திராவிட சினிமாக்களின் எழுச்சியும் திராவிட அரசியலும் தமிழ்ச்சூழலில் பார்ப்பன அதிகாரத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்தது. இந்திய அளவில் இன்றும் பார்ப்பன அதிகாரம் ஒரு தீர்மானகர சக்தியாக இருப்பதும் தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஆதிக்கம் மட்டுப்பட்டிருந்தாலும் இடைநிலைச் சாதிகளின் அதிகாரம் பட்டியலின வகுப்பினர் மீதான ஒடுக்குமுறையாக உருவெடுத்திருப்பதும் உண்மைதான். அதேநேரம், எப்படி பொதுவெளியில் பார்ப்பன அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதோ, அதேபோல் தமிழ் சினிமாக்களிலும் பார்ப்பன மேலாண்மை என்பது அடக்கியே வாசிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, மறுபுறம் தமிழ் சினிமாக்களில் பார்ப்பன மேலாண்மை என்பது கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறது.
என்றபோதும் பார்ப்பன இயக்குநர்கள் மற்றும் பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்குநர்களுக்கு இதுகுறித்த ஆதங்கம் நீண்டநெடுநாட்களாகவே இருக்கிறது. நேரடியாக சாதியை ஆதரித்தோ, பார்ப்பன ஆதிக்கத்தை ஆதரித்தோ அவர்களால் தமிழ் சினிமாக்களில் காட்சிகள் வைக்கமுடியவில்லை என்றதும் இடஒதுக்கீட்டை எதிர்த்தும் திராவிட இயக்கத்தை எதிர்மறையாகச் சித்தரித்தும் காட்சிகளை அமைக்கின்றனர்.
கே.பாலசந்தர், திராவிட சினிமா எழுச்சியுடன் இயங்கிய காலத்திலேயே திரைப்படங்களை இயக்கியவர். ஒரு மேடை நாடகத்தை வீடியோ கேமரா மூலம் படம்பிடித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் பாலசந்தரின் திரைப்படங்கள் இருக்கும் என்றாலும் பாலசந்தரின் திரைப்படங்களுக்கு என்று மேட்டுக்குடியிலும் நடுத்தர வர்க்கத்திலும் கணிசமான ரசிகர்கள் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பாலசந்தர் தன் பார்ப்பனிய அரசியலைத் திரைப்படங்களில் காட்டத் தவறுவதில்லை.
‘உன்னால் முடியும் தம்பி’ என்ற பாலசந்தரின் திரைப்படத்தின் நாயகி பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் அவரே ‘ஸ்கூலில் எதுக்கு சாதி கேட்கிறாங்க? சாதி சர்டிபிகேட் கூடாது’ என்றரீதியில்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவார். பாலசந்தர் ‘ஜாதிமல்லி’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் எடுத்து ஜாதியை குறுக்குக் கோடுகள் வழியாக அடித்திருப்பார். ஆனால் எதார்த்தத்தில் பாலசந்தர், தன் சொந்த சாதிச்சங்கமான பிராமணர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவ்வப்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் திராவிட அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் தன் திரைப்படங்களில் பாலசந்தர் காட்சிகளை வைக்கத் தவறுவதில்லை. அதைத் தொடர்ந்து மணிரத்னமும் ‘இருவர்’, ‘ஆயுத எழுத்து’ ஆகிய திரைப்படங்களில் திராவிட அரசியல்வாதிகளை எதிர்மறையாகச் சித்தரித்தார்.
பாலசந்தர் திரைப்படங்கள் மீதான கவர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம், பாலியல் மீறல்களைச் சித்தரிக்கும் அவர் திரைப்படங்கள் பெண்ணிய பாவனை காட்டுவதுதான். பாலியல் மீறல்களைப் பாலசந்தரின் திரைப்படங்கள் சித்தரித்தாலும் இறுதியில் அவை ’ஆண்களுக்காக குழந்தைகள் பெற்றுத்தருவதே பெண்களின் கடமை’ என்பதாகவே முடியும். உதாரணம் : சிந்து பைரவி, கல்கி.
