model image google gemeni
சிறப்புக் களம்

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 2 | எண்பதுகளின் மருத்துவம்!

எல்லாவற்றுக்கும் காலம் மாறிவிட்டது என்று பழி போடமுடியாது. காலங்கள் மாறினால் என்ன மனிதர்களை மனிதர்கள்தானே பெற்றெடுக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லைதானே? நாகரிகம் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் சாத்தியம் பெற்றிருக்கிறது.

பி.கே. பழனிகுமார்

எண்பதுகளின் மருத்துவம்:

இருப்பதிலேயே மிகவும் சுவாரஸ்யமான தலைமுறை 70-80களில் பிறந்தவர்கள் என்று நினைக்கிறேன். தலைமுறையும் நாகரிகப் பரிமாற்றமும் கண்முன் மாறுவதைக் காண்பார்கள் என்று நினைக்கிறேன்.

என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் 80ஸ் கிட்.

மதுரையின் ஜனரஞ்சகமான ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் பகுதியில்தான் என் பால்யகாலம். எனக்கு விவரம் தெரிந்து என்னுடைய எட்டு வயது வரைக்கும் எனக்கு அடிக்கடி காய்ச்சல், சளி என ஏதாவது வந்துகொண்டிருக்கும்.

"ஒரு காத்து அடிச்சிரக்கூடாது, இந்தப் பயலுக்கு தடுமன் புடிச்சிருமே" என்று எங்கள் வீட்டுக் கீழ் குடியிருப்பில் இருந்த ரஞ்சிதம் அத்தை கூறும். நான் ஒன்றாவது படித்துக்கொண்டிருக்கும்போது, பருவம் மாறுகிறது என்பதையும், பருவமழை வரப்போகிறது என்பதையும், ஊருக்குள் ஏதோ வைரஸ் காய்ச்சல் பரவப்போகிறது என்பதையும் என்னைவைத்து அந்தப் பகுதிக்காரர்கள் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு ஏன், நாங்கள் வழக்கமாகப் போகும் கரிமேடு மார்க்கெட் அருகிலிருந்த டாக்டர் அத்தை என்னைப் பார்த்ததும், "குமார் வந்துட்டான்னா, ஏதோ சீசன் வரப்போகுதுனு அர்த்தம்" என்பார். இதில் ஒரு டிஸ்கிளைமர் உள்ளது. வயதான பாட்டியை அத்தை என்னும் வழக்கம் அந்தக் காலத்திலும் வழக்கொழியாமல் இருந்திருக்கிறது.

Model image

ஓர் இருமலோ, சளியோ, காய்ச்சலோ, அந்த டாக்டர் அத்தையிடம்தான் காண்பிக்கும் வழக்கம் இருந்தது. பஸ்ஸில் போகுவதற்கு பஸ் பாஸ் வாங்குவதைப்போல அந்த அத்தையின் கிளினிக்கில் எனக்கு வாடிக்கை பாஸ் வழங்காததுதான் மிச்சம். தரைத்தளத்தில் இருந்த அத்தையின் கிளினிக் மாடித்தளத்தில் சிறப்பு நோயாளிகளுக்கென்று ஒரு கட்டில் போட்டு விஸ்வரூபம் எடுத்தது. ஒரு படத்தில் மருத்துவராக நடிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்வார், "தம்பி, உங்க அப்பா படுத்திருக்கிறனாலதான் என் கிளினிக் நட்டமா நிக்கிது, உங்க அப்பா மட்டும் எந்திரிச்சிட்டா, என் கிளினிக் படுத்துரும் " (வெண்ணிற ஆடை மூர்த்தி குரலிலேயே வாசிக்கவும் ) அதுதான் ஞாபகம் வருகிறது.

என்னைப் போன்ற ரெகுலர் பேஷண்ட்களுக்குச் சிறப்பு சலுகை என்னவென்றால், இரவு வாந்தி வந்தால் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள், விடியற்காலையில் காய்ச்சல் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள், அப்படியான நேரங்களில் டாக்டர் அத்தை மேல் போர்ஷனில் அவரது ஓய்வறையில் இருப்பார். அங்குதான் அச்சமயங்களில் வைத்தியம் நடக்கும்.

