மம்தா பானர்ஜி chatgpt
சிறப்புக் களம்

மேற்கு வங்கத்தின் புதிய பெண் சக்தி.. சரிந்தது மம்தா சாம்ராஜ்ஜியம்.. ஒரே மாதத்தில் அசுர மாற்றம்?

சிங்கத்தை அதன் குகையில் வீழ்த்திய பெருமையுடன், நாடாளுமன்றத்துக்குள் மம்தா அடியெடுத்து வைத்தார்.

PT WEB

கட்டுரையாளர் : போத்தி ராஜ்

இன்றுள்ள தலைமுறையினருக்கு மம்தா பானர்ஜியை மாநில முதல்வராக மட்டும்தான் தெரியும். இளமைக் காலத்தில் அவர் நடத்திய போராட்டங்கள், வெடிக்கும் பேச்சு, கூர்மையான விமர்சனம், துணிச்சல் ஆகியவை தேசிய அளவில் சக்திமிகுந்த பெண்களில் ஒருவராக அடையாளப்படுத்தியது. ஆனால், இன்று மம்தா பானர்ஜியின் அதிகாரம், ஆளுமை, நிர்வாகத்திறன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. வாருங்கள்.. இதுகுறித்து அனைத்தையும் அலசுகிறது இந்தக் கட்டுரை..

அரசியல் கட்சிகள் பொதுவாகத் தேர்தல் தோல்வி ஏற்பட்டவுடன் விரைவாக மீண்டு நிலைத்துவிடுகின்றன; சில கட்சிகள் காணாமல் போகின்றன. அதிகாரத்தைத் திடீரென இழக்கும்போதுதான் பெரும்பாலும் நிலைத்திருக்கப் போராடுகின்றன. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், பாஜவுக்கும் சிம்மசொப்பனமாக இருந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் புரட்சி செய்த திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து ஒரு மாதத்துக்குள் அதன் ஆணிவேர்கள் சிதைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தோல்வியை மறந்து மீண்டு எழுவதற்குள், அடுத்த அடி பலமாக விழுந்துள்ளது. திரிணமூல் கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கிளர்ச்சி, அதிருப்தி எம்பிக்கள் வெளியேற்றம் ஆகியவை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் அதிகாரம், ஆளுமை, நிர்வாகத்திறன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், பாஜவுக்கும் சிம்மசொப்பனமாக இருந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் புரட்சி செய்த திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து ஒரு மாதத்துக்குள் அதன் ஆணிவேர்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

‘பழைய மம்தா’வை தெரியுமா?

இன்றுள்ள தலைமுறையினருக்கு மம்தா பானர்ஜியை மாநில முதல்வராக மட்டும்தான் தெரியும். இளமைக் காலத்தில் அவர் நடத்திய போராட்டங்கள், வெடிக்கும் பேச்சு, கூர்மையான விமர்சனம், துணிச்சல் ஆகியவை தேசிய அளவில் சக்திமிகுந்த பெண்களில் ஒருவராக அடையாளப்படுத்தியது. நாட்டிலே உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிடக்கூடிய முதல்வர், முதல் பெண் முதல்வர் என்ற பெருமை இன்றளவும் மம்தா பானர்ஜிக்கு மட்டுமே உரியது. அது மட்டுமல்ல ‘தி டைம்’ நாளேடு உலகளவில் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகவும் மம்தா பானர்ஜியைச் சேர்த்து பெருமைப்படுத்தியது. அவரின் இளமைக்கால வாழ்க்கை எத்தகைய போராட்டம் நிறைந்து, அதிலிருந்து எவ்வாறு மீண்டார், அவரின் அசாத்திய திறமையை காங்கிரஸ் எவ்வாறு பயன்படுத்தியது என்பதை பார்ப்போம்.

இதையும் படிக்க: முடிவுக்கு வரும் ‘மராட்டிய கர்ஜனை'.. சிவசேனாவின் வளர்ச்சியும் சரிவும்.. ஒரு பார்வை!

