காதலர் தின சிறப்புக் கட்டுரை PT
சிறப்புக் களம்

‘ஊனே உயிரே..!’ காதலர் தின சிறப்புப் பகுதி | ”இக்கால காதலும்.. மனித உணர்வுகளும்..” - கவிஞர் வெய்யில்!

”ஏழைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், அதில் எவ்வளவு தீங்குகள் இருந்தாலும், அதன் ஜனநாயகத் தன்மையும் வர்க்க பேதங்களற்று ஆண்களும் பெண்களும் அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது” கவிஞர் வெய்யில்..

அங்கேஷ்வர்

கவிஞர் நேசமித்ரன் கவிதை ஒன்று...

கோடிக்குடம் ஊற்றினாலும்

வானில் இருந்து வரும்

தும்மல் அளவு தூறலுக்கு

பூத்துவிடுகிறது தாவரம்

எனக்கு ஆயிரம் பேர்

சொல்லி இருக்கட்டும்

அதை உன் வாயால்

ஒரே ஒருமுறை சொல்லிக்

கேட்கத்தான் இவ்வளவு

மெனக்கெடலும்

தோற்றுப்போய் விடவில்லைதானே நான் ?!

அவ்வளவுதான் (எனக்கு).. நாம் நேசிக்கும் ஒருவர் எத்தனை தூரத்தில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், நாம் செய்யும் செயல்களுக்கு, நமது வெற்றிகளுக்கு அவரிடம் இருந்து ஒரே ஒரு வார்த்தை வேண்டும். ‘வாழ்த்துகள்..’ போதாதா?.

இதை இந்த சமூக ஊடக காலம் இன்னும் எளிதாக்கி இருக்கிறது. வாழ்த்துகள் வருகிறதோ இல்லையோ.. நாம் மேற்கொள்ளும் செயல்களை அவருக்குத் தெரியப்படுத்த அத்தனை செயல்களையும் மேற்கொள்வோம். இதற்கு நாம் செய்துமுடித்த வேலையைவிட மெனக்கெடல்கள் அதிகமாக இருக்கும்.. அப்படியும் நாம் கண்டு கொள்ளப்படவில்லை என்றால் 'என்ன கவி பாடினாலும்... உந்தன் மனம் இரங்கவில்லை..!' என பாடி கடந்து விடுவதே எல்லோருக்கும் நல்லது. (வேறு வழியில்லை) இதுதானே காதலின் விதி..

நாம் நமது சமூக ஊடகங்களைக் கையாளுவதில்தான் இருக்கிறது நமது காதலும் நாமும் toxic ஆக மாறாமல் இருப்பதிலும், காதலாக மட்டுமே அது தொடர்வதிலும்.. காதல் தொடர் என்றாகிவிட்டப்பின், காதலை சொட்டச்சொட்ட பேசும் கவிஞர் வெய்யிலிடம் பேசாமலிருப்பது எப்படி? மாலை வேலையில் அமைதியான பூங்காவில் உரையாடலை ஆரம்பித்தோம்....

காதலை சமூக ஊடகம் எவ்வாறு மாற்றி வைத்திருக்கிறது?

காதல் இந்த உலகத்தின், மானுடத்தின் பேருணர்ச்சி. காதல் என்கிற ஒன்றை, சமூக ஊடகம் என்கிற ஒன்று என்னவாக மாற்றி வைத்திருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. அடிப்படையில், சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவதுபோல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சமூக ஊடகங்களிலும் அப்படியான நிலங்கள் இருக்கிறது. Parallel Universe என்பார்களே, அப்படி சமூக ஊடகங்கள் என்பது Parallel World ஆக இருக்கிறது. அதிலும் குறிஞ்சி நிலத்தைப் போல, முல்லை, பாலை நிலத்தினைப் போல வெவ்வேறு உணர்ச்சிகள் அலையடிக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை சமூக ஊடகங்களில் இருக்கிறது.

கவிஞர் வெய்யில்
குறிஞ்சி நிலத்தைப் போல, முல்லை, பாலை நிலத்தினைப் போல வெவ்வேறு உணர்ச்சிகள் அலையடிக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை சமூக ஊடகங்களில் இருக்கிறது.

