எம்.ஆர்.ராதா புதிய தலைமுறை
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா - 6 | கவர்னர், முதலமைச்சர் பதவி வேண்டாம்! – எம்.ஆர்.ராதா என்னும் கலகக்காரன்!

பெரியாரின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா இறுதிவரை பெரியாரைப் பின்பற்றுபவராகவே வாழ்ந்தார். பெரியாரிடம் கருத்து மாறுபாடு கொண்டு பலர் அவரை விட்டுப் பிரிந்தபோதும் இறுதிவரை அவரது தலைமையை ஏற்றுக் கொண்டவராகவே வாழ்ந்தார்.

சுகுணா திவாகர்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடக வாழ்க்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். எம்.ஆர்.ராதாவின் சினிமா வாழ்க்கை குறித்தும் அவருடைய தனித்த சிந்தனை இயல்பு குறித்தும் பார்ப்போம்.

ஏற்கெனவே சொன்னதைப்போல் 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். சினிமா வாழ்க்கையைக் குறிப்பிடும்போது 'ரிட்டயர்டு லைப்' என்றே குறிப்பிட்டார். படங்களின் வெற்றி விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. காரணம் கேட்டால் ' வியாபார ரீதியாக வசூலைக் குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே' என்றார்.

1966இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்க மாட்டேன்' என்று மறுத்து விட்டார்.

ராதாவின் நாடகங்களில் புகழ் பெற்றது 'இழந்த காதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சமயங்களில் அப்பாத்திரத்தில் வேறு பல நடிகர்கள் நடித்தபோது மக்கள் அதை ஏற்கவில்லை. ராதாதான் நடிக்க வேண்டுமென்று கலகம் கூட செய்திருக்கின்றனர். அந்நாடகத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படமாகத் தயாரிக்க எண்னி ஜெகதீஷ் வேடத்தில் கே.பி.காமாட்சி என்னும் நடிகரை நடிக்க ஒப்பந்தம் செய்தார். இதைக் கேள்விப்பட்டு கோபப்பட்ட ராதா 'என்.எஸ்.கே.வைச் சுட்டே தீருவேன்' என்று துப்பாக்கியுடன் அலைந்திருக்கிறார். என்.எஸ்.கே.வே ராதாவை நேரில் சந்தித்து 'உன்னை வைத்து நான் வேலை வாங்க முடியுமா? காமாட்சி என்றால் நான் விருப்பப்படி வேலை வாங்குவேன்' என்று சமாதானம் சொல்லவும்தான் சமாதானம் ஆனாராம் ராதா.

’பாகப்பிரிவினை’ திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்ட போது சுனில் தத் 'சிவாஜியின் பாத்திரத்தில் திலீப்குமார் நடிக்கிறார். அவரால் சிவாஜியை விடவும் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் ராதாவின் பாத்திரத்தில்தான் ராதாவை விட வேறு யாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது" என்றார். தெலுங்கில் அப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டபோதும் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர். ஆனால் பாகப்பிரிவினை படத்தை இந்திய அளவில் மூன்றாவது சிறந்த படமாக தேர்ந்தெடுத்த இந்திய அரசு விருது வழங்கும் விழாவிற்கு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது. எம்.ஆர்.ராதா மட்டும் அழைக்கப்படவில்லை. அதை அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்.கே.டி.கே.தங்கமணி கண்டித்திருக்கிறார்.

தந்தை பெரியார்

பெரியாரின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா இறுதிவரை பெரியாரைப் பின்பற்றுபவராகவே வாழ்ந்தார். பெரியாரிடம் கருத்து மாறுபாடு கொண்டு பலர் அவரை விட்டுப் பிரிந்தபோதும் இறுதிவரை அவரது தலைமையை ஏற்றுக் கொண்டவராகவே வாழ்ந்தார்.

அண்ணா பெரியாரிடம் கருத்து மாறுபாடு கொண்டு அவரை விட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று நூலை எழுதி அவரிடமே கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். அதேபோல் குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தபோதும் பெரியாருக்கு ஆதரவாக நின்றார்.

