File shot
File shot stats age
சிறப்புக் களம்

வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்.. ஒளிரும் வண்ணங்களில் தெரியும் ஆயுட்காலம்!

Jayashree A

வானில் இரவில் தோன்றும் நட்சத்திரங்களை பார்க்கும் பொழுது வெகு அழகாக, ஆங்காங்கே ஒளிர்ந்து, வைரக்கற்களை தெளித்தாற்போல் ஜொலித்துக் கொண்டிருக்கும். இந்த நட்சத்திரங்கள் எப்படி ஜொலிக்கிறது? இதன் ஆயுட்காலம் தான் என்ன? என்பது பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

நட்சத்திரம் என்பது பிளாஸ்மா (ionized gas) வாயுவைக் கொண்டு, தனது சொந்த ஈர்ப்பு விசையால் பிரபஞ்சத்தில் (எரியும்) ஒளிரும் ஒரு பொருள். இதைத்தான் நாம் நட்சத்திரம் என்கிறோம். இதைப்போன்று எண்ணற்ற நட்சத்திரங்கள் அடங்கிய கட்டமைப்புதான் விண்மீன்கள் என்கிறோம். இவைகள்தான் பிரபஞ்சத்தை ஒளிரச் செய்கின்றன.

File shot

நட்சத்திரங்களை நாம் கூர்ந்து பார்த்தால், ஒரு சில நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், சிலவகை நட்சத்திரங்கள் ஒளி இழந்தும் சிலவை சிவப்பு மஞ்சள் நீல நிறமாகவும் காணப்படுகிறது.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? அதன் வயது தான். ஆம்.. அதன் நிறத்தைக்கொண்டு அதன் வயதை கணக்கிடலாம்..

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் சிறியது, பெரியது என்று வெவ்வேறு அளவுகள், வண்ணங்கள் மற்றும் வெப்பநிலைகளை கொண்டது. நட்சத்திரங்கள் தான் தோன்றியது முதல் இறப்பு வரை தங்கள் வாழ்நாள் முழுவதும் பல நிலைகளுக்கு உட்படுகின்றன. உங்களுக்கு தெரியுமா? சூரியன் கூட ஒரு நட்சத்திர வகையை சார்ந்தது தான்.

File shot

நட்சத்திரங்கள் அதன் மையத்தில் தனது அணுக்கள் மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுகளின் உதவியால் தனது எரியும் ஆற்றலை (வெப்பம்) உருவாக்குகிறது. நட்சத்திரங்கள் அதன் அளவுகளைப் பொருத்து, தனது வெப்பநிலைகளை வரம்பில் வைத்துள்ளது.

சரி, நட்சத்திரம் எப்படி ஒளிர்கிறது என்று பார்த்துவிட்டோம். இப்பொழுது அதன் நிறத்தை வைத்து அதன் ஆயுளைத் தெரிந்துக் கொள்ளலாம்.

கொத்து வயது (cluster Age)

நட்சத்திரங்கள் பெரும்பாலும் கொத்து கொத்தாக உருவாகின்றன. இளம் நட்சத்திரங்கள் இந்த வகையில் அடங்கும். ஒரு நட்சத்திரம் உருவாகும் பகுதி அல்லது கிளஸ்டரில் பிறந்த இந்த இளம் நட்சத்திரங்கள் ஒரே வயதைக் கொண்டதாக இருக்கும். அதன்படி இளம் நட்சத்திரங்கள் பொதுவாக பழைய நட்சத்திரங்களை விட வேகமாக சுழல்கின்றன, எனவே ஒரு நட்சத்திரத்தின் சுழற்சி அதன் காந்த செயல்பாடுகளைக் கொண்டும் அதன் வயதை தெரிந்துக் கொள்ளலாம். நட்சத்திரங்களுக்கு வயதாகும்போது, ​​​​அவை மெதுவாக சுழலத்தொடங்கும். படிப்படியாக அதன் காந்த செயல்பாடானது குறைகிறது.

File shot

ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான இளம் நட்சத்திரங்கள், பொதுவாக நீலம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். ஏனெனில், அவை மிகவும் சூடாகவும், அதிக புற ஊதா கதிர்வீச்சை வெளியிடும். அதே நேரத்தில் குளிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் தோன்றி அதிக அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடும். இந்த நட்சத்திரங்கள் வயதாகி குளிர்ச்சியடையும் போது, ​​அவை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகவும், இறுதியில் சிவப்பு நிறமாகவும் மாறும். ஏனென்றால், ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பின் வெப்பநிலையானது வயதாகும்போது குறைகிறது.

சரி இப்பொழுது அதன் நிறங்களைக்கொண்டு அதன் வயதை காணலாம்.

வெள்ளை நட்சத்திரம்:

சில நட்சத்திரங்கள் ஒளிர்வது குறைந்து பார்ப்பதற்கு வெண்மை நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம், அதன் அணுவில் இருக்கும் எரிபொருள்களை முற்றிலும் எரித்து தீர்த்துவிட்டு அளவில் சுருங்கி, குளிர்ந்து இருக்கும். இதன் குளிர்ச்சியை கணக்கிட்டு இதன் வயதை தெரிந்து கொள்ளலாம். இத்தகைய நட்சத்திரத்திற்கு ஆய்வாளார்கள் வெள்ளை குள்ளர்கள் என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும், கதிரியக்க ஐசோடோப்புகள், லித்தியத்தின் அளவினைக் கொண்டு நட்சத்திரத்தின் வயதைத் தெரிந்து கொள்ளலாம்.

நீல நட்சத்திரங்கள்:

இவை வெப்பமாகவும் அளவில் பெரிய நட்சத்திரமாகவும் இருக்கும். இவை குறுகிய ஆயுட்காலம் கொண்டது. அதாவது சில மில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கும், இவ்வகை நட்சத்திரங்கள் கண்கவர் சூப்பர்நோவா வெடிப்புகள் மூலம் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.

மஞ்சள் நட்சத்திரங்கள்:

இவை நமது சூரியனைப் போன்றவை. இது நீலம் மற்றும் வெள்ளை நட்சத்திரங்களை விட குளிர்ச்சியானவை. குறைவான எடை கொண்டவை. நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பொதுவாக சுமார் 10 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

ஆரஞ்சு நட்சத்திரங்கள்:

மஞ்சள் நிற நட்சத்திரங்களை விட ஆரஞ்சு நட்சத்திரங்கள் குளிர்ச்சியானவை மற்றும் குறைவான எடை கொண்டவை. நீண்ட ஆயுட்காலம் கொண்டவை. பொதுவாக சுமார் 20-30 பில்லியன் ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது.

சிவப்பு நட்சத்திரங்கள்:

இவை குளிர்ச்சியான நட்சத்திரங்கள். அவை மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டவை, நூற்றுக்கணக்கான பில்லியன் ஆண்டுகள் வரை, மேலும் விண்மீன் மண்டலத்தில் மிகவும் பொதுவான வகை நட்சத்திரங்களாகும்.

சரி இனி நீங்கள் வானத்தில் நட்சத்திரத்தை பார்க்கும் பொழுது அதன் நிறத்தை கொண்டு அதன் வயதை தெரிந்துக்கொள்வீர்கள் தானே!!