15 வயதில் அரசியல் பிரவேசம்

1955-ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கொல்கத்தாவின் அஸ்ரா பகுதியில் ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தில் மம்தா பானர்ஜி பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள ஜோகமயா தேவி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற மம்தா, ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். மம்தா, தனது 15 வயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். காங்கிரஸ் சார்பில் மாணவர் அணி போரட்டங்களில் மம்தா தீவிரமாக ஈடுபட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பைத் தேர்தலில் வீழ்த்தினார். சிறுவயதிலேயே மம்தாவின் துடிப்பான பேச்சு, எதிர்க்கட்சிகளைக் கூர்மையான வார்த்தைகளால் விமர்சிக்கும் போக்கு, குழப்பமில்லாத அவரின் பேச்சு நடை மக்களை ஈர்த்தது. இது, அவருக்கு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் வகிக்க உதவியது. அவசரநிலை பிரகடனத்தின்போது, மூத்த அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனை விமர்சிக்கும் வகையில் கார் ஒன்றின்மீது ஏறி நடனமாடிய மம்தாவை, ஊடகங்கள் கவனிக்கத் தொடங்கின, காங்கிரஸும் உற்றுநோக்கியது, பதவிகள் தேடிவந்தன, 1976 முதல் 1980வரை காங்கிரஸ் மகளிர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மம்தாவின் தீவிரத்தையும் செயல்பாடுகளையும் கவனித்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, மம்தாவை தேசிய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தார்.

சிங்கத்தை வீழ்த்திய மம்தா

1984ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை சபாநாயகரான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் தொகுதியில் தோற்கடித்து மம்தா எம்.பியானார். சிங்கத்தை அதன் குகையில் வீழ்த்திய பெருமையுடன், நாடாளுமன்றத்துக்குள் மம்தா அடியெடுத்து வைத்தார்.

1989ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசியபோது, நடந்த பொதுத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் மாலினி பாட்டாச்சார்யாவிடம் மம்தா தோல்வி அடைந்தார். அதன்பின், நடந்த 1991, 1996, 1998, 1999, 2004, 2009 பொதுத் தேர்தலில் மம்தா பானர்ஜி தொடர்ந்து வெற்றி பெற்றார்.

மம்தா பானர்ஜியின் சுறுசுறுப்பையும், தீவிரமான அரசியல் பங்கேற்பையும் பார்த்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கினார்.

இதையும் படிக்க: அடுத்த இலக்கு ‘பாப் எல் மன்தீப்’ நீரிணை! உலக எண்ணெய் வர்த்தகத்தை முடக்க ஈரான் திட்டம்?

திரிணமூல் காங்கிரஸ் உதயம்

மம்தாவின் வளர்ச்சி மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது, அவர் நடத்தும் போராட்டங்களுக்குச் சரியான ஒத்துழைப்பு தராமல், கூட்டங்களுக்கு வராமல் அவரை ஒதுக்கும் வகையில் செயல்பட்டனர். இனிமேல் நமக்கு எதிர்காலம் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்று உணர்ந்த மம்தா, 1997-இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ‘அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்’ என்ற கட்சியை 1998ஆம் ஆண்டு தொடங்கினார். காங்கிரஸ் கட்சியுடன் கால்நூற்றாண்டு பந்தத்தைத் துண்டித்துவிட்டு முகுல் ராயுடன் சேர்ந்து புதிதாகக் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய அடுத்த ஓர் ஆண்டில் 1998இல் நடந்த மக்களவைத் தேர்தலில் 7 இடங்களை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து திரிணமூல் 8 இடங்களில் வென்றது. பிரதமர் மோடி, அமித் ஷா இருக்கும் பாஜகவுடன் இன்று வேண்டுமானால் மம்தா பானர்ஜி மோதல் போக்கை கடைபிடித்திருக்கலாம். ஆனால், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் இருந்த பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகித்து, அமைச்சராக இருந்து அரசியல் செய்தார். மத்திய அமைச்சராக மம்தா பலமுறை இருந்துள்ளார். 1999ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில், மத்திய ரயில்வே துறை அமைச்சராக மம்தா இருந்தார், அதன்பின் 2004ஆம் ஆண்டு நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்தார்.

