ப.சிதம்பரம் fb
சிறப்புக் களம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|‘ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் –புறக்கணிப்பு வேண்டாம்’

நிதியமைச்சகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனைக் குழு கூட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர், மிகவும் அபூர்வமாக ஜூன் 19-இல் கூட்டியிருந்தார்.

ப. சிதம்பரம்

நிதியமைச்சகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனைக் குழு கூட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர், மிகவும் அபூர்வமாக ஜூன் 19-இல் கூட்டியிருந்தார். பதினெட்டாவது மக்களவை அமைக்கப்பட்ட 2024 ஜூனுக்குப் பிறகு அதுதான் முதல் ஆலோசனைக் கூட்டம் என்று கருதுகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம்பெற்றுள்ள வெவ்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அரசு விரும்பினால் இந்த அமைப்பைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர்தான் தலைமை வகித்து நடத்துவார்.

ஜூன் 19-இல் நடந்த கூட்டம் விதிகளுக்கேற்ப சடங்காக நடத்தப்பட்டது; சற்றே இறுக்கமாகவும் கூட இருந்தது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், 19 அம்சங்களைக் காட்சி விளக்க வரைபடங்களுடன் (பிபிடி) எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் எடுத்துரைக்கலாம் என்றனர். நிதியமைச்சர் கூட்ட நிரலை சுருக்கிப் பேசினார். உறுப்பினர்கள் தெரிவித்த விமர்சனங்களுக்கும் முன்வைத்த யோசனைகளுக்கும் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலோ - விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிதியமைச்சர் இறுதியாக நிறைவுரை ஆற்றினார். எந்தப் பிரச்சினை குறித்தும் அங்கு ‘ஆலோசனை’ கலக்கப்படவில்லை.

நல்ல வேளையாக, தன்னுடைய 19-வது விளக்கக் காட்சியில் ‘நான்கு அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என்று முதன்மைப் பொருளாதார ஆலோசகர் வேண்டுகோள் விடுத்தார்.

1.   வேளாண்துறையில் உற்பத்தித்திறனை மேலும் கூட்டுவது பற்றி;

2.   தொழில் செய்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள சுமைகளைக் குறைக்க கட்டுப்பாடுகளை எந்தெந்த வகைகளில் குறைக்கலாம் என்று ஆலோசனை வழங்குவது குறித்து;

3.    செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் சார்ந்த இடையீடுகளுக்கேற்ப நம்முடைய தொழில் திறமைகளை எவ்வாறு தகவமைத்து நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து;

4.   பொருளாதாரத்தை அமைப்புரீதியில் மேலும் முறைப்படுத்துவதை எப்படி ‘விரைவுபடுத்துவது’ என்பது குறித்து.

 முன் தயாரிப்புகள் ஏதும் இல்லாமல் அந்தக் கூட்டத்திலேயே ஆலோசனைகளைக் கூற நான் விரும்பவில்லை. அதற்குப் பிறகு அந்த நான்கு அம்சங்கள் குறித்து ஆழ்ந்து யோசித்தேன்,

இதோ என் யோசனைகள்:

வேளாண் உற்பத்தித்திறனைக் கூட்ட அங்கே காட்டப்பட்ட காட்சி விளக்கத்தில் - குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), பிஎம்- கிஸான், பிஎம்- ஃபஸல் பீமா, இ-நாம், உணவுப் பூங்காக்கள் ஆகியவை இடம் பெற்றன. திறனைக் கூட்டுவதும் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கச் செய்வதும்தான் இதன் பின்னால் உள்ள நோக்கம். 

இன்னொரு விளக்கக் காட்சியில், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், முக்கிய உணவுப் பயிர்களின் உற்பத்தியை ஏக்கர் வாரியாக மேலும் அதிகப்படுத்துவது ஆகியவை குறிப்பிடப்பட்டன. முக்கிய (பெரிய) உணவுப் பயிர்களைப் பொருத்தவரையில் 2013-14 முதல் 2023-24 வரையுள்ள காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு (சுமார் 2.5 ஏக்கர்) கிடைக்கும் மகசூல், கிட்டத்தட்ட இரட்டை இலக்க அளவுக்கு ‘வளர்ச்சி’ கண்டிருக்கிறது. ‘பசுமைப் புரட்சி’ தொடங்கிய 1965 முதலே நாம் வேளாண் வளர்ச்சியில் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் - 2013-14 லிருந்து  அல்ல. ‘வேளாண் உற்பத்தித்திறன்’ என்பது உலகத் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும்:

