வடக்கு வாசல் - 7 | பொது சிவில் சட்டத்திற்கு விலக்கு கேட்கும் பீகார்.. நெருக்கடியில் பாஜக!
அமித் ஷாவின் திட்டம்
சென்ற மாதம் மும்பையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவியிருப்பவர்களைக் கண்டறிந்து வெளியேற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தவர்,பொது சிவில் சட்டம் குறித்தும் பேசியது பரபரப்பான விவாதப் பொருளானது.
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது அமித் ஷாவின் திட்டம். அதைத் தொடர்ந்து பாஜக ஆட்சியில் உள்ள பீகார் மாநிலத்தில் பொது சிவில் சிட்டத்திற்கு விலக்கு கேட்கும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
1980-இல் பாஜக, ஜனசங்கத்திலிருந்து வெளியேறி முறையான அரசியல் கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தேர்தல் அறிக்கைகளில் மறக்கமாமல் இடம்பிடித்த விஷயம், பொது சிவில் சட்டம். மத்தியில் மூன்று முறை ஆட்சியில் தொடர்ந்தாலும், பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் பாஜகவால் நடைமுறைக்குக் கொண்டு வரமுடியவில்லை என்பதுதான் நிஜம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக பொது சிவில் சட்டம், உத்தராகண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களிலும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. பாஜக நேரடியாக ஆளும் மாநிலங்களில்கூட இன்னும் ஆரம்பகட்ட நிலையில்தான் உள்ளது. 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவது என்பது கஷ்டமான விஷயம்.
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு
பல மாநிலங்களில் அரசியல்ரீதியாக ஒருமித்த கருத்துகூட இன்னும் உருவாகவில்லை. பீகாரைத் தவிர, வடகிழக்கு மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பும், தயக்கமும் நிலவுகிறது. 200-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசிக்கும் வட கிழக்கு மாநிலங்களில் அவர்களது பாரம்பரியம், நில உரிமைகள் மற்றும் திருமண/சொத்துச் சட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவுகிறது.
மேகாலயாவில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. நாகாலாந்தில் ஆட்சியில் உள்ள பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்தாலும், சற்றே மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அரசியலமைப்பின் 371A பிரிவின்கீழ் நாகா பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மற்றும் பாராம்பரிய உரிமைகளில் பொது சிவில் சட்டம் பாதிப்பை ஏற்படுத்துவதால் விலக்கு அளிக்கவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
பீகாரில் உள்ள பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளன. நீட் விலக்குபோல், பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு குறித்து பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியிடம் கருத்து கேட்கப்பட்டபோது, 'நாங்கள் அனைவரிடமும் பேசி, முடிவெடுப்போம்' என்றார்.
தேசிய அளவில் பாஜக பொது சிவில் சட்டத்தைத் திணிப்பதற்கு திட்டமிட்டாலும், பீகாரின் தேர்தல் சமன்பாடுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து பீகாரைச் சேர்ந்த பாஜகவினர் மத்தியில்கூட வரவேற்பு இல்லை. எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மை அமைப்புகளின் கடும் எதிர்ப்பும் காத்திருக்கிறது.
பீகாரில் தொடரும் விவாதங்கள்
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் பீகாரிலும் இருந்து வந்துள்ளன. 2017-இல் இந்திய சட்ட ஆணையத்திற்கு முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் எழுதிய கடிதத்திலும், அதற்குப் பிந்தைய நிகழ்வுகளிலும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார். அனைத்துக் தரப்பு மக்களின் கருத்தையும் கேட்காமல் பொது சிவில் சட்டத்தைக் கட்டாயப்படுத்தி பீகாரிகள் மீது திணிக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
பாஜகவின் சக கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தி கட்சியும் இதுகுறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் மௌனம் காக்கின்றன. குறிப்பாக, ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற அளவில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், பீகார் மாநிலத்தில் அமல்படுத்தக்கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.
