Published : 01,Sep 2021 02:15 PM

"தடயங்கள் அழிப்பு" - ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரமைப்புக்கு எதிர்ப்பும் பின்னணியும்

Why-Jallianwala-Bagh-memorial-renovation-faces-criticism

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரமைப்பு செய்யப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக புதிய சர்ச்சைகள் வெடித்துள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நினைவிட புனரமைப்பு விஷயத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக என்றும் நாம் நினைவுகூரத்தக்கது ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919 மார்ச் மாதம் பிரிட்டீஷ் இந்திய பாதுகாப்பு சட்டமாக ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இயற்றப்பட்ட குழுவின் தலைவராக சிட்னி ரெளலட் இருந்தார். இச்சட்டம் மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்து உரிமைகளையும் பறித்தது. தேசப் பாதுகாப்பு எனக் கூறி ரெளலட் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரை எந்த விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். வக்கீல் வைத்து வாதாட முடியாது. ஜாமீன் கிடைக்காது. ஆங்கிலேயர் இயற்றிய சட்டங்களில் மிகவும் மோசமான சட்டமாக இது இருந்தது. இச்சட்டத்தின் கீழ் சத்யபால் மற்றும் சாய்புதின் ஆகிய தலைவர்களை கைது செய்தது ஆங்கிலேய அரசு.

இச்சட்டத்தை எதிர்த்து 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் இருந்த ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பெரும் திரளான மக்கள் கூடினர். சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மைதானத்தில் மக்கள் கூடி ஆங்கிலேய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தனது 150 துருப்புகளுடன் வந்து சேர்ந்தார் ஆங்கிலேய அதிகாரி மைக்கேல் ஓ டயர். அந்த மைதானத்துக்கு ஒரே ஒரு நுழைவாயில்தான் இருந்தது. அந்த நுழைவாயிலின் இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டன. பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி டையர் கட்டளையிடவே 150 துருப்புகளும் பொதுமக்களை நோக்கி சுட்டனர். சுமார் 1600 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவிக்கின்றன தகவல்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய அந்தக் கொடூரத்தில் சுமார் 1000 பேர் இறந்தனர்.

இந்தப் படுகொலையின்போது தப்பி பிழைத்தவர்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சஷ்டி சரண் முகர்ஜி, அந்த ஆண்டின் பிற்பகுதியில் அமிர்தசரஸில் நடந்த காங்கிரஸ் அமர்வில் படுகொலை நடந்த ஜாலியன் வாலாபாக் மொத்த நிலத்தையும் வாங்குவதற்கு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் படுகொலை நடந்த இடத்தில் ஒரு துணிச் சந்தை அமைப்பதன் மூலம் படுகொலை நடந்ததற்கான அடையாளங்களை அழிக்க முற்பட்டனர். அதனை தடுக்கவே, இந்த நிலத்தை வாங்கும் தீர்மானத்தை முன்வைத்தார். பின்னர் மகாத்மா காந்தி இதற்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் இருந்து ஒரு வருடத்தில் ரூ.5,60,472 நிதி திரட்டி கொடுக்க, ஜாலியன் வாலாபாக் நிலத்தை அதன் உரிமையாளர் ஹிம்மத் சிங்கிடம் இருந்து ஆகஸ்ட் 1, 1920-இல் வாங்கினார்கள்.

அப்போது இருந்து சரண் முகர்ஜி பரம்பரையைச் சேர்ந்த முகர்ஜிகள் நினைவிடத்தின் பராமரிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். தற்போதைய பராமரிப்பாளராக சுகுமார் முகர்ஜி என்பவர் இருக்கிறார். மேலும், கொடூரத் தடயங்களாக சுவர்களில் பதிந்த குண்டுகள் உள்ளிட்டவை அப்படியே நினைவிடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. இதன்பின் சுதந்திரத்துக்குப் பின் மத்திய அரசு ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளையை மே 1, 1951-இல் அமைத்தது. இதன் தலைவர்களாக ஒவ்வொரு அரசிலும் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருப்பர்.

image

இந்த நிலையில்தான், ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் நினைவிடம் இதற்கு முன்பும் பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த முறை புனரமைப்பு செய்யப்பட்டது கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

