Model Image Google Gemeni
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா - 11 | திராவிட சினிமாக்கள் : சாதனைகள், பிரச்னைகள், தாக்கங்கள்!

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பெண் தெய்வங்களிடம் கேள்வி கேட்கும் காட்சிகள் திராவிட சினிமாக்களில் இடம்பெற்றன.

சுகுணா திவாகர்

திராவிட சினிமாக்களின் பொதுத்தன்மை

திராவிட சினிமாக்களின் பொதுத்தன்மை குறித்து தொகுத்துக்கொள்வோம்.

* சமஸ்கிருத மயமாக்கம், புராணக்கதைகளின் ஆதிக்கம், பார்ப்பன மேலாதிக்கம் நிறைந்த தமிழ் சினிமாக்களின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் திராவிட சினிமாக்கள் மாற்றியமைத்தன. தமிழ்மொழியை முன்னிலைப்படுத்துவது, சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய சமூகச்சீர்திருத்தக் கருத்துகளையும் இந்திய தேசிய எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ஆகியவற்றையும் முன்வைத்து மக்களிடம் கருத்தியல்ரீதியாக கொண்டு சென்றதுடன் வணிகரீதியான வெற்றிகளையும் அடைந்தது திராவிட சினிமாக்களின் சாதனை.

* பாடல்கள் நிறைந்த, அதுவும் வடமொழிச்சொற்கள் நிரம்பிய பாடல்கள் கொண்ட தமிழ் சினிமாக்களை வசனங்களின் சினிமாக்களாக மாற்றியது திராவிட சினிமா. இந்த வசனங்களே அவர்களின் சமூகச்சீர்திருத்த கருத்துகளைப் பரப்ப உதவின.

* பெரியார், அண்ணா, தியாகராயர், மணியம்மை, பன்னீர்செல்வம் போன்ற திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் திராவிட அடையாளங்கள் திராவிட சினிமாக்களின் மூலம் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதியப்பட்டன. மறுபுறம் ராஜாஜி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாக கிண்டலடிக்கப்பட்டனர்.

பேரறிஞர் அண்ணா - பெரியார்

* 'ராஜா ராணி' திரைப்படங்களில் சமகால அரசியல், வசனங்களாகவும் காட்சிகளாகவும் முன்வைக்கப்பட்டன. அவை தணிக்கை நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த செயல்தந்திரமாக விளங்கியது.

* 'ராஜா ராணி' திரைப்படங்கள் மன்னராட்சியை மையமாக கொண்ட கதைக்களங்களாக இருந்தாலும் அவை மக்களாட்சியை வலியுறுத்துபவையாக இருந்தன.

* கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றைப் போலவே பண்ணையார் எதிர்ப்பு என்பதும் திராவிட சினிமாக்களின் அடிப்படைகளாக இருந்தன. அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க எழுத்தாளர்களின் இலக்கியங்களிலும் இந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வெளிப்பட்டது.

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும் திராவிட மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளை வலியுறுத்தும் பாடல்கள் திராவிட சினிமாக்களில் இடம்பெற்றன.

இவற்றைத் தாண்டி, அதிகம் பேசப்படாத சில விஷயங்கள் குறித்து கவனம் குவிப்போம்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பெண் தெய்வங்களிடம் கேள்வி கேட்கும் காட்சிகள் திராவிட சினிமாக்களில் இடம்பெற்றன. பாரதிதாசனின் ‘பொன்முடி’, அண்ணாவின் ‘வேலைக்காரி’, கலைஞரின் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்களில் காளி மற்றும் பராசக்தி சிலை முன்பு இந்த விமர்சனக் காட்சிகள் அமைக்கப்பட்டன.

இந்து ஆண் பெருந்தெய்வங்களைப் போல் அல்லாமல் பெண் தெய்வங்கள் என்பவை எளிதாக அடித்தட்டு மக்களுடன் தொடர்புகொண்டவையாக நம்பப்பட்டன. அப்படிப்பட்ட பெண் தெய்வங்கள் முன் வைக்கப்பட்ட கேள்விகள், அடித்தட்டு மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்தன.