தற்போது வரைவுச் சட்டம் இன்னும் முழுமையாக வராததால், அதன் விதிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கட்சி அறிவித்துள்ளது. முதல்வர் பதவியிலிருந்து விலகியதோடு, அரசியலில் இருந்தும் நிதிஷ்குமார் சற்று ஒதுங்கியிருக்கும் நிலையில் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதில் தெளிவில்லை.
பொது சிவில் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டால், சிறுபான்மை வாக்குகள் கை நழுவிப்போய்விடும் என்கிற அச்சம்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளைத் தடுமாற வைக்கிறது. பீகார் தேர்தல் அரசியலில் இஸ்லாமிய வாக்கு வங்கி தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக, சீமாஞ்சல் பகுதிகளிலும் வடக்கு பீகாரின் சில மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்
பீகாரில் இஸ்லாமிய வாக்காளர்கள்
2023-ஆம் ஆண்டு நிதிஷ்குமார் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, பீகாரில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 17.7 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கிஷன்கஞ்ச் பகுதியில், பீகாரிலேயே அதிக அளவாக 68% - 70% இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அளவுக்கு ஆதரவில்லை. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கடுமையான பின்னடைவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
90களுக்குப் பின்னர் பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய வாக்காளர்களின் முதன்மைத் தேர்வாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் இருந்து வருகிறது. கிஷன்கஞ்ச் & சுற்றுவட்டாரப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளமுண்டு. இது தவிர இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் ஓவைசியின் கட்சியும் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் & காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பவர்களின் முதல் தேர்வு, இதுவரை ஓவைசியின் கட்சியாகத்தான் இருந்து வருகிறது.
இஸ்லாமியர்களின் கோபத்துக்கு ஆளாகாமல், அனைவருக்குமான ஆட்சியை நிதிஷ்குமாரால் நடத்த முடிந்தது. அவரது காலத்தில் நடைமுறைக்கு வந்த நலத்திட்டங்களால் மஹ்பூப் & பஸ்மந்தா போன்ற இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. தற்போதைய நிலைமை தலைகீழ். நிதிஷ்குமாரை ஒதுக்கிவிட்டு, பாஜக கட்சியைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி முதல்வராக வந்ததை இஸ்லாமிய சமூகத்தினர் ரசிக்கவில்லை.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் வசம் 202 இடங்கள் உள்ளது. ஆனால், பாஜகவுக்கு 88 இடங்கள் மட்டுமே உள்ளன. பாங்கிப்பூர் தொகுதியை பிரஷாந்த் கிஷோரிடம் பறிகொடுத்த பின்னர் ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜனதா தளம் வசம் 85 இடங்களும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியிடம் 19 இடங்கள் உள்ளன. ஆகவே, பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைப் பெறுவதற்கு சக கூட்டணிக் கட்சிகளைப் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
நிதிஷ் குமாரின் வேதவாக்கு
உள்ளூர் நெருக்கடியை உணர்ந்த காரணத்தினால்தான் பீகார் பாஜக தலைவர்களும் நிதானமான அணுகுமுறையைக் கையிலெடுத்துள்ளார்கள். சக கூட்டணிக் கட்சிகள் பொது சிவில் சட்டம் விலக்கு பற்றிப் பேசுவதை மௌனமாக ஆதரிக்கிறார்கள். பெரும்பான்மையான எண்ணிக்கையோடு பாஜக ஆட்சியில் இருந்தாலும் சக கூட்டணிக் கட்சிகள் மீது சந்தேகப் பார்வை இருக்கிறது. எந்நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்கிற அரசியல் சூழல்தான் பீகாரில் தொடர்கிறது.
