லூனா 25- சந்திராயன் 3
லூனா 25- சந்திராயன் 3 Twitter
சிறப்புக் களம்

லூனா-25க்கும், சந்திரயான்3 க்கும் உள்ள வித்தியாசம் என்ன? லூனா-25ல் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா!

Jayashree A

ரஷ்யாவின் நிலவை நோக்கிய லூனா 25 விண்கலம் சோயூஸ்2 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. லூனா25 விண்வெளி பயணம் இனிமையாக இருக்கட்டும் என இஸ்ரோ வாழ்த்து தெரிவித்து உள்ளது. ரஷ்யா அனுப்பிய லூனா25க்கும் இந்தியா அனுப்பிய சந்திராயன்3 விண்கலத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

47 வருடங்களுக்கு பிறகு மீண்டும்..

1976ம் ஆண்டு ரஷ்யா முதன் முதலாக நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நிலையில், 47 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஷ்யா நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக, விண்கலம் ஒன்றை ஆகஸ்டு 11ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.40 மணிக்கு லூனா 25 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது

ரஷ்யா லூனா25 ஐ 2021ல் அனுப்பி இருக்க வேண்டியது என்றும், கொரோனா, உக்ரேன் போர் காரணமாக திட்டம் தள்ளிப்போனதாகவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லூனா25 விண்கலமானது ஏழு நாட்களுக்குள் நிலவில் தென்துருவப்பகுதியில் தரையிறங்க உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

1800 கிலோ எடைக் கொண்ட லூனா25 செயற்கைக்கோள் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள், தனிமங்கள் ஆக்ஸிஜன் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரு விண்கலங்கள் குறித்து, முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) அவர்களிடம் பேசியதில்,

முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன்

ரஷ்யாவின் விண்கலம் சந்திரயானை அடைவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதற்கு காரணம் என்ன?

”ரஷ்யாவிடம், இந்தியாவை விட அதிக வலுவான சோயூஸ்2 என்ற ராக்கெட் இருக்கிறது. ஆகையால் பூமியிலிருந்து நேரடியாக நிலவுக்கு விண்கலத்தை செலுத்தமுடியும். ஆனால் சந்திராயன் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு தான் ராக்கெட்டின் உதவியுடன் பயணிக்கிறது. அதன் பிறகு பூமியின் சுற்றுவட்டபாதையின் உதவியுடன் (அதாவது ஒரு கல்லை கயிற்றில் கட்டி சுற்றி, சுற்றி அதன் வேகத்தை அதிகப்படுத்துவது போல) விண்கலத்தின் வேகத்தை அதிகப்படுத்தி, மீண்டும் நிலவின் சுற்று வட்ட பாதையின் உதவியுடன் வேகமானது குறைக்கப்பட்டு நிலவின் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நமக்கு நிலவில் விண்கலத்தை தரையிறக்குவதற்கு அதிக நாட்கள் ஆகிறது.

ரஷ்யாவும் வோஸ்டாக் ராக்கெட்டின் உதவியினால் லூனா 25 ஐ மென்மையாக தரையிறக்கம் செய்ய இருக்கிறது.” என்றார்.

லூனா25, சந்திராயன்3 இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

”சந்திராயன் நிலவில் 15 நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடியதாக இருக்கிறது. அதாவது பூமியில் ஒரு புள்ளியில் 12 மணி நேரம் இரவு, பனிரெண்டு மணி நேரம் பகல் என்பது போல, நிலவின் ஒரு புள்ளியில் 15 நாட்கள் இரவு, 15 நாட்கள் பகல் என்று இருக்கும், நமது சந்திராயன் பகல் 15 நாட்கள் வேலைசெய்யகூடியதாக இருக்கிறது.

லூனா 25 விண்கலம்

ஆனால் லூனா25 ஒருவருடம் வரையில் வேலை செய்யக்கூடிய வசதிகள் அதாவது, இரவு நேரத்தில் விண்கலத்தை வெப்பமாக வைத்திருப்பதற்கு தேவையான உபகரணங்கள் அதில் அமைந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்பில் துளையிட்டு அதில் தண்ணீர் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் லூனாவால் முடியும்..

அதே போல் சந்திராயன் பயணிக்கும் பாதையும் லூனா பயனிக்கும் பாதையும் வெவ்வேறானது. இதனால் அதற்கோ அல்லது அதனால் இதற்கோ எவ்வித இடையூரும் இருக்காது.” என்றார்