Model image google gemeni
சிறப்புக் களம்

வடக்கு வாசல் - 8 | புத்துயிர் பெறும் I-N-D-I-A கூட்டணி.. பொதுத்தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா?

அன்று நவீன் சாவ்லா மீது குற்றம்சாட்டிய பாஜகபோல், இன்று ஞானேஷ்குமார் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுவதாக எளிதாகப் புரிந்துகொண்டாலும் இன்றைய சூழல் முன்பைவிட சற்று மாறுபட்டது.

ஜெ.ராம்கி

தலைநகர் டெல்லி, சமீபநாட்களாகப் போர்க்களமாக காட்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள் தொடர்பான வைரல் வீடியோக்கள், தொண்டர்களின் தள்ளுமுள்ளு, காவல்துறையினரின் தடியடி, சிதறி ஓடிய காக்ரோச் பார்ட்டி தொண்டர்கள், டெல்லி தெருக்களில் நடை பயின்ற I-N-D-I-A கூட்டணி தலைவர்கள் என பரபரப்புக்குக் குறைவில்லை.

டெல்லிவாசிகளுக்கு இதுவொரு புதிய காட்சிதான். காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம், போராட்டம், கண்டனம் என அனைத்து வடிவங்களும் ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள்போல் அல்லாமல் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியே இருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கியிருக்கிறது.

congress protest

காவலர்களால் இழுத்துச் செல்லப்படும் ஒரு போராட்டக்காரரின் வயிற்றின் மீது ராகுல் காந்தி அமர்ந்திருப்பதும், பெண் காவலரை பிரியங்கா காந்தி முழங்கையால் தள்ளுவது போன்ற புகைப்படங்கள், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தக்கூடும். பத்தாண்டுகளுக்கு முன்னரே இதைச் செய்திருக்கலாம் என்கிற எண்ணமும் இருப்பது என்னவோ நிஜம்தான்.

தலைமைத் தேர்தல் ஆணையர் விஷயத்தில் காக்ரோச் ஜனதா கட்சி முந்துவதற்குள், தான் முந்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் நிறைய புதுமையும் மாற்றங்களும் தெரிகின்றன. முதலில் காக்ரோச் ஜனதா கட்சிக்குத்தான் நன்றி சொல்லவேண்டியிருக்கும். மோசமான தோல்விக்குப் பின்னர் I-N-D-I-A கூட்டணிக்கட்சிகளும் காங்கிரஸ் கட்சியை விட்டால் வேறு வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டதும் நல்லதொரு திருப்புமுனை.

ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி என இருவருமே டெல்லி தெருக்களில் போராட்டக்களத்தில் தீவிரமாக இருப்பதால் அவர்களுடைய மன உறுதி காங்கிரஸ் தொண்டர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ள பிரச்னையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியுமா என்பதுதான் கேள்வி.

2019-இல் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தைப் பயன்படுத்தியது, 2024-இல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்கிற பிரசாரத்தை முன்வைத்ததுபோல் இதுவொரு கவர்ச்சிகரமான பிரச்னையாக உருவாகவில்லை. ஆனால், முந்தைய பிரச்னைகளில் தெருவில் இறங்கிப் போராடியதில்லை. இம்முறை இன்ஸ்டாகிராம் தலைமுறையை ஈர்க்கக்கூடிய நடவடிக்கைகள் மூலம் ஆளுங்கட்சியை அசைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

navin chawla

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எழும் விமர்சனங்கள் புதியவை அல்ல. ஆளுங்கட்சிக்குச் சார்பான ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளன. 2006 & 2009 ஆண்டுகளில் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுண்டு. காங்கிரஸ் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக அத்வானி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும், பின்னாளில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமியும் சாவ்லா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்

நவீன் சாவ்லாவுக்கு எதிராக எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்த போதிலும் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நவீன் சாவ்லா பின்னாளில் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பதவி உயர்வு பெற்று, செயல்பட்டு வந்தார். அன்று நவீன் சாவ்லா மீது குற்றம்சாட்டிய பாஜகபோல், இன்று ஞானேஷ்குமார் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுவதாக எளிதாகப் புரிந்துகொண்டாலும் இன்றைய சூழல் முன்பைவிட சற்று மாறுபட்டது.

