Model image chatgpt
சிறப்புக் களம்

முடிவுக்கு வரும் ‘மராட்டிய கர்ஜனை'.. சிவசேனாவின் வளர்ச்சியும் சரிவும்.. ஒரு பார்வை!

1966ஆம் ஆண்டு, ஜூன் 19ஆம் தேதி தனது நண்பர் மாதவ் மெஹ்ரே உதவியுடன் ’சிவசேனா’ எனும் கட்சியை பால் தாக்கரே தொடங்கினார். தொடக்கத்தில் சிவசேனா என்பது, ‘அரசியல் கட்சியல்ல, சிவாஜி மகாராஜாவின் படை’ என பால் தாக்கரே அறிவித்தார்.

PT WEB

கட்டுரையாளர்: போத்தி ராஜ்

பல்வேறு மாநிலங்களில் வலிமையாக வேர்களைப் பரப்பி வளர்ந்த சிவசேனா கட்சி இன்று அதைத் தொடங்கிய குடும்பத்தினரால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும்கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு ஏன் வந்தது, சிவேசனா என்ற பெயர் தாக்கரே குடும்பத்திலிருந்து பறிக்கப்பட்டு, தொடர்பற்றவர்களாக்கிவிட்டது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

சிவசேனாவின் அடையாளம்

“நம்முடைய மாநிலமாக இருந்தும் நமக்கு இங்கே எதுவுமே இல்லை. காலையில் தேநீர் குடிக்க வேண்டுமானால், பாலை ஒரு மாநிலத்துக்காரனிடமும், தேயிலையையும் சர்க்கரையையும் இன்னொரு மாநிலத்துக்காரரின் கடையில் வாங்க வேண்டும். ஓட்டலுக்குப் போனால், கன்னடரின் ஓட்டலாக இருக்கிறது. இதையெல்லாம் முடித்துக்கொண்டு அலுவலகத்திற்குப் போனால், அங்கே நமக்கு மேலே மலையாளியோ, தமிழனோ இருக்கிறார்கள்” - இனவாதத்தை உசுப்பேற்றும், உணர்ச்சிகளைக் கொப்பளிக்கும் பால் தாக்கரேயின் பேச்சுதான் 1960களில் சிவேசனா கட்சிக்கு அடையாளத்தைக் கொடுத்து, வளரச் செய்தது.

‘தீவிர இந்துத்துவா’, ‘மராட்டியம், மராட்டிய மக்களுக்கே’, ‘முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு’ ஆகியவற்றைத் தீவிரமாக ஒலிக்கச் செய்து மராட்டியத்தில் வளர்ந்த கட்சிதான் சிவசேனா. அதிரடியான அரசியல் நிலைப்பாடு, சரவெடிப் பேச்சு, அடிதடி ஆகியவைதான் சிவசேனா கட்சியின் அடையாளங்கள். சிவசேனா கட்சியை நிறுவியவரும், மறைந்த தலைவருமான பாலசாஹேப் தாக்கரே உயிரோடு இருக்கும்வரை சிவசேனாவின் கர்ஜனை மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் உரக்க ஒலித்தது. ஆட்சியில் பங்கு கேட்காமல், எதிர்க்கட்சியாக இருந்தே மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் ‘அரசியல் சாணக்கியராக’ பால்தாக்கரே இருந்தார்.

சினிமாவில் வரும் அதிரடி சண்டைக் காட்சிகளைப் போன்றும், பல்வேறு திருப்பங்களுடன்தான், சவால்களை முறியடித்து வளர்ந்ததுதான் சிவசேனா கட்சி. அந்தக் கட்சியின் தலைவராக இருந்து மறைந்த பால் தாக்கரே, ‘காட்ஃபாதர்’ போன்றுதான் அன்றைய காலகட்டத்தில் மாநிலத்தில் பார்க்கப்பட்டார்.