சமூக ஊடகங்கள் காதலை உலகளாவிய உணர்வாக மாற்றிவிட்டது என சொல்லிவிடலாம். ஏனெனில், இதற்குமுன்பு திருவிழா, நல்ல நாள் என ஏதோ ஒரு கூடுகைதான் காதலுக்கான அல்லது ஆண் பெண் சந்திப்பதற்கான களமாக இருந்தது. ஆனால், சமூக ஊடகம் வந்தபின் உலகின் எந்த மூலையில் இருக்கும் யாரையும் கண்டு காதல் கொள்வதற்கான அல்லது உறவைத் தொடங்குவதற்கான பெரும் களமாக சமூக ஊடகங்கள் இருக்கிறது. வரலாற்றில் இதுவரைக்கும் இருந்த காதல்களைவிட, இந்த சமூக ஊடகக் காதல் என்பது மிக வண்ணமயமாக, மிக fantasy நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்லலாம்.

வரலாற்றில் இதுவரைக்கும் இருந்த காதல்களைவிட, இந்த சமூக ஊடகக் காதல் என்பது மிக வண்ணமயமாக, மிக fantasy நிறைந்ததாக இருக்கிறது

பிரிவு என்பதும் சமூக ஊடக உலகில் வேகமாகவும் அதிகமாகவும் நிகழுகிறதே?

200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆண் பெண் உறவுகளில் சந்திப்பு என்பதும் பிரிவு என்பதும் நீண்ட காலத்தினைக் கொண்டதாக இருக்கும். நான் முன்பே சொன்னதுபோல ஆணும் பெண்ணும் சந்திப்பதற்கான வெளிகள் இன்று இருப்பதுபோல் அன்று இல்லை. ஆனால், நாம் திரையைத் தொட்டதும், ஒருநொடியில் நாம் விரும்பும் ஒருவரது முகம் நம் முன் தோன்றும் தொழில்நுட்ப உலகத்தில் இருக்கிறோம். அதேசமயத்தில் பிரிவு என்பது என்ன எனும் கேள்வியும் உருவாகியுள்ளது.

ஒரு மனிதரின் உடலைப் பிரிந்து தொலைதூரத்தில் இருப்பது பிரிவா? அல்லது மனதளவிலேயே இருவரும் பிரிந்து இருப்பது பிரிவா? என பல்வேறு விதமான கேள்விகள் இருக்கிறது.

கவிஞர் வெய்யில்

காதல் கொள்ளும் இருவர் வேறு வேறு நாடுகளில் இருந்து வீடியோ வழியாக காதலித்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் அவர்கள் இழப்பது என்ன என்ற கேள்வி இருந்தாலும், அவர்கள் பெறுவது அதிகம் என்கிற மனப்பாண்மையும் இருக்கிறது. குறிப்பாக, புலம் பெயர்ந்து வாழக்கூடியவர்கள், தொழில்சார்ந்து வெளிநாடுகளில் வாழக்கூடியவர்கள் என வாழ்வின் கட்டாயத்தின் பேரில் வேறு வழியின்றி பிரிந்து இருப்பவர்கள் ஒரு வீடியோ காலின் மூலமாக காதல் செய்வது என்பது இதுவரை இல்லாத ஓர் அபூர்வ நிகழ்வு என்றே சொல்லலாம். எனவே, சமூக ஊடகக்காதல் பிரிவு என்ற ஒன்றை தலைகீழாக்கம் செய்திருக்கிறது.

ஒரு மனிதரின் உடலைப் பிரிந்து தொலைதூரத்தில் இருப்பது பிரிவா? அல்லது மனதளவிலேயே இருவரும் பிரிந்து இருப்பது பிரிவா?

இன்னொருபுறம், பிரிவு என்பது மகத்துவமான ஒரு உணர்வு. பிரிவுக் காலங்களில் ஒருவரைப் பற்றி, அவருடன் இருந்த நாட்களை, நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது அலாதியான அனுபவம். அதை சமூக ஊடகங்கள் இல்லாமல் ஆக்கிவிட்டது. இந்த சமூக ஊடக உலகில் மனிதர்கள் சொற்களை கண்மூடித்தனமாக செலவு செய்துவிடுகிறார்கள். வார்த்தைகளை அதிகம்விட்டு பிரச்னைகளை சந்திக்கக்கூடிய அல்லது உறவில் முறிவினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினையும் இந்த சமூக ஊடகம் வழங்குகிறது. மனிதர்கள் நினைப்பதையெல்லாம் பேசி சிக்கலுக்குள்ளாவதையும் பார்க்கின்றோம்.

love

அதேசமயத்தில் இதுவரையிலான காலக்கட்டங்களில் மனிதர்கள் தாங்கள் நினைத்ததையெல்லாம் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு இல்லை. அந்தவகையில் எனக்கு இதுபோன்ற சிறு சிறு தவறுகள் மிகப்பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை.