இன்றைய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பாதுகாப்பின் காரணமாக, அவரது ஓய்வுக்குப் பின்னரும், ஒருவேளை பதவியிலிருந்து விலக முன்வந்தாலும், நேரடியாக விசாரணைக்கு உட்படுத்துவது கடினம். எஸ்ஐஆர் நடைமுறையில் நடந்தது என்னவென்பது நீண்டகாலம் விவாதப்பொருளாகவே இருக்கப்போகிறது. இப்போதைக்கு ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோருவதே எதிர்க்கட்சிகளிடம் உள்ள ஒரே வழி.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, தன்னுடைய போராட்டத்தை ஒரு தெளிவான திட்டத்துடனேயே வடிவமைத்துள்ளது. இந்த விஷயத்தில் காக்ரோச் ஜனதா பார்ட்டியை முந்திக்கொள்வது தவிர, பாஜகவுக்கு எதிரான ஒரே முதன்மை மாற்றுச் சக்தி என்கிற இடத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

Rahul Gandhi, Mamata Banerjee

மம்தா பானர்ஜி போன்ற I-N-D-I-A கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் ஒரு காலத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரை ஆதரிக்க தயாராக இருந்தார்கள். மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை வந்தபோது மம்தாவால் புறக்கணிக்கப்பட்டார். அதெல்லாம் கடந்த காலம்.

இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியை விட்டால் மம்தா பானர்ஜிக்கு ஆறுதல் சொல்ல வேறு யாருமில்லை. ஆட்சி பறிபோனதோடு, கட்சியும் உடைக்கப்பட்டு மம்தாவின் செல்வாக்கு முற்றிலுமாக இறங்குமுகத்தில் உள்ளது. திமுக தவிர பிற I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளும் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்த விரும்புகிறார்கள். மகராஷ்டிரா, உ.பி, பீகார் என I-N-D-I-A கூட்டணிக்கட்சிகள் ஒரு புள்ளியில் இணைய முன்வந்துள்ளன.

2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தம் விஷயங்களை காங்கிரஸ் தலைமை செய்ய ஆரம்பித்துள்ளது. 2027இல் சில மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முன்னோட்டமாகவும் பார்க்க முடியும். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னர் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளும் தேசிய அளவில் கவனம் பெறுமளவுக்கு காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் அமையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டெல்லி ஜந்தர் மந்தர் தொடங்கி, நாடு முழுவதும் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மூன்று தேர்தல் ஆணையர்களும் முன்பைவிட அதிகமாக அடிக்கடி சந்தித்துக் கொள்வதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடு குறித்து, பகிரங்கமாக எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் அளிக்க தயாராக இல்லாத நிலையில் போராட்டத்தைத் தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

Gyanesh Kumar

ஞானேஷ்வர் விஷயத்தில் கருத்து சொல்வதைத் தவிர்த்து வந்த பாஜக, தற்போது தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளது. வாரணாசியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் நபீன், ராகுல் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் விஷத்தை பரப்பவும், சமூகத்தில் மோதலை உருவாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

எஸ்ஐஆர் நடைமுறை, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி பாஜக கவலைப்படாவிட்டாலும் கவலைப்பட வேண்டிய பிற விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. டெல்லியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. டபுள் என்ஜின் சர்க்கார் என்னும் பாஜகவின் கோஷம், படிப்படியாக நீர்த்துப் போய்விட்டது.

12 ஆண்டுகளில் ஒரு வலுவான அரசியல் கட்சியாக இருக்கும் பாஜக, இருவழிப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளது. ஒருபுறம் வளர்ச்சி அரசியலை முன்வைப்பது, இன்னொரு புறம் வாக்காளர்களுடனான தொடர்பை மேம்படுத்தவதன் மூலமாக எதிர்க்கட்சிகள் செல்வாக்குப் பெறாமல் பார்த்துக்கொள்வது என்கிற வழக்கமான உத்தியை மேற்கொள்கிறது.