பராசக்தி

தமிழ் இலக்கியங்களில் நிறைந்திருந்த பார்ப்பனச் சார்பு, மூடநம்பிக்கை, ஆணாதிக்கம் ஆகியவற்றைப் பெரியார் கடுமையாக விமர்சித்தார். அதேநேரத்தில் வேதம், வேள்வி, பார்ப்பன மேலாதிக்கம் ஆகியவற்றை மறுத்து உருவான சமணம், பௌத்தம் போன்ற அவைதீக மரபின் அடிப்படையிலான இலக்கியங்களை வைதீக இலக்கியங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் ஆய்வுமுறையை நவீன ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புடைய மயிலை சீனி வேங்கடசாமி ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 90களுக்குப் பிறகு தொ.பரமசிவன், பொ.வேல்சாமி, ராஜ் கௌதமன் போன்ற பலரும் இந்த அவைதீக இலக்கியங்களின் பால் கவனம் குவித்தனர். ’அயோத்திதாசர் சிந்தனைகள்’ தொகுப்புகள் வெளியானபிறகு இந்த பார்வை பலம் பெற்றது எனலாம்.

கலைஞர் முன்வைத்த தமிழ் இலக்கியங்கள்!

இத்தகைய ஆய்வுமுறைகள் அறிமுகமாவதற்கு முன்பே கலைஞர் தன் படைப்புகளில் முன்வைத்த தமிழ் இலக்கியங்கள் அவைதீக இலக்கியங்களான பௌத்த, சமண இலக்கியங்கள் என்பது வியப்புக்குரியது. பௌத்த இலக்கியமான ‘குண்டலகேசி’யை அடிப்படையாக வைத்து கலைஞர் ‘மந்திரிகுமாரி’யை உருவாக்கினார். சமண இலக்கியமான ‘சிலப்பதிகார’த்தை ‘பூம்புகார்’-ஆக மாற்றினார். சமண இலக்கியமாக முன்னிறுத்தப்படும் திருக்குறளை, பெரியார் காலம் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து முன்னிலைப்படுத்திவருகிறது. திராவிட சினிமாக்களில் தொடர்ச்சியாகத் திருக்குறள் கொண்டாடப்படுவதைக் கவனிக்கலாம்.

கலைஞர் கருணாநிதி

‘திராவிட இயக்கம் என்பது பார்ப்பன ஆதிக்கத்தை மட்டும் விமர்சித்தது. இடைநிலை சாதி ஆதிக்கத்தை விமர்சிக்கவில்லை’ என்பது திராவிட இயக்கத்தின்மீது முன்வைக்கப்படும் விமர்சனம். ஆனால், திராவிட சினிமாக்கள் பார்ப்பனர்களுக்கு இணையாக முதலியார்கள் உள்ளிட்ட சாதிகளின் சாதிவெறி, நிலப்பிரபுத்துவ மனநிலை, ஆணாதிக்கம், சுரண்டல் ஆகியவற்றையும் விமர்சித்தது.

 அண்ணாவின் ‘வேலைக்காரி’ வேதாச்சல முதலியாரையே விமர்சித்தது. கலைஞரின் ’மந்திரிகுமாரி’யில் பார்ப்பன ராஜகுரு வில்லன் என்றால் பராசக்தியில் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த கயவர்கள் சித்திரிக்கப்பட்டனர்.  மன்னராட்சியில் புறக்கணிக்கப்பட்ட மீனவர் சமுதாயம் குறித்து கலைஞரின் ‘குறவஞ்சி’ பேசியது. கலைஞர் கதை, வசனத்தில் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ திரைப்படம் இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கத்தையும் பட்டியலின விடுதலையையும் பேசியது.

சட்டபூர்வ முயற்சிகளைச் சாதித்துக் காட்டிய திராவிட அரசுகள்!