சமூக ஊடகங்கள் எல்லையை விரித்திருக்கிறது, பிரிவு என்பதற்கான அர்த்தத்தினை தலைகீழாக்கி இருக்கிறது. சமூக ஊடகங்கள் கால எல்லைகளைத் தகர்த்திருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, உலகின் மறுமுனையில், அங்கு இரவு நேரத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆணும், இங்கு பகல் நேரத்தில் இருக்கக்கூடிய பெண்ணும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்தே காதலிக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவர் சூரியனுக்குக் கீழும் இன்னொருவர் நிலவுக்குக் கீழும் இருந்து காதலிக்கும் அபூர்வ நிகழ்வுகளும் இந்த நூற்றாண்டில்தான் நடந்திருக்கிறது. எனவே, சமூக ஊடக வளர்ச்சி என்பது காதலின் புதிய பரிமாணங்களை புதிய வண்ணங்களை, fantasyயான அனுபவங்களைக் கொண்டதாக இந்த கால காதல் இருக்கிறது.

சமூக ஊடக உலகில் மனிதர்கள் சொற்களை கண்மூடித்தனமாக செலவு செய்துவிடுகிறார்கள். வார்த்தைகளை அதிகம்விட்டு பிரச்னைகளை சந்திக்கக்கூடிய அல்லது உறவில் முறிவினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினையும் இந்த சமூக ஊடகம் வழங்குகிறது. மனிதர்கள் நினைப்பதையெல்லாம் பேசி சிக்கலுக்குள்ளாவதையும் பார்க்கின்றோம்.

இன்றைய காதலில் எமோஜிக்கள்தான் எல்லாமே? காதலில் வார்த்தைகள் குறைந்துவிட்டதா?

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் வழியாக உறவாடுகிற முறையில் எமோஜிக்கள் முக்கியப் பங்காற்றுகிறது. GIF எனப்படும் சின்ன சின்ன வீடியோக்களை அனுப்பும் முறைகளும் வந்திருக்கிறது. இந்த புதுப்புது செயல்பாடுகளால் காதலில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்ததாகத்தான் நான் பார்க்கிறேன். மனிதர்கள் மொழியைக் கண்டுபிடித்து, மொழியுடன் புழங்க ஆரம்பித்து ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது என்றாலும்கூட மனிதனுக்கு இன்னும் கூட மொழியையும், சொற்களையும் சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

எந்தச் சொல் என்ன பொருளில், எந்த நேரத்தில், எந்த தொணியில் ஒருவரிடம் போய் சேருகிறது என்பதைப் பொருத்துதான் அதனுடைய தாக்கமும், அர்த்தமும் இருக்கும். அந்த வகையில் மனிதர்களுக்கு இன்னும் பேசத்தெரியவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, காதலில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு சுத்தமாக பேசத்தெரியவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் இணைய உரையாடல்களை உணர்வுப்பூர்வமாக சரியாக புரிந்துகொள்ளும் வகையில் மேம்படுத்தியுள்ளது எமோஜிக்கள்தான். ‘நான் ஒன்னும் உன்ன தப்பா நினைக்கல’ இது ஒரு குறுஞ்செய்தி. இதை ஒரு கடிதத்திலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ, பேசியவர் சொன்ன அர்த்தத்திலேயே கேட்பவரும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும். ஆனால், 😍😄😉 இந்த மூன்று எமோஜிக்களை தனித்தனியாக வைத்து மேற்கண்ட குறுஞ்செய்தியைப் படித்துப் பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் கொடுக்கும்.. முக்கியமாக, எந்தப் பொருளும் படிப்பவரை கஷ்டப்படுத்தாது. ஆக, சொல்லுக்குப் பக்கத்தில் வைக்கப்படும் குறியீடுகள் புதிய வகையான அர்த்தங்களை உற்பத்தி செய்து உரையாடலையும் உரையாடலில் நிகழும் புரிதலையும் எளிமைப்படுத்துகிறது.