பாலசந்தரின் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் விசுவின் திரைப்படங்களும் நுட்பமாக பார்ப்பனியத்தை முன்வைத்தவையே. முழுவதும் பார்ப்பனக் கதாபாத்திரங்களைக் கொண்ட தமிழ் சினிமாக்கள் பெரியளவில் வெற்றி பெறுவதில்லை என்பதால் பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதி பாத்திரங்களை வைத்தே இத்தகைய கருத்துகள் முன்வைக்கப்படும். அப்படியான ஒரு பாத்திரம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ அம்மையப்ப முதலியார். விசு ஏற்றிருக்கும் அந்த பாத்திரம் ‘1967க்குப் பிறகு நான் பேண்ட் போடுறதையே நிறுத்திட்டேன்’ என்று வசனம் பேசும். 1967 – காங்கிரஸ் வீழ்ந்து தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆண்டு.
அம்மையப்ப முதலியாரின் மகள் சரோஜினி (இளவரசி) பீட்டர் என்னும் கிறிஸ்துவ இளைஞனைக் (திலீப்) காதலித்து மணம் புரிகிறார். கிறிஸ்துவ குடும்பம் என்றால் நவீன ஆடைகள் அணியலாம், மேற்கத்திய இசையைக் கேட்டபடி நடனம் ஆடலாம் என்பது சரோஜினியின் எண்ணம். ஆனால் கிறிஸ்துவராக இருந்தாலும் தன் மனைவி தழைய தழைய புடவை கட்டி, தலையில் பூ வைத்து, நெற்றியில் குங்குமம் அணிந்திருக்க வேண்டும் என்பது பீட்டரின் எண்ணம். இப்படி தமிழ்ப்பண்பாடு/ இந்தியப் பண்பாடு என்றாலே அது இந்துப் பண்பாடுதான் என்று சித்தரித்ததுதான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.
பாடலாசிரியர் வாலியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்னும் திரைப்படம். காயத்ரி என்னும் பார்ப்பனப் பெண் (லெட்சுமி) ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது அவர் தந்தை சங்கர சாஸ்திரி (பூர்ணம் விஸ்வநாதன்)யின் விருப்பம். ஆனால் இட ஒதுக்கீட்டின் காரணமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியாது என்பதால் கருப்பாயி என்று பெயரை மாற்றி பட்டியலினப் பெண்ணாக நடித்து கலெக்டர் ஆகிறார் காயத்ரி. ஊர் மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றாலும் உண்மை தெரிந்து காயத்ரி தண்டிக்கப்படுகிறார். ‘இட ஒதுக்கீட்டால் தகுதி வாய்ந்த பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இட ஒதுக்கீடே கூடாது’ என்பதுதான் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ திரைப்படத்தின் அடிப்படை.
கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருக்கமானவர்தான் கவிஞர் வாலி. கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவை விட்டு வெளியேறியபிறகு எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களை அதிகம் எழுதியவர் வாலியே. அதேபோல் கலைஞர் கவியரங்கங்களிலும் அவரைப் புகழ்ந்து கவிதைகள் பாடியிருக்கிறார். ஆனாலும் அடிப்படையில் பார்ப்பனரான அவரால், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை மறுத்து அவர் எழுதிய கதைதான் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்னும் திரைப்படமாக மாறியது.
இந்த திரைப்படத்தை திராவிடர் கழகம் எதிர்த்தது. எக்ஸ்ரே கருணாகரன், எரிமலை ரத்தினம், சக்திதாசன் போன்ற பட்டியலின சிந்தனையாளர்கள், பட்டியலின தலைவர்கள் எதிர்த்துப் போராடினர். ஆனால் இதையெல்லாம் மீறி இந்த திரைப்படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1989ல் தேசிய விருதுகள் பெற்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், இந்த திரைப்படத்தை பாராட்டி பேச மறுத்ததுடன் அந்த திரைப்படத்துக்கு தன் கையால் விருது வழங்குவதையும் தவிர்த்தார். ’தற்போதுள்ள பாலம் பழுதடைந்துள்ளதால் மாற்றுப்பாதையைப் பயன்படுத்துகிறோம். அதற்காக, அந்த மாற்றுப்பாதையே நிரந்தரமாகிவிடக் கூடாது’ என்று அந்த மேடையில் கமல்ஹாசன் இட ஒதுக்கீட்டை விமர்சித்துப் பேசினார்.
