நேற்றைய (ஜன.11) நிலவரப்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 91% ஆக்சிஜன் படுக்கைகளும் 92% ஐசியூ படுக்கைகளும் காலியாக உள்ளன. டெல்டா அலை உருவான போது இதே மூன்றாவது வாரத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் முந்தைய இரண்டு அலைகளைப் போல் இந்த அலையில் பாதிப்பு அதிகம் இல்லை என்பதும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கவில்லை என்பதும் ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.
இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘’தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த டிசம்பர் 26ஆம் தேதியிலிருந்து தட்டையாக இருந்த தொற்று அலை மெல்ல மெல்ல கால் நனைக்கத் தொடங்கியது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஓமைக்ரான் எனும் புதிய உருமாற்றத்தின் வேகமான பரவலால் இடுப்பு அளவில் தற்போது தொட்டு வருகிறது.
தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே பன்மடங்கு உயர்வை சந்தித்து வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது ஒருவருக்கு ஏற்பட்டால் வீடுகளில் உள்ள சொந்தங்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ள நண்பர்கள் போன்றோருக்கு உடனே பரவுகிறது. எனவே காணுமிடமெங்கும் மக்கள் லேசான தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி என்று மருத்துவமனைகளில் மருத்துவர்களைச் சந்தித்தும், நேரடியாக மருந்தகங்களில் மாத்திரை வாங்கி போட்டும் சமாளித்து வருகிறார்கள்.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவுக்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்ல முடிவாகும். பெரும்பான்மை மக்களுக்கு சாதாரண தொற்றாக இது வெளிப்பட்டாலும் பலரும் காய்ச்சல், அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறார்கள். எனவே இந்த அலையில் கட்டாயம் ஓய்வு அவசியம்.
யாருக்கேனும் மேற்சொன்ன அறிகுறிகள் இருப்பின் தயவு கூர்ந்து வீட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளவும். பரிசோதனைக்கு முந்தவும். பரிசோதனை பாசிடிவ் என்று வந்தால்
மருத்துவ அறிவுரையின் பேரில் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாம் அனைவரும் தடுப்பூசிகளை வெகுவாக வரவேற்று சிறப்பாக பெற்றுக் கொண்டமையாலும் டெல்டாவால் கடந்த மே மாதம் உருவாக்கப்பட்ட பெரிய அலை மூலம் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றமையாலும் தற்போது ஓமைக்ரான் அலையை தமிழ்நாடு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. இந்த அலையின் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் தற்போது வரை நல்ல நிலையில் இருக்கிறோம்.
நேற்றைய (ஜன.11) நிலவரப்படி சென்னை பெருநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 91% ஆக்சிஜன் படுக்கைகளும் 92% ஐசியூ படுக்கைகளும் காலியாக உள்ளன. இது உண்மையில் பெருமூச்சு விட்டுக்கொள்ளும் நற்செய்தி. டெல்டா அலை உருவானபோது இதே மூன்றாவது வாரத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் இந்த உருமாற்றம் தற்போது வரை பெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக இரண்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கும் ஏற்கனவே டெல்டா தொற்று ஏற்பட்டு குணமானவர்களுக்கும் லேசானதாக அல்லது தாங்கக்கூடிய தொற்றாக வெளிப்படுகிறது.
இதை பொதுப்படையாக அனைவருக்குமானது என்று எண்ணி அலட்சியமாக இருக்கக்கூடாது. தடுப்பூசி பெறாதவர்களுக்கு தொற்று ஏற்படும்போது அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. முறையாக பரிசோதனை செய்து தேவைப்பட்டால் அட்மிசன் ஆகி சிகிச்சை பெற வேண்டும். தடுப்பூசி பெறாதவர்களை ஒதுக்குதல் செய்வதும் நிந்தனை செய்வதும் அறவே தவறு. அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் எந்த பாரபட்சமும் இன்றி அவர்களை அரவணைத்து சிகிச்சைக்கு உதவி அவர்கள் நலன் மேம்பட ஆவண செய்திட வேண்டும்
நிச்சயம் தடுப்பூசிகள் இந்த அலையில் வெகுசிறப்பாக வேலை செய்து பல லட்சம் உயிர்களைக் காத்து வருகின்றன. எனவே உங்களுக்கான தடுப்பூசிகளுக்கு உடனே முந்துங்கள். முன்களப்பணியாளர்கள் தயவு கூர்ந்து பூஸ்டர் ஊசியை உடனே பெற்றுக்கொள்ளுங்கள். அறுபது வயதுக்கு மேல் இணை நோயுடன் இருப்பவர்களும் பூஸ்டர் பெறுங்கள். இரண்டாவது ஊசியில் இருந்து ஒன்பது மாதங்கள் கழிந்திருக்க வேண்டும் என்பதே பூஸ்டர் டோஸ்க்கான ஒரே நிபந்தனை.
இதே சிறப்பான நிலை அடுத்த வாரமும் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தீவிர லாக்டவுன் வருவதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு. தொடர்ந்து வரும் பண்டிகை நாட்களிலும் முகக்கவசம், இரண்டு டோஸ் தடுப்பூசி, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளி, கூட்டம் கூடாமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.
மருத்துவர் ராதா கூறுகையில், ‘’மும்பையில் புதிய நோய் தொற்று அளவுகள் சரியாக இரண்டு வாரங்களில் உச்சநிலை அடைந்து கீழே இறங்க ஆரம்பித்து விட்டது. இதே போல தமிழ்நாடு உச்சநிலை அடைவதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தேவைப்படலாம். இந்த பொங்கல் விடுமுறை முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருந்தால் நாம் நோய் தொற்று அளவுகளை பெரிதளவில் குறைத்து விட்டு ஜனவரி இறுதியில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது’’ என்கிறார் அவர்.
இதையும் படிக்கலாம்: இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு