்கு தன் கைப்பட எழுதிய 88 கடிதங்கள் தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் மூலம் எப்படி அவரது இலக்கிய சிந்தனைகளை நாம் தெரிந்து கொள்ள முடியுமோ, அந்த அளவில் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் மூலம் அவர் எப்படி தான் விரும்பிய இலக்கியங்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தற்போதும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடிதம் எழுதும் வழக்கத்தை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் கட்சியினருக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

டிஜிட்டல் யுகத்திலும் தொடரும் பயன்பாடு!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல் மூலமாக கடிதம் எழுதும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் இப்போது எழுதப்படும் கடிதங்கள் அலுவல் பணி சார்ந்து இருக்கின்றன. வலைத்தளங்கள் கூட நியூஸ் லெட்டர் மூலமாக பயனர்களை கவர்வதற்கான பணிகளை செய்கின்றன. 

இருந்தாலும் ‘நலம் நலமறிய ஆவல்’, ‘நான் இங்கு சுகம்! நீ அங்கு சுகமா?’, ‘யாவரும் நலம்’ மாதிரியான உணர்ச்சி வெளிப்பாடுகள் எல்லாம் எமோஜிக்கள் வழியே கடத்தப்படுகின்றன. 

முகம் கூட பார்க்காமல் கடிதம் மூலம் வளர்ந்த ஆத்மார்த்தமான காதல் எல்லாம் இப்போது டிஜிட்டல் சாதனங்கள் வழியே கடக்கப்பட்டு வருகிறது.