ப.சிதம்பரம். pt
சிறப்புக் களம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |தொடர்கிறது முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம்!

" பல்வேறு மதங்கள் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயக நாட்டில் ‘அனைத்து மதங்களும் சமமானவை’ என்பதுதான் முதல் மற்றும் முக்கியமான கொள்கை. " - ப.சிதம்பரம்.

ப. சிதம்பரம்

 ‘வக்ஃப்’ சட்ட திருத்தமும், அது நிறைவேற்றப்பட்ட விதமும் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தனைக்கும் 1954-ல் இயற்றிய ‘வக்ஃப்’ சட்டத்தை நீக்கும் வகையில், புதிய ‘வக்ஃப்’ சட்டம் 1995-ல் நாடாளுமன்றம் நிறைவேற்றிவிட்டது. பிறகு 2013-ல் அதில் மிகப் பெரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த திருத்தங்களின் மொத்த எண்ணிக்கை 57.  அந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு 12 ஆண்டுகள்கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்த திருத்தம்!

வக்ஃப் தொடர்பான ‘பங்கேற்பாளர்கள்’ அல்லது ‘தொடர்புள்ளவர்களிடமிருந்து’ அதன் நிர்வாகம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பது அவசியம் அல்லது அவசரம் என்று அரசு கருதியிருந்தால், அவற்றை சரி செய்ய திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், 2025-ல் இயற்றப்பட்டுள்ள புதிய வக்ஃப் (திருத்த) மசோதா, ‘சீர்திருத்த மசோதா அல்ல’ என்பது மட்டும் நிச்சயம்; ஏற்கெனவே அமலில் இருந்த சட்டத்தின் முக்கியப் பகுதிகளை அடியோடு வெட்டி எடுத்து, அடையாளமில்லாமல் கண்டம்துண்டமாக சின்னாபின்னப்படுத்தும் வகையில் புதிய சட்டம் இருக்கிறது.

மதங்கள் சமமானவை அல்ல!

 பல்வேறு மதங்கள் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயக நாட்டில் ‘அனைத்து மதங்களும் சமமானவை’ என்பதுதான் முதல் மற்றும் முக்கியமான கொள்கை. மத நிறுவனங்களின் நிர்வாகம் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுடைய பொறுப்பில்தான் இருக்க வேண்டும். இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இந்தியாவில், இதே கொள்கைதான் இந்து மத அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும். சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அமைப்புகளுக்கும் - அரசமைப்புச் சட்டத்தின்படி – இதே கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 26-வது கூறு சொல்கிறது:

மத விவகாரங்களை நிர்வகிப்பதில் சுதந்திரமான உரிமை

   பொது அமைதிக்கு உட்பட்டு, தார்மிக – சுகாதார நெறிகளுக்கு இயைந்து, ஒவ்வொரு மத அமைப்பும் அல்லது மதங்களின் எந்தப் பிரிவும் பின்வரும் உரிமைகளை அனுபவிக்கலாம் –

 (அ) மத நடவடிக்கைகளுக்காகவும் அறம்சார்ந்த செயல்களுக்காகவும் நிறுவனங்களை ஏற்படுத்தி அவற்றைப் பராமரிக்கலாம்

(ஆ) மதம் தொடர்பான விவகாரங்களை சொந்தமாக மேற்கொள்ளலாம்

(இ) இந்த நோக்கங்களுக்காக அசையும், மற்றும் அசையாத சொத்துகளைப் பெறலாம் – நிர்வகிக்கலாம்

(ஈ) அந்த சொத்துகளை, சட்டம் அனுமதிப்பதற்கேற்ப நிர்வகிக்கலாம்.