கம்யூனிசத் தத்துவத்தில் ஈர்ப்பு கொண்ட ராதா கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆதரித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது ஜீவாவிற்கு அடைக்கலம் தந்தார். அவரை மொட்டையடிக்க வைத்து பட்டை அணிவித்து சாமியார் என்று போலீஸை ஏமாற்றியிருக்கிறார். அப்போது ஜீவா தரும் கடிதங்களை ஒரு இடத்தில் ரகசியமாகக் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார். அந்தக் கடிதங்கள் புரட்சிகரத் தகவல் அடங்கிய ரகசியக் கடிதங்களென்றே ராதா கருதி வந்தார். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்திருக்கிறது, அவை ஜீவா தன் காதலி பத்மாவதிக்கு எழுதிய கடிதங்கள் என்று.

எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கில் ராதாவிற்கு ஏழரையாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன. ஆனால் நாலரை ஆண்டுகளிலேயே அவரை விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்து விட்டது. இது தெரியாத ராதா, அன்று காலையில் வழக்கம்போல குளிப்பதற்காக துண்டு, வாளி சகிதம் கிளம்பியிருக்கிறார். சிறை அதிகாரி வந்து , "உங்களை விடுதலை செய்தாச்சு, கிளம்பலாம்' என்றிருக்கிறார். ஆனால் ராதாவோ, கொஞ்சமும் பதட்டப்படாமல் 'குளித்துவிட்டுத்தான் கிளம்புவேன்' என்று பதிலளித்திருக்கிறார்.

மிசா காலத்தின்போது யாரை எதற்குக் கைது செய்கிறோம் என்று தெரிவிக்க வேண்டிய அவசியமில்லாத சூழல் நிலவியது. அப்படித்தான் ராதாவையும் கைது செய்திருந்தார்கள். சிறையிலே நேர்காணலுக்கு உறவினர்கள் வரும்போது பின்னாலிருந்து அதிகாரிகள் குறிப்பெடுப்பது வழக்கம். ராதாவின் மனைவி அவரைக் காண வந்திருக்கிறார்.

'என்ன மாமா, நிறைய பேர் விடுதலையாகி வெளியே வர்றாங்க. நீங்களும் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வரலாமே' என்றிருக்கிறார்.

உடனே ராதா, 'என்ன எழுதிக் கொடுப்பது?' என்று கேட்டிருக்கிறார்.

'இனிமேல் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே' என்று மனைவியும் பதிலளிக்க,

உடனே ராதா, 'இதோ பாரம்மா. என்னையேன் கைது செய்திருக்காங்கன்னு எனக்கும் தெரியாது. இங்க இருக்கிறவங்களுக்கும் தெரியாது. கைது செய்தவங்களுக்கும் தெரியாது. அதுதான் மிசா. நான் பாட்டுக்குத் தூங்கிக் கொண்டிருந்தேன். பிடிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நான் செய்த ஒரே தப்பு அதுதான். அப்ப நான் இனிமே வாழ்நாள் முழுதும் தூங்காமலே இருக்கணுமா?' என்றிருக்கிறார். குறிப்பெடுத்துக் கொண்டிருந்த அதிகாரியும் சிரித்து விட்டாராம்.

ராதாவின் உணர்வுகளையும் இயல்பையும் வாழ்முறையையும் புரிந்து கொள்ள வேறெதையும் விட அவரது வார்த்தைகளே துணை செய்யும் என்பதால் அவரது நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...

ஒரு முறை ராதாவிடம் பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர், மாடியிலிருந்து இறங்கிய அவரின் மனைவியைப் புகைப்படமெடுக்க முயன்றிருக்கிறார். உடனே ராதா, 'நான்தான் சினிமாக்காரன், பப்ளிக் புராபர்ட்டி. என் பொண்டாட்டியை ஏன் படமெடுக்கிறே' என்று மறுத்து விட்டாராம்.

இனி அவரது சில நேர்காணல்களிலிருந்து...

கேள்வி : இப்போது நடிகர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் வழக்கம் அதிகமாகி விட்டதே. இதுபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?

ராதா : பொன்னாடை போர்த்த வேண்டியது பிணத்திற்குத்தான்.

கே : நீங்கள் எதில் அதிகம் இன்பம் காண்கிறீர்கள்?

