யானை குட்டி
யானை குட்டி PT
சிறப்புக் களம்

குட்டி யானையை குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வி; முதுமலை யானைகள் முகாமில் சேர்ப்பு!

PT WEB

கோவையில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 3 மாத வயதுடைய குட்டி யானை முதுமலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குட்டி யானை தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பகுதி அருகே உள்ள கோவனூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி அளவில் தாயை பிரிந்த நிலையில் ஊருக்குள் வந்த, பிறந்த சுமார் 3 மாதங்களே ஆன குட்டி யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டது.

யானையை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை குட்டி யானை தனித்துவிடப்பட்ட அதே பகுதியில் யானை கூட்டம் ஒன்று இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். பெரும் முயற்சிக்குப் பிறகு அன்றைய தினம் மாலை சுமார் 6 மணி அளவில் குட்டி யானை அந்த கூட்டத்துடன் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டது. வனத்துறையினர் குட்டி யானையை கண்காணிக்க பணியில் ஈடுபட்ட பொழுது ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் குட்டி தனியாக விடப்பட்டிருந்தது.

மீண்டும் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் இரண்டாவது முறையாக மேலும் ஒரு யானை கூட்டத்துடன் சேர்த்தனர். யானை கூட்டம் குட்டியை அழைத்து சென்ற நிலையில், மீண்டும் அது தனித்து விடப்பட்டது. அதன் பிறகு பல கட்டங்களாக யானை கூட்டத்துடன் குட்டியை சேர்ப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இறுதியில் வனத்துறையினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு குட்டி யானையை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வந்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக வனத்துறையினர் காத்திருந்த நிலையில், யானை குட்டிக்கு தேவையான உணவுகளை வழங்கி, கோவையில் வைத்து பராமரித்து வந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு அதற்கான உத்தரவு கிடைத்த நிலையில், குட்டி யானை மேல் பராமரிப்பிற்காக முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. புதன் கிழமை அதிகாலை 4 மணி அளவில் கோவையிலிருந்து லாரியில் ஏற்றப்பட்ட குட்டி யானை சுமார் 10 மணியளவில் தெப்பக்காடு வந்தடைந்தது.

குட்டி யானைக்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட அறைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதற்குள் விடப்பட்டது. வன கால்நடை மருத்துவர் குட்டி யானையின் உடல் நிலையை பரிசோதனை செய்தார். ஏற்கனவே சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானையும் தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு குட்டிகளையும் அருகருகே உள்ள அறையில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.

தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் உள்ள இரண்டு குட்டி யானைகளையும் பராமரிக்க 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு குட்டி யானைகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யானைகள் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே, குட்டிகள் இரண்டும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் இரண்டு குட்டிகளும் தனித்தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சிக்காக அழைத்து வரப்படுகின்றன.