\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 1 Role of a Specialist Doctor
Model Imagechatgpt

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 1 | சிறப்பு மருத்துவரின் வேலை என்ன?

ஓர் எதிர்மறைச் செய்தியைப் பரப்பும் ஈர்ப்பிற்கு இருக்கும் சுவாரஸ்யம் நேர்மறைச் செய்தியைப் பகிர்வதில் இல்லை.
Published on

புரிதலை விளம்பரப்படுத்தும் காட்சி

ஆங்கில சேனல் ஒன்றில் பார்த்த விளம்பரம். ஒருவர் ஒரு பெரிய கல்லை அளவு பார்த்து வடித்துக்கொண்டே இருப்பார். அந்தக் கல்லை உருண்டையாகச் செய்த பிறகு, அதில் ஒரு கால்பந்தைப்போல தெரியுமளவிற்கு பெயிண்ட் அடிப்பார். ஒருநாள் இரவு, அதைத் தெருவின் பிளாட்ஃபாரத்தில் வைத்துவிடுவார். மறுநாள் அவரது கிளினிக்கில் கால்கட்டுடன் நிறைய நோயாளிகள் காத்திருப்பதாக அந்த விளம்பரம் முடியும். அதாவது, ஒரு கால்பந்து தனியாகக் கிடக்கிறது என்று நிறைய பேர் அதை ஓங்கி உதைத்து அடிபட்டு, பிறகு அருகில் இருக்கும் கிளினிக்கிற்கு வந்திருப்பார்கள். அது, இவரது கிளினிக்தான். தனக்குக் கூட்டம் வருவதற்காக அவர் செய்திருப்பதாக ஒரு புரிதலை அந்த விளம்பரம் காட்சிப்படுத்தும். மேலை நாட்டில் விடுங்கள், நம் நாட்டில்.. ஏன் தமிழ்நாட்டில் திரைப்படங்களில்கூட ‘பகடி’ என்ற பெயரில் நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவமனைகளை வைத்தும், மருத்துவர்களை வைத்தும் காட்சி அமைப்பார்கள்.

model image
model imagegoole gemeni

'சில்லறை இல்லடா' என்று ஒரு நோயாளியின் தலையை மேஜையில் சாய்த்து இன்னொரு பல்லையும் வடிவேலு ஒரு காட்சியில் புடுங்கிவிடுவார்.

திரைப்படங்களில் நகைச்சுவை வறட்சி

இன்னொரு காட்சியில், “ஏ..மாமா..மாமா.. மாமய்யா... சன்டே ஏ குட்டி நீ ஃப்ரியா" என்று தனக்கு ஊசி போட்டுக்கொண்டிருக்கும் சிஸ்டரைப் பார்த்து விவேக் பாடிக்கொண்டிருப்பார். " என்னது உனக்கு ஊசி போட்டுக்கிட்டு இருக்கேன், நீ ஜாலியா பாட்டு பாடிக்கிட்டு இருக்க?" என்று நர்ஸ் கேட்பார். “நீ எனக்கு எங்க ஊசி போட்ட, இந்தா தலகாணிக்குத்தான் போட்டுருக்க” என்று கையைத் தூக்கி தலகாணியைக் காண்பிக்கும் காமெடி ஒன்று உள்ளது. திரைப்படங்களில் நகைச்சுவை வறட்சி ஏற்படும்பொழுதெல்லாம் கல்லூரி ஆசிரியர்களை வைத்தும், மருத்துவர்களை வைத்தும் பகடி செய்வது, வீட்டில் சாப்பிட இட்லிக்கு அரைக்கவில்லை என்று உப்புமாவைப் புகட்டுவதற்குச் சமம்.

திரைப்படங்களில் நகைச்சுவை வறட்சி ஏற்படும்பொழுதெல்லாம் கல்லூரி ஆசிரியர்களை வைத்தும், மருத்துவர்களை வைத்தும் பகடி செய்வது, வீட்டில் சாப்பிட இட்லிக்கு அரைக்கவில்லை என்று உப்புமாவைப் புகட்டுவதற்குச் சமம்.

