ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் pt

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |காப்பு வரி: டிரம்பை வெல்வாரா மோடி?

எந்தெந்த நாடுகளின் பண்டங்கள் மீது இறக்குமதி வரியைக் கடுமையாக உயர்த்த வேண்டும் என்று அடையாளமிட்டுவிட்டார், அந்தந்த நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட பொருள்கள் மீது வரியை அதிகப்படுத்தப் போகிறார், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.
Published on

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டளைக்கேற்ப உலக நாடுகள் ஆடுமா என்பது, வரும் ஏப்ரல் 2-லும் அதைத் தொடர்ந்து வரும் நாள்களிலும், தெரிந்துவிடும். பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் மீது கடுமையான இறக்குமதி வரியை அமெரிக்க அரசு விதித்தால். அது உலக வர்த்தக ஒப்பந்த (WTO) விதிகளையும், இரு நாடுகளுக்கு இடையிலான - பல நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கைகளையும் மீறிய செயலாக இருக்கும். சட்டம் குறித்து – அது அமெரிக்காவில் இயற்றப்பட்டதாக இருந்தாலும் வேறு எங்கு இயற்றப்பட்டதாக இருந்தாலும் – மதித்து நடக்க வேண்டுமே என்ற அக்கறையே இல்லாதவர் டிரம்ப். சட்டங்களையெல்லாம் தூக்கி எறியக்கூடிய பெருஞ்சட்டமாக தன்னைத்தானே கருதுபவர் அவர்.

எந்தெந்த நாடுகளின் பண்டங்கள் மீது இறக்குமதி வரியைக் கடுமையாக உயர்த்த வேண்டும் என்று அடையாளமிட்டுவிட்டார், அந்தந்த நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட பொருள்கள் மீது வரியை அதிகப்படுத்தப் போகிறார், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.

இறக்குமதியாகும் பண்டங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் எத்தகையதாக இருந்தாலும் - அவை வெளிநாட்டுப் பொருள்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து தங்களுடைய உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தி – விற்பனை ஆகியவற்றை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுவதே ‘காப்பு வரி’ நடைமுறையாகும். இறக்குமதி வரி மட்டுமல்ல, பொருள் குவிப்பு தடுப்பு வரி, தொழில் – வர்த்தக பாதுகாப்புக்கான தீர்வை போன்றவையும் கூட காப்பு வரி இனத்தைச் சேர்ந்தவைதான். மிகவும் அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே இவை விதிக்கப்படும், இந்த சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை உள்நாட்டு நீதிமன்றங்களில் மட்டுமே தொடர முடியும்; பெரும்பாலும் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவாகத்தான் அமையும். இவை போக, வெளிநாட்டுப் பொருள்கள் தங்கள் நாட்டில் குவிந்துவிடாமல் தடுக்க வேறு வழிமுறைகளையும் நாடுகள் பின்பற்றும். தரமான விதத்தில் தயாரிக்கப்பட்டவையா என்று சோதித்துப் பார்ப்பதுபோல பாவனை செய்யும், பண்டங்களைப் பொட்டலமாகவோ – சிப்பமாகவோ கட்டிய முறை சரியல்ல என்று ஆட்சேபிக்கும், சுற்றுச்சூழலைக் கெடுத்துத்தான் இவை தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் நிராகரிக்கும், இவ்வாறு பல வழிமுறைகள். இப்படி சொந்த நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒரே பொதுப் பெயர் – ‘காப்புவரி முறைமை’.

