காஷ்மீரத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் குறிப்பிட்ட சில மத சுற்றுலாப் பயணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் செயல்களுக்கு உறுதியான, மீண்டும் அவ்வாறு செய்ய யோசிக்கும் அளவுக்கு பதிலடி தருவது அவசியமாகிவிட்டது. அந்த பதிலடி எந்த விதத்தில் - எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதைத்தான் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
‘வலுவான பதிலடி தர வேண்டும், மிகப் பெரிய அளவில் தண்டனை இருக்க வேண்டும்’ என்றெல்லாம் ‘அதீத தேசப் பற்றாளர்கள்’ பலரிடமிருந்து ஆவேசம் பொங்கும் கூக்குரல்கள் எழுந்தன. அதே சமயம், இந்தியா – பாகிஸ்தான் இடையில் முழு அளவிலான போராக இதை மாற்றிவிடக்கூடாது என்ற நிதானம் பலரிடம் இருந்தது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2022 செப்டம்பர் 16-ல் போர் தொடங்கியபோது பிரதமர் மோடி தலையிட்டு, ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என்று ரஷ்ய அதிபர் புடினுக்கு அறிவுரை வழங்கினார். இப்படிச் சொன்னதற்காக உலகம் முழுவதும் மோடி பாராட்டப்பட்டார்; ‘சமாதானப் புறா’ என்றும் ‘அரசியல் மேதகை’ என்றும் இந்தியாவில் புகழப்பட்டார்.
இந்த வார்த்தையை நினைவில் வைத்திருந்த பல நாடுகள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ‘நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு’ இந்தியாவுக்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கின. மிகப் பெரிய அளவில் போரைத் தொடங்காதிருக்க வேறு சில காரணங்களும் இருக்கின்றன: முதலாவதாக, ‘ரஷ்யா-உக்ரைன்’ போரைப்போல, ‘இஸ்ரேல்-ஹமாஸ்’ மோதலைப் போல இது இல்லை; இந்தியா-பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கும் அணு ஆயுத நாடுகள்.
இரண்டாவதாக, போரை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இன்றைய உலகம் இருக்கிறது. இப்போது நடந்துவரும் முதல் இரு போர்களுமே ஏராளமான உயிர்களைப் பலி கொண்டு வருகிறது; இதுவரை உக்ரைனில் 13,000-க்கும் மேலும், காசா நிலப்பரப்பில் 50,000-க்கும் மேலும் ரஷ்யாவிலும் இஸ்ரேலிலும் நூற்றுக்கணக்கானவர்களையும் இழக்க நேர்ந்திருக்கிறது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இரண்டு நாடுகள் மிகப் பெரிய போரில் இந்நிலையில் போரில் இறங்கினால் உலக அளவிலேயே பொருளாதார நிலைத்தன்மைக்கு சேதம் ஏற்பட்டு பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.
இந்த இடர்ப்பாடுகளையெல்லாம் உணர்ந்துதான், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘குறிப்பிட்ட இலக்குகளை மட்டும் தாக்குவது’ என்ற அறிவார்ந்த முடிவை எடுத்திருக்கிறார் பிரதமர். இந்த மே மாதம் 7-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் – ட்ரோன்கள் மூலம் மொத்தம் 9 இலக்குகள் (பாகிஸ்தானில் 4, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் 5) தாக்கப்பட்டு, பயங்கரவாத அமைப்புகளுக்கு அவசியமான அடித்தளக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த பதில் தாக்குதல் அளவிலும் - நேரத்திலும் நன்கு திட்டமிடப்பட்டு, அடக்கி வாசிக்கப்பட்டு இலக்குகள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நாட்டின் நியாயமான பதிலடி நடவடிக்கைதான் இது.
பதில் தாக்குதலுக்காக மக்களுடைய வசிப்பிடங்களோ அவர்களுடைய உடைமைகளோ இலக்காக்கப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் அடித்தளக் கட்டமைப்புகளும் கேந்திரங்களும்கூட இலக்காக்கப்படவில்லை. இதற்கு எதிர்பார்த்த வகையிலேயே பாகிஸ்தானும் எதிர்வினையாற்றியிருக்கிறது;
ராணுவத் தளபதிகளாலும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பாலும் வழிநடத்தப்படும் பாகிஸ்தான் ராணுவம், இரு நாடுகளுக்கும் பொதுவான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருந்து (எல்ஓசி) பீரங்கிகளால் கடுமையாக சுட்டும், ஏவுகணைகளை வீசியும் இந்தியக் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தான் மட்டும் முழு அளவுப்போரை இந்தியா மீது தொடுத்திருந்தால் ‘இஸ்லாமிய நாடுகள் அமைப்பு’ (ஓஐசி) உள்பட பல நாடுகளிடமிருந்து கண்டனங்களை எதிர்கொண்டிருக்கும். அதற்காக இனி வரும் நாள்களில் அல்லது வாரங்களில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு பதில் நடவடிக்கை எதையும் எடுக்காமல் சும்மா இருக்கும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமாகவே இருக்கும்.