காதலில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு சுத்தமாக பேசத்தெரியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் உணர்வுகளை இன்னும் அழுத்தமாக தெரியப்படுத்தவும் இந்த சமூக ஊடகங்கள் துணை நிற்கிறது. MISS YOU என சொல்லும்போதை விட, அதற்கான GIF அனுப்பும்போது உணர்வுகள் இன்னும் அதிகப்படியாக கடத்தப்படுகிறது. இவையெல்லாம், மனித உணர்வுகளில் ஒரு வண்ணமயமான விஷயத்தினை சேர்த்திருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கூட, மனிதர்கள் தங்களது உலகத்தை மூடிக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. மனிதர்களது வாழ்க்கை எப்போதும் திறந்து வைக்கப்பட்டதாகத்தான் இருந்தது. ஆனால், செயலிகளே எல்லாம் எனும் காலக்கட்டத்தில் ‘நான் என் உலகை மூடிக்கொள்கிறேன்’ என ஒருவர் முடிவெடுக்கும் சாத்தியமும் உருவாகி இருக்கிறது. இதை நான் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். நான் விரும்பும்பட்சத்தில் உலகுடன் என்னால் தொடர்பு கொள்ளமுடியும், எனக்கு வேண்டாம் என்றால் தொடர்பை இடைநிறுத்தியோ அல்லது துண்டித்துக் கொள்ளவோ முடியும். நாம் நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்கள் வாழ்வின் எதார்த்தமாக மாறியுள்ள நிலையில் காதலிலும் அது பிரதிபலிக்கிறது.

காதலில் உணர்வுகளை இன்னும் அழுத்தமாக தெரியப்படுத்தவும் இந்த சமூக ஊடகங்கள் துணை நிற்கிறது... மனித உணர்வுகளில் ஒரு வண்ணமயமான விஷயத்தினை சேர்த்திருக்கிறது.

சமூக ஊடக கணக்கினை வைத்து தங்களது இணை இவர்தான் என முடிவெடுப்பது சரியா?

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் காதலித்தோ அல்லது உடன் வாழ்ந்தோ இருப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகும்கூட பிரிந்துபோகிறவர்களைப் பார்க்கிறோம். அதையும்தாண்டி, முப்பது, நாற்பது வருடங்கள் வாழ்ந்து குழந்தைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு அதற்குப்பிறகும் கூட பிரிந்துபோகிறவர்களைப் பார்க்கின்றோம். என்னைப் பொருத்தவரை, இந்த நபர் எனக்குச் சரியான நபர் என்பதை எதைவைத்து முடிவெடுக்கிறோம் என்பதிலும், எந்த புள்ளியில் அந்த உறவினைத் தொடங்குகிறோம் என்பதும்தான் மிகமுக்கியமான ஒன்று.

சமூக ஊடகங்களில் யாரும் தங்களது எதிர்மறைப் பக்கங்களை முன்வைப்பதில்லை. எல்லோரும் தங்களது வண்ணமயமான விஷயங்களை மட்டுமே முனவைப்பார்கள். ஒருவர் சமூக ஊடகத்தில் என்னவாக இருக்கிறாரோ அதுதான் அவர் என்று நம்பும் போக்கும் இருக்கிறது. இது காதலிலும் நிகழ்கிறது. ஒருவேளை பிரிதல் அதிகமாவது இதன்காரணமாகக் கூட இருக்கலாம். ஏனெனில், நாம் சமூக ஊடகத்திலேயே காதலித்துக் கொண்டு இருக்க முடியாதுதானே? நேரில் காதலித்து, நேரில் பழகி, வாழ்வில் உடனிருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நிகழ வேண்டும்தானே? ஆகவே சமூக ஊடகம் என்பது காதலைத் தொடங்குவதற்கான இடமாக இருக்கலாம். ஆனால், சமூக ஊடகத்தை வைத்தே வாழ்ந்துவிட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. சமூக ஊடகத்தினை வைத்துப் புரிந்துகொள்வது நிச்சயமாக ஆபத்தில்தான் முடியும். புலனாய்வுப் பத்திரிகையில் வேலை செய்யும் ஒருவனாக, வாரத்தில் பல குற்றங்கள் இந்த சமூக ஊடகங்களின் வழியாக நிகழக்கூடிய உறவில் நிகழ்கிறது. மேம்பட்ட முழுமையான காதல்கொள்ளும் தளமாக சமூக ஊடகத்தை பார்க்க முடியாது.