காப்பு வரி முறை, நாட்டுப்பற்றல்ல…

‘உற்பத்தியில் தன்னிறைவு’ அல்லது ‘சுயச் சார்பு’ ஆகிய இலக்குகளுக்காக அரசுகள் கையாளும் ஆயுதங்களில் காப்பு வரி முறையும் ஒன்று. பெரும்பாலானவர்கள் காப்புவரி முறையை, ‘நாட்டுப்பற்றால் மேற்கொள்ளப்படும் செயல்’ என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர். நவீனப் பொருளாதாரக் கோட்பாடுகளும், பல்வேறு நாடுகளின் அனுபவ அறிவும் ‘தன்னிறைவு’ காண முயல்வது நல்ல செயல் என்று கருதுவதே தவறு என்று நிராகரித்துள்ளன. ‘தன்னிறைவு’ என்பது கற்பனையான, அடைய முடியாத - அடையத் தேவையில்லாத லட்சியம். எந்த ஒரு நாடும் தன்னுடைய நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும், அவர்கள் நுகரும் அனைத்து சேவைகளையும் தானாகவே தயாரித்து வழங்குவது என்பது சாத்தியமே இல்லை. காப்பு வரிக் கொள்கையைக் கடைபிடிக்கும் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் குறைவாகவே இருக்கும், முதலீடுகளும் அதிகமிருக்காது, தயாரிக்கப்படும் பொருள்களும் தரமானதாகவோ – விலை குறைவாகவோ இருக்காது, சேவைகள் இனத்தில் விருப்பத்துக்கேற்ப முடிவெடுக்க மக்களுக்கு நிறைய தெரிவுகளும் இருக்காது. ‘வெளிப்படையான – சுதந்திரமான தொழில்-வர்த்தக நடைமுறைகளால்தான் விரைவான பொருளாதார வளர்ச்சி சாத்தியம் - காப்பு வரி நடவடிக்கைகள் மூலம் அல்ல’ என்று கடந்த ஐம்பதாண்டுக் கால உலக வரலாறு நிரூபித்துவிட்டது. தொழில்-வர்த்தகத் துறைகளில் கட்டுப்பாடுகளை விலக்கியும், பிற நாடுகளுடன் தாராளமாக போட்டி போட அனுமதித்தும் செயல்பட்ட நாடுகள்தான் உலகின் பணக்கார நாடுகளாக முடிந்திருக்கிறது.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |எதிர்கொள்ள வேண்டிய ‘பேர வியாபாரி’..!

உள்நாட்டுத் தொழில், வர்த்தகத்தைக் காக்க கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இந்தியாவும் காப்பு வரி நடைமுறையைத்தான் பின்பற்றியது. இறக்குமதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஏற்றுமதியும் வளர முடியாமல் குறுகிவிட்டது. ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் ஏராளமான அதிகாரிகள் கோலோச்சினர், அவர்களில் முக்கியமான ஒருவர் ‘ஏற்றுமதி – இறக்குமதிக்கான தலைமை நெறியாளர்’ என்றே அழைக்கப்பட்டார். “இறக்குமதி அதிகரித்து அதனால் உள்நாட்டுத் தொழில் – வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் நீங்கள் அவசியம், ஆனால் ஏற்றுமதிகளைக்கூட அதிகரிக்கவிடாமல் உங்களுக்கெதற்கய்யா இந்தப் பதவி?” என்று ஒருவரும் அந்நாளில் அவரைப் பார்த்துக் கேட்கவில்லை. அந்நியச் செலாவணியை ஈட்ட ஆலாய்ப் பறக்கும் நாட்டில், ஏற்றுமதிகளுக்கு எதற்குக் கட்டுப்பாடு – நெறியாளர் என்று எவருக்குமே தோன்றவில்லை.

ஆட்சியாளர்கள் மாறினர்…

 டாக்டர் மன்மோகன் சிங் 1991-இல் ஒன்றிய அரசின் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். அவருடைய ‘தாராளமய - பொருளாதாரக் கொள்கைகள்தான்’ அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘காப்பு வரி முறைமை’ கைவிடப்படவும் பொருளாதாரத் துறைகள் அனைத்தும் போட்டிக்கும் அதிக உற்பத்திக்கும் திறந்துவிடப்படவும் வழி செய்தன. ‘புதிய வெளிவர்த்தகக் கொள்கை’ 1991-92-இல் அறிவிக்கப்பட்டபோது அதற்கும் முன்னால் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த ‘காப்பு வரி கட்டளைகள்’ அடங்கிய சிவப்புப் புத்தகம் கிழித்தெறியப்பட்டது; ‘தடையற்ற பொருளாதார – வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்தியா தயார், காப்பு வரி முறைமை இன்றோடு முறையாக கைவிடப்படுகிறது.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |எதிர்கொள்ள வேண்டிய ‘பேர வியாபாரி’..!

