Published : 08,Sep 2021 04:13 PM

இந்திய ரசிகர்களை ஈர்ப்பதில் தென்னிந்திய சினிமாதான் டாப்! - தேடல்களும் பின்புலமும்

How-South-Indian-cinema-get-viewers-across-india

சமீபகாலமாக பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் தென்னிந்திய மொழி திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. இதன் பின்னணியில் தென்னிந்திய சினிமாவுக்கு இந்திய அளவில் கிடைத்திருக்கும் வரவேற்பும் ஒரு காரணமாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்தி மொழி ரசிகர்களைத் தாண்டி மற்ற மொழி பார்வையாளர்களிடமும் தென்னிந்திய சினிமா பெற்றுள்ள வரவேற்பு குறித்து விரிவாகப் பாப்போம்.

இந்திய சினிமாவின் 108 ஆண்டுகால வரலாற்றில் இருண்ட காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, 2020-ம் ஆண்டு தீபாவளி. ஏனெனில், வழக்கமாக தீபாவளி என்றால் தியேட்டர்களில் படங்கள் குவியும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறையாமல் இருந்ததால் படங்கள் ஓடிடி தளங்களில் களம் கண்டன. இந்திய அளவில் தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் சில பெரிய படங்கள் மட்டுமே வெளியாகின. அமேசான் பிரைம் வீடியோவில் தமிழில் நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படமும், பாலிவுட்டில் 'சலாங்' என்ற திரைப்படமும், நெட்ஃபிக்ஸில் மற்றொரு பாலிவுட் திரைப்படமாக 'லுடோ' என்கிற படமுமே பெரிய படங்களாக ரிலீசாகின.

image

இதில் பாலிவுட்டின் இரண்டு படங்களைக் காட்டிலும், தமிழ் திரைப்படமான நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று'க்கான கூகுள் தேடல், தென்னிந்திய சினிமா இந்திய அளவில் சந்தித்து வரும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. நவம்பர் 8-14 முதல் வாரத்தில், கூகுள் தேடலில் மற்ற இரண்டு படங்களை காட்டிலும் 'சூரரைப் போற்று' படத்தையே அதிகம் தேடியிருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிக்கிம் போன்ற மாநிலத்தில் இருந்துகூட, சூர்யாவின் படத்தை தேடியிருக்கின்றனர். கோவா, திரிபுரா, அசாம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களிலும் இதே நிலைதான். அங்கும் தமிழ்ப் படத்துக்கான வரவேற்பு அதிகமாகவே இருந்துள்ளது.

தென்னிந்திய மொழிப் படங்கள் புவியியல் எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்திய மக்களைச் சென்றடைய வேண்டிய முயற்சியை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளன. குறிப்பாக 'பாகுபலி' படத்துக்கு பிறகு இது அதிகமாகி வருகிறது. இந்த முயற்சியை கொரோனா தொற்றுநோய் ஓடிடி மூலம் இந்த பிரகாசமாக்கி இருக்கிறது. இதனால் ஃபஹத் ஃபாசில், சூர்யா, அல்லு அர்ஜுன், பிரபாஸ் போன்ற 'நியூ ஜென்' நடிகர்கள் தென்னிந்திய மொழி அல்லாத பார்வையாளர்களை கவர்வதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற பழைய சூப்பர் ஸ்டார்களை காட்டிலும் முன்னிலை வகிக்கிறார்கள்.

image

ஓடிடி தளங்கள் மூலமாக தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் அடைந்துள்ள புகழை, இணையங்களில் அவர்களை பற்றிய தேடல்கள் மூலமாகவும், சமூக ஊடகங்களில் அவர்களை பற்றி நடக்கும் விவாதங்கள் மூலமாகவும் அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஃபஹத் ஃபாசிலுக்கான கூகுள் தேடல் 2020-ம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ஏப்ரலில் அது இரட்டிப்பாகியுள்ளது. ஜோஜி, இருள் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான ஓடிடி வெற்றிகள் பாசில் நடிப்பில் வெளியான காலகட்டம் இது. இந்த கொரோனா காலகட்டத்தில் ஃபஹத் ஃபாசிலை வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேடியிருக்கின்றனர். மஹாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஃபஹத் ஃபாசில் பற்றிய தகவல்களைத் தேடும் முதல் 10 மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன.