பிரதமர் மோடி, அமித் ஷா இருக்கும் பாஜகவுடன் இன்று வேண்டுமானால் மம்தா பானர்ஜி மோதல் போக்கை கடைபிடித்திருக்கலாம். ஆனால், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் இருந்த பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகித்து, அமைச்சராக இருந்து அரசியல் செய்தார்.

எம்பியைச் சட்டையைப் பிடித்து இழுத்த மம்தா

1998ஆம் ஆண்டு, டிசம்பர் 11ஆம் தேதி மக்களவையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராகப் போராடுவதைத் தடுப்பதற்காக, சமாஜ்வாதி கட்சி எம்.பி. தரோகா பிரசாத் சரோஜின் சட்டைக் காலரை பிடித்து இழுத்து, மக்களவையின் மையப்பகுதியிலிருந்து மம்தா வெளியேற்றி சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டார். அப்போதுதான் மம்தாவின் துணிச்சலை இந்த தேசம் அறிந்தது.

திருப்புமுனை நந்திகிராம், சிங்கூர் விவகாரம்

மம்தா பானர்ஜி மாநில அரசியலில் வலுவாக காலூன்ற அவருக்குச் செயல்வடிவம் கொடுத்தது, நந்திகிராம், சிங்கூர் பிரச்னைதான். 2006இல் சிங்கூர் தொகுதியில் டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மம்தா, 25 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டம் மம்தாவை மேற்கு வங்க மக்கள் மனதில் ஆழமாகக் கொண்டுசென்று நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியான போராட்டம் காரணமாக சிங்குரில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை மாநிலத்தில் ஆண்ட இடதுசாரிகள் அரசு கைவிட்டது. இப்போராட்டத்தில் கிடைத்த செல்வாக்கை 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும், 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் மம்தா பானர்ஜி அறுவடை செய்தார்.

இதையும் படிக்க: சிவன் கோயிலா.. கல்லறையா? எழுந்த சர்ச்சைகள்.. பாய்ந்த வழக்குகள்.. தாஜ்மஹாலைச் சுற்றி நடந்தது என்ன?

30 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி வேரோடு சாய்ப்பு

கொள்கைப் பிடிப்பும், போராட்டக் குணமும் இடதுசாரிகளுடன் உடன்பிறந்தது. அதிலிருந்து உருவாகும் தலைவர்களும் வலுவான கொள்கைப்பிடிப்போடும் எவரையும் எதிர்க்கும் வெல்லும் துணிச்சலோடு செதுக்கப்பட்டிருப்பார்கள். அதிலும் மேற்கு வங்கம், கேரளாவில் அவர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

ஜோதிபாசு

ஆனால், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தாவின் படிப்படியான வளர்ச்சி, இடதுசாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. டெல்லியில் இருக்கும்போது, மேற்கு வங்கத்தில் ஆண்ட இடதுசாரி அரசுக்கு எதிராக அவர் கொடுத்த குடைச்சல்கள், விமர்சனங்கள் பேசப்பட்டன. இந்திய அரசியலில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு. அவரின் ஆயுளில் சந்தித்திராத வலிமைமிக்க ஓர் அரசியல் எதிரியாக மம்தா பானர்ஜி உருவாகியிருந்தார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சியையும், ஜோதிபாசு சொன்ன திசையில் 23 ஆண்டுகள் நடந்த மேற்கு வங்கத்தையும் மம்தா சாய்த்து தனது பிடிக்குள் கொண்டுவந்து வலிமையான பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சியையும், ஜோதிபாசு சொன்ன திசையில் 23 ஆண்டுகள் நடந்த மேற்கு வங்கத்தையும் மம்தா சாய்த்து தனது பிடிக்குள் கொண்டுவந்து வலிமையான பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

15 ஆண்டுகள் ஆட்சி

பாஜக

ஜோதிபாசு முதல்வராக இருந்த கடைசி 2 வருடங்கள், மம்தா மேற்கு வங்க அரசியலைத் தீர்மானித்தார். 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 183 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கத்தில் முதல் பெண் முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார்.