உற்பத்தித் திறனை அளவிட இன்னொரு முறையும் உள்ளது: ஒவ்வொரு விவசாயி அல்லது விவசாயத் தொழிலாளரின் நபர்வாரி (சராசரி) உற்பத்தி எவ்வளவு என்று கணக்கிடுவது. இந்திய மக்கள் தொகையில் 58% பேர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையுமே தங்களுடைய வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். சீனத்தில் இந்த எண்ணிக்கை 22%தான். எனவே இந்தியாவில், நபர்வாரி அல்லது தனிநபர் அடிப்படையிலான உற்பத்தித்திறன் கணக்கிடும்போது அளவு குறைவாகவே இருக்கும். சாமானிய விவசாயி ஏழையாக மட்டுமல்ல, நிறையக் கடன் சுமையுடனும் தத்தளிக்கிறார்.

விவசாயிகளின் உற்பத்தித் திறனைக் கூட்ட வேண்டும் என்றால் விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்புகளைப் புதிதாக உருவாக்கி கோடிக்கணக்கானவர்களை அங்கு இடம்பெயரச் செய்ய வேண்டும். நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும் தொழில்துறை உற்பத்தியானது - தொடங்குவது பிறகு தேங்குவது என்று - நிலையற்று தடுமாற்றத்தில் இருப்பதாலும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. புதிதாக வேலை தேடி வந்தவர்கள் வேறு துறைகளில் வேலை கிடைக்காமல் நேரடியாக விவசாயத்திலும் விவசாயத்துறை சார்ந்த தொழில்களிலும் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்த ஊதியத்துக்குச் செல்கிறார்கள் என்பதைத்தான் அரசின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 என் பரிந்துரை:

தொழில்துறை வளர்ச்சி வேகத்தைக் கூட்டுங்கள், உற்பத்தித்துறையை மேலும் விரிவுபடுத்துங்கள்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!

  தொழில்துறையில் அரசின் வெவ்வேறு துறைகள் மூலம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வரும் கட்டுப்பாடுகளைக் கணிசமாகக் குறையுங்கள். மோடி அரசு 2014-15 முதல் தொழில் உற்பத்தித் துறையில் மீண்டும் ‘கட்டுப்பாடுகளை’  கொண்டுவந்துவிட்டது. ரிசர்வ் வங்கி, செபி (பங்குகள் பரிமாற்றச் சந்தை), நிறுவனங்களுக்கான துறை, வருமான வரித்துறை, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு என்று அரசின் எல்லா கரங்களும் தங்களுடைய அதிகாரத்துக்கு உள்பட்டவர்களுக்கு நூற்றுக்கணக்கான பக்கங்களில் புதிது புதிதாக கட்டுப்பாடுகளையும் விதிகளையும் உருவாக்கி அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றன. ‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா ராஜ்’ என்பது மீண்டும் வேறு வடிவில் வந்துவிட்டது. அரசு அதிகாரிகள் ‘வழக்குகள் - சிக்கல்களுக்குத் தீர்வு’ என்ற போர்வையில் தங்களுடைய அதிகாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கி வருகின்றனர். இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமென்றால் அரசின் கட்டுதிட்டங்களையும் விதிகளையும் கடைப்பிடிப்பதில் தேர்ச்சி பெற்று, அவற்றின் விளைவாக ஏற்படும் வழக்குகளுக்கும் திடீர் சோதனைகளுக்கும் நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்களின் படிகளில் ஏறித் தீர்வு காண வேண்டும் என்பது கட்டாயமாகிவருகிறது.

பொது சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) என்பது இந்தியாவில் தொழில் – வியாபாரம் செய்வோருக்கு புதிய சுமையாகிவிட்டது. ஒவ்வொரு இனத்துக்கும் வெவ்வேறு விகிதங்களில் வரி விகிதம் அமலாவதும், வரி அளவு மிக அதிகமாக இருப்பதும் இந்த சுமைக்குக் காரணங்கள். ஜிஎஸ்டி சட்டங்கள் தொடர்பாக அவ்வப்போது கூறப்படும் கட்டுப்பாடுகள், அறிவிக்கைகள், கட்டாயம் நிரப்ப வேண்டிய படிவங்கள், கட்டுப்பாடுகள் படி நடந்தாக வேண்டிய நடைமுறைகள் சூழலை மோசமாக்கிக் கொண்டுவருகின்றன. வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி துறை, வெளிவர்த்தக தலைமை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் சட்டங்களுக்கு அவர்கள் நோக்கில் அளிக்கும் விளக்கங்கள், தொழில் – வர்த்தகத் துறையினருக்கு கொடுங்கனவாக இருக்கின்றன. ‘ஒவ்வொரு தொழிலதிபரும் மோசடிப் பேர்வழி – எல்லா பட்டயக் கணக்காளரும் மோசடியில் உடந்தையாக இருப்பவர்’ என்ற கண்ணோட்டத்திலேயே மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), வருவாய்ப் பிரிவின் அமலாக்க இயக்குநரகம் (ஈ.டி.) வருவாய் புலனாய்வுப் பிரிவு, ஜிஎஸ்டி அமல்பிரிவு, எஸ்எஃப்ஐஓ ஆகிய துறைகள் செயல்படுகின்றன. தொழிலும் வர்த்தகமும் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்றால் அவற்றின் மென்னியை முறிக்கும் அதிகார கட்டுப்பாட்டு சூழலை அரசு அகற்றியாக வேண்டும்.

