டெல்லி தலைமைக்குக் கீழ் பணியாற்ற முடியாத தேசியக் கட்சிகளின் தலைவர்கள், அன்றாட அரசியலில் இருந்து விலகி வேறு ஏதாவது புதிய முயற்சிகளைச் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியதுபோல், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நிறைய பேர் விலகி, தேர்தல் பாதையைத் தவிர்த்து வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இளம் அரசியல் தலைவர்களை உருவாக்குவது, மாநில நலனை முன்வைத்து சிந்தனைக்களம் அமைப்பது என்று புதிய தேடல்களைத் தொடங்குகிறார்கள். இதுவும் ஒரு வகையில் அரசியல் துறவறம்தான். ஆனால், அரசியல் துறவறம் செய்யப்போவதாக சொல்லிக்கொண்டே அரசியலில் பரபரப்பாக இயக்கும் ஒருவரைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் முக்கியமான காங்கிரஸ் கட்சியின் முகமான முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் அரசியலில் இருந்து விலகிவிடவில்லை. ஆனால், அன்றாட அரசியலின் பரபரப்பில் இருந்து விலகிச் செல்ல நினைப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். இதுதான் இளைய தலைமுறை காங்கிரஸ் நிர்வாகிகளைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்னும் பாஜக vs காங்கிரஸ் இரு துருவ அரசியல்ன் நீடிக்கிறது. மதச்சார்பற்ற அரசியலை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரிரு காங்கிரஸ் தலைவர்களில் திக் விஜய் சிங் முக்கியமானவர். அவரது மாநிலங்களவை பதவிக்காலம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது. மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஆறு மாதங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டார்.
காங்கிரஸ் போன்ற தேசியக்கட்சியில் இருந்தாலும், மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல, தேசிய அளவில் தனக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் என்ன செய்யுமோ, அதையே திக் விஜய் சிங்கிற்கும் செய்தது. மறுபடியும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைமைக்கும் விருப்பமில்லை.
மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு இருந்தது. அதில், மறுபடியும் திக் விஜய் சிங் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியிலிருந்து முன்கூட்டியே பின்வாங்கியதும் இல்லாமல் அரசியலில் இருந்தும் ஓய்வெடுப்பதாக அறிவித்தார். காலியான அந்த ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மீனாட்சி நடராஜன் நிறுத்தப்பட்டு, கடைசி நேரத்தில் அவரது வேட்பு மனு நிராகரிப்பட்டது சுவராசியமான கதை.
திக் விஜய் சிங்கிற்கும் கிடைக்காமல் மீனாட்சி நடராஜனுக்கும் கிடைக்காமல் ராஜ்ய சபா சீட் பறிபோனது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்தபிறகே மனு நிராகரிக்கப்பட்டதால், மாற்று வேட்பாளரை நிறுத்த முடியாமல் போனது. காங்கிரஸ் வெல்ல வாய்ப்பிருந்த அந்த இடத்தையும் சேர்த்து, காலியாக இருந்த 3 மாநிலங்களவை இடங்களிலும் பாஜக நிறுத்திய வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்.
திக் விஜய் சிங் சொன்னபடி அரசியல் துறவறத்திற்கு போகவில்லை. முன்பைவிட, அரசியலில் பரபரப்பாகச் செயல்பட ஆரம்பித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் அவருடன் முழுவதுமாக பங்கேற்ற மூத்த தலைவர்களில் திக் விஜய் சிங்கும் ஒருவர். 75 வயதிலும் சுறுசுறுப்பாக பாதயாத்திரையில் பங்கேற்று நடந்தார்.
நடைபயணம் என்பது திக் விஜய் சிங்கிற்கு புதிதல்ல. அதுதான் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது. பத்தாண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் ஒரே காங்கிரஸ் முகமாக திக் விஜய் சிங் முன்னிறுத்தப்பட்டார். நர்மதி நதிக்கரையோரம் 3,300 கி.மீ தொலைவு 3 மாதங்களுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியைத் தந்தது.
மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளில் பாதி தொகுதிகளை அவரது நடைபயணம் தொட்டுச் சென்றது. அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைய முடிந்தது. இவையெல்லாம் 2018இல் மறுபடியும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது.
பத்தாண்டுகளுக்குள் அரசியல் மாறிவிட்டது. மறுபடியும் இன்னொரு நடைபயணம் மேற்கொள்ள அவரால் முடிந்தாலும், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று நினைக்கிறார். 2028 சட்டமன்றத் தேர்தல்தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பு என்று நினைக்கிறார்.
2020இல் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், காங்கிரஸ் கட்சியின் நிலை கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. கமல்நாத் கோஷ்டி, திக் விஜய் சிங் கோஷ்டி மோதல்களுக்கு நடுவே ஜோதிராதித்யா சிந்தியா கட்சியிலிருந்து வெளியேறியது என அடுத்தடுத்த நகர்வுகள் கட்சிக்குப் பின்னடைவைத் தந்த காரணத்தால் 2023 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சிக்கு வர முடியவில்லை.
சிந்தவாரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கமல்நாத், 2028 சட்டமன்றத் தேர்தல் பற்றியெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அவரது மகன் நகுல் நாத் தோல்வியடைந்த பின்னர் தந்தையும் மகனும் பாஜகவில் இணையப்போவதாக பேச்சு எழுந்திருக்கிறது.
திக் விஜய் சிங், எதையும் வெளிப்படையாகப் பேசி பழக்கப்பட்டவர். கடந்த காலங்களில் அவரது பேச்சு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதுண்டு. கமல்நாத் பாஜகவில் சேரப்போவதாக வரும் செய்திகள் பற்றி எதுவும் விளக்கம் தருவதில்லை. ஆனால், திக் விஜய் சிங்கோ, கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிப்பார் என்கிறார். இது வேறுவிதமான அரசியல்!