முதல்வராகப் பொறுப்பேற்றதும் சிங்கூர் தொழிற்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து பெற்ற 400 ஏக்கர் நிலத்தை மம்தா திரும்ப ஒப்படைத்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். மம்தாவின் சிறப்பான ஆட்சிக்கு வெகுமதி அளிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 211 இடங்களில் திரிணமூல் வென்று 2ஆவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்தது. 1962க்குப் பின் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி எந்தவிதமான கூட்டணியும் இல்லாமல் தேர்தலில் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்த கட்சி என்ற பெருமையைப் பெற்றது.

இதையும் படிக்க: பாகிஸ்தானிலிருந்து விடுதலை! ‘பலுசிஸ்தான் தனி தேசம்’ அங்கீகரிக்கப்படுமா? இந்தியா, சீனா நிலை என்ன?

பாஜகவின் வளர்ச்சி

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரஸையும் வேரோடு பிடுங்கி எடுத்த மம்தா பானர்ஜிக்கு, பாஜகவின் வளர்ச்சி தலைவலியை உண்டாக்கியது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, திரிணமூல் காங்கிரஸுக்கு வலுவான போட்டியாளராக மாறியது, பாஜக வளர்ந்து வருகிறது என்பதை அப்போதுதான் மம்தா உணர்ந்தார். மம்தா பானர்ஜியின் கோட்டையை உடைக்கவும், மனஉறுதியைக் குலைக்கவும், பாஜக வழக்கம்போல் தனது சாம, பேத, தான, தண்ட வித்தைகளைக் காண்பித்தது. மம்தாவின் நம்பிக்கைக்குரியவர்களான முகுல் ராய், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பலரையும் பாஜக தன்பக்கம் ஈர்த்தது. ஆனாலும் மம்தா தளரவில்லை. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக தீவிரமான போட்டியாளராக இருப்பார்கள் என்பதை மம்தா முன்பே உணர்ந்துவிட்டார். இருப்பினும், 213 இடங்களில் வென்று திரிணமூல் 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

ஜூன் மாதத் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது, மம்தா வருகிறார் என்றாலே ஒருகாலத்தில் பெருந்திரள் கூட்டம் வந்தநிலையில் அன்று சிலநூறு பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மம்தா பானர்ஜி

உருக்குலைந்த திரிணமூல் காங்கிரஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவாக வளர்ந்துவந்த பாஜகவிடம் மம்தா தோல்வி அடைந்தார். 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வென்றது, இருப்பினும் 40 சதவீத வாக்கு வங்கிக்குக் கீழ் குறையவில்லை. 80 எம்எல்ஏக்கள், 24 எம்.பிக்கள் என மம்தா பானர்ஜி வலுவாகத்தான் இருந்தார். ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களுக்குள் திரிணமூல் காங்கிரஸின் 58 எம்எல்ஏக்கள், மம்தாவுக்கும், அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினர். மாநிலத்தில் தொடங்கிய போராட்டம் டெல்லி வரை நீண்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களில் 28 பேரில் 20 பேர் தனித்துச் செயல்படப் போவதாகக் கூறி மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்தனர். இந்த இரு நிகழ்வும், மம்தா பானர்ஜியின் மனஉறுதியை உடைத்தெறிந்திருக்கலாம். மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸின் வீழ்ச்சியின் தெளிவான அடையாளமாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல், ஜூன் மாதத் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது, மம்தா வருகிறார் என்றாலே ஒருகாலத்தில் பெருந்திரள் கூட்டம் வந்தநிலையில் அன்று சிலநூறு பேர் மட்டுமே பங்கேற்றனர். மம்தாவின், திரிணமூல் கட்சியின் அதிகாரம் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் குறைந்தது. ஒவ்வொரு நாளும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்து அழைத்துச்செல்லும் காட்சியும், கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடியும் காணப்பட்டது. திரிணமூல் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு திட்டமிட்டு சிதைக்கப்பட்டன.

இதையும் படிக்க: சிறப்புக்கட்டுரை | அடுத்த ஐன்ஸ்டீன்.. 12 வயதில் குட்டி விமானம்.. யார் இந்த சப்ரினா பாஸ்ட்டர்ஸ்கி?