ராதா : எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை எதிர்த்து ஒரு தோற்றத்தைத் தருவதுதான் என்னுடைய பழக்கம்.

கே : உங்களுக்குப் பாடத் தெரியுமா?

ராதா : நன்றாகத் தெரியும். தியாகராஜர் கீர்த்தனைகளில் 200 பாடல்களுக்கு மெட்டுடன் பாடத் தெரியும். ஆனால் பாடல்களினால்தான் நாடகம் நடக்கும் என்பதை மாற்றவே நான் பாடுவதில்லை.

- தென்றல் திரை - 01.02.1956

கே : நீங்கள் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை?

ராதா : நடிகர்கள் தேயிலைத் தோட்டக் கூலிகள் போல நடத்தப்பட்டனர். போதிய சவுகரியங்கள் இல்லை. முடிவாக நான் படவுலகை அடியோடு வெறுக்க மாடர்ன் தியேட்டர்தான் காரணம். ஒரு நடிகன் நடிகையோடு பேசினால் கட்டி வைத்து அடிப்பார்கள். இந்நிலை எனக்கு மிக்க வெறுப்பையும் அவமானத்தையும் அளித்தது.

- சினிமா மெயில் 20.01.1957

சில வாசகர் கேள்விகளும் ராதாவின் பதில்களும்

கே : திரையில் தங்களைப் பார்த்தால் பயந்து நடுங்குகிறேன். நேரில் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் என் அச்சம் நீங்குமா, அதிகமாகுமா?

ராதா : தங்கள் மனதின் பலவீனத்தைப் பொறுத்தது.

கே : நேரு, பெரியார், ராஜாஜி, அண்ணாத்துரை இவர்களில் பொதுப்படையான பொருளைக் கருத்தாழத்தோடு பேசுபவர்களை வரிசைப்படுத்தவும்.

ராதா : பெரியார்தான். வரிசை தேவையில்லை.

கே : கட்சி விட்டுக் கட்சி மாறும் 'பச்சோந்திகள்' பற்றித் தங்கள் கருத்து என்ன?

ராதா : பச்சோந்தி

கே : நான் எங்கள் ஊரில் தங்கள் பெயரில் மன்றம் அமைக்க முயற்சி செய்தேன். ஆனால் எங்கள் ஊர்த் திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவர் அவர் பெயரில் மன்றம் அமைவதை விரும்ப மாட்டார் என்கிறார். இது உண்மைதானா?

ராதா : உண்மைதான்.

கே : எல்லாப் படங்களிலும் வில்லனாகவும் கொடூரமாகவும் காட்சியளிக்கிறீர்களே, இல்லத்தில் மனைவி மக்களோடும் சுற்றத்தோடும் எப்படிப் பழகுவீர்கள் என்பதை அறிய ஆவல்.

ராதா : அது தங்களுக்குத் தேவையில்லை.

கே : அண்ணே, உங்களை எல்லோரும் கஞ்சன்னு சொல்றாங்களே, உண்மையா?

ராதா : திருடன், முடிச்சவிழ்க்கி, அயோக்கியன் ஆகியவர்களுக்கு நான் கஞ்சன்.

கே : தாங்கள் இந்த நாட்டின் முதன்மந்திரியானால்..?

ராதா : இதுமாதிரிக் கேள்வி கேட்பவர்களைத் தூக்கில் போட சட்டம் கொண்டு வருவேன்.

- தமிழ்நாடு - ஜனவரி 1961.

----

மேலும், ராதா ஒரு நேர்காணலில்தான் பாய்ஸ் நாடகக் குழுவில் இருந்தபோது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கிறார். தான் ஒரு gay என்று ஒப்புக்கொண்ட தமிழ் ஆளுமை ராதாதான். தமிழ்க் கலைவெளியில் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட எத்தனையோ கலைஞர்கள் உண்டு. ஆனால், நடிப்பாற்றலோடு அர்ப்பணிப்புமிக்க அரசியல் உணர்வும் மாபெரும் கலகக்காரனாகவும் வாழ்ந்தவர் எம்.ஆர்.ராதா.

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா 5 - நடிகவேள் எம். ஆர். ராதா.. தமிழ் சினிமாவின் ஒரே ஹீரோ!

(சினிமா தொடரும்..)