\
journalist suguna diwakar writes niram marum cinema series 10 at Dravida politics dialogues
Model ImageGoogle Gemeni

நிறம் மாறும் சினிமா - 10 | திராவிட சினிமாவில் அரசியல் அடையாளங்கள்!

திரைத்துறையைப் பொறுத்தவரை வணிகரீதியான வெற்றிதான் முக்கியம். திராவிட இயக்கத்தவரைப் போலவே கம்யூனிஸ்ட்கள் திரைத்துறையில் சில முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது வெற்றிபெறவில்லை.
Published on: 

எதிர்ப்புகளை இன்னொரு படைப்பாக மாற்றியவர் கலைஞர்!

கலைஞரைப் பொறுத்தவரை, அவரே ‘பராசக்தி’ யில் எழுதியபடி, ‘’தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை, என் பாதையில் படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன’’ என்ற வசனத்திற்கேற்ப, தன் கலைப்பணிகளுக்கு வந்த எதிர்ப்புகளையே இன்னொரு படைப்புக்கான விதையாக மாற்றிக்கொண்டார்.

’பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது ‘தினமணி கதிர்’ கடுமையாக விமர்சித்தது. ’பராசக்தி அல்ல, பரப்பிரும்மம்’ என்று கிண்டல் செய்தது. கலைஞர் உடனே ‘பரப்பிரும்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம் தடை செய்யப்பட்டால், அதை எதிர்த்து இயக்கம் கட்டுவது, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ராமாயணம்’ நாடகம் தடை செய்யப்பட்டால் அதே நாடகத்தை ‘கீமாயணம்’ என்று பெயர் மாற்றி நடத்துவது என்ற திராவிட இயக்க எதிர் – கலாசார செயற்பாடுகளின் தொடர்ச்சிதான் கலைஞரின் ‘பரப்பிரும்மம்’ நாடகம்.

Karunanithi
Karunanithipt desk

தொடர்ச்சியாகவே திராவிட சினிமாக்கள் தணிக்கை அதிகாரிகளின் கத்திரிக்கோல்களை சந்தித்து, தப்பித்து மீண்டன. கலைஞர் வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘காஞ்சித்தலைவன்’ திரைப்படத்தில் ‘கோபுரத்தின் மீது ஏறி கூவினாலும்…’ என்ற வசனத்தை தணிக்கைக்குழு நீக்கச் சொன்னது. அதற்கு தணிக்கை அதிகாரிகள் சொன்ன காரணம், ‘இந்த வசனம் ராமானுஜரை நினைவுபடுத்துகிறது, அவமானப்படுத்துகிறது’ என்பதுதான்.

முக்தி அடைவதற்காகத் தன் குரு தனக்குச் சொன்ன மந்திரத்தை, கோபுரத்தின் மீது ஏறி அனைவரும் பலன் அடையட்டும் என்று உரத்த குரலில் சொன்னவர் ராமானுஜர். அவரைத்தான் ‘காஞ்சித்தலைவன்’ வசனம் இழிவுபடுத்துகிறது என்று சம்பந்தமே இல்லாமல் காரணம் சொன்னார்கள் தணிக்கை அதிகாரிகள். எந்த ராமானுஜரை காரணம் காட்டி கலைஞர் வசனம் நீக்கப்பட்டதோ, அதே ராமானுஜர் வரலாற்றை, ‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்று தொலைக்காட்சித் தொடராக, தன் முதுமைக்காலத்தில் வசனம் தீட்டினார் கலைஞர்.

இப்படி பல தடைகளைத் திராவிட சினிமாக்கள் சந்தித்தாலும், இன்னொருபுறம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வணிகரீதியாகவும் வெற்றியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையைப் பொறுத்தவரை வணிகரீதியான வெற்றிதான் முக்கியம். திராவிட இயக்கத்தவரைப் போலவே கம்யூனிஸ்ட்கள் திரைத்துறையில் சில முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது வெற்றிபெறவில்லை.

