கட்சியில் ஒருவரை முக்கியப் பதவிக்கு நியமிக்க வேண்டுமானால், அவர் தன் வழியில் குறுக்கிடாமல் இருக்க வேண்டுமென்றுதான் அக்கட்சியிலுள்ள அதிகாரமிக்கவர் யோசிப்பார். எந்த ஒரு கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.. பாஜகவாக இருந்தாலும் சரி, அமித் ஷா, ஜேபி நட்டா என யாராக இருந்தாலும் சரி...
2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் முதல் அமைச்சரவை அமைந்ததற்குப்பின், கட்சியின் உள்கட்டமைப்பில் நடந்த மேம்பாடு, கட்சியின் இரு ஆளுமைகளாக மோ-ஷா மாறி கட்சியை தங்களது இரும்புப் பிடிக்குள் கொண்டுவந்தது என்பதெல்லாம் அதுவரை பாஜகவில் நடக்காத ஒன்று.
பாஜக இதுவரை 11 தேசியத் தலைவர்களைக் கண்டிருந்தாலும் அமித் ஷா அளவிற்கு மிக அதிகாரத்துடன் செயல்பட்டவர்கள் என யாரும் இல்லை. பாஜகவை உருமாற்றியதில் அமித் ஷா முக்கியமானவர் மற்றும் முதன்மையானவர். தனது செயல்பாடுகளின் மூலம் அவர் பெற்ற அதிகாரத்தையும், அந்த அதிகாரத்தின் துணையோடு அவர் பெற்ற வெற்றிகளையும் சிறு உதாரணங்களின் வழியே பார்க்கலாம்.
2012 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில பாஜகவின் பொதுச்செயலாளராக அமித் ஷா நியமிக்கப்படுகிறார். குஜராத்தில் மோடியை மூன்றாவது முறை முதலமைச்சராக உட்காரவைத்த சில மாதங்களிலேயே அமித் ஷாவிற்கு புதிய பொறுப்பு தேடி வருகிறது.
2013ஆம் ஆண்டு உபியின் கட்சி நிர்வாகம் அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணிக்கிறார். கட்சியின் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படுகின்றன. புதிய புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு பல இள வயதினரும் புதிய பொறுப்புகளில் அமர வைக்கப்படுகின்றனர். உட்கட்சிப் பூசல்கள் பெரும் எதிர்ப்புகள் இன்றி துடைத்தெறியப்படுகிறது. அனைத்து சமூகங்களுக்கும் கட்சியில் பொறுப்பு கொடுக்க முயற்சிக்கப்படுகிறது; அதனால் எழுந்த சிறுசிறு சிக்கல்களும் சரிசெய்யப்படுகின்றன.
உபியில் கட்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனது கைப்பிடிக்குள் கொண்டு வருகிறார். மிக முக்கியமாக மோடி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்படுகிறார். சரியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கட்சி புத்துயிர் கொள்கிறது. விளைவு, 71 தொகுதிகளை தனியாகவே வென்று பாஜக மீண்டும் தன்னை நிரூபித்தது.
பாஜகவின் கோட்டையாக இருக்கும் உத்தரபிரதேசத்தில் - இடைப்பட்ட சில காலங்களில் - கட்சி தனது செல்வாக்கை இழந்திருந்தது. இதுபோன்ற சூழலில் பாஜகவை மீண்டும் அரியணையில் அமர்த்துவது அத்தனை சுலபமான காரியமா என்ன? 2014ல் அமித் ஷா ஏற்படுத்திக் கொடுத்த உள்கட்டமைப்பு, அடுத்த தேர்தலில் பாஜக வெற்றியடைய மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. இதைத்தான் கட்சியின் தேசியத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஒவ்வொரு மாநிலத்திலும் செய்ய முனைந்தார் அமித் ஷா. வெற்றியும் பெற்றார்.
