சிறப்புக் களம்

கொரோனா கால மாணவர் நலன் 16: ‘திருமண வயது அதிகரிப்பு’ மசோதா உண்மையிலேயே மாற்றம் தருமா?

நிவேதா ஜெகராஜா

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தி, அதை 21 வயதென்று நிர்ணயிக்கும் மசோதா மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் பின்னணி குறித்து அதிகாரிகள் விளக்குகையில், ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டும்; மற்றும் மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ எனக் கூறினர். இந்த வகையில் இந்த மசோதாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளும் ஆதரவும் கிடைத்து வந்தன. இருப்பினும், அரசின் இந்த மசோதாவுக்கு சில எதிர்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் சிலர், “இந்த மசோதா, குழந்தை திருமணங்களையும், கட்டாய திருமணங்களையும் அதிகரிக்குமே தவிர குறைக்காது” என்று கூறுகின்றனர். இதன் பின்னணி குறித்தே இந்த அத்தியாயம் அமையவுள்ளது.

கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அளவில் கொரோனா நேரத்தில் (2019-21) 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொண்ட சிறுமிகளின் எண்ணிக்கை 12.8% என சமீபத்தில் தேசிய குடும்ப நல ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இதில், கிராம அளவில் 15.2% என்றும்; நகர அளவில் 10.4% என்றும் இருந்துள்ளது. இதேபோல 2019-21 காலகட்டத்தில், தமிழகத்தில் டீன் ஏஜ் வயதில் கருத்தரித்தரித்தல் விகிதம் 6.3% என்றிருந்ததுள்ளது. இதில், கிராம அளவில் 8.2% என்றும்; நகர அளவில் 4.2% என்றும் இருந்துள்ளது.

இவை இரண்டையும் ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் குழந்தை திருமணம் செய்வோர் விகிதமும், இளம்வயதில் கருத்தரிப்போர் விகிதமும் அதிகரித்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இந்த தரவுகளுடன் ஒப்பிட்டு மசோதாவை நாம் அணுகும்போது, நிச்சயம் அதை நாம் வரவேற்கே செய்ய வேண்டியுள்ளது. ‘இவ்வளவு வலுவான காரணங்கள் உள்ளபோதும், இந்த மசோதா ஏன் நடைமுறையில் சாத்தியப்படாமல் போகும்’ என செயற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறித்து குழந்தைகள் நல களச்செயலாளர் தேவநேயனிடம் பேசினோம்.

“எப்போதுமே எந்தவொரு பிரச்னையின்போதும் அடிப்படை சிக்கல்களை சரிசெய்வதுதான் அரசின் முதன்மை செயலாக இருக்கவேண்டும். அந்தவகையில் குழந்தை திருமணங்களை தடுக்க, முதலில் சரிசெய்யப்பட வேண்டியது அப்பிரச்னையின் அடிப்படை கட்டமைப்பான ‘பெற்றோர் மத்தியிலான விழிப்புணர்வை அதிகப்படுத்துவது’தான். அதைத்தான் அரசு முதலில் செய்ய வேண்டும்.

இதை நான் சொல்லக்காரணம் இன்றும்கூட, 18 வயதுக்கு முன்பு குழந்தை திருமணங்கள் நடக்கக்கூடாது என்றுதான் சட்டம் சொல்கிறது. அதையும் மீறி திருமணங்கள் நடந்துக்கொண்டுதானே இருக்கின்றன? நீங்கள் மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளே அதற்கு சாட்சி. இந்த முரணை சரிசெய்ய, அடிப்படை கட்டமைப்புகள் மாறவேண்டும். பெண் குழந்தைகளுக்கு திருமண வயதை அதிகரிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அடிப்படையாக எவ்வித மாற்றத்தையும் உருவாக்காமல், நேரடியாக வயதை மட்டும் அதிகரிப்பதால் பயனில்லை” என்றார்.

தொடர்ந்து, என்ன மாதிரியான அடிப்படை விஷயங்களை மாற்ற வேண்டும் என்பது குறித்தும் அவர் கூறினார்.

“முதலில், டீன் ஏஜ் திருமணங்களால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்களை பெற்றோருக்கு புரிய வைத்து விழிப்புணர்வை அளிக்க வேண்டும். அதன்பின், கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பல குடும்பங்களில் ‘அதிகம் படிக்க வைத்தால், அதிகம் வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கொடுக்க வேண்டும்’ என நினைக்கிறார்கள் பெற்றோர். அவர்களை பொறுத்தவரை, பெண்ணுக்கு கல்வி என்பது குடும்பத்தின் செலவை அதிகரிக்கும் செயல். இந்த இடத்தில் வரதட்சணை கொடுமைகளை ஒழிப்பதும் மிக மிக அவசியப்படுகிறது.

பெண்களின் கல்லூரி கனவு, கனவாகவே முடிய மற்றொரு முக்கிய காரணம் குடும்ப வறுமை. அதை ஒழிக்க அரசு முனைய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு இடைநிற்றல் நிகழ்ந்துள்ளது என்பதை அரசு ஆராய்வது வழக்கம். உதாரணத்துக்கு 10-ம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்ற எத்தனை பேர் என்ற தகவலையும், 11-ம் வகுப்புக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவலையும் அரசு ஆராயும். அதன்மூலம் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவர்கள் எண்ணிக்கை அரசுக்கு தெரியும். இதேபோல 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் மற்றும் கல்லூரியில் சேர்ந்தவர்கள் பற்றியும் அரசுக்கு தெரியும். இவையாவும் பாலின அடிப்படையிலும் கணக்கிடப்பட வேண்டும். இந்த விகிதத்தை குறைக்க அரசு முயல வேண்டும். அப்போதுதான் கல்வியை நோக்கிய பெண் குழந்தைகளின் பயணம் எளிமையாக மாறும்.

இவை அனைத்துக்கும் மேலாக சமூகத்தில் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க அரசு முயல வேண்டும். ஏனெனில் சாதிய காரணங்களுக்காக பல குடும்பங்களில் பெண் குழந்தைகள் திருமணத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதையெல்லாம் செய்யாமல், நேரடியாக வயதை மட்டும் அதிகரித்தல் என செய்வதால், அதனால் பயனேதும் முழுமையாக ஏற்படாது. சொல்லப்போனால், சமூகத்தின் சாதிய பாகுபாட்டுக்கு மத்தியில், பல பெண்களை பெற்றோர் இன்னும் விரைவாகவே கூட திருமணம் செய்துவைக்க நேரிடும். அந்தவகையில், இந்த மசோதாவின் பிரதிபலன்களாக சொல்லப்படும் ‘குழந்தை திருமணங்களை தடுப்பது - பெண்களின் படிப்புக்கான அங்கீகாரம் கிடைப்பது’ போன்றவையெல்லாம் நிறைவேறாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.

அரசின் நோக்கம் உண்மையிலேயே பெண்களின் நன்மைக்காகத்தான் எனில், அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு அரசு தன்னால் ஆன முயற்சிகளை உடனடியாக தொடங்கவேண்டும்” என்றார்.