நீட் தேர்வு முறைகேடு, கேள்வித்தாள் கசிவு, மாணவர்கள் போராட்டம், இளைஞர்களின் ஒருமித்த குரல், மத்திய அமைச்சர் மாற்றம், புதிய அமைச்சர் நியமனம் ஆகியவற்றைத் தொடர்ந்து தேர்வுத்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஒரு குழுவையும் பிரதமர் மோடி நியமித்துள்ளார். இந்தியாவின் தேர்வு முறை பல வகைகளில் தோல்வியடைந்துள்ளதாக இளைஞர்கள் கருதுகிறார்கள். இதைச் சீர்மைக்க, கூட்டு அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில், தொழில்நுட்பம், தேசியப் பாதுகாப்பு, கல்வித்துறை, போக்குவரத்து மற்றும் நிர்வாகம் ஆகிய 5 துறைகளில் இருந்து வல்லுநர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்வுக்குழுச் சீர்திருத்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத்தில் வல்லுநரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான நந்தன் நிலேகனி, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சோம்நாத், பாதுகாப்பு வல்லுநர் தபன் தேகா, சென்னை ஐஐடி உயர்கல்வி இயக்குநர் காமகோடி, பள்ளிக் கல்வியின் முன்னாள் தேசிய இயக்குநர் அனிதா கார்வால், போக்குவரத்து பிரிவின் வல்லுநர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேசியத் தேர்வு முகமை(என்டிஏ)யால் நடத்தப்படும் தேர்வுகளில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள், மேம்பாடுகள், நவீனத்துவங்கள், முறைகேட்டை எவ்வாறு தடுப்பது, தேர்வுகளைத் தொழில்நுட்ப ரீதியில் சீரமைக்கவும், கட்டமைப்புரீதியாக வலுப்படுத்தவும், வெளிப்படையான தேர்வு முறையை நிறுவுவதில் அதிகபட்ச தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு தங்கள் பரிந்துரைகளை வழங்குவார்கள்.
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “நண்பர்களே, மாணவர்களின் எதிர்காலத்துக்காக, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் இருக்கிறார்கள். விரைவு நீதிமன்றங்களை உருவாக்கியிருக்கிறோம், கடினமான விதிமுறைகளுடன் நாடாளுமன்றத்தில் நாளை மசோதாக்களை தாக்கல்செய்ய இருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நமது கல்வி அமைப்பு நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாறி, தொழில்நுட்பத்தை அதிகபட்ச அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்காக, இன்ஃபோசிஸ் இயக்குநர்களின் ஒருவரான நந்தன் நிலேகனி தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழுவை தேர்வு சீரமைப்பு, நவீனம், அதிக பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்க நியமித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நந்தன் நிலேகனி கடந்த 1955ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர். இவரின் தந்தை மனோ ராவ் நிலேகனி, தாய் துர்கா. இவர்கள் கர்நாடகத்தின் சிர்சி மாவட்டத்தில் கொங்கனி பிரிவைச் சேர்ந்தவர்கள். நிலேகனி தனது பள்ளிக் கல்வியை தார்வாடில் உள்ள பிஷக் காட்டன் மற்றும் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். மும்பை ஐஐடியில் சேர்ந்து இளநிலைப் பொறியியல் படிப்பை முடித்தார். 1978ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பட்னி கம்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் நிலேகனி தனது பணியைத் தொடங்கினார், அங்குதான் என்.ஆர் நாராயணமூர்த்தியுடன்(இன்போஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர்) அறிமுகம் கிடைத்தது. 1981ஆம் ஆண்டு பட்னி நிறுவனத்தில் இருந்து நிலேகனி, நாராயணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் அங்கிருந்து விலகி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினர். மார்ச் 2002 முதல் 2007ஆம் ஆண்டுவரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நிலேகனி இருந்தார். நந்தன் நிலேகனி 5 ஆண்டுகள் பதவிக்காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் மதிப்பு 6 மடங்கு அதிகரித்து, 300 கோடி டாலராக அதிகரித்தது.
