சிறப்புக் களம்

நாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்

நாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்

webteam

கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது. இளைஞர்கள், பொதுமக்கள், இராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவை மீண்டும் கட்டமைக்க மக்கள் மிகுந்த அன்போடு பணமாகவும் பொருளாகவும் நிவாரணம் வழங்கி வருகிறார்கள். அன்பால் நிறைந்திருக்கிறது கேரளா. ஏறக்குறைய 3 லட்சம் மக்கள் வீடிழந்திருக்கிறார்கள். 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பலருக்கு தங்களின் வீடு இருக்கிறதா, சொந்த நிலம் இருந்த இடம் எது என்ற பல சந்தேகங்கள் இருக்கின்றன.

கேரள மக்களின் இந்த கஷ்டத்தில் பங்கேற்ற குறிப்பிட்ட மக்களை பற்றியே இந்த கட்டுரை. சென்னை வெள்ளம் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். கடலில் செல்லும் படகு சென்னையின் வீதிகளில் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். வெள்ளத்தை நீந்திக் கடந்து ஆயிரம் ஆயிரம் மக்களை மீட்டது ஒரு இனம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படகுகளோடு வந்து மீட்டுவிட்டு, எந்த பிரதிபலனையும் பெறாமல் திரும்பிச் சென்றனர் அந்த மக்கள். மீனவர்கள். தொடர்ந்து ஒடுக்கப்படும் இனம் தனது வலியையும் தாண்டி, உதவிக்கரத்தை நீட்டியது. இன்று கேரளத்துக்கு உதவிய இனமும் அதுவே. 

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது “கடலில் இருந்ததால் என்னவோ, கண்ணிமைக்கும் நொடிகளில் காப்பாற்றி விடும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது என்றார். மற்றொருவர் பேசும் போது “ பாதிக்கப்பட்டவர்களை நான் தேடும் போது, எனது கண்களில் ஹீரோக்களே தென்பட்டனர்” என்றார். கேரள முதல்வர் மீனவர்களை தங்களின் சொத்து என்றார். அதோடு அவர்களது சேவை கண்டிப்பாக அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

சில பெண்கள் ஒரு வீட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். மீனவர்கள் அவர்களை மீட்டு முகாமுக்கு அனுப்பி வைக்கின்றனர். தங்கள் மகனிடம் அந்த பெண் கூறுகிறார் “ 6 பேர் வந்தார்கள், 3 பேர் தமிழில் பேசினார்கள், 3 பேர் மலையாளத்தில் பேசினார்கள், இறந்து விடுவேன் என நான் நினைத்தேன் ஆனால் என்னை காப்பாற்றினார்கள், உங்களுக்கு ஏதாவது பண்ணனும்னு நான் சொன்னேன், அவர்களோ உங்கள் பணத்தையோ, உதவியையோ பெற்றால் கடல் எங்களை மன்னிக்காது, மீன் கொடுத்து எங்கள காக்காதுனு சொன்னாங்க” என்றார். இதை பகிர்ந்த அந்த மகன் “எனது பெற்றோர் கடவுளை கண்டார்கள், கடவுள் அவர்களுக்கு புரியும் மொழியில் பேசினார்” எனக் கூறினார். 

மற்றொரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. மீனவரகள் தங்களது மீட்பு பணி முடிந்து செல்கின்றனர். வழிநெடுக மக்கள் கைகளை கூப்பி இறைவனை வணங்குவது போல அவர்களை வணங்குகின்றனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அந்த புகைப்படம். இதற்கிடையில் மீனவர் சங்க தலைவர் பேசியது அவர்கள் மீதான மரியாதையை இன்னும் கூட்டியிருக்கிறது. அவர் கூறும்போது “ முதலமைச்சர் அவர்களே, கேரளாவின் இராணுவம் என நீங்கள் எங்களை கூறியது போது பெருமைப்பட்டோம், இறுமாப்பாக இருந்தது, ஆனால் ரூ.3000 கொடுப்பேன் என நீங்கள் கூறியது எங்களை வலிக்கச் செய்கிறது. காசு கொடுப்பீர்கள் என நினைத்தா வந்தோம், கஷ்டப்பட கூடாதே என நினைத்தே வந்தோம்” என்றார். 

ஆம்.. கடவுளை பார்த்தோம். அவர் எங்களுக்கு புரியும் மொழியில் பேசினார். எங்களோடு இருக்கிறார் என்ற வார்த்தைகள்தான் எத்தனை உண்மை.