கம்யூனிஸ்ட்களின் ஆதரவுடன் ‘பீப்பிள்’ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் தொடங்கப்பட்டது. கே.ஆர்.ராமசாமி நடிப்பில் ‘அவன் அமரன்’, ஜெமினி கணேசன் – சாவித்திரி நடிப்பில் ‘புதிய பாதை’ ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இரண்டு படங்களும் வெற்றிபெறவில்லை. ‘பாதை தெரியுது பார்’, ‘ஏழாவது மனிதன்’, ஜெயகாந்தனின் சில படங்கள் தமிழ்த் திரையுலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்தாலும் வணிகரீதியான வெற்றிகளைப் பெறவில்லை. ஆனால் திராவிட சினிமாக்களோ வணிக வெற்றி, சமூகத்தாக்கம் இரண்டையும் ஈட்டின.

கலைஞரின் வசனங்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. பாட்டுப்புத்தகங்களுடன் கலைஞர் வசனம் எழுதிய திரைப்படங்களின் வசனங்களும் புத்தகங்களாக வெளியிடப்பட்டு, பரவலாக விற்பனையாகின. ’மலைக்கள்ளன்’ வசனப்புத்தகங்கள் போலி பதிப்புகளிலும் விற்பனையாகின. ‘மலைக்கள்ளன்’ வசனப்புத்தகம் வெளியிடும் உரிமையை நான் எந்த பதிப்பகத்திற்கும் அளிக்கவில்லை’ என்று கலைஞர் ‘முரசொலி’யில் அறிவிக்கும் அளவுக்கு இந்த விற்பனை இருந்தது.

திராவிட சினிமாக்களின் மிக முக்கியமான அம்சம், திராவிட இயக்கத் தலைவர்கள், கொடி, சின்னம் போன்ற அடையாளங்களைத் திரைப்படத்தில் பதிய வைப்பது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘தீனா மூனா கானா’ என்று பாடியது தெரியும். திராவிட சினிமாக்கள் ஏதேனும் ஒரு காட்சியிலாவது தன் இயக்க அடையாளத்தின் தடம் பதிப்பது வழக்கம். இதில் கில்லாடி கலைஞர்.

தான் வசனம் எழுதிய இரண்டாவது படமான ‘அபிமன்யு’விலேயே ராஜகோபாலாச்சாரியை விமர்சித்தவர். ‘பராசக்தி’ திரைப்படத்தில் மூத்த சகோதரர் மனைவியின் தந்தை என்று பி.டி.தியாகராயர் புகைப்படம்தான் காட்டப்படும். அவரையே அப்பா என்று சகோதரர்கள் வணங்குவார்கள். அண்ணி ‘’உங்கள் அப்பாதான் தமிழ்நாட்டில் இருக்கிறாரே?” என்று கேட்பார். ‘’அவர் இப்போது எங்களைவிட்டு விலகி தூரத்தில் அல்லவா இருக்கிறார்?” என்பார்கள். இங்கு குறிப்பிடப்படுவது தந்தை பெரியார்தான். பெரியாரைவிட்டுப் பிரிந்து தி.மு.க ஆரம்பித்து (1949) மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1952-இல் வெளியான திரைப்படம் ’பராசக்தி’.

சிவாஜி கணேசனிடம் சமூகச்சீர்த்தச் சிந்தனைகளைப் பேசும் பண்டரிபாயிடம், ‘’இதையெல்லாம் யாரிடம் கற்றாய்?” என்று சிவாஜி கேட்பார். ‘’எல்லாம் அண்ணாவிடம்தான்’’ என்பார் பண்டரிபாய். இப்படி திரைப்பட வசனங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அண்ணாவைக் குறிப்பிட்ட கலைஞர் ‘காஞ்சித்தலைவன்’ என்ற தலைப்பில் திரைப்படத்தையே உருவாக்கி சமர்ப்பித்தார்.

தி.மு.க அடையாளங்களைத் திரையில் காட்டிய எம்.ஜி.ஆர்.