ஏன் எதிர்ப்பு? - இதற்கு முன்பும் பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு இருந்தாலும், அப்போதெல்லாம் ஜாலியன் வாலாபாக் மைதானத்துக்கு இருந்த ஒரேயொரு நுழைவு வாயிலை பெரிதாக எதுவும் செய்யவில்லை. வேறு பல விஷயங்கள் மாறினாலும், நானாக்‌ஷஹி செங்கற்களால் கட்டப்பட்ட இந்த இறுக்கமான நுழைவாயில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக அதன் தன்மை மாற்றப்படாமல் அப்படியே இருந்தது. இந்த நிலையில், தற்போது புனரமைத்தபோது, இந்த நுழைவு வாயிலின் குறுகிய பாதையில் உயரமான சுவர்களில் இறந்த தியாகிகளின் பல புதிய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களில் சிலையாக இருப்பவர்கள் படுகொலை சம்பவம் நடந்த நாளில் பூங்காவிற்குள் நுழைந்து உயிருடன் திரும்பாதவர்கள். இந்த நுழைவு வாயில் வழியாக பார்வையாளர்கள் மைதானத்துக்குள் நுழைய வேண்டும் என்பதால், இந்த சுவற்றை புதுப்பித்து, பளபளப்பாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை கவனித்த "ஜாலியன் வாலாபாக்" என்ற புத்தகத்தை எழுதிய வரலாற்றாசிரியர் கிம் ஏ.வாக்னர் நுழைவு வாயிலின் பழைய புகைப்படத்தையும், தற்போது மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தையும் இணையங்களில் பதிவிட்டார். கூடவே, “படுகொலையின் கடைசி தடயங்கள் திறம்பட அழிக்கப்பட்டுவிட்டன" என்றும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவும், நுழைவு பாதையின் புகைப்படங்களும் அவர் பதிவிட்ட சில நொடிகளில் சமூக வலைதளங்களில் புயலை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் சிலர் `வரலாற்றை அழிக்கும் முயற்சியாக இந்த சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றனர்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில் வரலாற்றாசிரியர் கிம் பதிவை டேக் செய்து “ எங்கள் வரலாறு அழிக்கப்படுகிறது! ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோல் மற்றொரு வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப், இந்த புனரமைப்பை,“ நினைவுச் சின்னங்களின் நிறுவனமயமாக்கல் இது" என்று குறிப்பிட்டு, “ நினைவுச் சின்னங்கள் நவீன கட்டமைப்புகளாக மாற்றப்பட்டதால், பாரம்பரிய மதிப்பை இழக்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் பிரதிபலிக்கும் காலத்தின் தன்மையில் கைவைக்காமல் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.

கலாசார வள பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் குர்மித் ராய் சங்கா என்பவர், “ இந்தப் போக்கு கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஜாலியன் வாலாபாக், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவின் தொடக்கத்தை குறிக்கும் நினைவுச் சின்னங்கள். அங்கு சிலைகளை வைத்து தீம் பார்க்காக மாற்றுவதற்கு பதிலாக, ஆவணங்கள் மற்றும் விளக்க மையம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார். 

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,  “இது எங்கள் தியாகிகளை அவமதிக்கும் செயல். இங்குள்ள ஒவ்வொரு செங்கலும் பிரிட்டிஷ் ஆட்சியின் திகிலை எடுத்துச் சொல்லும். சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகியவர்களால் மட்டுமே இவ்வாறு எங்கள் தியாகிகளை அவதூறு செய்ய முடியும்" என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ தியாகங்களின் அர்த்தம் தெரியாதவர்களால் மட்டுமே ஜாலியன் வாலாபாக் தியாகிகளை அவமானப்படுத்த முடியும்.

நான் தியாகியின் மகன். தியாகிகளை இதுபோன்று அவமானப்படுத்தப்படுவதை பொறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு போராடாதவர்களால், தியாகிகள் இந்த தேசத்தை காக்க என்ன செய்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாது" என்று பதிவிட்டு இருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல, பலர் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருவதால், ஜாலியன் வாலாபாக் நினைவிட புனரமைப்பு சர்ச்சையாக மாறி வருகிறது.

- மலையரசு


| வாசிக்க > குத்தகைக்கு விடப்படும் ரூ.6 லட்சம் கோடி அரசு சொத்துகள்: ஆபத்தா? அவசியமா? |

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்