மதுரை கரிமேடு அழகரடி போன்ற பகுதிகள் எல்லாம் மிக நெருக்கமான வீடுகளைக் கொண்டவை. இந்த வீட்டில் தும்மினால், பக்கத்து வீட்டில் திரையை இழுத்துவிடுவார்கள். கைகளை விரித்துக்கொண்டே அந்தப் பகுதிக்குள் எந்த வீட்டிற்குள்ளும் நுழையமுடியாது. டாக்டர் அத்தையின் மாடிக்கு ஏறும் குறுகலான பாதையில் பாதியிலேயே ஏதோ மருந்து மாத்திரை வாசம் நம்மை இன்னும் காய்ச்சலுக்குள் தள்ளும். ஒரு கட்டில், இரண்டு நாற்காலிகள் எல்லாமே நோய் வந்து எழுந்த வண்ணத்தில் என் கண்களுக்குத் தெரியும். அதுதான் காத்திருப்பிற்கான அறை. அதில், ஒரு ஜன்னல் இருக்கும். அதன்வழியே உள் போர்ஷனைப் பார்க்கலாம். டாக்டர் அத்தை சாவுகாசமாக உள்ளிருக்கும் கட்டிலில் அமர்ந்திருப்பார். என்னை ஜன்னல் வழியாய்ப் பார்த்ததும், ‘என்னாச்சு தம்பிக்கு’ என்றபடி வெளியே வருபவர், என் காய்ச்சலையோ, என் நாடியையோ பரிசோதிக்காமல், அம்மாவிடம் சில குசலங்கள் விசாரிப்பார். உண்மையைச் சொல்லப்போனால், டாக்டர் அத்தைக்கு நான்தான் வாடிக்கையான நோயாளி. என்னை வைத்து அம்மாவிடம் பழக்கத்தை அத்தை மேம்படுத்தியிருந்தார். அம்மாவிடம் பேசி முடித்த பின்னாடிதான் சிகிச்சை எனக்குக் கிடைக்கும்.

model image

கட்டிலில் அமரவைப்பார்கள். கட்டிலுக்கு நேர் பின்னால் ஜன்னல். அதன் உள்ளே சுவரோரமாக ஓர் அடுப்பு வைத்திருப்பார்கள். அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுடவைத்து அதில் ஊசியைப் போட்டு வைத்திருப்பார்கள். என்னைப் பார்த்துவிட்டு, அத்தை நேராக அந்த அடுப்பைப் பற்றவைத்தால், அன்று ஊசி உறுதி. அந்த அடுப்பிற்குப் பக்கத்தில் சிவப்பு, மஞ்சள், மற்றும் நிறமற்ற ஊசி மருந்திற்கான பாட்டில்கள் இருக்கும். அந்தந்தக் குடுவைகளின் தலையில் இருக்கும் தக்கையைப் பெயர்த்து நடுவில் ஓர் ஊசியைக் கிரீடம்போல் இட்டு வைத்திருப்பார்கள். சிவப்பு நிற மருந்தை டாக்டர் அத்தை எடுத்தால் முடிந்தது சோலி என்று எனக்குள் ஓர் ஐதீகம். வலி பின்னிவிடும். மஞ்சள் நிறம் ஏதோ பரவாயில்லை என்று தோன்றும். அந்தக் காலத்தில் எனக்குள் எழுந்த குரல்தான் அது. "ரெண்டே ரெண்டு பேருக்குள்தான் போட்டியே....சிவப்பா, மஞ்சளா..." .

நிறமற்ற மருந்து என்றால் அது வெறும் பச்சைத் தண்ணீர். அம்மாவிடம் காசு வாங்குவதற்காக டாக்டர் அத்தை, இதைக் குத்துகிறார் என்றுகூட நினைத்திருக்கிறேன்.