திராவிட இயக்க அடையாளங்கள் மட்டுமல்லாது, தனக்கு உடன்பாடான அரசியல் அடையாளங்களையும் கலைஞர் தன் திரைப்படங்களில் முன்னிலைப்படுத்தினார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜீவாவின் பெயரைச் சில பாத்திரங்களுக்கு வைத்தார். ஈழ ஆதரவு நிலைப்பாட்டில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நினைவூட்டும் விதமாக ‘வீரன் வேலுத்தம்பி’ என்னும் திரைப்படத்தை உருவாக்கினார் கலைஞர். அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தலைவர் சபாரத்தினம், சகோதர யுத்தத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டபோது ‘பாலைவன ரோஜாக்கள்’ திரைப்படத்தில், சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்துக்கு ‘சபாரத்த்தினம்’ பெயரைச் சூட்டினார் கலைஞர்.

MGR
MGRfile

தி.மு.க அடையாளங்களை வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் எம்.ஜி.ஆரின் பங்கும் முக்கியமானது. அண்ணா, கறுப்பு – சிவப்பு, உதயசூரியன், திராவிடம் போன்றவற்றை தன் படக்காட்சிகளிலும் பாடல்வரிகளிலும் இடைவிடாது நினைவூட்டினார் எம்.ஜி.ஆர். காதல் பாடலில்கூட ‘கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு’ என்ற பாடல் வரியை அமைத்தார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று தி.மு.கவை நினைவுபடுத்தினார். அதேநேரம் அண்ணாவுடன் திருவள்ளுவர், காந்தி, புத்தர் போன்ற அடையாளங்களையும் தன் படத்தில் முன்னிலைப்படுத்திய எம்.ஜி.ஆர், பெரியார் அடையாளத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்தார். பெரியாரின் நாத்திகம், பெண் விடுதலை போன்ற அடையாளங்கள் தன் வெகுஜன பிம்பத்துக்கு இடையூறாக இருக்கும் என்ற தன்னுணர்வு (Conscious) எம்.ஜி.ஆரிடம் இருந்தது.

திராவிட மற்றும் அரசியல் சினிமாக்களின் முன்னோடி ‘பராசக்தி’!

கலைஞரின் ‘பராசக்தி’, திராவிட சினிமாக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் அரசியல் சினிமாக்களுக்கும் முன்னோடி சினிமா என்று சொல்லலாம். மூன்று சகோதரர்கள், ஒரு தங்கை – நால்வரும் சூழ்நிலை காரணமாகப் பிரிந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி மீண்டும் சேர்ந்தார்கள் என்ற பாவலர் பாலசுந்தரம் கதையை, அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களையும் ஆதிக்க கருத்தியலையும் விமர்சிக்கும் அரசியல் காவியமாக மாற்றினார் கலைஞர்.

தமிழ்நாட்டில் இருந்து ரங்கூனில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், போரால் அவர்களின் வாழ்வு எப்படி சிதைக்கப்பட்டது என்பது ‘பராசக்தி’யில் பதிவு செய்யப்பட்டது. ‘’கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா, கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீர்தான் காரணம்’’ என்ற அண்ணாவின் வார்த்தைகள் வசனமாக்கப்பட்டன.

பராசக்தி
பராசக்திஎக்ஸ் தளம்

நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து உயர் நடுத்தர வர்க்க குடும்பமாக ரங்கூனில் உயர்ந்த வர்க்க நிலையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் குணசேகரனை (சிவாஜிகணேசன்) வரவேற்கும் முதல் குரல் , ‘’ஐயா சாமி, தர்மம் பண்ணுங்க’’. அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் கைரிக்‌ஷா இருந்ததை தன் திரைப்படத்தில் பதிவு செய்த கலைஞர், தான் முதலமைச்சர் ஆனதும் கைரிக்‌ஷா முறையை ஒழித்தார்.

ஜாலி என்னும் மோசடிப் பெண்ணால் ஏமாற்றப்பட்ட குணசேகரன் சென்னை நகரின் பிளாட்பாரத்தில் படுத்திருக்கிறான். அவனை எழுப்பும் போலீஸ் ‘’என்னடா முழிக்கிறே?” என்று கேட்கிறார். ‘’தூங்குறவனை எழுப்பினா முழிக்காம என்ன பண்ண முடியும்?” என்கிறான் குணசேகரன். ‘’பிக்பாக்கெட்டா?” என்ற காவலரின் கேள்விக்கு ‘’எம்ட்டி பாக்கெட்’’ என்கிறான் குணசேகரன். கலைஞரின் கூர்மையான அரசியல் பகடி இது.

தந்தையையும் கணவனையும் இழந்த கல்யாணி என்னும் இளம் விதவை ஒரு பெண்ணுடலாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். நாகரிக வேடத்தில் இருக்கும் தெருப்பொறுக்கியும் பதுக்கல் வியாபாரியும் அவளைப் பாலியல்ரீதியாகச் சுரண்டப் பார்க்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பும் கல்யாணியை, காளி கோயில் பூசாரி மீண்டும் பாலியல்ரீதியில் அணுகுகிறான். ஆணாதிக்கம், முதலாளிய வர்க்கம், பக்தி என எல்லாமும் எப்படி ஒரு பெண்ணை பாலியல்ரீதியில் சுரண்டுகின்றன என்பதை பகிரங்கப்படுத்தியது ‘பராசக்தி’.

‘’அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று 1952இல் வசனம் எழுதினார் கலைஞர். 2014இல் உருவான PK என்னும் பாலிவுட் திரைப்படம் கடவுளைக் கேள்விக்குள்ளாக்கியது. ‘பராசக்தி’யை பாலிவுட் நெருங்க 62 ஆண்டுகள் ஆயின.

’பராசக்தி’ படத்தை நினைவுகூர்ந்த இயக்குநர்கள்!

பகுத்தறிவையும் சமதர்மத்தையும் பேசும் விமலா என்னும் பெண் ‘’உன் தங்கை பாதிக்கப்பட்டபோது மட்டும்தான் உனக்கு ஏழைகளின் துன்பம் புரிந்தது. இல்லையென்றால், ஏழைகள் எப்படியிருக்கிறார்கள் என்றே உனக்குத் தெரியாது. உன் குடும்பத்தைத் தாண்டிய சமூகப் பார்வை வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறாள். ரங்கூனில் இருந்து தமிழ்நாடு வந்து தவறிவிடும் இன்னொரு சகோதரன் பிச்சைக்காரர் ஆவதுடன் பிச்சைக்காரர்கள் சங்கம் அமைக்கும், மாநாடு கூட்டி தங்கள் உரிமைகளை முன்வைக்கும் உரிமையை வலியுறுத்துகிறான்.

பா ரஞ்சித், பாரதிராஜா
பா ரஞ்சித், பாரதிராஜாPT/X Page

‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி அதற்குப்பின் வந்த தமிழ் சினிமாக்களின் முன்னுதாரணக் காட்சியாக மாறியது. ‘வாழ்க வாழ்க வாழ்கவே வளமார் எங்கள் திராவிட நாடு’ என்று தொடங்கும் ‘பராசக்தி’, ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்னும் பாடலுடன் நிறைவுபெறுகிறது.

கலைஞரின் வசனங்களும் சிவாஜி கணேசனின் நடிப்பும் ‘பராசக்தி’யைக் காலத்தால் அழியாத படைப்பாக நிலைபெறச் செய்தது. வசனங்களில் இருந்து காட்சிகளின் வலிமைக்குத் தமிழ் சினிமாவை நகர்த்திய பாரதிராஜா, தான் ‘பராசக்தி’ வசனங்களால் ஈர்க்கப்பட்டதை பதிவுசெய்கிறார். பட்டியலின சினிமா அலையை உருவாக்கிய இயக்குநர் பா.இரஞ்சித், தன் அரசியல் சினிமாக்களுக்கான உந்துதலை ‘பராசக்தி’ ஏற்படுத்தியதை நினைவுகூர்கிறார்.

இந்தத் தொடரின் முந்தையப் பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா - 9 | எம்.ஜி.ஆர்., சிவாஜி.. நாயகர்களை உருவாக்கிய கலைஞர்!

(சினிமா தொடரும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com