அமித் ஷா மற்றும் மோடியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாமே.. 2017 ஆம் ஆண்டு பாஜக உபியில் வெற்றி பெற்றுவிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு சந்திப்பு புவனேஷ்வரில் நடக்கிறது. கூட்டத்தில் அமித் ஷா இவ்வாறு அறிவிக்கிறார். "இந்த வெற்றியின் காரணமாக யாரும் உட்கார்ந்துவிடக்கூடாது. இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி பாராளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றியடைய வேண்டும்" (பாஜக எப்படி வெல்கிறது? பிரசாந்த் ஜா). சுருக்கமாக, இந்தியா முழுவதிலும் பாஜக கொடி பறக்க வேண்டும். பேசுவதற்கு சுலபமாகத் தெரியலாம். 2026 நம் இலக்கு என்று கூறுவது போல் அல்ல இது. ஆனால், இதையனைத்தையும் கட்சியின் தேசியத் தலைவராக இருந்து பெரும்பான்மையான மாநிலங்களில் அமித் ஷா நடத்திக் காட்டியுள்ளார்.
அமித் ஷாவின் பதவிக்காலத்தில் பாஜக, தேர்தல் வெற்றிகளில் உச்சத்தில் இருந்திருக்கிறது. உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜார்கண்ட், அசாம். திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து என பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது.
தேசியத் தலைவர் எனும் பதவியை அமித் ஷா தனது செயல்பாடுகளினால் கிடைத்த வெற்றிகளின் மூலம் முன்னெப்போதையும்விட அதிகாரமிக்கதாக மாற்றுகிறார். குறிப்பு: ஆர்எஸ்எஸ் அழுத்தங்களையும் தாண்டி.
இப்படிப்பட்டவர் வகித்த பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டுமென்றால் அவர் முன்னவரை விட வலிமையானவராக இருக்க வேண்டும் அல்லது அவரது செயல்பாடுகளில் குறுக்கே நிற்காதவராக இருக்க வேண்டும். இப்படிச் சொல்லலாம்.. கட்சியை மறுகட்டமைப்பு செய்யவோ, மறுவரைறை செய்யவோ தேவையில்லை. அமித் ஷா உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தினால் போதும். இத்தகைய சூழலில்தான் அமித் ஷாவுக்கு மாற்றான தேசியத் தலைவர் யார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. துப்பாக்கியை யாரிடம் கொடுப்பது?
ஜே பி நட்டா.. அமித் ஷாவைப் போல் தடாலடிக்குச் சொந்தக்காரர் அல்ல. அமித் ஷாவின் ஆளுமைக்கு முற்றிலும் நேரெதினாரவர். மென்மையான அணுகுமுறையைக் கொண்டவர். மக்களிடம் மோடி - அமித் ஷா அளவுக்குப் பெயர் பெற்றவர் அல்ல என்றாலும்கூட, நிர்வாகத்திறனுக்காக கட்சியினரால் வெகுவாகப் பாரட்டப்பட்டவர். அவர் தேசியத்தலைவராகப் பொறுப்பேற்றப்பின் பல்வேறு விமர்சனங்கள் அவரைச் சுற்றிலும் எழுந்தன. நட்டா கட்சியின் போக்கினைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக, மோ-ஷாவின் உத்தரவுகளை செயல்படுத்துபவராகவே இருக்கிறார் என்ற பார்வை இருந்தது. உதாரணத்திற்கு, தமிழக பாஜகவினரின் செய்தியாளர் சந்திப்பு அல்லது அறிக்கைகளைக் கொண்டே இதைப் புரிந்து கொள்ள முடியும். அமித் ஷா என்பார்கள்,மோடி என்பார்கள்.. நட்டா எனும் வார்த்தை எப்போதாவதுதான் வரும். அதுவும் நட்டா தமிழ்நாட்டிற்கு வரும்போது வரும்.
நட்டாவும் சாதாரணமானவர் அல்ல. 2019 ஆம் ஆண்டே செயல் தலைவராகப் பொறுப்பேற்றாலும் கூட, 2020 முதல் 2025 வரை ஏறத்தாழ பாஜகவை 25 தேர்தல்களில் வழிநடத்தியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, 27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் பெற்ற வெற்றியைச் சுட்டலாம். உண்மையாகவே, மோடி எனும் பிராண்டிலும் அமித் ஷா எனும் செயலின் பின்னும் நட்டா மறக்கப்பட்டார். ஆனால், இது எதுவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல.
சரி. கதைக்கு வருவோம். பாஜகவின் தேசியத் தலைவராக நட்டாவின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. பின் மக்களவைத் தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சியின் தேசியத் தலைவராக நட்டா நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கேள்வி அடுத்த தலைவர் யாராக இருக்கலாம்?