சிறப்புக் களம்

மலையாள சினிமாவில் புதுயுக நடிகைகள் படை... கவனிக்கத்தக்கவர்கள் யார், யார்?

PT WEB

யதார்த்தங்களைக் கொண்டாடும் மலையாள சினிமாவுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் தமிழகத்தை தாண்டியும் இருக்கிறது. மற்ற மொழி திரைப்படங்களைவிட மலையாள சினிமாவில் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியவத்துவம் அதிகம். இதனால்தான் எந்தக் காலகட்டத்திலும் மலையாளத்தில் கோலோச்சும் நடிகைகள் பலரும் இந்தியாவின் மற்ற மொழி திரைப்படங்களிலும் தடம் பதிப்பர். சிலர் எல்லைகளைத் தாண்டுவது இல்லையென்றாலும், மலையாள சினிமாவில் மட்டுமே நடித்து, தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வித்யா, ஊர்வசி, ரேவதி, மஞ்சு வாரியர் தொடங்கி நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை இதற்குப் பலரை உதாரணமாகச் சொல்லலாம். என்றாலும் இப்போது மலையாள சினிமாவை ஆள்வது புதுயுக நடிகைகள். இந்தப் புதுயுக நடிகை படையில் கவனிக்கத்தக்கவர்கள் யார் யார் என்பது பற்றி பார்ப்போம்.

நிமிஷா சஜயன்: இந்தப் பட்டியலில் இவரை முதலில் சொல்ல காரணம், இன்றைய தேதியில் மலையாள சினிமாவில் இருக்கும் இளம் பெண் நடிகர்களில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துவதில் நிமிஷாவுக்கு நிகர் நிமிஷா மட்டுமே. திரைத்துறையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே, 'சோழா', 'ஈடா', 'ஒரு குப்சிதா பையன்', '41', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'நாயட்டு'... இதோ இப்போது 'மாலிக்' என குறிப்பிடத்தக்க படங்களில், அதுவும் மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துவிட்டார். இவருக்கு முதல் படம் 'தொண்டிமுதலும் திரிக்‌ஷாக்‌ஷியும்'. முதல் படமே, ஃபஹத் மற்றும் சூரஜ் வெஞ்சராமுடு என்ற மலையாள சினிமாவின் இரண்டு நடிப்பு அரக்கர்களுடன் இணைந்து நடித்தார். இரண்டு பேருக்கும் இணையான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில், இயல்பான நடிப்பு, ஆடம்பரம் இல்லாத மேக்கப் என்று கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து மலையாள திரையுலகில் தனக்கென தனி வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். கேரள இயக்குநர்களின் 'மோஸ்ட் வான்டட்' பெண் நடிகராக உருவாகி இருக்கும் நிமிஷா ஒரு மலையாளி என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பை அந்தேரியில்தான்.

இவரின் தாய், தந்தையின் பூர்விகம் கேரளா ஆகும். 19 வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட நிமிஷாவுக்கு நடிப்பு எப்போதுமே ஆர்வத்தை தூண்டும் விஷயமாக இருந்துள்ளது. ஆரம்ப பள்ளிகளில் படித்தபோதே நடிப்பதையும், ஆடிஷன்களில் கலந்துகொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆடிஷன்களுக்கு செல்வதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறார். அப்படித்தான் மலையாள திரைப்பட உலகில் நுழைந்துள்ளார். நிமிஷாவின் நடிப்பில் அடுத்து 'துறைமுகம்', ஒரு இந்தி திரைப்படம் மற்றும் 'Footprints of water' எனும் ஆங்கிலப் படம் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

அன்னா பென்: அன்னா பென் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க இளம் நடிகைகளில் ஒருவர். மிகக் குறுகிய காலத்தில், அன்னா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ஒரு நடிகையாக மாறியிருக்கிறார். 'பேபி'யாக (கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் கேரக்டர் பெயர்) மலையாள சினிமாவில் அறிமுகமாகிய அன்னா பென் இதுவரை நடித்தது நான்கு படங்கள்தான். இந்த நான்குமே வெற்றிப் படங்கள்.

ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள அன்னா, மலையாள சினிமாவின் பிரபல எழுத்தாளர் பென்னி நாயரம்பலம் என்பவரின் மகள். தந்தை சினிமாவில் இருந்தாலும், அவரின் உதவி இல்லாமல் தன் சொந்த ஆர்வத்தின்பேரில் சினிமாவுக்குள் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில், மலையாள சினிமாவின் நம்பிக்கைக்குரிய கதாநாயகியாக வளர்ந்துள்ளார்.

மைனஸ் 10 டிகிரி டெம்பரேச்ரில் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடும் 'ஹெலன்' ஆக, தன்னை நம்ப வைத்து ஏமாற்றும் காதலினிடம் இருந்து தப்பிக்கும் ஜெஸ்ஸியாக `கப்பேலா'விலும், `சாரா'ஸ் படத்தில் தனது உடலுக்கு தானே உரிமை என பெண்ணிய சிந்தனையினை வெளிப்படுத்தும் 'சாரா'வாக நடிப்பில் ஜொலித்திருக்கிறார் அன்னா. அன்னா பென் என்றால் அந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் தனி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் தனது கதை தேர்வுகள் மூலம்.

அதுவே அவருக்கு பெரிய பலமாக மாறியிருக்கிறது. இதனால் மலையாளத்தின் 'மோஸ்ட் வான்டட்' இயக்குநர் ஆஷிக் அபுவின் 'நாரதன்' போன்ற அரை டஜன் படங்கள் இப்போது அன்னா பென் கையிலிருக்கிறது. தற்போதுவரை இவர் மலையாள சினிமாவை தாண்டாவிட்டாலும், இப்போது அவருக்கு மற்ற மாநில ரசிகர்கள் வெகுவாக உள்ளனர். தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். விரைவில் அது நடக்கும் என நம்புவோம்.

ரஜிஷா விஜயன்: மாரி செல்வராஜ் - தனுஷின் `கர்ணன்' படத்தில் கவனம் ஈர்த்தவர் ரஜிஷா. நிமிஷா, அன்னா பென்னை போல் இவரும் தனது சொந்த முயற்சியில் மலையாள சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தாலும், அவர்களைவிட வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக போராடியவர் ரஜிஷா. சிறுவயதில் இருந்தே சினிமா மீதான ஆசை இருந்தாலும், அதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கத்தால் ஜர்னலிஸம் படித்துவிட்டு டிவி துறையில் பணியாற்ற தொடங்கினார். செய்திவாசிப்பாளர், தொகுப்பாளர் என்று இருந்த ரஜிஷாவுக்கு அதன்பிறகே சினிமா வாய்ப்பு வந்தது.

முதல் படம் 'அனுராகக்கரிக்கின் வெள்ளம்'. 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனிலியா போல் துறுதுறு நடிப்பால் இந்தப் படத்தில் கவனம் ஈர்க்கப்பட்டார். இதனால் முதல் படத்திலேயே மாநில அரசின் விருது உட்பட இவருக்கு பல விருதுகள் குவிந்தன. இதன்பின் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் 'ஜார்ஜேட்டன் பூரம்', 'ஒரு சினிமாக்காரன்' போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர், சமீபகாலமாக கதையின் நாயகியாக தன்னை முன்னிறுத்தும் படங்களை தேர்ந்தெடுத்து ஜொலித்து வருகிறார். அப்படி வெளிவந்த, 'ஜூன்', 'ஃபைனல்ஸ்', 'ஸ்டான்ட் அப்', கோ-கோ' போன்ற படங்கள் நல்ல ஹிட் அடித்து ரசிகர்களை கவர்ந்தது.

இதனால் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். தற்போது மலையாளத்தை தாண்டி இவருக்கு தமிழிலும் வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக, 'கர்ணன்' படத்தில் நடித்து முடித்த கையோடு இப்போது சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படம் நின்று போக அந்த வாய்ப்பு இல்லாமல் போனது.

