"ஆர்எஸ்எஸ் எந்த அரசியல் கட்சிக்கும் வேலை செய்யாது. சங்கத்தின் ஸ்வயம் சேவகர் எந்த அரசியல் கட்சியிலும் சேர்ந்து பாடுபட சுதந்திரம் உண்டு. ஏன், அவர் தேர்தலிலும் கூட தீவிரமாகப் பங்கேற்கலாம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பு அவரைப் பின்பற்றாது. அது கட்சிகளில் இருந்து விலகி இருக்கும். எந்த காரணத்திற்காகவும் இந்த நிலைப்பாட்டைக் கைவிடாது". இதைக் கூறியது ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர். ஆனால், காலம் ஒரு முடிவை மீண்டும் பரிசீலிக்க வைக்கும்தானே. தேர்தல் அரசியலில் நேரடியாக களமிறங்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து நடந்த சில நிகழ்வுகள் ஆர்எஸ்எஸ்ஸை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது.
முதலில், ஆர்எஸ்எஸ் பாஜகவிற்காக வேலை செய்தேதான் ஆக வேண்டுமா? ரத்தன் ஷர்தா வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “ஆர்எஸ்எஸ் பாஜகவின் களப்படை அல்ல. உண்மையில், மிகப்பெரிய கட்சியான பாஜகவிற்கு அதன் நேரடி காரிய கர்த்தர்கள் உள்ளனர். ஆர்எஸ்எஸ் மக்களிடையே அவர்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 1973-1977 காலக்கட்டத்தை தவிர ஆர்எஸ்எஸ் நேரடியாக அரசியலில் பங்கேற்கவில்லை”. ஆனாலும், கடந்த காலங்களில் பாஜகவின் தேசியத் தலைவரையோ அல்லது முக்கியப் பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதிலோ ஆர்எஸ்எஸ் கை ஓங்கியே இருந்திருக்கிறது.
மோடி - ஷா எப்படி கட்சியின் தேசியத் தலைவர் தங்களது பேச்சைக் கேட்டு நடப்பவராக இருக்க வேண்டுமென்று யோசிப்பார்களோ, அதுபோலவே ஆர்எஸ்எஸும் புதிய தேசிய தலைவர் குறித்து யோசிக்கும். நட்டாவும் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ABVPயில்தான் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலின் போது, பாஜகவின் தேர்தல் வெற்றிகளுக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை எனும் ரீதியில் நட்டா சொன்னது பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியது. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். “நட்டா பேசியது அவரது வார்த்தைகள் மட்டுமல்ல, பாஜக தலைவர்களின் பொதுப்பார்வையைத்தான் நட்டா பிரதிபலித்துள்ளார்” என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் களத்தில் இறங்கவில்லை. இதன் எதிரொலி தேர்தலில் தெரிந்தது. 2019 ஆம் ஆண்டு வென்ற தொகுதிகளைவிட ஏறத்தாழ 60 தொகுதிகளைக் குறைவாகப் பெற்றது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில், ரத்தன் ஷர்தா ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். ‘மோடி 3.0 – தவறுகளை சரிசெய்வதற்கான ஓர் உரையாடல்’ எனும் தலைப்பில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை, பாஜகவின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆர்எஸ்எஸ்க்கு இருந்த அதிருப்திகளை குற்றச்சாட்டுகளாக முன்வைத்தது. அந்தக் கட்டுரையின் முதல் பத்தியிலேயே, “சமூக ஊடகங்களில் போஸ்டர்களையும், செல்ஃபிக்களையும் பகிராமல், களத்தில் கடின உழைப்பினை செலுத்துவதன் மூலமே இலக்கினை அடைய முடியும்” எனத் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட நேரடி விமர்சனம்.