ஒருங்கிணைந்த ஜனதா தளத்தில் நிதிஷ் குமார் சொல்வதே வேதவாக்காக இருந்தது. தற்போது ஏராளமான முகங்கள் அதிகார மையங்களாக இருக்கிறார்கள். மத்திய அமைச்சரும், நிதிஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவருமான ராஜீவ் ரஞ்சன் சிங், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் ஜா, பீகார் துணை முதல்வரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான விஜய் குமார் சௌத்ரி ஆகியோர் இதுகுறித்து விரிவாக பேசுவதில்லை. கட்சியில் தேசியப் பொதுச் செயலாளராக உள்ள ஷியாம் ரஜாக் மட்டும் பழைய நிலைப்பாட்டை நினைவூட்டுகிறார். அதாவது, பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆதரிப்போம்; மாநிலத்தில் விலக்கி வைப்போம்!
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைப் பொறுத்தவரை பிரச்னையை நிதானமாக அணுகுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைகள் போல, பழங்குடியினர் மற்றும் பல்வேறு சமூகங்களின் பாரம்பரியத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று சிராக் பாஸ்வான் வெளிப்படையாக பேசினாலும், நேரிடையாக பாஜகவை எதிர்ப்பதில் அவருக்கு தயக்கமிருக்கிறது.
பீகாரின் நம்பர் ஒன் கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளம் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்துதான் லோக் ஜனசக்தி கட்சியின் நகர்வுகளும் இருக்கப்போகின்றன. அதுவரை பொது சிவில் சட்டம் குறித்த விஷயங்களில் பாஜகவிடம் நேரடி மோதல் போக்கில் இறங்கப்போவதில்லை. பீகார் மாநிலத்திற்கு மட்டும் விலக்கு கேட்பது என்பதெல்லாம் சாத்தியமில்லை. எனினும், பாஜகவின் தீவிரமான செயல்பாட்டைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும்.
பிரஷாந்த் கிஷாரின் புதிய எழுச்சி
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் பொது சிவில் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. தேர்தல்களில் தோற்றாலும் வலுவான கட்டமைப்பு கொண்ட எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. புது வரவான பிரஷாந்த் கிஷாரின் ஜன் சுராஜ் கட்சி, தற்போது பீகார் அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் வாக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இல்லையென்றால் எதிரணியில் உள்ள I-N-D-I-A கூட்டணிக்கு சாதமாக மாறக்கூடும்.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் ஓவைஸி கட்சிக்கு இணையாக இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து களமிறங்கியுள்ளது. பாங்கிபூரில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற பின்னர், பிரஷாந்த் கிஷோர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். பீகாரி இஸ்லாமியர்களுக்கு அதிக பிரநிதித்துவம் தரப்படவேண்டும் என்று அடுத்தகட்ட பாய்ச்சலுக்கும் தயாராகிவிட்டார்.
பாஜகவின் தோழமைக் கட்சிகள்
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பொது சிவில் சட்டம் என்பது வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல. உணர்வு ரீதியான விஷயம். தங்களுடைய மதச் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகள் மீது அரசுகள் தலையீடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர்களின் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் போன்றவற்றைக் கையாளும் இஸ்லாமிய மதச் சட்டமான 'ஷரியத்' விலக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள்.
2029க்குள் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக காட்டும் உறுதி, சர்வ நிச்சயமாக பீகார் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதே நிலை தொடர்ந்தால், 2029இல் நாடாளுமன்றத் தேர்தலும் அதைத் தொடர்ந்து 2030இல் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளும்போது அரசியல் கணக்குகள் தலைகீழாக மாறிவிடும்.
பொது சிவில் சட்டம் பற்றிய அமித் ஷாவின் திட்டம், பீகார் அரசியலிலும், வட கிழக்கு மாநிலங்களின் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தென் மாநிலங்களில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மௌனமாக கடந்து செல்கின்றன. பாஜகவின் தோழமைக் கட்சிகளான தெலுங்கு தேசம், அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பது பற்றிய தெளிவில்லை. தெற்கு வாசலையும் திறந்து பார்த்தால் மட்டுமே தெளிவு பிறக்கும்!
(வடக்கு வாசல் திறக்கும்..)