இரு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான காதலை முன்வைத்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் தமிழ்த் திரைப்படங்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் பார்ப்பனராகச் சித்தரிக்கப்படுவது நீண்டகால வழக்கமாக இருந்தது. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’ என்று ஏராளமான படங்களைச் சொல்லலாம். பள்ளிகளின் ஆண்டுவிழாக்களில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நாடகங்களிலும் இந்து என்றாலே பார்ப்பனர் என்று சித்தரிக்கப்படுவதைக் காணலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும்வகையில் நடுவில் பாரதமாதாவும் சுற்றிலும் மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதில் இஸ்லாமியர் குல்லா அணிந்தும் கிறிஸ்துவர் சிலுவை அணிந்தும் இந்து பூணூல் அணிந்தும் சித்தரிக்கப்பட்டிருப்பார். குல்லாவும் சிலுவையும் மத அடையாளங்கள். ஆனால் பூணூல் சாதி அடையாளம். இந்து என்றாலே பார்ப்பனர் என்ற சித்தரிப்பே பள்ளி விழாக்கள் முதல் திரைப்படங்கள் வரை நிலவியது. தமிழ் சினிமாக்களில் பார்ப்பன வில்லன் கதாபாத்திரமே கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமாக்களில் பார்ப்பன ஆதிக்கத்தை ஆதரிக்கும் போக்கு குறைவு என்றாலும் அவர்களை எதிர்மறையாக சித்தரிக்கும் போக்கும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் பார்ப்பனர்கள் கிண்டலடிக்கப்பட்டாலும் அவர்கள் யாருக்கும் தீங்கிழைக்காத அப்பாவிகளாகவே சித்தரிக்கப்பட்டார்கள். பார்ப்பன இயக்குநர்களே நேரடியாக பார்ப்பன கதாபாத்திரங்கள் மூலம் பார்ப்பன ஆதிக்க ஆதரவை முன்வைக்க முடியாதபோது, அதைச் சாத்தியப்படுத்தியவர் பார்ப்பனரல்லாத இயக்குநரான ஷங்கர்.
வடமொழிச்சொற்களைத் தவிர்த்து தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தியது திராவிட சினிமா, தமிழில் பெயர் மாற்றிக்கொள்வதை முன்மொழிந்தது திராவிட இயக்க அரசியல் என்றால் சங்கர் என்ற பெயரை ஷங்கர் என்று வடமொழியில் தன் பெயரை அடையாளப் படுத்திக்கொண்டதே, ஷங்கர் யார் என்று அடையாளப்படுத்தியது. ஷங்கரின் முதல் படமான ‘ஜென்டில்மேன்’ திரைப்படமே, வெளிப்படையாக பார்ப்பன ஆதிக்க ஆதரவை முன்வைத்தது.
இட ஒதுக்கீடு மற்றும் ஊழலின் காரணமாக, நன்றாகப் படிக்கும் திறமை வாய்ந்த பார்ப்பன மாணவர்களால் மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் சேர முடியவில்லை என்று சித்தரித்தது ‘ஜென்டில்மேன்’ திரைப்படம். தொடர்ந்து ஷங்கரின் திரைப்படங்களில் நிர்வாகத் திறன் இல்லாதவர்களாகவும் ஊழலை மேற்கொள்பவர்களாகவும் பார்ப்பனர் அல்லாதவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். இதை எதிர்கொள்ள நாயகன் சட்டவிரோத வழிமுறைகளைக் கையாள்வது நியாயப்படுத்தப்பட்டது. ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் நாயகன் கிச்சா, தன் சட்டவிரோதச் செயல்களை நீதிமன்றத்தின் முன் நியாயப்படுத்திப் பேசுவார். ‘பராசக்தி’ திரைப்படத்தில் கலைஞர் கையாண்ட உத்தி, ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ‘பராசக்தி’ முன்வைத்த கருத்தியல் மதிப்பீடுகளுக்கு எதிராக ஷங்கரால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
’இந்தியன்’ திரைப்படம் ஊழல் மட்டுமே இந்தியாவின் ஒரே பிரச்னை என்று சித்தரித்து, வன்முறையின் மூலம் அதைச் சரிசெய்ய முடியும் என்று பார்வையாளர்களை நம்பவைத்தது. ஷங்கர் திரைப்பட நாயகர்களின் எல்லா சட்டவிரோதச் செயல்களையும் மக்கள் வரவேற்று கருத்து சொல்வதாகவே பெரும்பாலான ஷங்கர் திரைப்படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அமைந்தன. இது நிலவும் பொதுப்புத்தியை உறுதி செய்வதுடன் அதை மீண்டும் பொதுப்புத்தியாகவும் மறு உருவாக்கம் செய்தது.
