மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தும் அக்னிபாத் 2.0 திட்டம், மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கான பதிலாக இருக்கக்கூடும். அதன் பின்னணியில், சில அரசியல் கணக்குகள் இருக்கக்கூடும். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எந்த நோக்கத்திற்காகத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தைவிட்டு விலகிவிடக்கூடாது என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
அக்னிபாத் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கான ராணுவ வீரர்களைத் தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக மத்திய அரசால் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஏராளமான சந்தேகங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் அக்னிபாத் திட்டம் மிகப் பெரிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம் ஹிந்தி ஹார்ட் லேண்ட் மட்டுமல்ல, ஜவான் ஹார்ட் லேண்ட் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில், 200 தொகுதிகளுக்கும் மேற்பட்ட தொகுதிகள் இடம்பெறும் மாநிலங்கள் இவை. 2022 முதல் அக்னிபாத் திட்டம் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இருந்து வந்த நிலையில்தான் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.
அடுத்த ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் 2028ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் அக்னிபாத் திட்டம் நிச்சயம் பேசுபொருளாக இருந்து பாஜகவுக்குக் கைகொடுக்கும்.
குறிப்பாக ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், உத்தராகண்ட் ஆகிய இந்தி பேசும் மாநிலங்கள் இந்திய ராணுவத்திற்கு அதிகமான ராணுவ வீரர்களைத் தொடர்ந்து வழங்கி வருபவை. 2024 தேர்தலில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பாக, ஜாட் சமூகத்தினர் மத்தியில் அக்னிபாத் திட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது.
2024ல் காங்கிரஸ் உள்ளிட்ட I-N-D-I-A கூட்டணிக் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்துச் செய்வோம் என்பதை முக்கியமான வாக்குறுதியாக முன்வைத்தார்கள். மத்தியில் அக்னிபாத் திட்டம் உறுதியாகத் தொடர்ந்த நிலையில், மக்களின் அதிருப்தியை சரி செய்வற்காக ஒரு சில மாநில அரசுகள் சில முன்னெடுப்புகளையும் மேற்கொண்டார்கள்.
ஹரியானாவில் ஓய்வு பெற்று திரும்பி வரும் அக்னி வீரர்களுக்கு மாநில காவல் துறை மற்றும் அரசுப் பணிகளில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்துவிட்டு ஊர் திரும்பும் வீரர்களுக்கான அனைத்து சலுகைகளும் அக்னிபாத் வீரர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது..
பாரம்பரிய நடைமுறையின் மூலம் ராணுவத்தில் சேரும் ஒரு வீரர், தன்னுடைய 20 ஆண்டுகாலப் பணிக்காலத்தில் மாதந்தோறும் வீட்டிற்கு அனுப்பிவைக்கும் ஊதியமும், ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியம் மற்றும் இன்னபிற பலன்களும் பல குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதோடு, பல சிறிய கிராமங்களின் பொருளாதாரத்திற்கும் கைகொடுத்துள்ளன.
அக்னிபாத் திட்டத்தால் ஓய்வூதியம் இல்லாத நிலை உருவாவதால், நீண்டகாலப் பொருளாதாரப் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிவிடுகிறது. 4 அல்லது 6 ஆண்டுகளில் பணி முடிந்து திரும்பும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து, திருமண வாய்ப்புகள் தடைபடுவதாகப் பேசப்படுகிறது. 25 வயதில் ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் பணிக்காலம் முடிந்து திரும்பும்போது மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயமும் உண்டு.
அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் என்பது சற்றே நவீனமானது. இந்தியாவுக்கான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் ராணுவ நவீனமயமாக்கலுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓய்வூதியம், ராணுவ வீரர்களின் ஊதியச் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ராணுவ வீரர்களின் சேவையைத் திறம்பட மேம்படுத்துவதும் அதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
2014ல் 'ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்' (OROP) திட்டம் அமலுக்கு வந்த பின்னர், இந்தியப் பாதுகாப்புத்துறையின் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியத்திற்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகமானது. பாதுகாப்புத் துறைக்கென்று ஒதுக்கப்படும் மொத்த நிதியில் சுமார் 50 - 60 சவீதம் வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்பட்டது. புதிய ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் வாங்கவும், ராணுவத் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை.
அக்னிபாத் திட்டத்தின்படி, முப்படை அதிகாரிகளின் கீழ் பணிபுரியம் வீரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ரேஷன் போன்ற கூடுதல் பலன்களால் வரும் நிதிச்சுமையைத் தவிர்க்க, நான்கு ஆண்டுகாலப் பணி என்று வரையறுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னிபாத் திட்டத்திலிருந்து வெளியேறுபவர்களுக்குச் சேவா நிதியும், பணிநிறைவுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு உதவிகளும் வழங்கப்படும். நான்கு ஆண்டுகாலப் பணிக்குப் பின்னர் 25 சதவீத அக்னிபாத் வீரர்கள் தகுதியின் அடிப்படையில் வேறு பணிகளில் சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்புத் தரப்பட்டது.
அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நடத்திய ஆய்வில் வழக்கமான நடைமுறையில் தேர்ந்தெடுககப்படும் ராணுவ வீரரோடு ஒப்பிடும்போது, அக்னிபாத் வீரர்களுக்கான செலவுகள் கணிசமாகக் குறைவதாகத் தெரிய வந்தது. அதாவது, நிலையான ஊதிய வரம்பில் உள்ள ராணுவ வீரருடன் ஒப்பிடுகையில், அக்னிபாத் வீரரால் அரசுக்கு ஆண்டிற்கு ₹1.75 லட்சம் வரை செலவு குறைவதாகக் குறிப்பிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டத்தின் கீழ், பணிக்காலம் முடிந்து வெளியேறவிருந்த 75 சதவீத அக்னி வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட ஆண்டுகளில் முறையே ₹43,500 மற்றும் ₹47,500 எனக் கணிசமான ஊதியம் தரப்படும். இரண்டாவது ஆண்டின் முடிவில் வழக்கமான நடைமுறையின் கீழ் ராணுவ வீரர்களாகச் சேர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாண்டு நீட்டிப்புக்குப் பிறகு ராணுவ பணியைத் தொடர விரும்பாமல் வெளியேற விரும்புவர்களுக்குச் 'சேவா நிதி' தொகுப்பில் அரசின் பங்களிப்பு 50 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
பழைய திட்டத்தின்படி, 4 ஆண்டுகள் முடிவடைந்தவுடன் 75% அக்னிவீரர்கள் கட்டாயமாக ராணுவத்திலிருந்து வெளியேற வேண்டும். 4 ஆண்டுகள் தீவிர ராணுவப் பயிற்சி பெற்று, கள அனுபவம் பெற்ற வீரர்களை உடனடியாக வெளியேற்றுவது ராணுவத்திற்கு இழப்புதான். வெளியேறுபவர்கள் எவரும் திறமையற்றவர்கள் அல்ல. நிரந்தரப் பணியிடங்கள் குறைவாக இருப்பதுதான் காரணம். அவர்களது திறமையையும், அனுபவத்தையும் இந்திய ராணுவம் கூடுதலாக 2 ஆண்டுகள் பயன்படுத்திக்கொள்வதற்காகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றங்கள்? அக்னிபாத் திட்டம் வெற்றிகரமாக இலக்கை எட்டியதா என்கிற கேள்விகள் எழுகின்றன.
இந்திய ராணுவ வீரர்களின் சராசரி வயதை 32-லிருந்து 26 ஆகக் குறைத்து, தொழில்நுட்ப ரீதியாகவும் உடல் தகுதியிலும் துரிதமாகச் செயல்படும் இளம் ராணுவத்தைக் கட்டமைப்பதில் அக்னிபாத் திட்டம் வெற்றிப் பெற்றிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது இளைஞர்கள் மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நிரந்தர வேலை மற்றும் ஓய்வூதியம் கிடைக்காது என்பதுதான் காரணம்.
வழக்கமான நடைமுறையின்படி, ராணுவத்தில் சேரும் ராணுவ வீரருக்கு வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆனால், அக்னிபாத் திட்டத்தின் மூலம் 4 அல்லது 6 ஆண்டுகள் பணிபுரிந்து வெளியேறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. ஓய்வூதியம் கிடைக்கப்போவதில்லை என்பதுகூடப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இளம் வயதில் ராணுவத்திலிருந்து வெளியேறும் இளைஞர்களின் எதிர்காலம், அடுத்த வேலைவாய்ப்புக் குறித்த கவலைகள் எனப் பல விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன.
புதிய அக்னிபாத் திட்டம் சில உடனடிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்கிறது. போர்ப் பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை நீண்டகாலத்திற்குத் தக்க வைத்துக்கொள்வதோடு, பயிற்சிச் செலவுகளும் ஒருவழியாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகால நீட்டிப்பு என்பது அக்னி வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம், அதிகரித்து வரும் இளைஞர் வேலையில்லாத் திண்டாட்டம், கோவிட் காலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறை ஆகியவற்றிற்குத் தீர்வாக அமைந்துள்ளது.
இவை நியாயமான, எதிர்பார்ப்பை ஒட்டிய தீர்வுகள்தான். ராணுவ வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள அதிருப்தியை சரி செய்ய உதவும். ஆனால், ராணுவ வீரர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதும், சேவா நிதி உயர்வும், ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ள பாதுகாப்புத்துறைக்கு நீண்டகாலக் கூடுதல் சுமைகள் தரக்கூடும்.
2026-27 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்காக அரசு ₹17,396 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டைவிட இது 58 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டில் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஏற்கெனவே 44 சதவீத பங்கு வகிக்கிறது. இதில் ஓய்வூதியம் மட்டுமே 22 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
அக்னிபாத் 2.0 திட்டத்திற்கான கூடுதல் நிதி, பாதுகாப்புத் துறையின் மூலதனச் செலவினத்தை, குறிப்பாகப் பாதுகாப்புப் படைகளின் திறன்களை உயர்த்த மிகவும் தேவையான நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறைக்கக்கூடும். நவீன ஏகணைகள், மேம்படுத்தப்பட்ட ட்ரோன்கள் தவிரப் போர் விமானங்கள், போர் கப்பல்கள், ஹெலிகாப்டர், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தரைப்படையின் பீரங்கிகள் கூடப் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளன.
அக்னிபாத் 1.0 திட்டம், பாதுகாப்பு துறைக்கான செலவுகளைக் குறைக்கக் கொண்டு வரப்பட்ட திட்டம். அது உண்டாக்கிய குறுகிய காலப் பிரச்னைகளுக்கு அக்னிபாத் 2.0 திட்டம் தீர்வு கண்டிருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கான ராணுவப் பணி வாய்ப்பை உறுதி செய்வதற்காகப் வீரர்களிடம் போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடும். அது வீரர்களின் போர்த்திறனையும், தோழமையோடு சேர்ந்து பணியாற்றும் திறனையும் குறைத்துவிடும் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன்னை முன்னிறுத்தி, போட்டி மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டால் மிகப்பெரிய ஆபத்தில் முடிந்துவிடும். இதுவொரு சிக்கலான பிரச்னை. இதற்கொரு தீர்வு காண்பதற்கு அக்னிபாத் 3.0 வரை காத்திருக்க முடியாது என்பதுதான் நிஜம்.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க:
(வடக்கு வாசல் திறக்கும்..)