இந்து மத அமைப்புகளும் அறக்கட்டளை நிறுவனங்களும் இந்துக்களால் – ‘இந்துக்களால் மட்டுமே’ – நிர்வகிக்கப்படுகின்றன. இந்து ஆலயங்கள், மத நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றை இந்து அல்லாத ஒருவர் நிர்வகிக்கலாம் என்று யாருமே பரிந்துரைக்கவோ – ஏற்கவோ மாட்டார்கள். (திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை ஊழியர்களாகக் கூட நியமிக்கக் கூடாது என்று ஆந்திர பிரதேச முதலமைச்சர் கோரிக்கையே விடுத்திருக்கிறார்). இதே கருத்தைத்தான் பிற மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்களும் கொண்டிருப்பார்கள். இப்போதுவரையில் இந்துக்கள், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர் என்று, எந்த மதத்தினுடைய மதம் – அறக்கட்டளை நிறுவனங்களிலும் அந்த மதத்தின் மீது நம்பிக்கையில்லாத வேறொருவரை நிர்வாகியாகப் பதவி வகிக்க சட்டம் அனுமதிக்கவில்லை.

புரட்டிப்போடப்படும் கொள்கைகள்

வக்ஃப் சட்டம் 1995-ன் படி, அவரவர் மதங்களை அவரவர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என்ற கொள்கை முழு கவனத்துடன் பின்பற்றப்பட்டது. முஸ்லிம் சட்டம் அங்கீகரிக்கும் எந்த நோக்கத்துக்காகவும், சமயத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகவும், மத வளர்ச்சிக்காகவும், மதம் சார்ந்த அறக்கட்டளையின் பணிகளுக்காகவும் - சொத்துகளை நிரந்தரமாக வழங்குவதே வக்ஃப். முஸ்லிம் அல்லாதவர்கள் தரும் வக்ஃப்களைக் கூட, வக்ஃப் சொத்தாகவே நீதிமன்றங்களும் அங்கீகரித்த உதாரணங்கள் பல. இப்போதுள்ள சட்டப்படி, வக்ஃப் என்பது பெரும்பாலும் கட்டுப்பாடுகள் அற்றது, சுயமாகச் செயல்படும் தன்மையுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் சொத்துகளை ஒழுங்காற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான் அல்லது அதன் தலைமை நிர்வாகி கட்டாயம் முஸ்லிமாகத்தான் இருப்பார். வக்ஃப் அளிக்கப்பட்ட விதத்தில் - அதன் நோக்கம் நிறைவேற - அது வக்ஃப் ஆகப் பயன்படவும், வக்ஃப் நடைமுறைக்கேற்பவும் செயல்படுவதற்கே மாநில வக்ஃப் நிர்வாகம் தனது அதிகாரத்தைச் செலுத்த வேண்டும். வக்ஃப் அமைப்புகள் மீதான ‘சட்டக் கட்டுப்பாடுள்ள நடுவர் மன்ற அமைப்பு’, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமை நீதிபதி தலைமையிலான நீதிமன்றங்கள் மட்டுமே.

இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றி வந்த அனைத்துக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் தலைகீழாக கவிழ்த்துப்போடும் நிலையில்தான் சர்ச்சைக்குரிய புதிய வக்ஃப் திருத்த மசோதா அமைந்திருக்கிறது:

(I)    இனி யார் வேண்டுமானாலும் வக்ஃப் சொத்தை உருவாக்கிவிட முடியாது; குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது இஸ்லாமியராக இருந்து அதன் வழிமுறைகளைப் பின்பற்றுகிறவர்தான் இனி வக்ஃப் சொத்துகளை தானம் செய்ய முடியும். ஏன்? ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை அவர் எப்படி நிரூபிப்பார்?  இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.

(II)    வக்ஃப் சொத்தை உருவாக்குகிறவர், அதற்கு ‘வேறெந்த உள்நோக்கமும்’ இல்லை என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். சொத்தை உருவாக்குவதில் என்ன ‘உள்நோக்கம்’ இருக்க முடியும்?  இதற்கும் பதில் இல்லை.