2009ஆம் ஆண்டில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கும் பொதுவான அடையாள அட்டையை உருவாக்க(ஆதார்) முடிவெடுத்தது. இதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நந்தன் நிலேகனியை காங்கிரஸ் அரசு நியமித்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று இதன் தலைவராக நிலேகனி பொறுப்பேற்றார்.
நந்தன் நிலேகனி உருவாக்கிய ’ஆதார் எண்’ என்ற அடையாள அட்டைதான் இன்று இந்தியாவில் அனைவருக்கும் அடையாள அட்டை போன்று அனைத்துவிதமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நலத்திட்டங்களும் ஒருங்கே, ஒரே அடையாள எண்ணின் கீழ் வர வேண்டும் என்பதற்காக இந்த ஆதார் எண் உருவாக்கப்பட்டது. மக்கள் ஒவ்வொருவருக்கும் பயோமெட்ரிக் ரீதியில் அடையாளம் சரிபார்க்கப்பட்டு அரசுக்கென மிகப்பெரிய தரவு மையத்தை உருவாக்கி, செயல்படுத்தப்பட்டது. இந்தப் பூமியில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டமாக ஆதார் உருவெடுத்தது.
நந்தன் நிலேகனி உருவாக்கிய ’ஆதார் எண்’ என்ற அடையாள அட்டைதான் இன்று இந்தியாவில் அனைவருக்கும் அடையாள அட்டை போன்று அனைத்துவிதமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் பால் ரோமர் ஆதார் அட்டை குறித்து பெருமையாகக் குறிப்பிடுகையில், “இந்த உலகிலேயே மிகவும் உயர்தரமான அடையாள அட்டைத் திட்டம். 140 கோடி மக்களின் அடையாளங்கள், வீட்டு முகவரி என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதன்பின், சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் கவுன்சிலின் உறுப்பினராக நிலேகனி நியமிக்கப்பட்டார், அதன்பின் என்சிஏஇஆர் அமைப்பின் தலைவராகவும், உலக பொருளாதாரக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பணமதிப்பிழப்புக்குப்பின் மத்திய அரசு அறிமுகம் செய்த யுபிஐ செயலிமுறையை கொண்டு வந்து வெற்றிகரமாக நடத்திக்காட்டியதும் நந்தன் நிலேகனிதான். இன்று நாடு முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட் முறை வெற்றிகரமாக செயல்பட்டு, நாட்டின் எந்த பகுதிக்கும், நொடிப்பொழுவிதில் பணத்தை அனுப்ப முடிகிறது என்றால் அதற்கு காரணமான யுபிஐ தொழில்நுட்பமுறையை செயல்படுத்தியது நிலேகனிதான். 2019ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட் தொழில்நுட்பத்தை ஆழமாகக் கொண்டுசெல்லும் குழுவின் தலைவராகவும் நிலேகனி நியமிக்கப்பட்டார். இவரின் ஆலோசனையால்தான் யுபிஐ பேமெண்ட் முறை, நாடு முழுவதும் கிராமங்கள்வரை எளிதாகக் கொண்டு செல்ல முடிந்தது, மக்களால் பயன்படுத்த முடிந்தது. வரி நிர்வாகம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்களைச் செய்யவும், சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்புக்கான டிஜிட்டல் கட்டமைப்பை வடிவமைத்து தனித்துவமான திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் (டிஏஜியுபி) நிலேகனி இருந்தார். 2023ஆம் ஆண்டு ஜனவரியில், பொருளாதார மாற்றம், நிதி உள்ளீடு, மேம்பாடு ஆகியவற்றுக்கான டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பான, ‘ஜி-20 டாஸ்க் ஃபோர்ஸின்’ தலைவராகவும் நிலேகனி நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: முடிவுக்கு வரும் ‘மராட்டிய கர்ஜனை'.. சிவசேனாவின் வளர்ச்சியும் சரிவும்.. ஒரு பார்வை!