ஐஸ்வர்யா லட்சுமி: ஐஸ்வர்யா தமிழ்நாட்டிலும் இப்போது நல்ல பரிச்சயம். ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் ஐஸ்வர்யாவின் என்ட்ரி. நிவின் பாலியின் 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவளா' படத்தில் சின்ன கேரக்டர் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானாலும் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக 'மாயநதி' என்ற படத்தில் நாயகியாக கவனம் ஈர்த்தார்.



பெரும்பாலும் ஃபஹத் பாசிலின் `வரதன்', காளிதாஸ் ஜெயராமின் `அர்ஜென்டினா ஃபேன்ஸ் காட்டூர்கடவு' என கமர்ஷியல் படங்களின் நாயகியாக நடித்தாலும், தனது தைரியமான கேரக்டர்கள் மூலமாகவும் நல்ல நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் முத்திரைப் பதித்து வருகிறார். தற்போது கேரள நடிகைகளில் மற்ற மொழிகளில் நடிப்பதில் முன்னிலையில் இருப்பவர் ஐஸ்வர்யாதான். தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த 'ஆக்‌ஷன்' படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'ஜகமே தந்திரம்' போன்ற படங்களில் நடித்துள்ளவர். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

நிவின் பாலியுடன் `பிஸ்மி ஸ்பெஷல்', `அர்ச்சனா 31 நாட் அவுட்', `குமாரி' அதில் குறிப்பிடத்தக்கவை. சமீபத்தில் இவர் டொவினோ தாமஸுடன் இணைந்து `காணக்காணே' நடித்த நல்ல வரவேற்பை பெற்றதுடன், கமர்ஷியல் நாயகி என்ற வட்டத்தையும் உடைத்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி: இவர் ஒரு ஆர்க்கிடெக்ட். என்றாலும் சினிமா மீதான ஆர்வத்தால் ஆர்க்கிடெக்ட் படிப்பை துறந்தார். சினிமா பின்புலத்தை கொண்டவர் அபர்ணா. அவரின் தந்தை ஒரு இசையமைப்பாளர். நிறைய ஆல்பங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அந்த தொடர்புகளால் சினிமாவுக்கு வந்து ஆரம்பத்தில் ஒருசில படங்களில் நடித்தாலும், ஃபஹத் பாசிலின் `மஹிஷிண்டே பிரதிகாரம்' அவரை கவனிக்கத்தக்க நடிகையாக மாற்றியது. இதன் மலையாளத்தில் சில படங்களில் நடித்தாலும், தமிழில் சூர்யாவுடன் நடித்த `சூரரைப் போற்று' பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

இந்தப் படத்தில் சூர்யா நடிப்பு பேசப்பட்ட அளவு அபர்ணாவும் பேசப்பட்டார். ஏற்கெனவே, தமிழில் `8 தோட்டாக்கள்', `சர்வம் தாள மயம்' போன்ற படங்களில் நடித்துள்ளவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

மஞ்சு வாரியர்: இங்கே மஞ்சு வாரியரை இளம் நடிகைகளுடன் ஒப்பிட காரணம் இருக்கிறது. மஞ்சு தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். பல தடைகளுக்கு பிறகு சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்தார் மஞ்சு. என்றாலும் முதல் இன்னிங்ஸைவிட இரண்டாம் இன்னிங்ஸ் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது.

`how old are you' என்ற படத்தின் மூலம் 15 ஆண்டுகள் கழித்து சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சுவுக்கு முன்பைவிட மிகுந்த வரவேற்பை கொடுத்தனர். இந்தக் காலட்டத்தில், கதாநாயகிக்கு முக்கியவத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து தன்னை லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இன்றைய இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

இன்றைய தேதியில் தனக்கென சினிமா வட்டாரத்தில் தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள ஒரு நடிகை மலையாள சினிமாவில் இருக்கிறார் என்றால் அது மஞ்சு வாரியர்தான். இரண்டாம் வரவில் புதிய சிகரங்களை எட்டிவருகிறார்.

- மலையரசு