 என் பரிந்துரை: மூன்று மாதங்களுக்கொருமுறை அரசின் கட்டுப்பாடுகளில் கணிசமானவற்றை தீயிலிட்டு பொசுக்குங்கள், தொடர்ந்து கொளுத்துவதற்கு ஏராளமாகக் கையிருப்பில் சேர்ந்துவிட்டன.

செயற்கை நுண்ணறிவை ஏற்க…

 இந்தியாவில் மாணவர்களின் கற்றல் திறனை சோதித்து ஆண்டுதோறும் வெளியாகும் ‘அசர்’ (ASER) அறிக்கையை அரசு படிக்க வேண்டும். சராசரி பள்ளிக்கூட மாணவர்களால் அவர்கள் ஏற்கெனவே படித்துத் தேறிவிட்ட வகுப்புகளின் பாட புத்தகங்களையே சரளமாகப் படிக்கவும், பிழையின்றி எழுதவும், கூட்டல் – கழித்தல் கணக்குகளைப் போடவும் திறனில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாட்டின் உற்பத்தித்துறைகளில் செயற்கை நுண்ணறிவையும், தொழிலாளர்களின் பங்கேற்பைக் கணிசமாகக் குறைக்கும் நவீனத் தொழில்நுட்பங்களையும் புகுத்துவது மக்கள் நலனுக்கு ஏற்றதே அல்ல.

இந்தியப் பல்கலைக்கழகங்களின் சுயச் செயல்பாட்டு உரிமை, ஆய்வுப் புலம், மிகச் சிறந்த தரத்தை அடையும் முயற்சி ஆகியவற்றை யுஜிசி, என்டிஏ, நாக் (University Grants Commission -UGC, National Assessment and Accreditation Council -NAAC, National Testing Agency -NTA) ஆகிய மும்மூர்த்திகள் அடியோடு பறித்துவிட்டன. கற்பிப்பதில் ஆர்வமும் சுய முயற்சிகளும் கொண்ட பேராசிரியர்களையும் ஆய்வுகளில் தனித்தன்மை வாய்ந்த அறிஞர்களையும், புதுமையைச் செய்ய விரும்பும் இளம் ஆய்வாளர்களையும் அவை வெளிநாடுகளுக்கு விரட்டிக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய- மாநில அரசுகள் நிதியை போதுமான அளவுக்கு ஒதுக்காமல் பல்கலைக்கழகங்களின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் மட்டும் 5,182 இடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் 2024 அக்டோபர் 31-ல் அளிக்கப்பட்ட பதில் தெரிவிக்கிறது. நீண்ட காலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினை நிதியமைச்சகத்தின் செயல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்று அஞ்சுகிறேன்.

என் பரிந்துரை: ஆலோசனைகளைக் கேட்கும் பட்டியலிலிருந்து இதை நீக்குமாறு முதன்மைப் பொருளாதார ஆலோசகரை வேண்டுகிறேன்.

பொருளாதாரத்தை விரைந்து ‘முறைப்படுத்த…’

 ‘பொருளாதாரத்தை முறைப்படுத்துவது’ என்று முதன்மைப் பொருளாதார ஆலோசகர் எதைக் கூறுகிறார்? முறையான அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழில்களையெல்லாம், அமைப்பு சார்ந்தவை (நடுத்தரக் குடும்பங்களின் வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்கும் பணிகள் போன்றவை) என்று அறிவிக்கக் கோருகிறாரா?

என் பரிந்துரை: உங்களுடைய கேள்வியே தெளிவில்லாதபோது பரிந்துரையாகக் கூற என்னிடம் ஏதுமில்லை.

இறுதியாக நிதியமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்:

உறுப்பினர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள் - ஆனால் அவற்றைப் புறக்கணித்துவிடாதீர்கள்.