நாம் சமூக ஊடகத்திலேயே காதலித்துக் கொண்டு இருக்க முடியாதுதானே? நேரில் காதலித்து, நேரில் பழகி, வாழ்வில் உடனிருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நிகழ வேண்டும்தானே? ஆகவே சமூக ஊடகம் என்பது காதலைத் தொடங்குவதற்கான இடமாக இருக்கலாம். ஆனால், சமூக ஊடகத்தை வைத்தே வாழ்ந்துவிட முடியுமா..?

ஸ்டேட்டஸ்களில் காதலிக்கும் இளம் தலைமுறையினர் பற்றி?

தமிழில் தூது என்றே இலக்கியம் இருக்கிறது., தூது போவதே கலை என்றும் சொல்லப்படுகிறது. காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ஊடல்வருவது என்பது இயல்பு. ஊடலும், பிரிவும் காதலுக்கு மிக நல்லது என்றே வள்ளுவர் சொல்லுகிறார். இந்த ஊடலுக்கு பின் காதலர்களுக்கு தூதுவர்கள் தேவைப்பட்டார்கள். யாராவது ஒருவர் இருவரையும் சமாதானப்படுத்துவார். இப்போதெல்லாம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்தான் தூதுவராக செயல்படுகிறது. ஸ்டேட்டஸ் என்பதை ஒரே ஒரு நபருக்காகத்தான் வைக்கிறார்கள். அதை நூறுபேர் பார்த்தாலும், அது ஒரு நபருக்கு சொல்லப்படுகிற செய்திதான்.

காதலில் முரண்பட்டு சண்டைபோட்டு 10 நாட்கள் ஸ்டேட்டஸ் வைப்பதில், தனது இணைக்கு இதுவரையிலும் சொல்லியிராத பல செய்திகளைக் காதலர்கள் கடத்துகிறார்கள். காதல்கொள்வதைவிட காதல்கொண்டு பிரிந்திருக்கும் காலங்களில் நமக்கு பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் ஸ்டேட்டஸ்கள் மூலம் சொல்லும் செய்தி அது இன்னும் இனிமையானது.

ஊர்ப்பக்கங்களில் எல்லாம் காதலிப்பவர்கள் ஜாடைகளில்தான் பேசிக்கொள்வார்கள். இன்று வைக்கும் ஸ்டேட்டஸ்கள் எல்லாம் அதுதான். மனிதன் கற்காலத்தில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரிதான் இருக்கிறான். அவன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்தான் மாறுகிறது.

காதல்கொள்வதைவிட காதல்கொண்டு பிரிந்திருக்கும் காலங்களில் நமக்கு பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் ஸ்டேட்டஸ்கள் மூலம் சொல்லும் செய்தி அது இன்னும் இனிமையானது.

நாம் திரைப்படம் பார்க்கும்போது காதலனும் காதலியும் சந்திக்கும்போது இசை வருகிறது. அந்த இசை நம்மை மொத்தமாக ஆட்கொள்கிறது. நம் நிஜ வாழ்வில், நம் காதலில் நமக்கு இசையே கிடையாது. வெறுமையாக இருக்கிறோம். ஆனால், இன்று இந்த சமூக ஊடக காதலின் மூலமாக நம் சந்திப்புகளை படம்பிடித்துக் கொண்டும், நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பாடல்களின் வாயிலாகவும் நம் வாழ்க்கை இசை சூழ்ந்ததாக ஆகிவிட்டது. சாதாரண மனிதனது வாழ்வுக்கும் இசை இருக்கிறது என்பது மிக நல்ல அனுபவம்.

மனிதன் கற்காலத்தில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரிதான் இருக்கிறான். அவன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்தான் மாறுகிறது.

சமூக ஊடகக் காதலில் பிரச்னையே இல்லையா?

எல்லா தொழில்நுட்பத்திலும் பிரச்னை இருக்கும். ஆனால், வேறொரு நாட்டிற்கு வேலைக்கு சென்று கஷ்டப்படும் ஒருவர், அன்றாட வேலைகளைப் பார்த்துக்கொண்டே தனது மனைவியை வீடியோ காலில் அழைத்து என்ன சமைத்திருக்கிறாய் எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண், ‘சோறு வடித்துக் கொண்டு இருக்கிறேன், மீன் குழம்பு கொதிக்கிறது’ எனக் கூறி வீடியோ காலில் அந்த மீன் குழம்பையும் காட்டுவது அன்பின் பெருந்தருணம் அல்லவா.