உற்பத்தி – வளர்ச்சிக்குத் தடைக் கற்களாக இருந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் குப்பைக்குச் செல்கின்றன, காப்பு வரி விதிப்புகள் படிப்படியாக குறைக்கப்படும், இந்தியத் தொழில்துறை உலக சந்தையில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறது’ என்று அந்தக் கொள்கை உரத்து அறிவித்தது. அவ்வாறு பொருளாதாரத்தைத் திறந்துவிட்டதால் குறுகிய காலத்திலும் - நீண்ட கால நோக்கிலும் பொருளாதாரத்துக்குக் கிடைத்த பலன்கள் ஏராளம்.

மீண்டும் காப்பு வரி முறைமை!

ANI

நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் புதிய அரசு பதவியேற்ற பிறகு தொழில் – வர்த்தகக் கொள்கையில் அதுவரை கடைப்பிடிக்கப்பட்ட தாராளமயம் கைவிடப்பட்டது. காப்பு வரி முறைமை மீண்டும் ஆரத்தழுவி அரியணையில் அமர வைக்கப்பட்டது. ‘தன்னிறைவு’ என்று காலங்காலமாக பேசப்பட்ட கொள்கைக்கு ‘ஆத்மநிர்பார்’ என்ற புதுப் பெயர் சூட்டப்பட்டது. உலகம் மாறிவிட்டது என்பதை அங்கீகரிப்பதில் அரசு தோல்வி கண்டது: தாராளமயம் கடைப்பிடிக்கப்பட்டதால் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றில் ஒப்புநோக்கினாலே ஏராளமான நன்மைகள் ஏற்பட்டுவருவதை உலக நாடுகள் அனுபவத்தில் உணர்ந்தன. அந்த நன்மைகளை அடித்தளமாகக் கொண்டு அவை வளர்ச்சியும் பெற்றன. உலக அரங்கில் பொருள் – சேவைகளை விலை குறைவாக அளிக்க, ‘வழங்கு சங்கிலிகள்’ (சப்ளை செயின்) புதிதாக உருவாக்கப்பட்டன. பழைய காலம் போல எந்தப் பொருளும் ஒரே நாட்டில் முழுக்க முழுக்கத் தயாரிக்கப்படவில்லை. கைப்பேசி என்று அழைக்கப்படும் மொபைல் போனின் உறுப்புகளை மட்டுமே வெவ்வேறு நாடுகள் தயாரித்து இணைத்து விற்கின்றன. ‘ஜெர்மானியத் தயாரிப்பு’, ‘ஜப்பானியத் தயாரிப்பு’ என்ற பழைய கித்தாய்ப்புகளுக்கு மாற்றாக, ‘உலக நாடுகளின் தயாரிப்புகளாக’ பொருள்கள் வெளிவருகின்றன. ‘ஆத்மநிர்பார்’ என்ற கொள்கை காரணமாக, வழக்கொழிந்துவிட்ட கட்டுப்பாட்டு விதிகளும் கட்டுப்பாடுகளும் உரிம முறைகளும் அனுமதி நடைமுறைகளும் இன்ன பிற தடைகளும் எல்லாவற்றுக்கும் மேலாக – காப்பு வரி விதிப்புகளும் - மீண்டும் வந்துவிட்டன.

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |எதிர்கொள்ள வேண்டிய ‘பேர வியாபாரி’..!