ஊடக ஆலோசனை நிறுவனமான ஆர்மாக்ஸ் மீடியாவின் சமீபத்திய ஆய்வில், இந்தி ரசிகர்கள் தாங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களாக அதிகம் குறிப்பிட்டு இருப்பதில், இரண்டு தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளன. ஒன்று 'பாகுபலி' இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்', மற்றொன்று யஷ் நடிக்கும் 'கேஜிஎஃப்: அத்தியாயம் 2'. அந்த அளவுக்கு தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் 'பான்-இந்தியா' பார்வையாளர்களை பெறத் தொடங்கியிருக்கிறது. இதே ஆர்மாக்ஸ் மீடியா ஆய்வு, அகில இந்திய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு 2019-ல் 36% என்ற அளவில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொற்றுநோய் இல்லையென்றால், 2020-ல் இந்த விகிதம் 45% என்ற அளவில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

image

'குருதி' மற்றும் 'கோல்ட் கேஸ்' என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து ஓடிடி மூலம் வெளியிட்ட மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், ''எங்கள் திரைப்படங்கள் கேரளாவிற்கு வெளியே உள்ள பார்வையாளர்களால் மட்டுமல்ல, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் பார்வையாளர்களாலும் ரசிக்கப்பட்டது. இந்த திரைப்படங்களைப் பார்க்கும் மலையாளிகள் அல்லாத பார்வையாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை நாங்கள் கண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சியின் பின்னணியில் ஓடிடி தளங்களே உள்ளன. ஓடிடி ரசிகர்களின் நல்ல உள்ளடக்கம் ரசனையை கணிசமாக மாற்றியுள்ளன. குறிப்பாக மாநில மொழி சினிமாக்கள் மொழி தடைகளை உடைத்திருக்கிறது" என்று தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி குறித்து பேசியிருக்கிறார்.

தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கான வரவேற்பை, அதிகரித்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஸ்ட்ரீமிங் தளங்கள் பகிரங்கமாக வெளியிடவில்லை. என்றாலும், அந்த தளங்களின் அதிகாரிகள் சொல்லியுள்ள தகவல்கள் இந்த உண்மையை வெளிப்படுத்தும்.

அமேசான் பிரைம் இந்தியாவின் இயக்குநர் கவுரவ் காந்தி, " தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50% பார்வையாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு வெளியில் இருந்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். இதேபோல் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் பிரதீக்‌ஷா ராவ், " தமிழ் ஆந்தாலஜி படமான `நவரசா', இந்தியா தாண்டி மலேசியா மற்றும் இலங்கை உட்பட 10 நாடுகளில் டாப் 10-க்குள் இடம்பிடித்துள்ளது. வெளியான முதல் வாரத்தில் படத்திற்கு 40%-க்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து கிடைத்துள்ளனர்.

image

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படமும் இதே அளவு பார்வையாளர்களை இந்தியாவிற்கு வெளியே ஈர்த்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே 12 நாடுகளில் நெட்ஃபிக்ஸின் டாப் 10 வரிசையில் இந்தப் படம் இடம் பெற்றுள்ளது. இந்தியா, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) உட்பட ஏழு நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஆண்டில் வெளியான 'நயாட்டு' (மலையாளம்), 'அந்தகாரம்' (தமிழ்), 'பித்த கதாலு' (தெலுங்கு) 'பாவக் கதைகள்' (தமிழ்), 'சினிமா பண்டி' (தெலுங்கு) மற்றும் 'மண்டேலா' (தமிழ்) ஆகிய படங்கள் இந்திய அளவில் நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்தன" என்றுள்ளார்.

எம்எக்ஸ் பிளேயரின் துணைத் தலைவர் ஸ்ரீவாஸ்தவா, ``மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி என்சிஆர், பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வட இந்திய பகுதியைச் சேர்ந்த எங்களின் வாடிக்கையாளர்கள் 75 சதவிகிதம் பேர் தென்னிந்திய படங்களையும், அதன் டப் படங்களையே அதிகம் பார்த்துள்ளனர். இவர்கள் தென்னிந்திய படங்களை பார்ப்பதில் சராசரியாக 150 நிமிடங்களும், அதேநேரம் இந்தி திரைப்படங்களை பார்க்க சராசரியாக 100 இடங்களும் செலவழித்துள்ளனர்" என்றுள்ளார்.

"ஒரு தசாப்தத்திற்கு முன்பு தென்னிந்தியத் திரைப்படங்களின் டப்பிங் பதிப்புகள் பெரும்பாலும், ஆக்‌ஷன் மற்றும் மசாலா படங்களாக இந்தி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுவந்தது. ஆனால், ஓடிடி தளங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட தென்னிந்திய படங்களையும் அவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. உதாரணமாக தமிழ், தெலுங்கு போல் இல்லாமல் மலையாள சினிமா இந்தியில் அரிதாகவே டப் செய்யப்படும். ஆனால், அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்களில் இந்தி ரசிகர்கள் மத்தியில் மலையாள சினிமாவுக்கு தற்போது நல்ல மவுசு கிடைக்கத் தொடங்கியுள்ளது" என்று ஆர்மாக்ஸ் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஷைலேஷ் கபூர் கூறியுள்ளார்.

- மலையரசு

தகவல் உறுதுணை: லைவ் மின்ட்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்