1993 முதல் 2003 வரை பத்தாண்டு காலம் மத்தியப் பிரதேச முதல்வராக திக் விஜய் சிங் இருந்தபோது நடந்த விஷயங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. பவர் கட், சாலை வசதி இல்லாத நிலை, வேலையின்மை என்று போபால்வாசிகளே சிரமப்பட்ட காலம். மாநிலத்தின் மற்ற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
திக் விஜய் சிங், தேசியக் கட்சிகளின் போதாமை பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார். காங்கிரஸ், பாஜகவிடமிருந்து மட்டுமல்ல, வலுவான மாநிலக் கட்சிகளான திமுக, சமாஜ்வாதி கட்சிகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார். ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகள் அவரது பேச்சை வழக்கம்போல் ரசிப்பதில்லை.
திக் விஜய் சிங்கின் உடன்பிறந்த தம்பியும் 5 முறை எம்.பியாக இருந்தவரான லக்ஷ்மண் சிங், கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான ஜித்து பட்வாரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக் விஜய் சிங்கை தவிர்த்துவிட்டு நேரடியாக டெல்லி தலைமையுடன் நெருக்கம் காட்டுகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகளில் பல ஆண்டுகளாக சீனியர் சிட்டிஸன் ஆதிக்கம் அதிகம். பாஜகவோ தடாலடியாக பல மாற்றங்களைச் செய்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. கடந்த முறை சிவராஜ் சிங் சௌகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டு, டெல்லி அரசியலுக்கு அழைக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியோ பல ஆண்டுகளாக வாரிசு அரசியல், கோஷ்டிப் பூசலில் தள்ளாடுகிறது. திக் விஜய் சிங்கிற்கும் கமல் நாத்திற்கும் இடையேயான பவர் பாலிடிக்ஸ் உச்சத்தில் இருக்கிறது. இளைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியை நோக்கி வராமல் தவிர்ப்பதற்கு இதுவும் காரணம். 70 வயதைக் கடந்த இரு மூத்த தலைவர்களிடமிருந்தும் கட்சியை மீட்டெடுக்க டெல்லி தலைமை கடும் முயற்சியெடுக்கிறது.
திக் விஜய் சிங் & கமல் நாத் கோஷ்டியை தவிர்த்துவிட்டு வேறு தலைவர்களைத் தேட ஆரம்பித்து காங்கிரஸ் மேலிடம் அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன் காரணமாகவே மத்தியப் பிரதேசத்தின் ஓபிஸி முகமான ஜித்து பட்வாரி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். கமல் நாத்தை தவிர்த்துவிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த உமம் சிங்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகவும், டெல்லி தலைமையுடன் நெருக்கமானவராகவும் அறியப்படும் மீனாட்சி நடராஜன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும் களத்தில் அந்நியப்பட்டு நிற்கிறார். திக் விஜய் சிங், கமல்நாத் தவிர வேறு யாரும் நிர்வாகத் திறமையுடன் கூடிய அரசியல் தலைவர்களாக உருவெடுக்கவில்லை. கமல்நாத்தைப்போல் திக் விஜய் சிங் அமைதியாக இருந்துவிடுவதில்லை என்பதுதான் இன்றைய பிரச்னை.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான ஜித்து பட்வாரி, உஜ்ஜைனியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை 'வீர் பாரத் நியாஸ்' என்ற அறக்கட்டளைக்கு ஒதுக்கிய விஷயத்தில் பாஜக அரசு முறைகேடு செய்திருப்பதாக பரபரப்பைக் கிளப்பினார். அதுவொரு வழக்கமான நிர்வாக நடைமுறைதான். அதில் எந்த முறைகேடும் இல்லை என்று விளக்கம் தந்தது பாஜக அல்ல, திக் விஜய் சிங்!
’ஜித்து பட்வாரியை தன்னுடைய மகன் போன்றவர், அறிவுரை சொல்லி வழி நடத்துகிறேன்’ என்று விளக்கம் கொடுத்தாலும் திக் விஜய் சிங்கின் போக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் திக் விஜய் சிங் அவ்வப்போது அதிரடியாக கருத்து சொல்லி புதிய சங்கடங்களையும் உருவாக்கிவிடுகிறார்.
மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்எஸ்எஸ் என திக் விஜய் சிங்கை பாராட்டதவர்களே கிடையாது! பாஜக கட்சியின் செயல்பாடுகளையும் அதன் தலைவர்களையும் பாராட்டுவதன் மூலம் காங்கிரஸ் மேலிடத்தை மறைமுகமாக விமர்சிக்கிறார். திக் விஜய் சிங் போன்ற சீனியர் தலைவர்களால்தான் பிரச்னை என்பதை காங்கிரஸ் மேலிடமும் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால், வேறு வழியில்லை!
காங்கிரஸ் கட்சியில் உள்ள முரண்களை பாஜக நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது. எந்த தேர்தல் நடந்தாலும் திக் விஜய் சிங்கின் இருண்டகாலத்தை நினைவூட்டுவதுதான் பாஜக செய்யும் முதல் பணியாக இருந்து வருகிறது. கூடவே, அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்களை வைத்து இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியை பாஜகவும் தொடர்கிறது. அதை வெற்றிகரமாக செய்து முடிக்க பாஜகவில் ஒரு டஜன் இளைய தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை!
(வடக்கு வாசல் திறக்கும்..)