சிறப்புக் களம்

பொன்னியின் செல்வன் டூ பிம்பிசாரா வரை: இந்திய சினிமாவில் அணிவகுக்கும் 'சரித்திர' படங்கள்!

பொன்னியின் செல்வன் டூ பிம்பிசாரா வரை: இந்திய சினிமாவில் அணிவகுக்கும் 'சரித்திர' படங்கள்!

நிவேதா ஜெகராஜா

இந்திய சினிமாவில் சரித்திர படங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. புனைவுத் திரைக்கதைகளைக் கொண்ட சரித்திரப் பின்னணி படைப்புகளுக்கும் அதே மவுசு நிலவுகிறது. குறிப்பாக, 'பாகுபலி' படத்துக்கு இந்தப் போக்கின் கிராஃப் வேறுவிதமாக மாறிவிட்டது. 'பாகுபலி' வெற்றியின் தாக்கம் பல்வேறு சரித்திரப் பின்புல படங்களை எடுக்க வித்திட்டுள்ளது. அப்படி இந்தியா சினிமாவில் தற்போது எடுக்கப்பட்டு வரும் சரித்திரப் பின்புல படங்களின் அணிவகுப்பை பார்ப்போம்.

ஆர்ஆர்ஆர்: 'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து, ராஜமெளலி இயக்கும் படம்தான் 'ஆர்ஆர்ஆர்'. இதுவும் சரித்திரப் பின்னணியைக் கொண்டே தயாராகிறது. 1920-களில் ஆங்கிலேயர்களையும், நிஜாம்களையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கு தேசத்தின் நாயகர்கள் அல்லூரி சீதராமா, கோமரம் பீமா வாழ்க்கையை மையப்படுத்தி 'ஆர்ஆர்ஆர்' உருவாகி இருக்கிறது.

'பாகுபலி'யில் பிரபாஸ், ராணா உடன் கைகோர்த்திருந்த ராஜமெளலி இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை கதாநாயகர்களாக நடிக்க வைத்துள்ளார். அவர்கள் தவிர, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், சமுத்திரக்கனி முதலான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இரண்டு ஹீரோக்களின் இன்ட்ரோ சீனுக்கு மட்டும் ரூ.45 கோடி, `ப்ரண்ட்ஷிப்' பாடல் படப்பிடிப்புக்கு மட்டும் ரூ.6 கோடி என 'பாகுபலி' படத்துக்கு நிகரமாக பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

வழக்கம்போல் கதை, வசனத்தை தனது தந்தை விஜேந்திர பிரசாத்தை வைத்தும், இசையை தனது உறவினர் கீரவாணியை வைத்தும் செய்துள்ள ராஜமெளலி படத்தொகுப்பு மட்டும் தனது ஆஸ்தான படத்தொகுப்பளார் வெங்கடேஸ்வர ராவுக்குப் பதிலாக, ஶ்ரீகர் பிரசாத் கூட்டணியில் இணைந்திருக்கிறார். மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்: மலையாளத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் 'மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், கொரோனா சூழலால் படம் வெளியாகவில்லை.

மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 'ஆஷிர்வாத்' சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸுக்கு தயாராக உள்ள இந்தப் படம், கொரோனா சூழல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட வருகிறது.

மஹாவீர் கர்ணா: 'என்னுநின்டே மொய்தீன்' என்ற காதல் காவியத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஆர்.எஸ்.விமல் தனது அடுத்த படமாக அறிவித்ததுதான் 'மஹாவீர் கர்ணா'. கர்ணனுடைய கதையை மையப்படுத்தி ரூ.300 பட்ஜெட்டில் எடுக்கப்பட போவதாகவும், கர்ணனாக விக்ரம் நடிக்கிறார் என்றும், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 'பாகுபலி' ரிலீசுக்கு பிறகு தகவல்கள் சொல்லப்பட்டது. படத்துக்காக பூஜை எல்லாம் போடப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே படம் தள்ளிபோடப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்: கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க வேண்டும் என்பது தன்னுடைய பெருங்கனவு என்று இயக்குநர் மணிரத்னம் பலமுறை தெரிவித்து வந்தார். தற்போதுதான், தன்னுடைய அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த 2019-ஆம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. முழுப் படமாக வெளியாகிறது என்றுதான் இத்தனைநாள் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஸ்வீட் சர்ப்பரைஸாக இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது படக்குழு.

படத்தில் ஜெயம் ரவி தொடர்பான காட்சிகள், சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தன. அதேபோல் தற்போது நடிகர் கார்த்தியின் வசனக் காட்சிகளும் முடிந்துவிட்டன. இந்தநிலையில் குவாலியரில் மற்ற நடிகர்களின் இறுதிக்கட்ட காட்சிகளை பிரமாண்ட அரண்மனைகளில் மணிரத்னம் படமாக்கி வருகிறார். அந்த படப்பிடிப்பும் ஓரிரு நாட்களில் முடியவுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தை, வெறும் 120 நாட்களில் மணிரத்னம் படமாக்கியுள்ளார். இந்தப் படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆனாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சுமார் 120 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்த்: தமிழில் 'பொன்னியின் செல்வன்' போல, இந்தியில் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின் கனவு படமான `தக்த்' உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொகலாய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள `தக்த்' கதைக்கு பொருத்தமாக கரீனா கபூர், ஆலியா பட், ரன்வீர் சிங், பூமி பெட்னேகர், ஜான்வி கபூர், விக்கி கவுஷல், மாதுரி தீட்சித், அனில் கபூர் என நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது ரன்வீர் சிங்கை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கவுள்ள கரண், அதன்பின் `தக்த்' படத்தை கையிலெடுக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பீமா கோரேகான் போர்: கோரேகான் போரின்போது நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கும் விதமாக எடுக்கப்பட்டு வரும் பாலிவுட் படமே 'பீமா கோரேகான் போர்' திரைப்படம். சித்னக் மகார் இனாம்தாராக அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, திகங்கனா சூரியவன்ஷி, சன்னி லியோனி, அபிமன்யு சிங் போன்ற பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். ரமேஷ் தீட் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ஆதிபுருஷ்: 'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படமே 'ஆதிபுருஷ்'. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் மூலமாக 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியைப் படமாக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிம்பிசாரா: தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நந்தமுரி கல்யாண் ராமின் 18-வது படமே 'பிம்பிசாரா'. ஜைன வரலாற்றில் பிம்பிசாரா அல்லது ஷ்ரேணிகா மற்றும் சேனியா மகத மன்னர் பற்றிய கதையாக வெளிவருகிறது. 'பிம்பிசாரா'வை என்டிஆர் ஆர்ட்ஸ் பேனரில் கே ஹரி கிருஷ்ணா தயாரிக்கிறார் மற்றும் மல்லிடி வசிஸ்ட் என்பவர் இயக்கியுள்ளார்.

- மலையரசு