மேலும், நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவைச் செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஏஐ குழுவில், நிலேகனியும் ஒரு நியமிக்கப்பட்டார். மேலும், மின்துறைக்கான 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை' உருவாக்கி வரும் 'இந்தியா எனர்ஜி ஸ்டாக்' பணிக்குழுவின் தலைமை வழிகாட்டியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
கர்நாடகத்தில் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாகச் செயல்பட்ட நிலேகனி, 1999-ஆம் ஆண்டில் பெங்களூருவில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் பணியைச் செய்த 'பெங்களூரு அஜெண்டா பணிக்குழுவை' நிறுவி வழிநடத்த துணை செய்தார்.
தேர்வுத்துறை, கல்வித்துறையில் நிலேகனிக்கு இது முதல்முறை அனுபவம் இல்லை. ஏனென்றால், கடந்த 2018-19ஆம் ஆண்டில் பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜிஎஸ் சிங்வி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது, அந்தக் குழுவில் நிலேகனியும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆதலால், தேர்வுத்துறையில் நடக்கும் முறைகேடுகள் என்ன, அதைத் தடுக்கும் வழிமுறைகள், ஆலோசனைகள் அளித்ததில் நல்ல முன்அனுபவம் உள்ளவர் நிலேகனி. அதனால்தான் நீட் தேர்வு மட்டுமல்லாது பொதுவான தேர்வுகள் குறித்து மாணவர்களிடையே இருக்கும் அவநம்பிக்கையை களைந்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தொழில்நுட்ப நிபுணரான நிலேகனியைத் தனது பணிக்குழுவின் தலைவராகப் பிரதமர் மோடி இம்முறை தேர்ந்தெடுத்துள்ளார்.
நிலேகனி செயல்படுத்தும் திட்டங்களில் தொழில்நுட்பத்தை மிக்பெரிய அளவில் பயன்படுத்தக்கூடியவர், குறிப்பாக ஆதார், யுபிஐ போன்றவை வெற்றிகரமாக செயல்பட தொழில்நுட்பம் முக்கியமாக அமைந்தது. மேலும் மிகவும் சிக்கலான சவால்களைக் கையாள்வதற்குத் துறைசார்ந்த வல்லுநர்கள் தேவை. அவற்றை வழக்கமான அதிகாரிகளால் கையாள்வதும் தீர்ப்பதும் கடினம் என்று மத்திய அரசுக்குள் பொதுவான கருத்து இருந்தது. அதனால்தான் தொழில்நுட்பத்திலும், நிர்வாகத்திலும் நிபுணரான நிலேகனியை பிரதமர் மோடி தேர்ந்தெடுத்தார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “தேர்வு சீர்திருத்தங்கள் என்பது மத்திய அரசின் வழக்கமான சீர்திருத்தங்கள் இல்லை. இதில் மிகப்பெரிய அளவில் அமைப்பு ரீதியான மாற்றம் செய்ய வேண்டும். தேர்வு முறையிலான சீர்திருத்தங்களுக்குத் தலைமை தாங்கவும், இதன்மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பிரதமர் மோடி ஏன் சிறந்த நிபுணர்களைக் களமிறக்கியுள்ளார். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதை நிலேகனி நோக்கமாகக் கொண்டு செயல்படுவார், இதன்மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வுகள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்த குழு உடனடியாக பரிந்துரை செய்யும். தேசியத் தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை முழுமையாகச் சீரமைத்து, அவற்றை வினாத்தாள் கசிவு இல்லாத மற்றும் பாதுகாப்பான அமைப்புகளாக மாற்றுவதே இக்குழுவின் முக்கியப் பணியாகும்.
எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்த குழு உடனடியாக பரிந்துரை செய்யும். தேசியத் தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை முழுமையாகச் சீரமைத்து, அவற்றை வினாத்தாள் கசிவு இல்லாத மற்றும் பாதுகாப்பான அமைப்புகளாக மாற்றுவதே இக்குழுவின் முக்கியப் பணியாகும். மேலும், வெளிப்படையான மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற செயல்முறையை உருவாக்க, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகபட்சமாகப் பயன்படுத்துவது குறித்தும் இக்குழு ஆய்வு செய்யும்” எனத் தெரிவித்தனர்.
நந்தன் நிலேகனி கடந்த 2014ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்ந்து, மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் ஆனந்த் குமாரிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்து நிலேகனி விலகினார்.