ஆனால், காலத்தின் கட்டாயம் சிவசேனா அழிவின் முகத்துவாரத்தை நோக்கிச் செல்கிறது. பல்வேறு மாநிலங்களில் வலிமையாக வேர்களைப் பரப்பி வளர்ந்த சிவசேனா கட்சி இன்று அதைத் தொடங்கிய குடும்பத்தினரால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும்கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு ஏன் வந்தது, சிவேசனா என்ற பெயர் தாக்கரே குடும்பத்திலிருந்து பறிக்கப்பட்டு, தொடர்பற்றவர்களாக்கிவிட்டது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

கார்டூனிஸ்ட் அரசியல்வாதியான கதை

1926ஆம் ஆண்டு பிறந்த பால் தாக்கரே, தந்தை கேசவ் சீதாராம் தாக்கரேயின் கருத்துகளால் செதுக்கப்பட்டார். ஒருங்கிணைந்த மராட்டிய இயக்கத்தின் முன்னணி தலைவராக சீதாராம் தாக்கரே இருந்ததால், அவரிடம் இருந்து அரசியல் பாலபாடத்தை பால் தாக்கரே சிறுவயதிலேயே பெற்றார். மும்பையில் வெளிவரும் ‘தி ப்ரீ பிரஸ் ஜர்னல்’ நாளேட்டில் கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சமணிடம் உதவியாளராக பால் தாக்கரே பணியாற்றினார். “மராட்டிய மண்ணில் மராட்டிய மக்களுக்கு உரிய மரியாதை இல்லை, பிரதிநிதித்துவம் இல்லை, மும்பையில் மராட்டியர்கள் 43 சதவீதம் இருந்தபோதிலும் வணிகம் குஜராத்திகள் கையிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரப் பணியில் தென் மாநிலத்தவர்கள் அதிகமாக இருந்தது” பால் தாக்கரேவுக்கு பெரிய மனகொந்தளிப்பைக் கொடுத்தது.

இதையடுத்து, பணியிலிருந்து விலகி ‘மார்மிக்’ எனும் கார்ட்டூன் வார இதழை தனது சகோதரர் உதவியுடன் பால் தாக்கரே தொடங்கினார். அதில், மராட்டிய மக்களுக்கான முக்கியத்துவத்தையும், மும்பையில் வேறு மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராகவும், மராத்தியர்களின் வேலையின்மை பற்றியும், பால் தாக்கரே பிரசாரம் செய்தார். மராட்டியர்களிடம் அப்போது மண்ணின் மைந்தர்கள் சிந்தனை குறைவாக இருந்தநிலையில், அதை உணர்ச்சிப்பூர்வமாக்கி, தூண்டிவிட்டவர் பால்தாக்கரே. 1966ஆம் ஆண்டு, ஜூன் 19ஆம் தேதி தனது நண்பர் மாதவ் மெஹ்ரே உதவியுடன் ’சிவசேனா’ எனும் கட்சியை பால் தாக்கரே தொடங்கினார். தொடக்கத்தில் சிவசேனா என்பது, ‘அரசியல் கட்சியல்ல, சிவாஜி மகாராஜாவின் படை’ என பால் தாக்கரே அறிவித்தார்.

இதையும் படிக்க: அடுத்த இலக்கு ‘பாப் எல் மன்தீப்’ நீரிணை! உலக எண்ணெய் வர்த்தகத்தை முடக்க ஈரான் திட்டம்?

அடிதடி, அதிரடி அரசியல்

சிவசேனா கட்சி தொடங்கியபின்பு, ‘மராட்டியம் மண்ணின் மைந்தர்களுக்கே’ என்ற கோஷத்தை பால் தாக்கரே வலுவாக வைத்தார். மும்பையில் குஜராத்தியர்கள் மற்றும் தென் மாநிலத்தவர்கள் மீதும், அவர்களின் கடைகள், உணவகங்கள் மீதும் சிவசேனா கட்சியினர்கள் வெறித்தாக்குதல் நடத்தி, சொந்த மாநிலத்துக்குச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். இதனால் மும்பைக்குப் பிழைக்கச் சென்ற தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், குஜராத்திகள் பலர் மீண்டும் சொந்த மாநிலம் சென்றனர், சிலர் பிழைப்புக்காக சிவசேனா அட்டூழியங்களைத் தாங்கி அங்கேயே தங்கினர். தீவிர இந்துத்துவா கொள்கையில் பிடிப்புடன் இருந்த பால் தாக்கரே, கம்யூனிஸ்ட் கட்சியினரை அறவே வெறுத்தார். அவர்களை ஒழிப்பதுதான் என் கடமை என்று தனது ’மார்மிக் ஏட்டில்’ கார்ட்டூனும் வரைந்தார். இதன்பின் மாநிலத்திலும், மும்பையிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான மனப்போக்கிலும், தாக்குதலிலும், சிவசேனா தொண்டர்கள் இறங்கினர்.