உலக வர்த்தக அமைப்பின் கணிப்பின்படி இந்தியா சராசரியாக வெளிநாட்டுப் பொருள்கள் மீது விதிக்கும் காப்பு வரி விகிதம் மட்டுமே 50.8% ஆக இருக்கிறது. மிகவும் ‘வேண்டப்பட்ட நாட்டின் பொருளாக’ இருந்தால் 12.0% விதிக்கிறது. இந்தியாவில் காப்பு வரி முறை எந்த அளவுக்குத் தீவிரமாக மீண்டும் கொண்டுவரப்பட்டுவிட்டது என்பதை இவ்விரண்டு வரி விகித வேறுபாடு தெரிவிக்கிறது.

‘நியாயமான’ எதிர் ‘குறுகிய’ நலன்கள்

அதே சமயம், வேளாண்மை, மீன்வளம், கனிம அகழ்வுகள், கைத்தறி நெசவு, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, பாரம்பரியமான உள்நாட்டுத் தொழில்கள் ஆகியவற்றைப் பிறநாடுகளின் இயந்திரப் பொருள் உற்பத்திக் குவிப்பிலிருந்து காக்க வேண்டிய பெருங்கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. காரணம் கோடிக்கணக்கான மக்கள் இந்தத் துறைகளையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு எல்லா நாடுகளிலுமே கோடிக்கணக்கானவர்கள் சில தொழில்களை நம்பியே வாழ்கின்றனர் என்பதை அறியாமல் இல்லை உலகம்.

அதிபர் டிரம்ப் முதல் குண்டை வெடித்துவிட்டார். அலுமினியம், உருக்கு பொருள்கள் இறக்குமதி மீது காப்பு வரியை அறிவித்தவர் இப்போது சற்றே பின்வாங்கி, அவை அமலுக்குப் புதிய தேதியை அறிவித்திருக்கிறார். மோட்டார் வாகனங்கள் மீதும் அதன் உள்ளுறுப்புகள் மீதும் அதிகமான காப்பு வரியை அறிவித்திருக்கிறார். இப்படியாக ஒவ்வொரு துறையாக – ஒவ்வொரு தயாரிப்பாக தேர்ந்தெடுத்து அவற்றின் மீது அதிக இறக்குமதி வரியை அறிவிப்பார் என்று கருதுகிறேன்.

அவருடைய இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் எதிர்வினையானது ரகசியமாகவும், சிலவற்றுக்கு மட்டும் வெளிப்படையாகவும் தெரிகிறது. ஒன்றிய அரசின் 2025-26 நிதி நிலை அறிக்கையிலேயே சில இனங்களில் ‘காப்பு வரி’ குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டிரம்ப் திருப்தி அடைந்ததைப் போலத் தெரியவில்லை. நிதி மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் ‘எண்ம சேவை வரி’ (டிஜிட்டல் சேவை வரி – கூகுள் வரி என்றும் சொல்வார்கள்) விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் பல சலுகைகள் குறித்துப் பேச்சு நடக்கிறது. இது திருப்தி கொள்ள முடியாத அணுகுமுறை. இப்படி ஒவ்வொரு துறையாக, இனமாக செய்யாமல் ஒட்டுமொத்தமாக மொத்த காப்பு வரிகள் குறித்தும் இரு தரப்பும் அமர்ந்து பேசி பரஸ்பர கவலைகளைப் பகிர்ந்துகொண்டு நல்ல புரிதலோடு வரிகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி பணிந்துவிட்டார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்படிப் பணிந்தவர் அவரை தனது ‘நட்புறவு – செல்வாக்கால்’ வெல்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் ஆதரவைப் பிற நாடுகள் எதிர்பார்ப்பதைப் போல, இந்தியாவுக்கும் அந்த நாடுகளின் ஆதரவு அவசியம். கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை அமெரிக்கா அறிவித்துள்ள காப்பு வரி அறிவிப்புகளுக்கு எதிரான போரில் சிறந்த நட்பு நாடுகளாகத் திகழக் கூடியவை. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தொடர்ந்து நிலையாக வைத்திருக்கவும் இந்த நாடுகள் அனைத்தும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் தந்து, ஒட்டுமொத்தமான உடன்பாட்டை செய்து கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com