(III)   இந்த திருத்த மசோதா நிறைவேறிய பிறகு, ‘பயனாளர் வக்ஃப்’ (Wakf by user) என்று எதையும் புதிதாக உருவாக்க முடியாது (ஆனால் இவற்றுக்கு நீதிமன்றங்கள் அங்கீகாரம் அளித்துள்ளன). இது ஏன்? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

(IV)   இவ்வாறு வக்ஃப் ஆக அளிக்கப்பட்ட சொத்து, அரசுக்கு உரியது என்று உரிமை கோரப்பட்டால் அது தொடர்பான விசாரணையை அரசின் மூத்த அதிகாரியொருவர் மேற்கொள்வார்; அது அரசின் சொத்துதான் என்ற முடிவுக்கு அவர் வந்தால், மாநில வருவாய்த்துறை பதிவேட்டில் உரிய திருத்தங்களைச் செய்வார் என்கிறது புதிய மசோதா. ஒரு வழக்கில் தானே ‘வாதியாக’ முறையிட்டு விசாரித்த பிறகு, தானே ‘நீதிபதியாக’ முடிவெடுப்பதாக இது அமையாதா?  இந்தக் கேள்விக்கும் விடை இல்லை.

(V)    மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற தேவையும் புதிய மசோதாவில் கைவிடப்பட்டிருக்கிறது. எனவே ‘முஸ்லிம் அல்லாதவர்களும்’ உறுப்பினராக நியமிக்கப்படலாம்; ஒரு வகையில், விஷமக்கார மாநில அரசு தீர்மானித்தால் அந்த நிர்வாகக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ‘முஸ்லிம் அல்லாதவர்களாக’ இருப்பதை உறுதி செய்துவிடலாம். மிகவும் பின்னோக்கிய இந்த ஏற்பாடு பிற மதங்களின் நிர்வாகக் குழுக்களுக்கான சட்டங்களிலும் சேர்க்கப்படுமா? இந்து மத, அறக்கட்டளை நிறுவனங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்களா? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

(VI)   வக்ஃப் சொத்துகளைக் கைப்பற்ற இதுவரை ‘வரையறுப்பு சட்டம்’ (Limitation Act) பயன்படுத்தப்பட்டதில்லை, இனி அது பயன்படுத்தப்படும். வக்ஃப் ஆக வழங்கப்பட்ட சொத்துகளை முறைகேடாக அனுபவிப்பவர்களும் ஆக்கிரமித்தவர்களும் இந்த திருத்தத்தால் காக்கப்படுவார்களே, அனுபவ பாத்தியதையால் தங்களுக்கு அந்த சொத்தின் மீது உரிமை இருக்கிறது என்பார்களே? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

(VII)   அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த மசோதா தன்னிகரற்றது! பிற மதங்களின் நிறுவனங்கள் தொடர்பாகவும் இதே போன்ற சட்டம் இயற்றப்பட்டு ஏற்கப்படுமா? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

 செயல்திட்டம் மாறவேயில்லை

முஸ்லிம் சமூகம் மீதான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தாக்குதல் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு/ குடியுரிமை திருத்த மசோதா’ ஆகியவற்றில் தொடங்கியது. பொது சிவில் சட்டம் இப்போது உத்தராகண்ட் மாநிலத்தில் சோதித்துப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு, மத்திய ஆட்சிக்குட்பட்ட நேரடிப் பகுதியாக சுருக்கப்பட்டது. 2019 - 20 முதல் 2023 - 24 வரையிலான காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக மொத்தம் ரூ.18,274 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிலும் ரூ. 3,574 கோடி செலவிடப்படவில்லை.

முஸ்லிம்களுடைய கல்விக்கான ஐந்து வகை நிதியுதவி திட்டங்கள் – மௌலானா ஆசாத் தேசிய சிறுபான்மை கல்வி உதவித்தொகை உள்பட – கைவிடப்பட்டுவிட்டன. முஸ்லிம் சமூகத்தின் மீதான இன்னொரு தாக்குதல்தான் வக்ஃப் திருத்த மசோதா. முஸ்லிம்களுக்கு எதிரான பகையுணர்வு கொழுந்துவிட்டு எரிகிறது.

கடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது (2024) பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 240 தொகுதிகள் என்று சரிவு ஏற்பட்ட போதிலும்கூட, நிலைமையில் மாற்றமில்லை. அதே செயல்திட்டம்தான். தன்னுடைய செயல்திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றுவதில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.