1970களில் தனது ‘இந்து-முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையை’ பால் தாக்கரே தீவிரப்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையில் சிவசேனா கட்சியை கொண்டு வந்தார். ‘மண்ணின் மைந்தர்கள்’ கோஷத்தை தூக்கிப் பிடித்து வேரூன்றிய சிவசேனா கட்சி, அது வலுவிழந்தபின், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும், ‘தீவிர இந்துத்துவா’ சித்தாந்தத்தையும் கையில் எடுத்து அதன் வேர்களை ஆழமாக பரந்து விரியச் செய்தது.

“நான் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானவன் அல்ல, இந்தியாவில் வசித்துக்கொண்டு நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களை மட்டுமே தேசத் துரோகிகளாகக் கருதி அவர்களுக்கு எதிராக இருக்கிறேன்” என வெளிப்படையாகவே பால் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.

1975ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலையை வெளிப்படையாக பால் தாக்கரே ஆதரித்தார், 1977 பொதுத் தேர்தலிலும், 1980 பொதுத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா ஆதரவு அளித்தது, ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை.

இதையும் படிக்க: சிவன் கோயிலா.. கல்லறையா? எழுந்த சர்ச்சைகள்.. பாய்ந்த வழக்குகள்.. தாஜ்மஹாலைச் சுற்றி நடந்தது என்ன?

பாஜகவுடன் முதல்முறை கூட்டணி

தீவிர இந்துத்துவா கொள்கையுடன் இருந்த சிவசேனா கட்சி, இயல்பாகவே வலதுசாரி சிந்தனை, தீவிர தேசியவாதம், இந்துத்துவா சிந்தனை கொண்ட பாஜக பக்கம் ஈர்க்கப்பட்டது. இரு கட்சிகளும் சேர்ந்து 1984ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக கூட்டணி அமைத்தன, சிவசேனா பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. 1990-க்குப் பிறகு சிவசேனா கட்சிக்கு ஏறுமுகம்தான். 1992-இல் பாபர் மசூதி இடிப்புக்குப்பின், 1993-இல் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இந்த நேரத்தில், பால் தாக்கரே தனது அனல் கொப்பளிக்கும் பேச்சால், முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசினார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில், மும்பையே பற்றி எரிந்தது. மும்பை பற்றி எரிந்த தீயில் சிவசேனா கட்சியும் வளர்ந்தது, மக்கள் மனதில் சிவசேனா கட்சி என்றாலே, ‘ஒருவிதமான அச்சம், பயம் கலந்த மரியாதை வளர்ந்தது’. அதிலும் ‘நெற்றியில் நீண்ட திலகம், புலிப்படம் படம் செங்காவித் துண்டு’ கண்டாலே பயத்தோடு கூடிய வெறுப்பும் மக்களிடம் உருவாகியது.

கிங்மேக்கர் பால்தாக்கரே

1995ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி ஓரளவு இடங்களைப் பிடித்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், பால் தாக்கரே முதல்வராகவில்லை, அவர் ஆட்சி அதிகாரத்துக்கு வெளியிலிருந்து செல்வாக்கு செலுத்துபவராகவே தொடர்ந்தார். பால்தாக்கரேயின் இந்த அரசியல் சாணக்கியத்தனம்தான் சிவசேனா கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இதைத் தவறவிட்டதுதான் இன்று சிவசேனா அழிவுக்கும் காரணமாக இருக்கிறது. அதன்பின் 1990கள் முதல் 2009ஆம் ஆண்டுவரை நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்களில் சிவசேனா கட்சி சராசரியாக 15 முதல் 19 சதவீத வாக்குகளுடன் 50 முதல் 75 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தில் அமராமல் எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவை அமரவைத்து, பால்தாக்கரே ’கிங்மேக்கராகவே’ இருந்தார். தேசிய அரசியலிலும் சிவசேனா பங்கேற்று, பாஜக ஆட்சியில் சிவசேனா எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களாக்கி தனது அதிகாரத்தை பால் தாக்கரே வலுவாக்கினார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானிலிருந்து விடுதலை! ‘பலுசிஸ்தான் தனி தேசம்’ அங்கீகரிக்கப்படுமா? இந்தியா, சீனா நிலை என்ன?