* திராவிட சினிமாக்கள் என்பவை வெறுமனே கலைச்செயற்பாடு என்னும் தளத்துக்குள் மட்டும் அடங்கவில்லை. ‘பராசக்தி’யில் பேசப்பட்ட கைரிக்‌ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் பேசப்பட்ட ‘குடிசைகள் இல்லாத தேசம்’ ஆகியவற்றுக்கான சட்டபூர்வ முயற்சிகளைத் திராவிட அரசுகள் சாதித்துக்காட்டின.

 • கலைஞரின் திரைப்படங்கள் தொடர்ந்து சட்டவாதத்தை முன்வைப்பவையாக இருந்தன. ‘பராசக்தி’ திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சி அதற்குப் பின் வந்த பல திரைப்படங்களின் நீதிமன்றக் காட்சிகளுக்கான வரைவிலக்கணத்தை உருவாக்கித் தந்தது. ‘மனோகரா’ திரைப்படத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ‘மனோகரா’ தன் தந்தையைப் பார்த்து பேசும் வசனங்களும் ‘பராசக்தி’ நீதிமன்றக் காட்சியின் இன்னொரு வடிவமே.  ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ’நீதிக்கு தண்டனை’,  ’நியாயத்தராசு’ என்று கலைஞரின் சில படத்தலைப்புகளும் சட்டவாதத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்தன.

இப்படி திராவிட சினிமாக்களின் சாதனைகளைப் பேசும் அதேநேரம், திராவிட சினிமாக்களின் பிரச்னைகள் குறித்தும் விமர்சனபூர்வமாக அணுகவேண்டும்.

சாதி எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழியுரிமை, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைத்த திராவிட சினிமாக்கள் அதேநேரம் ஆண்மைய சினிமாக்களாகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணியச் சிந்தனைகளுடன் ஒப்பிடத்தக்கவை பெரியாரின் சிந்தனைகள்!

உலகளவில் உள்ள பெண்ணியச் சிந்தனைகளுடன் ஒப்பிடத்தக்கவை பெரியாரின் சிந்தனைகள். அவர் வெறுமனே பெண் கல்வி, விதவைகள் மறுமணம், குழந்தை திருமண எதிர்ப்பு, பெண்களுக்கு சொத்துரிமை என்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஆணாதிக்கத்துக்கும் திருமணம் என்னும் ஏற்பாட்டுக்கும் குடும்ப அமைப்புக்கும் உள்ள  தொடர்பு குறித்தும் விமர்சித்தார். இதுதான் பெரியாரை ராஜாராம் மோகன்ராய், பாரதியார் போன்ற சீர்திருத்தவாதிகளிடம் இருந்து தனித்துக்காட்டியது.

’ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் மற்றவர்கள் தலையிட உரிமையில்லை’ என்றார் பெரியார். ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கற்பு இல்லையென்றால் கற்பு என்பதே தேவையில்லை’ என்றார். ‘ஆண்கள் இரண்டு ஆசை நாயகிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகன்களை வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். ‘நிர்ப்பந்திக்கப்பட்ட திருமண முறையைப் பெண்கள் மீறுவது தவறில்லை’ என்றார். ‘திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்’ என்றார். ‘குழந்தை பெற்றுக்கொள்வதும் பெற்றுக்கொள்ளாததும் பெண்களின் உரிமை. பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமில்லை’ என்றார். ‘பெண்கள் விடுதலை பெற கர்ப்பப்பையை அகற்றினாலும் தவறில்லை’ என்றார்.

தந்தை பெரியார்

1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டுக்கான அழைப்பில் ‘தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார். மூன்றாவது தஞ்சை மாவட்ட  சுயமரியாதை மாநாட்டில் 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 50 வயதான ஓர் ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரது கணவர் கட்டாய உறவு கொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.

பெரியாரின் தீவிர பெண்ணியச் சிந்தனைகளில் இருந்து மாறுபட்டது திராவிட முன்னேற்றக்கழகத்தின் அணுகுமுறை.

பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான சொத்துரிமை ஆகியவற்றை தி.மு.க வலியுறுத்தினாலும் அது குடும்ப அமைப்பு, கற்பு குறித்த பெரியாரின் சிந்தனைகளில் இருந்து விலகி நின்றது. தமிழ்ப் பெருமிதத்தை முன்வைத்த தி.மு.க, குடும்ப அமைப்புக்குள் இயங்கும் கற்புடை பெண்டிரைப் போற்றியது. மனோகரனின் தாய் பத்மாவதி போன்ற ‘குடும்பப் பெண்கள்’ போற்றப்பட்டனர். குடும்ப முறைக்கு அப்பால் உள்ள பெண்கள் வில்லிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். உதாரணங்கள் மனோகரா – வசந்த சேனை, ரத்தக்கண்ணீர் – காந்தா. (’ரத்தக்கண்ணீர்’ கதையை எழுதிய திருவாரூர் தங்கராசுவும் நாயகப் பாத்திரமேற்ற எம்.ஆர்.ராதாவும் பெரியாரிஸ்ட்கள் என்றாலும்  ‘ரத்தக்கண்ணீர்’ இத்தகைய பார்வையையே கொண்டிருந்தது.)

இந்த ஆண்மையப் பார்வைகளுக்கு என்ன காரணம்?

திராவிட சினிமா ஆளுமைகளின் பட்டியலைப் பார்ப்போம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணதாசன், டி.வி.நாராயணசாமி, ராம. அரங்கண்ணல், திருவாரூர் தங்கராசு, ஏவிபி ஆசைத்தம்பி, முரசொலிமாறன், கே.ஜி.ராதாமணாளன், ஏ.கே.வேலன், எஸ்.எஸ்.தென்னரசு, ஏ.கே.வில்வம், சொர்ணம், இரா.செழியன், சுரதா.

ஒரே ஒரு பெண் பெயர்கூட இல்லை. திராவிட சினிமாக்கள் தமிழ்த் திரையுலகின் முகத்தையே மாற்றியமைத்தது என்றாலும் அது ஆண்கள் மட்டுமே நிரம்பிய கலைச்செயற்பாட்டு இயக்கமாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்மையக் கூறுகள் கொண்ட திராவிட சினிமாக்கள்!

ஆண்மையப் பார்வை கொண்டிருந்தாலும் திராவிட சினிமாக்களை முற்றிலும் ஆணாதிக்க சினிமாக்கள் என்று சொல்லிவிட முடியாது. ‘பராசக்தி’ திரைப்படத்தில் குணசேகரனுக்கு (சிவாஜி கணேசன்) சமூகச்சீர்திருத்தக் கருத்துகளைப் பயிற்றுவிப்பதே விமலா (பண்டரிபாய்) என்னும் பெண்தான். அதே ‘பராசக்தி’யில் கல்யாணியை பதுக்கல் வியாபாரி பாலியல் வன்முறை செய்ய முயல்வான். அதைத் தடுக்கும் அவன் மனைவி, ‘’உன்னை மாதிரி நானும் ஆம்பளைங்க மேல ஆசைப்படலாமா?” என்று கேட்பாள். ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்தில் திருடன் ஒருவன் தன் மனைவியை ஏமாற்றி மலையுச்சியில் இருந்து தள்ள அழைத்துச்செல்வான். அப்போதுதான் ‘வாராய் நீ வாராய்’ பாடல் ஒலிக்கும். ஆனால் பாடலின் முடிவில் திருடனை அவன் மனைவியே மலையுச்சியில் இருந்து தள்ளிவிடுவாள். இப்படி பெண்களை முதன்மைப்படுத்தும் சித்திரிப்புகளும் திராவிட சினிமாக்களில் இருந்தன.

ஆண்மையக் கூறுகள் கொண்ட திராவிட சினிமாக்கள், ஆணாதிக்க சினிமாவாக மாறியது எம்.ஜி.ஆர் சினிமாக்களில்தான். ‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை’, ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’ என்னும் ஆணாதிக்க மதிப்பீடுகளை வலியுறுத்தும் சினிமாக்களாக எம்.ஜி.ஆர் சினிமாக்கள் விளங்கின.