பாஜக தலைவர்கள் மீது ஆர்எஸ்எஸ்க்கு இருக்கும் அதிருப்தியை அதன் தலைவர் மோகன் பகவத்தும் வெளிப்படுத்தியிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் பேசிய பகவத், "உண்மையான சேவகர் கண்ணியத்தைப் பேணுவார். நான் இதைச் செய்தேன் என்ற எந்த ஆணவமும் அவருக்கு இருக்காது. அப்படிப்பட்டவர் மட்டுமே சேவகர் என அழைக்கப்படுவதற்கான உரிமை கொண்டவர்" எனத் தெரிவித்திருந்தார். இந்த உரையில் பாஜக தலைவர்களின் பெயர்களை பெரும்பாலும் சுட்டவில்லை என்றாலும்கூட, பாஜகவின் தேசியத் தலைமையை ஒட்டியே அவரது கருத்துகள் இருந்தன. இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே இருந்த இடியாப்பச் சிக்கலை தெளிவாக எடுத்துக்காட்டியது. தொடர்ந்து நடந்த சில பேச்சுவார்த்தைகளை அடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் களத்தில் இறங்கியது. இதன்மூலம் பெரும்பான்மையான இடங்களில் பாஜகவின் வெற்றியையும் உறுதி செய்து கொடுத்தது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட ரணங்களுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சமீபத்தில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெற்ற வெற்றிகள் வருடிக்கொடுத்தன.
இந்நிலையில்தான், சமீபத்தில் பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு - அந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்டிருந்தாலும் - பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்வில் ஆர்எஸ்எஸின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. பாஜகவின் தேசிய தலைவருக்கான தேர்வில் ஆர்எஸ்எஸ் எப்போதும் பங்கு வகிக்கும்; ஆலோசனைகள் வழங்கும். ஆனால், அந்த ஆலோசனைகள் எதுவும் மறுப்பதற்கானதோ அல்லது விவாதத்திற்கானதோ அல்ல. செயல்படுத்த..
மக்களிடம் செல்வதில் பாஜகவை விட ஆர்எஸ்எஸ் வலிமையானதா? சிறு உதாரணத்தின் மூலம் இதை விளக்கலாமே.. கடந்த 2023 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டுமானத்திற்காக ஆர்.எஸ்.எஸ் நிதி சேகரிப்பில் ஈடுபட்டது. கிட்டத்தட்ட 45 நாட்களுக்குள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் துணை அமைப்புகள் 65 கோடி மக்களைச் சென்றடைந்தனர். ராமர் கோயிலுக்காக சுமார் ரூ.2100 கோடி திரட்டப்பட்டது. இங்கு பணத்தைத் தாண்டி நாம் பார்க்க வேண்டியது, ‘ஒரு மாதத்திற்குள் அவர்களால் இத்தனை கோடி மக்களை சென்றடைய முடியும்’. இது தேர்தல் காலத்தில் எப்படி இருக்குமென்பதை நினைத்துப் பாருங்கள். ஹரியானாவில் இதை நேரடியாகவே பார்த்தோம். கிட்டத்தட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்களை ஆர்எஸ்எஸ் மட்டும் தனியாக நடத்தியது. இதைத்தான் ரத்தன் ஷர்தா குறிப்பிட்டார், ‘களத்தில் கடின உழைப்பை செலுத்துவது’ என்று.
இப்படி இருக்கையில் புதிதாக ஒருவரை தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் ஆர்எஸ்எஸிடம் ஆலோசனை கேட்பது நியாயம்தானே. இவ்வளவு பெரிய இந்தியாவில் தேர்தல்கள் அடிக்கடி வரும் சூழலில்.....
புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை பிரதமர் மோடி மார்ச் 30 ஆம் தேதி சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாக்பூரில் மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக அடிக்கல் நாட்டியபின் இந்த சந்திப்பு நிகழவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால், 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றப் பின் முதல் முறை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வர இருக்கிறார் மோடி. சமீபத்தில்கூட லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான பாட்காஸ்ட்டில் ஆர்எஸ்எஸை பிரதமர் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சரி, பாஜகவின் தேசிய தலைவராக தகுதிகள் என்ன?