இதற்குக் கொஞ்சம்கூட குறைவில்லாதது செய்தி மற்றும் சோசியல் மீடியாக்களும்தான். செய்திகளுக்குப் பஞ்சம் ஏற்படும்பொழுதெல்லாம் கட்சியினரோ அல்லது பிரமுகர்களோ மருத்துவமனை ஆய்விற்குச் செல்வார்கள். எல்லாம் சரியாக இருக்கிறது, அனைவரும் குணமாகிச் செல்கிறார்கள் என்று சொன்னால் அதில் லைக்கோ, டிஆர்பி யோ, சுவாரஸ்யமோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அடிபட்டு வருபவர்களைக் காண்பிக்கும் கேமராக்கள், அவர்கள் குணமடைந்து மகிழ்ச்சியுடன் செல்வதையும் பல தீவிரமான கேன்சர் நோயிலிருந்து விடுபட்டு மருத்துவர்களுக்கு நன்றி சொல்லிச் செல்வதையெல்லாம் யாரும் காண்பிப்பதில்லை என்பது அபத்தமான உண்மை. ஓர் எதிர்மறைச் செய்தியைப் பரப்பும் ஈர்ப்பிற்கு இருக்கும் சுவாரஸ்யம் நேர்மறைச் செய்தியைப் பகிர்வதில் இல்லை.

மருத்துவமனைகளைச் சுற்றிய தொழில் வாழ்க்கை

உண்மையில், திரைப்படங்களில் பகடியாகவும், பயம் தரும் இடங்களாகவும் இருக்கும் மருத்துவமனைகளைச் சுற்றியே தொழில் வாழ்க்கையை வகுத்துக்கொண்டவன் நான். மிகுந்த வலியுடனும், வாதையுடனும் மருத்துவர்களுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுடன்தான் நானும் பல பொழுதுகளில் காத்திருந்திருக்கிறேன். ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியாக, ஒரு நிறுவனராக மருத்துவமனை ஊழியர்களுடனும், மருத்துவர்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்புண்டு. ஒரு பக்கம் மருத்துவமனையையும், இன்னொரு பக்கம் பொதுமக்களையும் நிறுத்தி இரண்டிற்கும் இடையே நிலவும் உணர்வுச் சிக்கலையும் அதனால் ஏற்படும் உளவியல் சிக்கலையும் புரிந்துகொள்வது மிகவும் கடினமான வேலை.

சிலர் மருத்துவமனைகளை மிகவும் அபாயகரமானதாகவும் அல்லது பயமுறுத்தும் வஸ்துவாகவும், நோய்களை மிகவும் கவனக்குறைவாகவும் எடை போடுகிறார்கள். இன்னும் சிலர், நோய்களுக்கு மிகவும் மெனக்கெடல் எடுத்து கூகுள் எல்லாம் தேடிப்பார்த்து தன்னையும் குழப்பி, அடுத்தவர்களையும் குழப்பிக்கொள்கிறார்கள்.

அணுகுவது எப்படி என்று பலருக்கும் தெரிவதே இல்லை!

எனக்குத் தெரிந்து சிலர் மருத்துவமனைகளை மிகவும் அபாயகரமானதாகவும் அல்லது பயமுறுத்தும் வஸ்துவாகவும், நோய்களை மிகவும் கவனக்குறைவாகவும் எடை போடுகிறார்கள். இன்னும் சிலர், நோய்களுக்கு மிகவும் மெனக்கெடல் எடுத்து கூகுள் எல்லாம் தேடிப்பார்த்து தன்னையும் குழப்பி, அடுத்தவர்களையும் குழப்பிக்கொள்கிறார்கள். மருத்துவர்களை எப்படி அணுகுவது என்று பலருக்குத் தெரிவதே இல்லை. எனக்கு ஓர் அனுபவம் இருக்கிறது. அன்று மிகச்சரியாக இரவு எட்டு மணிக்கு மேல் இருக்கும். “வேலையெல்லாம் முடித்துவிட்டு, கடைசியாக என்னை வந்து பாரு.. வந்துட்டு உடனே உடனே ஓடாத” என்று அந்த மருத்துவர் கூறியிருந்ததால், அந்த ஊரில் வேலையெல்லாம் முடித்துவிட்டு கடைசியாக அவரைப் பார்க்கும் வழக்கம் எனக்கு.

மருத்துவரிடம் தொலைபேசியில் ஆலோசனை

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியாக மருத்துவர்களை அவர்களது சௌகர்யமான நேரங்களில் பார்ப்பதுதான் முறை. தனிப்பட்ட முறையில் சில மருத்துவர்கள் என்னிடம் கொஞ்சம் உரிமை எடுத்துப் பழகும் காரணங்களினால் அவர்களது ஓய்வு நேரத்தில் வீடுகளிலோ அல்லது பொது இடங்களில் சந்தித்து ஒரு காபியோ, உணவருந்தியோ பேசுவது வழக்கம். மருந்து விற்பனையைத் தாண்டி அரசியல், கலை, இலக்கியம் என சம்பாஷணை கலை கட்டுவதுண்டு. சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அன்று பேசிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் தொலைதூரத்து உறவினரின் மகன் பெங்களூரில் இருந்து போனில் அழைத்தார்.