திரிணமூல் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தாலும், அதன் கட்டமைப்பில் ஸ்திரத்தன்மை இல்லை, ஆழமான பலவீனம் இருக்கிறது என்பது அதன் வேகமான சரிவு சுட்டிக்காட்டியது. இடதுசாரிகளைப்போல் இல்லாமல், அதிகாரத்தை இழந்தாலும் நிலைத்து நிற்கக்கூடிய வலுவானதொரு கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பை மம்தா பானர்ஜி உருவாக்கத் தவறிவிட்டார் என்பது தெரிகிறது. மம்தா தனது அரசியல் பயணத்தில் பல சவால்களை முறியடித்துள்ளார். இப்போது அவர் எதிர்கொள்ளும் சவால் முன்னெப்போதும் இல்லாத ஒன்று. ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது ஒரு விஷயம்; ஆனால், கட்சியின் தலைவர்களே கட்சியைக் கைவிட்ட பிறகு அக்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது முற்றிலும் மாறுபட்ட, கடினமான ஒரு பணி. மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்சிபி) சந்தித்த அதே பிரச்னைகள்தான் மேற்கு வங்கத்திலும் பிரதிபலிக்கிறது. மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு, அச்சுறுத்தல் கட்சிக்குள்ளேயேதான் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி பெற்ற 40% வாக்குகள் என்பது அவரின் தனிப்பட்ட செல்வாக்கு அப்படியே உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 1984 ஜாதவ்பூர் வெற்றியிலிருந்து வாழ்நாள் முழுவதும் ஒரு போராட்டக்காரராக இருந்துவரும் மம்தா, தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. மம்தா பானர்ஜியின் அரசியல் இருப்பு என்பது இப்போது அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. தற்கால இந்திய அரசியலில், வெறும் அரசியல் பாரம்பரியமும் தனிப்பட்ட செல்வாக்கும் மட்டுமே ஒரு தலைவரை அரசியல் முக்கியத்துவமற்ற நிலைக்குத் தள்ளப்படுவதிலிருந்து காக்கப் போதுமானவை அல்ல.

மம்தாவுக்குத் தோல்வி ஒன்றும் புதிதல்ல. தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்கவைக்கவும், தனது அரசியல் பாரம்பரியத்தைக் காக்கவும் பாதுகாப்பான மற்றும் குறைவான இடர்கொண்ட வழி எது என விரைவில் தேடுவார்.
மம்தா பானர்ஜி

மம்தாவுக்குத் தோல்வி ஒன்றும் புதிதல்ல. தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்கவைக்கவும், தனது அரசியல் பாரம்பரியத்தைக் காக்கவும் பாதுகாப்பான மற்றும் குறைவான இடர்கொண்ட வழி எது என விரைவில் தேடுவார். பல ஆண்டுகளாக, மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தைத் தாண்டி அரசியல் செய்ய லட்சியத்தோடு இருந்தார், பாஜகவை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைக்கவும், தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவராகத் தன்னை நிலைநிறுத்த மம்தா முயன்றார். ஆனால் இன்று, திரிணாமுல் காங்கிரஸின் சிதைவு அந்தச் சூழலை அடியோடு மாற்றிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மெல்லக் குறைத்து வந்த மம்தாவுக்கு, இப்போது அதே கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் பிழைப்புக்காக ஏற்பட்டுள்ளது எனலாம். மாநிலத்தில் காங்கிரஸையும், இடதுசாரிகளையும் துடைத்தெறிந்த மம்தா, இனிமேல் அரசியல் பிழைப்புக்காக, இக்கட்சிகளையும் அனுசரித்து செல்லவேண்டிய, திரிசங்கு நிலைக்குவந்துவிட்டார். இது ஒரு தலைவரின் எதிர்காலம் குறித்த கதை மட்டுமல்ல. திரிணாமுல் காங்கிரஸின் நெருக்கடியானது, அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக மையப்படுத்துதல், அடிமட்டத் தொண்டர்களுடனான பிணைப்பு அறுபடுதல் மற்றும் ஒரே ஒரு தனிநபரை மட்டுமே சார்ந்திருக்கும் அமைப்பாக அது மாறியது ஆகியவற்றின் விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இதையும் படிக்க: சிறப்புக்கட்டுரை |டேட்டா சென்டருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு? எதற்காக நீர் தேவை? சவால்கள் என்ன?