ஷங்கரின் பார்ப்பன ஆதரவு அரசியலின் உச்சம் ‘அந்நியன்’ திரைப்படம். அந்த திரைப்படத்தில் பொறுப்பற்றவர்களாகவும் ஊழல்வாதிகளாகவும் பார்ப்பனர் அல்லாதாரே முழுக்க சித்தரிக்கப்பட்டனர். சமூகப்பொறுப்பு கொண்ட ஒரே ஒருவர், பார்ப்பன இளைஞரான அம்பி என்கிற ரூல்ஸ் ராமானுஜம். வழக்கறிஞரான ரூல்ஸ் ராமானுஜத்தின் கண்முன்னே பார்ப்பனர் அல்லாதார் சட்டவிதிகளை மீறிக்கொண்டே இருக்கின்றனர். அதை அம்பியால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அப்போதுதான் ‘கருடபுராணம்’ என்னும் கற்பனையான பார்ப்பனப் பிரதியில் சொல்லப்படும் தண்டனைமுறைகளை நிறைவேற்றும் ‘அந்நியன்’ அம்பியிடமிருந்து அவதரிக்கிறான். அவன் பொறுப்பற்ற, ஊழல்வாதிகளான பார்ப்பனர் அல்லாதாரை, சமஸ்கிருதச் சொல்லாடல்களைக் கொண்ட ’கருடபுராண’த்தின் வழி நின்று தண்டிக்கிறான். இன்னொருபுறம் ‘அய்யங்கார் வீட்டு அழகி’யான தன் உறவுக்காரப் பெண்ணைக் காதலிக்க ‘ரெமோ’வும் அம்பியிடம் இருந்து அவதரிக்கிறான்.
ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கர்நாடக இசைக்கச்சேரியில் பாடவைக்க விதிமுறைகளை மீறும்போது ‘கருடபுராணம்’ குறுக்கிடுவதில்லை. அந்த விதிமீறலைச் செய்ய அம்பியும் சம்மதிக்கிறான். ஆனால் குடித்துவிட்டு பார்க் பெஞ்சில் படுத்து தூங்கும் பார்ப்பனரல்லாதாரின் ‘குற்றத்தை’ அந்நியனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ‘மனுதர்மத்தைவிட சிறந்த சட்டநூல் உண்டா?’ என்று எழுதியது ஆர்.எஸ்.எஸ் இதழான ‘ஆர்கனைசர்’. அதேபோல் அரசியல் சட்டத்தையும்விட மேலானதாக கருடபுராணத்தை முன்வைத்தார் ஷங்கர்.
இறுதியில் தன் சட்டமீறலையும் வன்முறையையும் ஒப்புக்கொள்ளும் அம்பி சிறைப்படுத்தப்படுகிறான். என்றாலும் இறுதிக்காட்சியில் அந்நியன் இன்னும் அழியவில்லை என்றே முடிகிறது ஷங்கரின் திரைப்படம். இறுதியில் அரசியல் சட்டத்தை வெல்கிறது ஆரிய கருடபுராணம்.
எப்படி மணிரத்னம் சினிமாக்களின் அழகியலும் உயர்தர தொழில்நுட்பமும் பார்வையாளர்களைக் கவர்ந்ததோ, அதேபோல் ஷங்கர் திரைப்படங்களின் பிரமாண்டமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. முழுக்க கண்ணாடியால் ஆன பேருந்து, நூற்றுக்கணக்கான கார்கள் கொளுத்தப்படுதல், மலையில் ஓவியங்கள் வரையப்படுவது, ஆயிரக்கணக்கான கலைஞர்கள் நிரம்பிய பாடல்காட்சிகள் என்ற மலைக்க வைக்கும் பிரமாண்டமும் இரட்டை அர்த்த வசனங்களும் கிளுகிளுப்பான காட்சிகளும் பார்ப்பனியத்தைப் பார்வையாளர்களுக்குள் திணிக்க ஷங்கருக்கு உதவின.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க:
(சினிமா தொடரும்...)