சிவசேனா கட்சிக்குள் பிளவு

2005ஆம் ஆண்டு சிவசேனா கட்சிக்குள் முதல்முறையாக பிளவுகள் ஏற்பட்டன. முன்னாள் முதல்வர் நாராயண் ராணேவுக்கும், பால்தாக்கரேவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் கட்சியைவிட்டு விலகினார். அதே ஆண்டு, பால் தாக்கரேயின் அடுத்த வாரிசு என்று கூறப்பட்ட சகோதரரின் மகன் ராஜ் தாக்கரேவும் கட்சியைவிட்டு வெளியேறி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியைத் தொடங்கினார். இந்த இருவரின் வெளியேற்றவும் கட்சிக்குள் சுற்று சலசலப்பை ஏற்படுத்தின.

உத்தவ் தாக்கரே, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே

உத்தவ் தாக்கரேயின் கீழ் தலைமை

புகைப்படக் கலைஞராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு அரசியலில் பெரிதாக ஈடுபாடில்லை. ஆனால், அவரின் பெரியப்பா மகன் ராஜ் தாக்கரே தனது தந்தையுடன் இணைந்து அரசியல் செய்ததையும், அவரின் வளர்ச்சியும் உறுத்தலாக இருந்தது. இதனால், மெல்ல உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு அரசியல் பாலபாடத்துக்கு தயாராகினார். சிவசேனாவுக்குள் உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், ராஜ்தாக்கரே வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது. பால் தாக்கரே முதுமையின் காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாததால், அவரின் மகன் உத்தவ் தாக்கரே 2004ஆம் ஆண்டு சிவசேனா தலைவராகப் பொறுப்பேற்றார். 2012ஆம் ஆண்டு, நவம்பர் 17ஆம் தேதி பால் தாக்கரே மறைவுக்குப்பின் கட்சிப் பொறுப்பையே முழுநேரமாக ஏற்றார்.

பால்தாக்கரே மறைவுக்குப்பின் சிவசேனா

பால்தாக்கரே மறைவுக்குப்பின், உத்தவ் தாக்கரேயின் முழுமையான கட்டுப்பாட்டில் சிவசேனா கட்சி இருந்ததா என்றால், தந்தையின் பாதையைப் பின்தொடர்ந்து உத்தவ் முடிவெடுத்திருந்தால், நிச்சயம் கட்சி கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஏக்நாத் ஷிண்டே என்ற ஒரு கலகலக்காரர் உருவாகியிருக்கமாட்டார். உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சி மாநிலத்தில் இரு சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்தாலும், அதன் வாக்குவங்கி, அந்த 19 சதவீதத்திற்குக்கீழ் குறையவில்லை. மக்களவைத் தேர்தலிலும் சிவசேனா நிலை அவ்வாறே இருந்தது. சிவசேனா கட்சி வலுவாகத்தான் இருந்தது, ஆனால், அதை நடத்தும் தலைமைதான் வலுவாக இல்லை என்ற கருத்து உருவாகத் தொடங்கியது. பால்தாக்கரேயின் ஆளுமை, அதிகாரம், நிர்வாகத் திறமை, அதிரடியான அரசியல் செய்யும் திறமை, தடாலடிப் பேச்சு ஆகியவை ஏதும் உத்தவ் தாக்கரேயிடம் இல்லை என சிவசேனா தொண்டர்களே ஆதங்கமடைந்தனர். சிவசேனா எனும் கட்சியை சுயும்புவாக வளர்த்தால், பழுத்த அரசியல் அனுபவத்தை பால் தாக்கரே பெற்றிருந்தார். ஆனால், வாரிசு அடிப்படையில் கிடைத்த தலைவர் பதவியில் உத்தவ் தாக்கரே வந்ததால், கட்சிக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசலையும், பாஜகவின் அரசியல் தந்திரத்தையும், தொடக்கத்திலேயே அடையாளம் காண முடியவில்லை.