வில்லனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், எம்.ஜி.ஆர் என்னும் ஆண் ரட்சகர் வந்து மீட்கும் வரை காத்திருந்தனர். திராவிட இயக்கம் பெண் கல்வியை வலியுறுத்தியது. ஆனால் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் படித்த, ஆங்கிலம் பேசும், மாடர்ன் உடை அணிந்த பெண்கள் அடங்காப்பிடாரிகளாக சித்திரிக்கப்பட்டனர். அவர்களை அடக்கி, திருத்தி, அவர்களுக்குப் ‘பெண்மை’யையும் பண்பாட்டின் ‘பெருமை’யையும் உணர்த்தும் கடமையை எம்.ஜி.ஆர் செய்தார். எம்.ஜி.ஆரின் இந்த திருப்பணியை பின்னாட்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லா ஹீரோக்களும் செய்தனர்.

திராவிட சினிமாக்களின் இன்னொரு பிரச்னை!

திராவிட சினிமாக்களின் இன்னொரு பிரச்னையையும் பேச வேண்டும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதமாக சினிமாவைப் பயன்படுத்திய திராவிட இயக்கம் 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு படிப்படியாக அதன் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டது. அதற்குப்பின் மெல்ல குறைந்து ஒருகட்டத்தில் முற்றிலும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. இதில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்த ஒரே படைப்பாளி கலைஞர் மு.கருணாநிதி மட்டும்தான். 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகும் 44 ஆண்டுகள் 41 படங்களில் பங்களித்திருக்கிறார்.

80களுக்குப் பிறகு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகளில் ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள், படத்தயாரிப்பாளர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கிய, பங்களித்த திரைப்படங்களை ‘திராவிட சினிமாக்கள்’ என்றழைக்க முடியாது. அவை வெறும் வணிக சினிமாக்கள் என்று சொல்ல முடியுமே தவிர, திராவிட கருத்தியல் மதிப்பீடுகளை முன்வைத்த சினிமாக்கள் அல்ல. பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’, உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’, ’மாமன்னன்’ போன்ற சில திரைப்படங்கள் சாதி எதிர்ப்பை முன்வைத்தன.

தமிழ் சினிமாவுக்குள் வருகை புரிந்த பாரதிராஜா

திராவிட சினிமாக்கள் காலத்துக்கேற்ற வகையில் தன்னை மாற்றிக்கொள்ளாததும் அதன் தேக்கத்துக்கு காரணம். பாரதிராஜா வருகைக்குப் பின் தமிழ் சினிமா, வசனம் என்பதில் இருந்து காட்சி என்னுமிடத்துக்கு நகர்ந்தது. ஆனால் திராவிட சினிமா அப்படியான நவீன வடிவத்துக்கு நகரவில்லை. மணிவண்ணின் ‘அமைதிப்படை’, ‘தோழர் பாண்டியன்’ போன்ற திரைப்படங்கள் திராவிடக் கட்சிகள் மீதான விமர்சனத்துடன் ஓரளவு திராவிட சினிமா வடிவத்துக்குள் இருந்தன. இயக்குநர் வேலு பிரபாகரனின் ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ (திராவிடர் கழக தயாரிப்பு) ஆகிய திரைப்படங்கள் காலமாற்றத்தை உள்வாங்காத சினிமாக்களாகவே உருவாகி, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் போனது. கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசின் நிதியுதவியுடன் திராவிடர் கழகத் தயாரிப்பில், ஞானராஜசேகரன் இயக்கத்தில் உருவான ‘பெரியார்’ வாழ்க்கை வரலாற்று திரைப்படமும்கூட ஒரு சுமாரான திரைப்படம்தான்.

பாரதிராஜா

திராவிட சினிமா இயக்கம் தன்னளவில் தேங்கி மறைந்துபோனாலும் அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. குறிப்பாக சாதி, கடவுள், கோயில், பார்ப்பனர்கள், புனிதம் ஆகியவற்றை துணிச்சலுடன் கேள்வி கேட்கும் அடித்தளத்தை திராவிட சினிமாக்களே உருவாக்கித் தந்தன.

