சிறப்புக் களம்

மீளும் தெலுங்கு சினிமா: புதுத் தெம்பு கொடுத்த இரண்டு படங்களின் அசத்தல் வெற்றி!

PT WEB

கொரோனா பேரிடரால் முடங்கியிருந்த தெலுங்கு திரையுலகம் மெள்ள மெள்ள மீளத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது உத்வேகத்தைக் கூட்டியிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் காலமானது, மற்ற தொழில்களைப் போலவே சினிமா தொழிலையும் வெகுவாகவே முடக்கியது. இதிலிருந்து மீள ஒவ்வொரு மாநில திரைத்துறையும், பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சில பெரிய படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. இது திரைத்துறைக்கு பெரிய ஆறுதலாக பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெலுங்கு திரையுலகத்தில் நிலவுகிறது. சில வாரங்கள் முன்பே, ஆந்திராவில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனால் சற்று நிம்மதியில் இருந்தாலும், திரைப்பட டிக்கெட் விற்பனையில் ஆந்திர அரசால் புதிதாக கொண்டு வரப்பட்ட வழிகாட்டுதல்கள், தெலுங்கு திரைப்படத் துறையை பாதித்தது. இதுகுறித்து ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் குரல்கொடுத்து வரும் இந்த வேளையில், இரண்டு திரைப்படங்கள் அடைந்துள்ள வெற்றி, தெலுங்கு சினிமாவுக்கு புதுத் தெம்பை கொடுத்துள்ளது.

திரையரங்குகள் திறக்கப்பட்ட உடனேயே சில சிறிய பட்ஜெட் படங்கள் சோதனை முயற்சியாக வெளிவந்தன. என்றாலும், இந்தப் படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் படங்கள் மக்களை கவரத் தவறியதால் தியேட்டர்கள் வெறிச்சோடின. ஆனால் தெலுங்கு மக்களை சமீபத்தில் இரண்டு திரைப்படங்கள் வெகுவாக கவர்ந்துள்ளன.

சீட்டிமார்: இது முதலில் வெளியான படம். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த் ('ஜெயம்' படத்தின் வில்லன்) மற்றும் தமன்னா இணைந்து நடித்த படம் இது. கபடி விளையாட்டை மையப்படுத்தி, எடுக்கப்பட்ட இந்தப் படத்தை சம்பத் நந்தி என்பவர் இயக்கியிருந்தார்.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு வெளியான படங்களில் மிகப்பெரிய நடிகரின் படமாக இது அமைந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான 'சீட்டிமார்' முதல் இரண்டு வார பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனாக ரூ.15 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியிருந்தது. இது பெரிய வெற்றியாக கருதப்பட காரணம், இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்ததுடன், திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகள் என்ற நிலையில் வெளியாகி இவ்வளவு வசூலை குவிந்தது. இதனால் கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு வெளியாகிய படங்களில் முதல் வெற்றி படமாக இது அமைந்தது. அதுமட்டுமில்லாமல் 2014 முதல் பெரிய வெற்றியை பதிவு செய்யாத கோபிசந்த்துக்கும் இது சற்று நிம்மதியை கொடுத்தது. தமன்னாவுக்கும் தெலுங்கு திரையுலகில் ரீ-என்ட்ரி படமாக அமைந்தது.

லவ் ஸ்டோரி: நாக சைதன்யா - சாய் பல்லவி முதல்முறையாக இணைத்துள்ள படம், 'கோதாவரி', 'ஹேப்பி டேஸ்', 'லீடர்', 'ஃபிதா' என தெலுங்கு இண்டஸ்ட்ரியில் பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சேகர் கம்முலாவின் படைப்பு என்ற அடையாளங்களுடன் `லவ் ஸ்டோரி' சில நாட்கள் முன் வெளியானது. காதல் டிராமா படமாக வெளிவந்துள்ள இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

அமீர் கான் முதல் சிரஞ்சீவி வரை படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அதன் பிரதிபலிப்பு சில நாட்களாக தெலுங்கு திரையுலகில் தெரிகிறது. படம் வெளியான முதல் மூன்று நாளிலே ரூ.21 கோடிக்கும் அதிகம் வசூலித்துள்ளது. விரைவில் இது ரூ.100 கோடியை தொடும் என்கிறார்கள் ஆந்திர திரையங்கு உரிமையாளர்கள்.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு பெரிய ஓப்பனிங் கண்ட முதல் படமாக அமைந்துள்ள இந்த வெற்றி, ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினருக்கும் புதுத் தெம்பை கொடுத்துள்ளது. கொரோனா தாக்கத்தால் ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள இந்தப் படம் கொடுத்த தாக்கம் காரணமாக தெலுங்கு சினிமாவில் முடங்கிக் கிடந்த பல படங்கள் இப்போது வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

- மலையரசு