மருத்துவருடன் போனில் பேசிய சத்தம் வெளியில் அப்படியே கேட்டது. இரவு பத்து மணி முதல் காலை ஏழு மணி வரை அவருக்குக் கம்ப்யூட்டரில் வேலை நேரம். ஆதலால், தூங்குவது மதியம் முதல் இரவு வரை. காலை மடக்கி ஷோஃபாவில் படுத்துத் தூங்கியிருக்கிறார், மூன்று மணி நேரம் மடக்கியே இருந்ததால், அவருக்குக் காலை விரிக்கும்போது கொஞ்சம் அசௌகர்யமாயிருந்திருக்கும்போல. அவர் கேட்கிறார், மாமா, இத்தன நேரமா மடக்கியே வச்சிருந்தனால, கால் சூகை பிடிச்சிருச்சு, இப்ப மதமதனு இருக்கு, இப்ப நான் யார பாக்கணும், ஆர்த்தோ டாக்டரா, ந்யூரோ டாக்டரா?" என்று.

மருத்துவர் சொன்னார், "டேய், முதல்ல, கால்ல கீழ வச்சுப்பாரு, அப்புறம் நடந்து பாரு, ஒத்தடம் கொடுத்துப்பாரு, அப்புறமா கேளு" என்றார்.

போனைத் துண்டித்துவிட்டு, "இப்படித்தான் பழனிக்குமார் பசங்க இருக்காங்க, நைட் தூங்காம வேல பார்ப்பானுக, காலைல எந்திரிச்சதும் தலை வலிம்பானுக, உடனே ஊர்ல யார் பெரிய நியூரோனு நெட் ல தேடுவானுக, யாருக்கு அஞ்சு ஸ்டார் இருக்கோ, அங்க போய் டோக்கன போடுவானுக.. அஞ்சு மணி நேரம் கழிச்சு டாக்டர பார்த்து, பத்து டெஸ்ட் எடுத்து எல்லாம் நார்மல்னு வந்ததும், நல்லா தூங்குப்பானு டாக்டர் ப்ர்ஸ்க்ரிப்ஷன் தருவாரு.." இந்தக் காலத்து பசங்க இப்படித்தான் இருக்கானுக " என்றார்.

ராக்கெட் குறித்து பழைய ஜோக்

அவர் சொன்னது உண்மைதான். ஆனால் அதில் இன்னொரு விசயம் இருக்கிறது. அதை, அவர் சொல்லவில்லை. அதைச் சொல்வதற்கு ஓர் அதரபழசான ஜோக் ஒன்றைச் சொல்கிறேன்.

ஒரு ராக்கெட் செய்தார்களாம். அதை எவ்வளவு தயார் செய்தும், சுவிட்ச் ஆன் செய்தாலும் ராக்கெட் கிளம்பவில்லையாம். உடனே உலகத்தில் தலைசிறந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்றை அழைத்தார்களாம். முதலில் அந்தக் குழுவில் உள்ள அமெரிக்க விஞ்ஞானி வந்து பார்த்தாராம். ராக்கெட்டிற்குள் இருக்கும் சர்க்கியூட் மற்றும் வயர்களை அவர் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, மறுபடியும் சுவிட்ச் ஆன் செய்தாலும் ராக்கெட் கிளம்பவில்லையாம். அடுத்ததாக, அந்தக் குழுவில் உள்ள ரஷ்ய விஞ்ஞானியை அழைத்தார்களாம். அவரும் இன்ஞினைக் கழற்றி, பேட்டரியைக் கழற்றி என்னவெல்லாமோ செய்து மறுபடியும் சுவிட்ச் ஆன் செய்தாராம். அப்பவும் ராக்கெட் கிளம்பவில்லையாம். கடைசியாக, ’இந்திய நபரை வரச்சொல்லுங்க’ என்றார்களாம். இந்திய ஆள் போனாராம். ’ராக்கெட்டை 45 டிகிரி இடது பக்கம் சாயுங்கள்’ என்றாராம். சாய்த்தார்களாம். பிறகு, ’45 டிகிரி வலது பக்கம் சாயுங்கள்’ என்றாராம். சாய்த்தார்களாம். இப்பொழுது நேராக வைத்துவிட்டு, ’சுவிட்ச் போடுங்க’ என்றாராம். அங்கிருந்த அத்தனை பேருக்கும் ’என்னடா இது’, ’இது போதுமா’ என்று புலம்பிவிட்டு சுவிட்ச் போட்டார்களாம், ஆச்சர்யம், ராக்கெட் கிளம்பிவிட்டதாம்.