சில சமயங்களில் கீழ் அறையில் என்னை அமர்த்திவிட்டு, அம்மாவிற்குச் சிகிச்சைகள் நடக்கும். அழகரடியில் அமைந்திருந்த மதுரை முத்து துவக்கப்பள்ளியில் படித்த சமயத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்வேளையில், அத்தையின் கிளினிக் தாத்தாக்களாலும், பாட்டிகளாலும் நிரம்பி வழிவதைக் கண்டிருக்கிறேன். சமயத்தில், ஏதாவது அழும் குழந்தையின் புடத்தைத் தடவிக்கொண்டே வெளிவருவார்கள். "போச்சு, அத்தை சிவப்பு மருந்து ஊசிய குத்திவிட்டுருச்சுபோல" என்று எண்ணிக்கொள்வேன்.

model image

இதுபோன்ற 80- 90களின் மலரும் நினைவுகள் இங்குப் பலருக்கும் இருந்திருக்கும். இன்னும் இருக்கலாம். அப்போதெல்லாம் ஊருக்கு அல்லது பகுதிக்கு மருத்துவர் ஒருவர் இருப்பார். அவர்தான் தடுமன், சளி, காய்ச்சலும் பார்ப்பார். அவர்தான் ‘குக்கர் சுட்டுருச்சு’ என்று வருபவர்களுக்கும், கீழே விழுந்து அடிபட்டதற்கும், பூரான் கடிச்சதற்கும் வைத்தியம் பார்ப்பார். இன்னும் சில இடங்களில் அப்பா அம்மா, மகன் மகள் என்று எல்லோரும் ஒரே மருத்துவரைப் பார்ப்பார்கள். குடும்பத்திற்கே அவர்தான் மருத்துவராக இருந்திருப்பார். ‘குடும்ப மருத்துவர்’தத்துவம் அப்போது சிறப்பாக இருந்திருக்கும். இந்த மாதிரியான அனுபவங்களை நம்மில் நிறைய பேர் அனுபவித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.

‘தில்லுமுல்லு’ திரைப்படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ரஜினிக்கு ஒரு மருத்துவக் குடும்ப நண்பராகத்தான் வருவார். ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் குடும்ப மருத்துவர் என்று எஸ்.பி.பி வருவார். இது எல்லாம் அந்தக் காலத்தில் இருந்த பொதுமக்களின் வாழ்வியலில் இருந்த தாக்கங்களே. ஆனால், காலம் மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் காலம் மாறிவிட்டது என்று பழி போடமுடியாது. காலங்கள் மாறினால் என்ன மனிதர்களை மனிதர்கள்தானே பெற்றெடுக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லைதானே? நாகரிகம் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் சாத்தியம் பெற்றிருக்கிறது.

நோய்கள் பெருகியுள்ளன. சுகாதார விழிப்புணர்வு அதிகரித்திருக்கிற சூழலிலும் மக்கள்தொகை பெருகியிருக்கும் இந்த நேரத்தில் நோய்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாயிருக்கிறது.

model image

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நோய்களைக் கண்டறியும் திறனும், மருத்துவ தொழில் நுட்ப நுணுக்கங்களும் அது சார் சிறப்பு மருத்துவ நிபுணர்களும் வந்திருக்கிறார்கள். இதன்மூலம் ஒரு காலத்தில் சளி இருமல் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் நுரையீரல் சிறப்பு மருத்துவம் என்ற பிரிவு இருப்பது ஓர் உதாரணம். அதுபோல் எலும்பு, மூளை, தண்டுவடம், புற்றுநோய், மகப்பேறின்மை, குழந்தை நலம் இப்படி ஒவ்வொரு துறையும் வளர்ந்துள்ளன.

இந்த இடத்தில்தான் பொதுமக்களுக்குச் சந்தேகம் வருகிறது, எந்த அறிகுறிக்கு எந்த மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று. நேற்றிருந்து வயிற்று வலி? கூகுளில் தேடினால் அது கேன்சர் வரை காட்டும். அப்படியானால் கூகுளாண்டவர் பேச்சைக் கேட்டு புற்று நோய் மருத்துவரைப் பார்க்கவா, வயிறு குடல் நிபுணரைப் பார்க்கவா அல்லது நேற்றிரவு சாப்பிட்ட புரோட்டாதான் வயிற்றைக் கலக்குகிறது என்று ஏதாவது கை வைத்தியம் பார்க்கவா என்ற குழப்பம் வரும்.

குழப்பங்களைத் தீர்க்க காத்திருங்கள், இது ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு...’

இந்தத் தொடரின் முந்தையப் பகுதியைப் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 1 | சிறப்பு மருத்துவரின் வேலை என்ன?

(டைரிக்குறிப்பு தொடரும்...)