திராவிட சினிமாக்கள் செல்வாக்குடன் இருந்த காலகட்டத்தில் வெளியான ‘திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்திப்படங்களும்கூட தமிழ் பெருமை பேசும், தமிழ் அடையாளத்தை முன்வைக்கும் பக்திப்படங்களாக இருந்தனவே தவிர, சமஸ்கிருத மயமான இந்து ஆன்மிகத்தை முன்வைக்கவில்லை. அப்படி சமஸ்கிருதமயமான இந்து ஆன்மிகத்தை முன்வைத்த, ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படம் தோல்வி அடைந்தது என்றால் அதற்கு திராவிட சினிமா உருவாக்கிய உளவியல்தான் காரணம்.

இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சை ஆக்கும் பல விஷயங்கள்

புனிதங்களைக் கிண்டலடிக்கும் தன்மை, திராவிட சினிமாக்கள் அல்லாத தமிழ் சினிமாக்களிலும் இயல்பானது. ’திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்’ என்ற பாடலைப் பாடுபவரிடம் ‘அப்புறம் ஏண்டா நாயே பல்லு விளக்குறே?’ என்று கவுண்டமணி கேட்பது, இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

சமீபகாலமாக இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சை ஆக்கும் பல விஷயங்கள் பல ஆண்டுகள் தமிழ் சினிமாக்களில் இயல்பாக கிண்டலடிக்கப்பட்டவை என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று பா.ஜ.க ‘வேல் யாத்திரை’யை நடத்தியது. ஆனால் ‘சூரியன்’ திரைப்படத்தில் கந்த சஷ்டி கவச மெட்டிலேயே ‘பதினெட்டு வயது இளமனது’ என்ற விரகதாப பாடல் அமைக்கப்பட்டு, அது மக்களிடம் வரவேற்பையும் பெற்றது.

வைரமுத்து மீது பாஜக வைத்த குற்றச்சாட்டு

ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்திவிட்டார் என்று பா.ஜ.க சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் ராமநாராயணன் இயக்கிய ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ திரைப்படத்தில் கோவை சரளா ஏற்று நடித்த பாத்திரம், மறைமுகமாக ஆண்டாளைக் கிண்டலடிக்கும் திரைப்படம்தான். ‘பெருமாளு பெருமாளு’ என்ற அந்த நகைச்சுவைக் காட்சிகளை மக்கள் ஆரவாரத்துடன் ரசித்தார்கள். ’அரசு’ திரைப்படத்தில் கோயில் பணியாளராக இருக்கும் வடிவேலு அரசு வேலை கிடைத்தவுடன் ‘அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்’ என்று பார்ப்பன அர்ச்சகர் வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு கிளம்புவார். அர்ச்சகர் வேலையைவிட அரசுப்பணியே முக்கியமானது என்பது செய்தி. இப்படி திராவிட சினிமாக்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் ஆழமாக இப்போதும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.

வைரமுத்து

2006ல் வெளியான ஜனநாதனின் ‘ஈ’ திரைப்படத்துடன் அரசியல் சினிமாக்களின் இரண்டாம் அலை தொடங்குகிறது. அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர்கள் இயக்குநர் வெற்றிமாறனும் இயக்குநர் பா.இரஞ்சித்தும். இவர்களைத் தொடர்ந்து ஏராளமான இளம் இயக்குநர்கள் அரசியல் சினிமாக்களை உருவாக்கிவருகின்றனர். இவை திராவிட சினிமாக்களின் தன்மையிலிருந்து வேறுபட்டவையாகவும் திராவிட இயக்கத்தின்மீது விமர்சனங்களை முன்வைப்பவையாகவும் இருக்கின்றன என்றாலும் இவற்றுக்கு முன்னோடியாகவும் அடித்தளங்களை உருவாக்குபவையாகவும் இருப்பவை திராவிட சினிமாக்களே.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா - 10 | திராவிட சினிமாவில் அரசியல் அடையாளங்கள்!

(சினிமா தொடரும்..)