\
vadakku vaasal 2 series to uttar pradesh state politics current updates
yogi adityanath, Smriti Iranichat gpt

வடக்கு வாசல் - 2 | யோகிக்கு மாற்றாக களமிறக்கப்படும் ஸ்மிருதி இரானி.. உக்கிரத்தில் உ.பி.!

மூன்றாவது முறையும் யோகியை முதல்வராக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் களமிறங்கிவிட்டன. இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் திடீர் நியமனம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Published on

மீண்டும் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள ஸ்மிருதி இரானி! 

2024 தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஒதுங்கியிருந்த ஸ்மிருதி இரானி, மீண்டும் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய தேசிய பொதுச் செயலாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதில் ஸ்மிருதி இரானியும் இடம் பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டுள்ளார். தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம், பிரசாரத்தை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் இம்முறையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாக்கமும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னெடுப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஸ்மிருதி இரானியின் நியமனம் கவனம் பெற்றுள்ளது.

smriti irani
smriti iraniANI

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி, பாஜகவுக்கு தேசிய அளவில் சவாலை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய இந்துக்களின் நம்பிக்கையும் பக்தியையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் அடித்தளத்திற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. உ.பியில் பாஜக இதுவரை சந்தித்த சவால்களைவிட இது முற்றிலும் மாறுபட்ட சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் தயாராகவே இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், இந்துத்துவா விஷயங்களை பாஜக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. திடீரென்று வெடித்துக் கிளம்பிய அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி பற்றி சமாஜ்வாடி கட்சி தொடர்ந்து பேசிவருவதால் அதைச் சமாளிப்பதற்காக புதிதாக சில விஷயங்களைக் கையிலெடுக்க வேண்டியிருக்கிறது.

சமாஜ்வாதியுடன் மோதத் தயாராகும் யோகி ஆதித்யநாத்!

துளசிதாசர் பிறந்த இடம், வால்மீக ஆசிரமம், மந்தாகினி நதிக்கரையை அழகுப்படுத்தும் திட்டம் என்று ராமாயணம் சம்பந்தப்பட்ட விஷயங்களையே நலத்திட்டங்களாக யோகி அரசு முன்வைக்கிறது. ஒருவேளை, சமாஜ்வாடி ஆட்சியில் இருந்திருந்தால், இதையெல்லாம் செய்யாமல் மயானங்களைச் சுற்றி எல்லைச் சுவர்களைக் கட்டிக்கொண்டிருப்பார்கள் என்று முதல்வர் யோகி, அரசியல் ரீதியாகவும் சமாஜ்வாதி கட்சியுடன் மோதத் தயாராகிவிட்டார்.

தீவிர இந்துத்துவா கொள்கைகளை பாஜக மட்டுமல்ல, சமாஜ்வாடி கட்சியும் கையிலெடுத்துள்ளது. பசு பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்டுவதில் பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே பெரும் போட்டி எழுந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பசுவை தேசிய தாயாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்னொரு பக்கம், குடிமக்கள் அனைவரும் பசு பக்தர்களாக இருக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார். ஆளுங்கட்சியோ, சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள், பசு கடத்தலைத் தடுக்க தீவிர நவடிக்கைகளை மேற்கொண்டு, நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்துள்ளது.

yogi adityanath
yogi adityanathANI

ஜான்சி, லலித்பூர், மஹோபா, அமீர்பூர் போன்ற இடங்களுக்கு முதல்வர் யோகி அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2022 சட்டமன்றத் தேர்தலில் இதே பகுதியைச் சேர்ந்த 19 தொகுதிகளில் 16 இடங்களில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலான தொகுதிகளை பாஜக, சமாஜ்வாதி கட்சியிடம் இழந்திருக்கிறது. பாஜக செல்வாக்குள்ள தொகுதிகளில்கூட சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, 2027 தேர்தல் அத்தனை சுலபமானதாக இருக்கப்போவதில்லை.

யோகிக்கு மாற்றாக ஸ்மிருதி இரானி?

மூன்றாவது முறையும் யோகியை முதல்வராக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் களமிறங்கிவிட்டன. இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் திடீர் நியமனம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. யோகிக்கு மாற்றாக ஸ்மிருதி இரானியை முன்னிறுத்த பாஜக தலைமை விரும்புகிறதோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

smriti irani
smriti iraniANI

2017இல் உ.பி சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக ஸ்மிருதி இரானியை முன்னிறுத்த பாஜக தலைமை திட்டமிட்டபோது, ஆர்.எஸ்.எஸ் தரப்பு அதிருப்தி தெரிவித்தது. உ.பியைச் சேர்ந்தவருக்கே முதல்வர் வேட்பாளர் என்று ஆர்எஸ்எஸ் தரப்பு முன்வைத்த வாதத்தை பாஜக தலைமையும் ஏற்றுக்கெண்டதால் ஸ்மிருதி இரானிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி இருந்த காலத்தில் பாரதிய ஷிக்ஷா மண்டல் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் போன்ற அமைப்புகளுடன் அவருக்கு முரண்பாடுகள் எழுந்தன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மகளிர் பிரிவான ராஷ்ட்ர சேவிகா சமிதி நடத்திய விழாவொன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ஸ்மிருதி இரானி அழைக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்மிருதி இரானிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் இடையே ஏதோ ஓர் இடைவெளி இருந்துவரும் பின்னணியில் அவரை உ.பி மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிப்பதில் நிச்சயம் அரசியல் வியூகம் இருக்கிறது. இந்துத்துவா வாக்கு வாங்கியைத் தாண்டி, புதிய ஆதரவுத்தளத்தையும் பாஜக தலைமை தேட ஆரம்பித்திருப்பது நிஜம்.