உத்தவ், ஏக்நாத்

இந்தக் கருத்து, கட்சித் தலைவர்களுக்கும் இருந்து வந்தது, ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் குழப்பத்தை ஏற்படுத்தியபோது, சிவசேனா முன்னாள் எம்எல்ஏ குலாப்ராவ் பாட்டீல் கூறுகையில், “உத்தவ் தனது தந்தையைப்போல வெளிப்படையாகப் பேசுபவர் அல்ல, கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களால்கூட அவரது மனதில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்தக் கிளர்ச்சி ஒரேநாளில் நடக்கவில்லை. எங்கள் கட்சித் தலைமை எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்ற உணர்வு வளர்ந்து வந்து அதனால் ஏற்பட்டது” என்றார்.

பால் தாக்கரேவுடன் பணியாற்றிய சில மூத்த சிவசேனா தலைவர்களும், உத்தவுக்கு கட்சியை வழிநடத்தும் திறன் இல்லை என்று நம்பினர்.

இதையும் படிக்க: சிறப்புக்கட்டுரை | அடுத்த ஐன்ஸ்டீன்.. 12 வயதில் குட்டி விமானம்.. யார் இந்த சப்ரினா பாஸ்ட்டர்ஸ்கி?

உத்தவின் தவறான முடிவு

2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. ஆட்சி அமைப்பதில் இரு கட்சியினருக்கும் ஏற்பட்ட மனக் குழப்பத்தால் பாஜகவுடனான உறவைத் துண்டித்த உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ‘மகா விகாஸ் அகாதி’ என்ற கூட்டணியை அமைக்க முடிவு செய்தார். இது சிவசேனா கட்சியை, அழிவுப் பாதைக்கு தள்ளும் முடிவாக இருக்கும் என அப்போது அவர் உணரவில்லை.

1980களில் இருந்து சிவசேனாவில் தீவிர தொண்டராக இருந்து, எம்எல்ஏவாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, மகாவிகாஸ் அகாதி ஆட்சியில் முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று நம்பி இருந்தார். ஏனென்றால், தாக்கரே குடும்பத்தினர் யாரும் நேரடி அரசியலுக்கு வந்ததில்லை என்பதால், அதற்கான காய்களை ஷிண்டே நகர்த்தினார். ஆனால், அரசின் ஸ்திரத்தன்மைக்கு உத்தவ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று என்சிபி தலைவர் சரத் பவார் வலியுறுத்தியதால், உத்தவ் தாக்ரே முதல்வராக பதவி ஏற்றார். தாக்கரே குடும்பத்தில் முதல்முறையாக நேரடி ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற முதல் நபராக உத்தவ் தாக்கரே இருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே, மோடி, அமித்ஷா

ஷிண்டே-பாஜக கைகோர்ப்பு

உத்தவ் முதலமைச்சரான நாள் முதலே, ஷிண்டே அவரைக் கவிழ்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தார். தேர்தல் வெற்றிக்குப்பின் தங்களைக் கழற்றிவிட்ட சிவசேனாவை உடைக்க, பாஜகவும் காத்திருந்தபோது, ஷிண்டேயின் திட்டம் அறிந்து அவருக்கு ‘தேவையான உதவிகளை’ வழங்கியது.

சிவசேனாவில் குழப்பம் விளைவித்து 40 எம்எல்ஏக்களை பிரித்த ஷிண்டே, தனது பிரிவுதான் ’உண்மையான’ சிவசேனா என்று கூறிக்கொண்டு, கட்சியின் சின்னத்தைக் கைப்பற்றினார். இப்போது சிவசேனாவிலிருந்து தாக்கரேக்களை முற்றிலும் அகற்றத் திட்டமிட்டு வருகிறார்.

இதையும் படிக்க: சிறப்புக்கட்டுரை |டேட்டா சென்டருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு? எதற்காக நீர் தேவை? சவால்கள் என்ன?