கடந்த முறை காக்ரோச் ஜனதா பார்ட்டி மேற்கொண்ட போராட்டங்களை பாஜக எதிர்கொண்ட விதமே தனி ரகம். காக்ரோச் பார்ட்டி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் புகைப்படங்களும், அதைத் தொடர்ந்து மத்திய கல்வியமைச்சர் ராஜினாமாவும் பாஜகவின் அணுகுமுறை வித்தியாசமாக தெரிந்தது. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொரு இடத்தை பாஜக தந்ததில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் விவகாரத்தில், இடதுசாரி கட்சிகள்தான் முதலில் களத்தில் இறங்கின. அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியிலும் மும்பையிலும் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியது. சென்ற முறை தாமதமாக களத்திற்கு வந்த, காக்ரோச் ஜனதா பார்ட்டியுடன் கைகோர்த்து காங்கிரஸ் இம்முறை முந்திக்கொண்டது.

cjp protest

பாஜகவும் அதைத்தான் விரும்புகிறது. 'CJP vs BJP' என்ற போட்டியைவிட ' Congress vs BJP' என்கிற அரசியல் போட்டியில் பாஜகவுக்கு நிறைய ஆதாயம் இருக்கிறது. அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தல்களில் கடந்த கால காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளோடு பாஜக அரசின் செயல்பாடுகளை ஒப்பிட்டு எளிதாக பிரசாரம் செய்ய முடியும்.

கடந்த 12 ஆண்டுகளில் நடந்த 47 சட்டமன்றத் தேர்தல்கள், 3 நாடாளுமன்றத் தேர்தல்களில் ' Congress vs BJP' என்கிற சக்ஸஸ் பார்முலாதான் பாஜகவுக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. காக்ரோச் பார்ட்டி என்பது முழுமையான அரசியல் கட்சி அல்ல. ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் பலர் நீட் தேர்வு சிஸ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், தேர்தல் ஆணையருக்கு எதிராக களத்தில் இறங்கிய காக்ரோச் பார்ட்டி, ஓர் அரசியல் அமைப்பாக உருவெடுத்துவிட்டது.

தேர்தல் ஆணையர் விவகாரத்தில் 'காங்கிரஸ் vs பாஜக' என்ற போட்டியை உருவாக்கிய பிறகு, காக்ரோச் பார்ட்டியின் போராட்டங்களை ஒடுக்குவதுதான் பாஜகவின் திட்டம். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காக்ரோச் பார்ட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. டெல்லிக்குள் யாரும் நுழையாதபடி நான்கு புறமும் கடுமையான தடை ஏற்படுத்தப்பட்டது. காக்ரோச் பார்ட்டி விஷயத்தில் இம்முறை பாஜக சுதாரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) & 'வாக்குத் திருட்டு' (vote chori) இரண்டுமே பெரிய அளவில் அரசியல் மாற்றங்களைக் கொண்ட வராது என்று பாஜக நம்புகிறது. எதிர்க்கட்சிகளோ மிகுந்த நம்பிக்கையோடு ஓரணியில் நின்று போராடுகிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே முக்கியமான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புகிறதோ என்கிற சந்தேகம் சாமானியர்களுக்கு எழுந்துள்ளது.

bjp

காங்கிரஸ் ஆட்சியில் நவீன் சாவ்லா காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் போலவே, ஞானேஷ்வர் காலத்திலும் நடக்கிறது. தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளைப் பாஜக பாதுகாப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. எதிர்க்கட்சிகள் டெல்லியில் நடத்தும் பேரணிகளும் போராட்டங்களும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தாலும், தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் போராட்டங்களும், டெல்லி போக்குவரத்தை முடக்கும் நடவடிக்கைகளும் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சிகள் ஒரு சரியான விஷயத்தைக் கையில் எடுத்தாலும், அதைச் செயல்படுத்தும் முறையில் தடுமாற்றங்கள் இருப்பதென்னவோ உண்மைதான்.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: வடக்கு வாசல் - 7 | பொது சிவில் சட்டத்திற்கு விலக்கு கேட்கும் பீகார்.. நெருக்கடியில் பாஜக!

தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க: இங்கே க்ளிக் செய்யவும்..