பேரறிஞர் அண்ணா புதிய தலைமுறை
சிறப்புக் களம்

காலத்தை கட்டியாண்டு, எல்லோருக்குமான ஆட்சியை கொடுத்துச் சென்ற பேரறிஞர் அண்ணா நினைவுதினப் பகிர்வு!

“அண்ணாதுரை கொண்டுவந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே, ‘மக்கள் வெகுண்டெழுவார்களே’ என்ற அச்சமும் கூடவே வருமில்லையா... அந்த அச்சம் இருக்கிற வரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!”

கே.கே.மகேஷ்

குள்ளமான உருவம், மலர்ந்த முகம், கலைந்த தலை, முள் தாடி, விரைந்த நடை, கசங்கிய வேட்டி-சட்டை, காசில்லா சட்டைப் பையில் ஒரு பேனா - இதுதான் அறிஞர் அண்ணா. தாய்த் தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய, அண்ணா பிறந்தது 1909 செப்டம்பர் 15ஆம் நாள்.

பேரறிஞர் அண்ணா

சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவை உயர்த்தியது அவரது கல்வியும், அபாரமான வாசிப்பும்தான். வேகமான வாசிப்பு மட்டுமல்ல, வாசித்ததை அப்படியே மனதில் பதிவேற்றி, எளிமையாக மற்றவர்களுக்கு விளக்கும் ஆற்றலும் பெற்றவர். 21 வயதில் ராணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்ட அண்ணா, அதன் பிறகும் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பத்திரிகைகளில் கதை, கட்டுரை எழுதத் தொடங்கியதும்கூட அதன் பின்னர்தான். பிற்காலத்தில், அரசியலில் தன் தம்பிகளைப் பயிற்றுவிக்கவும், எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கவும் அந்த எழுத்தையே ஆயுதமாக்கிக்கொண்டார்.

1929இல் நீதிக்கட்சி வாயிலாக அண்ணாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. பிற்காலத்தில் தமிழக வரலாற்றையே புரட்டிப்போட்ட, ஒரு மாபெரும் சந்திப்பு 1935-இல் ஈரோடு செங்குந்தர் மாநாட்டில் நடந்தது. அப்போது பெரியாருக்கு அறிமுகமான அண்ணா, 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரே சிறையில் அடைக்கப்பட்டபோது மேலும் நெருக்கமானார்.

பேரறிஞர் அண்ணா - பெரியார்

சிறையிலிருந்து வெளிவந்ததும் வீழ்ச்சியின் விளிம்பிலிருந்த நீதிக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பெரியார், தான் நடத்திவந்த 'விடுதலை', 'குடிஅரசு' இதழ்களுக்கு அண்ணாவையே உதவி ஆசிரியராக நியமித்தார். அதுவரை நீதிக் கட்சி பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விஸ்வநாதம் பெரியாரோடு மன வருத்தம் ஏற்பட்டு, கட்சியிலிருந்து வெளியேற, அண்ணாவை அந்தப் பொறுப்பில் அமர்த்தினார் பெரியார்.

தலைவரின் தளபதியானார் அண்ணா.

நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றும் தீர்மானத்தையும் தலைவர்கள் தங்கள் பெயரில் இருக்கும் சாதிப் பின்னொட்டை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தவர் அண்ணாதான்.

1947இல் இந்திய விடுதலையை துக்க நாள் என்றார் பெரியார். இன்பநாள் என்றார் அண்ணா. 1948இல் கட்சி சொத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடாக மணியம்மையை மணந்தார் பெரியார். கடுமையாக எதிர்த்தார் அண்ணா. இதுபோன்ற முரண்பாடுகள் முற்றியதால், 1949இல் தனிக்கட்சி தொடங்கினார் அண்ணா. 30 வயதில் நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர், 35 வயதில் திக பொதுச்செயலாளரான அண்ணா, தன் 40ஆவது வயதில் திமுக பொதுச்செயலாளரானார். பெரியார் பிறந்த நாளன்று புதிய கட்சியைத் தொடங்கிய அண்ணா, தலைவர் நாற்காலியை பெரியாருக்காகவே காலியாக வைத்திருந்தார்.

கலைஞர் - பெரியார் - பேரறிஞர்

ஓர் அரசியல் அமைப்பையே அன்பால் கட்டியாண்ட அண்ணா, தொண்டர்களை எல்லாம் தம்பி என்றே அழைத்தார். தன் காலத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை, அதிலும் குறிப்பாக சாமானியர்களைப் பெருமளவில் அரசியல்மயப்படுத்தியவர் அண்ணா. அன்றைய அரசியல் தலைவர்களெல்லாம், ஆர்வமாக அரசியல் பேச வருகிற இளைஞர்களை விவரமறியா விடலைகளாக நடத்திய நேரத்தில், அண்ணாவோ அவர்களுடன் சரிக்குச் சமமாக உரையாடினார். தொலைதூரத் தம்பிகளிடம் பத்திரிகையில் எழுதிய கடிதங்கள் வாயிலாக உரையாடினார்.

