ஆராய்ச்சிக்காக உறுப்புகள் திருட்டா.? 48 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மகனின் உடலை பெற்ற தாய்

ஆராய்ச்சிக்காக உறுப்புகள் திருட்டா.? 48 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மகனின் உடலை பெற்ற தாய்
ஆராய்ச்சிக்காக உறுப்புகள் திருட்டா.? 48 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மகனின் உடலை பெற்ற தாய்

ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இக்குழந்தை பிறந்த அடுத்த ஒரு வாரத்திலேயே ரீசஸ் (Rhesus) என்ற நோயால் உயிரிழந்தது. ரீசஸ் என்பது கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள், அவருடைய குழந்தையின் ரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.

இந்த சூழலில், லிடியா ரீட், இறந்த தனது மகனின் உடலைப் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் கேட்டிருக்கிறார். அப்போது, அவரிடம் லிடியாவின் குழந்தைக்கு பதிலாக வேறொரு குழந்தை காட்டப்பட்டிருக்கிறது. அது தனது குழந்தை இல்லை என்பதை லிடியா அறிந்துகொண்ட போதிலும், அவருடைய விருப்பமில்லாமலேயே அவர் பெற்றெடுத்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தவிர, அவருடைய மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அந்த மருத்துவமனையே லிடியாவின் மகனின் உடலை இறுதிச் சடங்கு செய்திருக்கிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என மனமுடைந்த லிடியா, இந்த விஷயத்தைச் சட்டம் மூலமாகக் கையாள நினைத்துள்ளார்.

அதற்காக 48 ஆண்டுகள் போராடியிருக்கிறார். தொடர்ந்து, மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு நீதி கேட்டு எல்லா தரப்பிலும் குரல் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு, 42 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது மகன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதில் அவரது குழந்தை இருந்ததற்கான எந்தவித தடயங்களும் (உடல் உறுப்புகளும்) இல்லை. அதன்பின் நடத்திய விசாரணையில், அவரது மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணையின்போது 1970 முதல் 2000 வரை ஸ்காட்லாந்து மருத்துவமனைகளில் சுமார் 6,000 உறுப்புகள் மற்றும் திசுக்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையின் உறுப்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எடின்பரோவில் உள்ள வெஸ்டர்ன் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லிடியா, ”தன் மகனின் பிற உடல் உறுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எனது மகனைத் திரும்பப் பெற நான் ஆசைப்பட்டேன். அது, இப்போது நடந்துள்ளது. இந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இப்போது நான் இறப்பதற்கு முன்பு அவனை அடக்கம் செய்ய முடியும். இதன்மூலம் நான் மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தன் மகனின் உடலை நாளை, இறுதிச் சடங்கு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே வாரத்தில் இறந்த குழந்தையின் உடலை, 48 ஆண்டுகள் கழித்து அந்த தாய் பெற்றிருப்பது உலகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com