அதுபற்றி இந்திய ஆளிடம் கேட்டார்களாம், அவர் சொன்னாராம், நான் பகுதி நேரமாக எங்கள் வீட்டில் ஸ்கூட்டர் ரிப்பேர் கடை வைத்திருக்கிறேன். என்னிடம் ரிப்பேராகி வரும் ஸ்கூட்டர்களை முதலில் இப்படித்தான் சோதிப்பேன். பெரும்பாலும் இந்த முறையிலேயே எல்லா ஸ்கூட்டரும் கிளம்பிவிடும், அப்படித்தான் இதையும் கிளப்பினேன் என்றாராம். (இந்த ஜோக்கை பிரபல அறிஞர் தென்கச்சி சுவாமிநாதன் சொன்னதாக ஞாபகம்).

அதாவது, ஸ்கூட்டர் ரிப்பேர் பார்ப்பவரிடம் போய் எந்த வண்டியை நிறுத்தினாலும் அது ராக்கெட்டாக இருந்தாலும் சரி, அவர் ஸ்கூட்டரைப் பார்ப்பதுபோல்தான் பார்ப்பார் என்ற நியதிதான் அந்த அதர பழைய ஜோக்கில் மறைந்திருக்கும் தத்துவம்.

இதே கதைதான் தலைவலிக்கு ந்யூரோ டாக்டரைப் பார்ப்பேன் என்பதும்.

‘இது சாதாரண தலைவலி’

நரம்பியல் மருத்துவர் மூளை, தண்டுவடம் போன்ற பாகங்களுக்கான சிறப்பு பயிற்சி பெற்றவர், அவரிடம் போய் தலைவலி என்று சொன்னால், மூளையில் எதும் கட்டி இருக்குமா, இரத்த அழுத்தம் இருக்குமா, பக்கவாதம் ஏற்படுமா இப்படியெல்லாம்தான் அவரது மூளை யோசிக்கும், கடைசியாக அவரது சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்தபிறகு, ‘இது சாதாரண தலைவலி’ என்று மாத்திரை தருவார். அதற்குள் பொதுபிரஜையான நாம் என்ன முடிவுக்கு வருவோம், "இந்த டாக்டர், காச நல்லா இழுத்துவிடுறான்டா"னுதான?

ஒரு சிறப்பு மருத்துவர் அவருக்கான வேலைகளைச் செய்வதற்குத்தான் பயிற்சி பெற்றிருப்பார். எந்த அறிகுறிகளையும் தவறவிடக்கூடாது என்று அவர் மெனக்கெடுவார்.

அப்படியல்ல. ஒரு சிறப்பு மருத்துவர் அவருக்கான வேலைகளைச் செய்வதற்குத்தான் பயிற்சி பெற்றிருப்பார். எந்த அறிகுறிகளையும் தவறவிடக்கூடாது என்று அவர் மெனக்கெடுவார். அதனால்தான் இத்தனைப் பிரயத்தனங்களும். மேற்சொன்ன மருத்துவரின் உறவினருக்கு வாருங்கள். காலை நன்றாக மடக்கி தூங்கியபடியே இருந்தவருக்கு வந்த சந்தேகம், ஆர்த்தோ டாக்டரைப் பார்க்கவேண்டுமா, இல்லாவிட்டால் நரம்பியல் மருத்துவரைப் பார்க்கவேண்டுமா? மருத்துவர் சொன்ன பதில் பகடி கலந்திருந்தாலும் அதுதான் உண்மை. கொஞ்சம் நடந்துதான் பார்க்கவேண்டும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உடனே, சிறப்பு மருத்துவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அதேநேரத்தில், பொது பிரஜைகளுக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்னை, நமக்கு ஓர் உடல் உபாதை வருகிறதென்றால், அதை எப்படிக் கையாளுவது? எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த மருத்துவர்களைப் பார்ப்பது, குடும்பத்திற்குள் வரும் நோய் மற்றும் அது சார்ந்த பிரச்னைகளை எப்படிக் கையாளுவது? மருத்துவமனைகளுக்குள் சென்றால் பணத்தைப் பிடுங்கிவிடுவார்களே என்றெல்லாம் யோசிப்பார்கள்.

அப்படித்தானே? காத்திருங்கள், நண்பா-நண்பீஸ், இதையும் பேசும், ‘ஒரு மருந்துவிற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு..’

டைரிக்குறிப்பு தொடரும்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com