சிவசேனா சரிவுக்குக் காரணம்

கட்சியின் தலைவர் மற்றும் மாநில முதல்வர் என்ற தனது பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு செயல்பட உத்தவ் தாக்கரே தவறிவிட்டார். ஷிண்டே கட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவில்லை, மாறாக, கட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா எப்போதுமே ஒரு நிலப்பிரபுத்துவ கட்சியாக இருந்தது. ஜனநாயகத்தின் மீதும், உள்கட்சித் தேர்தல் மீதும் அந்தக் கட்சிக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. அதனால்தான், பால்தாக்கரே மறைவுக்கு முன்பே, தலைவர் பதவிக்கு அவரின் மகன் உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டார். இப்போது உத்தவ் தாக்கரேயைப் போலவே அவரின் மகன், ஆதித்யாவும் அடிமட்ட மக்களிடமிருந்து முற்றிலும் விலகி, உயர் தர அரசியலில் ஈடுபட்டுள்ளார். சிவசேனா தொண்டர்களால் இதைத் தொடக்கத்திலேயே உணர முடிந்தது, ஆனால், ஒரு கட்சி அதன் தொண்டர்களின் தோள்களில்தான் நிற்கிறது என்பதை உத்தவ் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். உத்தவின் தலைமைப் பாணி, அவரது தந்தையின் தலைமையை நம்பியிருந்த பலருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

சித்தாந்தங்களில் குழப்பம், மாற்றம்

பால் தாக்கரே தனது கட்சியின் கொள்கை என்ன, சித்தாந்தங்கள் என்ன என்பதில் தீவிரமாக இருந்தார். அதனால், தீர்க்கமாக முடிவு எடுத்து, பாஜகவின் பக்கமே நிற்கத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை ஒருகாலத்தில் ஆதரித்தாலும், தீவிர இந்துத்துவாவை கையில் எடுத்தபின், தனது பாதையை மாற்றி, பாஜக பக்கம் செல்லத் தொடங்கினார் பால் தாக்கரே. அதனால்தான் அவரின் காலம்வரை பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் எந்தவிதமான உரசல் இல்லாமல் சென்றது.

ஆனால், உத்தவ் தாக்கரே, தனது தந்தை பால்தாக்கரே கடைப்பிடித்த தீவிரக் கொள்கைகளில் உத்தவ் சமரசம் செய்துவிட்டார் என்றுதான் கூற முடியும். காங்கிரஸ், என்சிபியுடன் கூட்டணி வைத்தபோதே இந்தக் கருத்து விதைக்கப்பட்டுவிட்டது. தீவிர இந்துத்துவா, தீவிர தேசியவாதம், மராட்டிய பற்று, காங்கிரஸ், என்சிபி எதிர்ப்பு ஆகியவற்றைச் சொல்லி வளர்ந்த சிவசேனா, தனது கொள்கைகளை சமரசம் செய்துகொண்டு அதிகாரத்துக்காக, காங்கிரஸ், என்சிபியுடன் சேர்ந்ததைத் தொண்டர்கள் ஏற்கவில்லை. சித்தாந்த ரீதியாக ஏற்பட்ட விலகல், குழப்பம் ஆகியவை சிவசேனா தனது சரிவுக்கு தானே குழிவெட்டிக்கொள்ளச் செய்தது. இன்று பால் தாக்கரேயின் அரசியல்வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட உத்தவ் தாக்கரே, தனது தந்தை உருவாக்கிய சிவசேனா கட்சியையும், சின்னத்தையும்கூட காப்பாற்ற முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். சிவசேனாவிலிருந்து தாக்கரே குடும்பத்தை அழித்தொழிக்கும் வேலையில் பாஜகவும், ஷிண்டேவும் இறங்கிவிட்டன. உத்தவ் சிவசேனா கட்சியிலிருந்து, 9 மக்களவை எம்.பி.க்களில் 6 எம்.பி.க்கள் ஷிண்டே சிவேனாவுக்குச் சென்றுவிட்டனர். இப்படியே சென்றால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மனதிலிருந்து உத்தவ் சிவசேனா துடைத்தெறியப்படும். எந்த மராட்டிய மக்களின் உரிமையைக் காப்பாற்ற ஆரம்பிக்கப்பட்டதோ, அதே மக்களால் விரைவில் தாக்கரே குடும்பத்தினரும், உத்தவ் சிவசேனாவும் மறக்கடிக்கப்படும் நிலை வந்துவிட்டது.