இன்னும் சொல்லப்போனால் மிக ஏழ்மையான, உலகின் எந்த ஒரு ஆச்சரியத்தையும் பார்க்காத சாதாரண ஏழை மக்களுக்கு அவர்களது கையில் கிடைத்திருக்கும் செல்போன் மாயாஜாலம் மாதிரி. அதை அவ்வளவு ஆச்சரியத்துடன் அவர்கள் பார்க்கிறார்கள். ஏழைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், அதில் எவ்வளவு தீங்குகள் இருந்தாலும், அதன் ஜனநாயகத் தன்மையும் ஏழைக்கு கிடைத்திருக்கும் விதமும், வர்க்க பேதங்களற்று ஆண்களும் பெண்களும் அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காதலுக்கு உதவும் ஊடகமாக சமூக ஊடகங்கள் மாறியிருப்பதைத்தான் பார்க்கிறேன். சமூக ஊடகக் காதல் என்னைப் பொருத்தவை மிக வண்ணமயமானது, இசை சூழ்ந்தது, மிக சுவாரஸ்யமானது. காதல் என்றாலே சுவாரஸ்யமானது, அதிலும் இந்த சமூக ஊடகக் காதல் இன்னும் சுவாரஸ்யமானது.

உரையாடலின் முடிவில் ஒரு காதல் கதையை சொன்னபின், அதற்கு ஏதுவாக தனது கவிதை ஒன்றை மேற்கோள்காட்டினார்.. அந்த காதல் கதை வேண்டாம்.. கவிதை.. இதோ உங்களுக்காக....

தூரத்தில் நின்று!

உங்கள் வசீகரத்தை இழந்துவிடாத தூரத்தில் நின்று காதலியுங்கள்.

அடுத்தடுத்த பரிமாணங்களுக்கு உங்கள் காதலை எடுத்துச்செல்லும்போது,

அது இறந்துவிடாதவாறு

தாய்ப்புலியின் லாகவத்தோடு

அதன் கழுத்தைக் கவ்வுங்கள்.

காதல் ஒரு பல்லக்கு

ஒரே நேரத்தில் இருவரும் அதில் ஏற முடியாது

எனவே, சுமக்கத் தயாராயிருங்கள்.

ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்...

ஆனாலும் புரிந்துகொள்ளுங்கள்,

காதலில்

சொற்கள் வெறும் சொற்கள்தான்.

காதலில் உடல் ஒரு பரிசுப்பொருள்

அதை ஒருபோதும் கேட்டுப் பெறாதீர்கள்.

எல்லாக் காதலும் ஒருநாள் உலரும்

அந்த வெறுமையைப் பதற்றமின்றி எதிர்கொள்ள

மனதைத் தொடக்கத்திலிருந்தே பழக்குங்கள்.

உங்கள் காதலைச் செல்லாக்காசாக்கும்படியாய்

உங்கள் இணையைக் கவரும் நபர்

சற்று தூரத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறார் என்பதை நம்புங்கள்.

காதலில் துரோகம் ஒரு தத்துவார்த்த நிகழ்வு

அந்த வலியில் மூழ்கி எழுந்து ஞானம் பெறுங்கள்.

உங்கள் காதல் இறந்த பிறகு

அதைப் புதைப்பதா எரிப்பதா என்பதில்

சச்சரவு செய்யாதீர்கள்

அதைக் கவிதைக்குள் வீசி எரியுங்கள்.

காதல்தான் இருப்பதிலேயே அதிக கோணங்கள் கொண்ட வடிவம்

எனவே ஒருபோதும் அதைப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முயலாதீர்கள்.

எல்லோரும் போகட்டும் எல்லாம் முடியட்டும்

ஆனாலும்

ஒருபோதும் உங்கள் காதலைக் கைவிடாதீர்கள்

ஒரே வாழ்வுதான் ஓருடல்தான்

ஐந்தரை லிட்டர் ரத்தத்தில் அதுவொரு ஓரமாய்

சிரித்தபடி நீந்திக்கொண்டிருக்கட்டும்.

உங்கள் கண்கள் கரங்கள் தீண்டும்போது

இணையிடம்

மின்சார உணர்வு தோன்றும்வரைதான்

அதன் பெயர் காதல்.

எனவேதான் நண்பர்களே...

உங்கள் வசீகரத்தை இழந்துவிடாத தூரத்தில் நின்று காதலியுங்கள்.

வெய்யில்

9.50

05.05.2023

நன்றி.........