ஒரு காலத்தையே கட்டியாண்டவர் என்று அண்ணாவைச் சொல்லலாம். மேடையில் அண்ணாவின் சகாப்தம் தொடங்கியதும், மற்ற பேச்சு நடைகள் எல்லாம் விடைபெற்றன. நாடகம், சினிமா மீதெல்லாம் பெரியாருக்குப் பெரிய மதிப்பு கிடையாது. ஆனால் கலையை ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தார் அண்ணா.

அண்ணன் காட்டிய வழியில் கலைஞர், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட தம்பிகளும் வீறுநடை போட்டனர். திமுக வேகமாக வளர்ந்தது.
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., பெரியார்

1957 தேர்தல் பாதைக்குத் திரும்பிய திமுக முதல் தேர்தலிலேயே மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றது. 15 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்தாலும் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாவே செயலாற்றினார். மாநில உரிமைக்காகவும், மக்கள் பிரச்னைக்காகவும் வீரியமாகப் போராடியதால், 1962 தேர்தலில் திமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது.

சட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும், மாநிலங்களவை உறுப்பினராகி நாடாளுமன்றத்தை வெலவெலக்கச்செய்தார் அண்ணா.

அண்ணாவின் முழக்கத்தையும் ஆங்கிலப் பிரயோகத்தையும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள் வடக்கத்தியத் தலைவர்கள். அரசமைப்புச் சட்டம் தொடங்கி அணிசேராக் கொள்கை வரை எல்லாவற்றிலும் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்திய அண்ணா, தன் வாதங்களால் எதிர் வாதங்களை நொறுக்கினார்.

'திராவிட நாடு' பிரிவினைக் கோரிக்கையையும் திமுகவின் வளர்ச்சியையும் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, சீன படையெடுப்பை திமுகவைக் கட்டம் கட்டுவதற்கான சரியான சந்தர்ப்பமாகப் பார்த்தது. ஆச்சரியமூட்டும் வகையில் அண்ணா சீன ஆக்கிரமிப்பைக் கடுமையாகச் சாடியதோடு, நேரு அரசுக்கு திமுக துணை நிற்கும் என்று அறிவித்தார்.

'வீடு இருந்தால்தானே, ஓடு மாற்ற முடியும்!' என்று கூறி திராவிட நாடு கோரிக்கையையும் கைவிட்டார்.
பேரறிஞர் அண்ணா

1967 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்டினார் அண்ணா. 138 தொகுதிகளில் வெற்றிபெற வைத்து, அண்ணாவை முதல்வராக்கினார்கள் மக்கள். வெற்றிச் செய்தி வந்ததும் திருச்சி சென்று பெரியாரின் காலில் விழுந்த அண்ணா, “இந்த ஆட்சியை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்றார்.

"திமுக ஆட்சிக்கு வந்தால், பிராமணர்களை நாட்டை விட்டு விரட்டிவிடுவார்கள். சட்டத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள்" என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது.

ஆனால், எல்லோருக்குமான ஆட்சியையே நடத்தினார் அண்ணா.

கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்தி வந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றிருந்த

‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது.
‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’

27.6.1967-ல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு. அடுத்த மாதமே சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அறவே ஒழிக்க ஏதுவாக, இருமொழிக் கொள்கை சட்டத்தையும் நிறைவேற்றினார் அண்ணா.

ஆட்சி மாறியதும் அதிகாரிகளைப் பந்தாடியவரல்ல அண்ணா. தலைமை செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன், போலீஸ் ஐஜி அருள் உள்ளிட்டோர் காமராஜருக்கு வேண்டப்பட்டவர்கள் என்று தெரிந்தும் அவர்களையே பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

ஒரு தலைவன் தன் உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்ற விஷயத்தில் கோட்டைவிட்டவர் அண்ணா. 1964 முதலே இடது கை , கழுத்து வலியால் அவதிப்பட்ட அண்ணா அதற்கு போதிய கவனம் கொடுக்கத் தவறினார். 4 ஆண்டுகள் கழித்து கழுத்தின் பின்புறம் புற்றுக்கட்டிகள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.

சகித்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு வலிவந்த பிறகே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார் அண்ணா. காலம் கடந்துவிட்டதால், எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று சொன்ன தமிழ்நாட்டின் தலைமகன், 1969 பிப்ரவரி 3இல் தமிழ் மக்களை எல்லாம் தவிக்கவிட்டுவிட்டு இயற்கை எய்தினார்.

பேரறிஞர் அண்ணா

“தாய்த்திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் உள்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்து சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.

ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறோருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே, ‘மக்கள் வெகுண்டெழுவார்களே’ என்ற அச்சமும் கூடவே வருமில்லையா... அந்த அச்சம் இருக்கிற வரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!”

என்று அண்ணாவிட்ட சவால் இன்றும் தொடர்கிறது. தமிழ்நாடு, இருமொழிக் கொள்கை, சீர்திருத்தத் திருமணம், மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார் பேரறிஞர் அண்ணா!