மே 7 – ஒரு நாள் தாக்குதலிலேயே ‘எதிர்ப்பு முன்னணி’ (டிஆர்எஃப்-ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்), லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி), ஜெய்ஷ்-இ-முகம்மத் (ஜெஇஎம்) ஆகியவை அடியோடு அழிக்கப்பட்டிருக்கும் என்று கருதுவதும் அறியாமையாகவே இருக்கும். அதன் தலைமை சிறிதளவும் சேதம் இல்லாமல் அப்படியே தொடர்கிறது. கடந்த காலங்களில் இப்படிச் சில தாக்குதல்களை எதிர்கொண்டாலும் புதிது புதிதாக ஆட்கள் அந்த இடங்களை நிரப்புகிறார்கள்; இந்தியாவுக்கு நாசம் விளைவிக்கவும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடவும் இந்த குழுக்களில் சேரவும் பயிற்சி பெறவும் ஏராளமான இளைஞர்கள் தொடர்ந்து முன்வருகின்றனர். பாகிஸ்தானில் ராணுவத் தலைமையும், ஐஎஸ்ஐ அமைப்பும் செல்வாக்குடன் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு இவற்றிடமிருந்து ஆபத்துகள் நீங்கிவிடாது.
எந்த ஒரு மோதலிலும் ஒரு தரப்புக்கு மட்டுமே ஆள் சேதமும் ராணுவச் சேதமும் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப்புற கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி குடிமக்கள் பலரும் இறந்துவருவதை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த செய்தி நமக்கு வலியைத் தந்தாலும் சோகத்தை ஏற்படுத்தினாலும் இவை தவிர்க்க முடியாதவை; மிக நீண்ட நில எல்லை இரு நாடுகளுக்கும் பொதுவாக இருக்கும் நிலையில் இப்படி நடக்கிறது. இந்தியாவுக்கும் ராணுவ சாதனங்கள், போர்க்கருவிகள் சிலவற்றில் இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் முதலில் கூறியது; எந்த இடத்தில், எந்த வகையிலான போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்று பிபிசி நிருபர் கேட்டபோது, ஆதாரம் காட்ட முடியாத பாகிஸ்தானிய ராணுவ அமைச்சரால் திக்கவும் தடுமாறவும்தான் முடிந்தது. எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் தொடர்ந்து பீரங்கியால் சுட்டால் இந்தியத் தரப்பில் உயிரிழப்புகள் அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளன. இரக்க சுபாவமே இல்லாததுதான் போர்.
நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து காஷ்மீரத்தில் மூன்று பெரிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. முதலாவது யூரி, பிறகு புல்வாமா, இப்போது பஹல்காம். ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் இந்திய அரசு எச்சரிக்கையுடன்தான் செயல்பட்டுள்ளது. மிகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேச இந்திய அரசு கற்றுக்கொண்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. மே 7 பதிலடிக்குப் பிறகு வரைபடங்களும் காணொலிக்காட்சிப் பதிவுகளும் ஊடகங்களிடம் தரப்பட்டன. தரைப்படை, வான்படையைச் சேர்ந்த இரு இளம் பெண் அதிகாரிகள் மூலம் ஊடகங்களிடம் விளக்கம் அளிப்பது என்ற புத்திசாலித்தனமான முடிவை அரசு எடுத்தது. தேசம் முழுவதுமே அதைக் கண்டது. இதில் ஓரளவு கசப்பை ஊட்டிய ஒரே நிகழ்வு ஏப்ரல் 24, மே 7 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது தான். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி, காஷ்மீருக்குச் செல்லவில்லை என்பதையும் மக்கள் கவனித்தார்கள். பயங்கரவாதிகளின் செயல்களால் உயிரிழந்த குடும்பங்களின் உறவினர்களையும் அவர் நேரில் சந்திக்கவில்லை. மணிப்பூரில் மிகப் பெரிய மோதல்களும் கலவரமும் ஏற்பட்ட நாளான மே 3, 2023 முதல் அந்த மாநிலத்துக்கு பிரதமர் இதுவரை செல்லாததையும், இதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
இந்தியா பதிலடி கொடுத்த அடுத்த நாள் - மே 8-இல் - தனது உத்தியை மாற்றிக்கொண்டு ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இந்தியா அதற்குப் பதிலடியாக வான் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுவாக எடுத்தது. இந்தியா நோக்கி வந்த டுரோன்களும் ஏவுகணைகளும் இடைமறித்து அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் வான் எல்லை தற்காப்பு சாதனங்களும் அமைப்புகளும் அழிக்கப்பட்டன. ‘பாகிஸ்தானின் தாக்குதலுக்கேற்ற பதிலை மட்டும் கொடுத்ததாகவும் - இன்னும் பெரிய அளவில் போரில் இறங்கவில்லை’ என்றும் இந்தியத் தரப்பில் விளக்கப்பட்டது. பாகிஸ்தான் அதை அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டுள்ளது. ‘அத்துமீறலுக்குப் பதில் கொடுத்துவிட்டோம், அமைதி காக்கிறோம்; இந்த மோதலை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கும் நாங்கள் தயார்’ என்று பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருக்கிறது. பஹல்காமில் நடந்த தாக்குதலையும் அதன் எதிர்விளைவையும் அப்படியே மறந்துவிட்டு, பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தி, இனி இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் இந்தியாவுடனான போர் நிறுத்தம் நீடிக்கும்.
பாகிஸ்தானில் இப்போது ஆட்சியை நடத்துவது யார்? பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் (நவாஸ் ஷெரீஃபின் தம்பி) தலைமையிலான நிர்வாகம் கெட்ட அரசா, அல்லது பாகிஸ்தான் ராணுவமா, அல்லது அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயா? ‘இனி எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்ற நிலைக்கு மனதைத் தயார் செய்துகொள்ளுங்கள். கடினமான நாள்கள் காத்திருக்கின்றன!