மகளிர் வாக்குளை கவர்ந்திழுக்கும் முகமாக ஸ்மிருதி இரானி!

காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டங்கள், இளைய தலைமுறையினரைக் கவர்ந்திழுக்கும் நேரத்தில் ஸ்மிருதி இரானியின் செயல்பாடுகள், உ.பி தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். காக்ரோச் ஜனதா பார்ட்டி அமைப்பைச் சேர்ந்தவர்களில் பலர் முன்னணி கல்வி நிலையங்களில் படித்தவர்கள். தீவிர அரசியலில் பிடிப்புள்ள, துடிப்பான இளைஞர்கள். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் என இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து திரண்டு வந்தவர்கள். குறிப்பாக, இந்துத்தவா ஆதரவுத் தளங்களை தாண்டி, நுழைவுத்தேர்வு முறைகேடு, வேலைவாய்ப்பின்மை போன்று பொதுவான விஷயங்களை முன்வைத்துப் போராடுபவர்கள். ஆகவே, அவர்களது தாக்கம் சட்டமன்றத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்கிற அச்சம் பாஜக தலைமைக்கு உண்டு. இந்துத்துவா முகத்தைத் தாண்டிய, ஒரு பொதுவான முகமாக, பிரபலமான முகமாக, மகளிர் வாக்குளை கவர்ந்திழுக்கும் முகமாக ஸ்மிருதி இரானியால் இருக்க முடியும்.

smriti irani
smriti irani PTI

ஸ்மிருதி இரானி, டெல்லியில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த ஸ்மிரிதி இரானி, சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ‘க்யூங்கி சாஸ் பி கபி பஹூ தி’ என்னும் தொடரில் ‘துளசி விரானி’ என்னும் கேரக்டரில் நடித்த பின்னர், தேசிய அளவில் ஸ்டார் முகமாக ஆனவர். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே பாஜகவில் சேர்ந்தவரின் அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்றங்கள்தான். 2011-இல் ராஜ்ய சபா எம்பியானவர், 2014-இல் அமேதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டதன் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றார். தேர்தலில் ராகுல் காந்தியிடம் தோற்றுப்போனாலும், மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

ஸ்மிருதி இரானியின் தாய், வங்கத்துப் பிராமணர். அவரது தந்தையோ, பஞ்சாபி. அவரது கணவரோ, பார்சி இனத்தைச் சேர்ந்தவர். பல்வேறு கலாசார பின்னணிதான் ஸ்மிருதி இரானியை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவந்தது. ‘என்னுடைய பெயர் ஸ்மிருதி இரானி. என்னுடைய ஜாதி என்னவென்று கண்டுபிடிக்க முடியுமா’ என்று மக்களவை விவாதத்தில் சவால் விடுவதற்கும் அதுதான் காரணமாக இருந்தது.

அரசியலில் இருந்து விலகியிருந்த ஸ்மிருதி!

ஸ்மிருதி இரானியின் அரசியல் வாழ்க்கையில் 2019 தேர்தல் முக்கியமானது. முன்னர் தோற்ற அதே அமேதி தொகுதியில் மறுபடியும் போட்டியிட்டு ராகுல் காந்தியை தோற்கடித்தார். விவாதங்களில் ‘மாஸ்டர்’ என்று பெயரெடுத்தவர். நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா - ஜே.என்.யூ பிரச்னை குறித்த ஸ்மிருதி இரானியின் 50 நிமிட உரையும், 2019 அமேதி தேர்தல் பிரசாரமும், ராகுல் காந்தியை தோற்கடித்த பின்னர் அவர் நிகழ்த்திய உரையும் அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தருணங்கள். 2014 முதல் 2024 வரை தொடர்ந்து பத்தாண்டுகள் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 2024 தேர்தலில் மறுபடியும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார். தோல்விக்குப் பின்னர், மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. தேசிய அளவிலான முக்கியப் பொறுப்புகளிலும் இடம்பெறவில்லை. அன்றாட அரசியலில் இருந்து விலகியிருந்ததுடன், மறுபடியும் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

smriti irani
smriti irani PTI

25 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைப் பிரபலப்படுத்திய அதே சீரியலின் இரண்டாம் பாகத்தில் சமீபத்தில்தான் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு எபிசோடிற்கு 14 லட்ச ரூபாய் சம்பளம் பெறுவதாக செய்தி வெளியானது. தேசிய அளவில் டிவி சீரியலில் ஒரு எபிசோடிற்கு ரூ.14 லட்சம் ஊதியமாக யாரும் பெற்றதில்லை என்கிறார்கள். கேரியர் உச்சம்! 2024 தேர்தல் தோல்வி குறித்து ஸ்மிருதி இரானி பேசியபோது, “2004 & 2014 என இருமுறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளேன். வாஜ்பாய்கூட தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறார். ஆனால், அமேதி தொகுதி எனக்கு எப்போதும் ஸ்பெஷல் என்று குறிப்பிட்டிருந்தார். 2029இல் மறுபடியும் அமேதியில் போட்டியிடவும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்வரும் உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரகராக ஸ்மிருதி இரானி இருப்பார். உ.பி முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருப்பாரா என்பதை யூகிக்க முடியவில்லை. ஒருவேளை, பாஜக தலைமை விரும்பினாலும், ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் அனுமதி பெற வேண்டும். உ.பி தேர்தலில் தடம் பதித்தால் தேசிய அளவில் பாஜகவின் மகளிர் முகமாக இருப்பார் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிவிடமுடியும்.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: வடக்கு வாசல் - 1 | தடுமாறும் ஆம் ஆத்மி.. பாஜகவை நெருங்கும் அகாலி தளம்.. பஞ்சாப்பில் புதிய கூட்டணி?

(வடக்கு வாசல் திறக்கும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com