முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் முகநூல்
சிறப்புக் களம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |‘தோற்றவரின் தோழனாக’ இருக்கப் போகிறதா இந்தியா?

"அதே சமயம், கோழைத்தனமாக அமெரிக்காவுக்குப் பணிந்துவிட்டது என்ற எண்ணத்தை இந்தியா உருவாக்கிவிடக்கூடாது. " - ப. சிதம்பரம்.

ப. சிதம்பரம்

அமெரிக்காவின் அதிரடியான பதில் வரி விதிப்பு முறையும், அதற்கான எதிர்வினைகளும்தான் இப்போது உலகின் முக்கியமான பேசுபொருள்.

பெரும்பாலான அகராதிகளின்படி, ‘காப்பு வரி’ என்பது பெயர்ச் சொல், ஒரு நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான ‘சுங்க வரி’ அவ்வாறு அழைக்கப்படும். சில வேளைகளில் ஏற்றுமதியாகும் பொருள்கள் மீதும் சுங்க வரி விதிக்கப்படுவது உண்டு. காப்பு வரி என்ற சொல்லை வெகு அபூர்வமாகத்தான் வினைச் சொல்லாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், அமெரிக்காவின் இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் காரணமாக, பரவலாக இப்போது அது வினைச் சொல்லாகப் புழங்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் மீது – ஹேர்ட், மெக்டொனால்ட் என்ற இரண்டு தீவு நாடுகள் உள்பட – அவர் காப்பு வரி விதித்துவிட்டார்; அவ்விரு நாடுகளிலும் பெங்குவின் பறவைகள்தான் வாழ்கின்றன, அவை அமெரிக்காவுக்கு எதையும் ஏற்றுமதி செய்வதில்லை!

ஏழு மாநிலங்கள் மீதே கவனம்

இறக்குமதியாகும் பொருள்கள் மீது கடுமையாக இறக்குமதி வரி விதித்தாலே, ‘மீண்டும் போற்றப்படும் பெரிய நாடாகிவிடும் (மெகா) அமெரிக்கா’ என்று நம்புகிறார் டிரம்ப். இந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் அவர் பல்வேறு பொருள்கள் மீதான இறக்குமதி வரி உயர்வுப் பட்டியலை அறிவித்தார். முட்டாள்களால் மட்டுமே பாராட்டுபெறும் விதத்தில் அந்த காப்பு வரி உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது! ஒரு நாட்டுடனான வெளிவர்த்தகப் பற்று வரவில் நிலவும் பற்றாக்குறையில் பாதித் தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த நாடு அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதி மதிப்பால் அதை வகுத்து, புதிய காப்பு வரி விகிதம் அந்த ஈவிலிருந்து கணக்கிடப்பட்டிருக்கிறது. (வெளி வர்த்தகப் பற்றாக்குறை எப்போது ஏற்படும் என்றால் இறக்குமதி மதிப்பு அதிகமாகவும், ஏற்றுமதி மதிப்பு குறைவாகவும் இருக்கும் தருணங்களில்).

2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளுக்கு இடையிலான பெரும் நிலப்பரப்பில் – நான்கு மாநிலங்கள் நீங்கலாக – குடியரசுக் கட்சியின் சிவப்பு நிறமே செல்வாக்கு செலுத்தியது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரேயொரு கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்தது: குடியரசு – ஜனநாயகம் ஆகிய இரு கட்சிகளுக்கும் சமமான வாக்காளர் ஆதரவு உள்ள ஏழு மாநிலங்களை - அல்லது ஏழில் பெரும்பான்மையான மாநிலங்களை - கைப்பற்றப் போகும் கட்சி எது? அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் என்ற ஏழு மாநிலங்களையும் வென்ற டிரம்ப் மொத்தமாக 93 தேர்தல் குழும வாக்குகளையும் அள்ளினார். டிரம்புக்கு செல்வாக்கானவை, தேர்தல் முடிவையே தீர்மானிக்கவல்ல அந்த ஏழு மாநிலங்கள்தான். அந்த ஏழு மாநிலங்களுக்கும் பொதுவான தன்மைகள் சில உண்டு: அவற்றில் அதிக தொழிலுற்பத்தி கிடையாது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம், விலைவாசி உயர்வு, வெளிநாட்டவர் குடியேற்ற பிரச்சினை, வெள்ளை இன ஆலைத் தொழிலாளர்களின் தேர்வுகளுக்கே முக்கியத்துவம் ஆகிய அம்சங்களும் அவற்றுக்கு உண்டு. அந்த ஏழு மாநிலங்களிலும் வெற்றிபெற்ற டிரம்ப், இந்த மாநிலங்களின் பிரச்சினைகள்தான் முழு அமெரிக்க நாட்டின் முதன்மைப் பிரச்சினைகள் என்று கருதுவதோடு, இவற்றைத் தீர்க்க முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்படுகிறார்.   

இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு கடந்த 80 ஆண்டுகளாக நிலவும் தடையற்ற தொழிலாளர் குடியேற்றம், சரக்கு – சேவைகளின் பரிமாற்றம் ஆகியவற்றால் உலக நாடுகள் பயன்பெற்றன, அதில் அமெரிக்கா உச்சபட்சமான பலன்களைப் பெற்றது. அதனால் உலகிலேயே பெரும் பணக்கார நாடாக, பொருளாதார செல்வம் மிக்க நாடாக, புதிய கண்டுபிடிப்புகளில் அதிகம் சாதித்த நாடாகத் திகழ்கிறது. உலகின் ஆகச் சிறந்த தொழில் - வர்த்தக நிறுவனங்கள், தரமான பல்கலைக்கழகங்கள், மிகவும் உயர்வான ஆய்வுக் கூடங்கள், ஆற்றலும் திறமையும் மிக்க விளையாட்டு வீரர்கள் என்று தலைசிறந்து விளங்குகிறது. உலகம் முழுவதிலுமே அமெரிக்காவின் டாலர்தான், கையிருப்பு செலாவணியாக பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கி வசிக்கவும் தொழில் செய்வதற்கும் தரப்படும் பச்சை அட்டைகளுக்கும் அமெரிக்க நாடு வழங்கும் விசாக்களுக்கும் உலக அளவில் தனி மதிப்பு நிலவுகிறது. 

சீனா – இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் தங்களுடைய அன்னியச் செலாவணி கையிருப்புகளில் கணிசமான அளவை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. இதனால் அரசின் நிதிக் கணக்கில் ஏற்படும் பற்றாக்குறை பற்றிய கவலையே இல்லாத நாடாக அமெரிக்கா தொடர்கிறது. இவ்வளவு சிறப்புகள் அமெரிக்காவுக்கும் இருந்தும் அதனால் தங்களுக்கு நேரடியாக எந்தப் பலனும் இல்லை என்று அமெரிக்காவின் அந்த ஏழு மாநில வாக்காளர்கள் கருதுகின்றனர். உண்மைகளைவிட அந்த மாநில மக்களின் கருத்துகளுக்கே அதிக விசுவாசம் உள்ளவராகச் செயல்படுகிறார் டிரம்ப்.

தீவிர பின்தள்ளல் நடவடிக்கைகள்

உலக அளவில் நிலவும் தொழில் – வர்த்தக உறவுகளை சீர்குலைக்கவும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான நடவடிக்கைகளை டிரம்பின் முடிவு கொண்டிருக்கிறது. தொழில்திறமையுள்ளவர்கள், அறிவாளிகள் அமெரிக்காவில் குடியேறுவதை அடியோடு தடுக்காவிட்டாலும் அதை காலதாமதப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பண்டங்களின் பரிமாற்றம் கடுமையாக பாதிப்படையும் தொழில் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப் பொருள்களையும் உள்ளீடுகளையும் அளிக்கும்  ‘வழங்கு சங்கிலிகள்’ தடைகளால் உடைபடும் அல்லது கணிசமாக சேதம் அடையும். சேவைத் துறைகளில் வர்த்தகமானது, தாற்காலிகமாகவாவது கடுமையான சேதத்தை சந்திக்கும். அமெரிக்கா அறிவித்துள்ள சுங்க வரிகள் – அதற்கு பதிலடியாக பல நாடுகள் அறிவித்துள்ள மாற்று சுங்கவரி அதிகரிப்புகளால் நாடுகளுக்கிடையே மூலதனம் பாய்வதும் தடைபடும், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது காலம் ஆகும். மூலதன முதலீடு தடைப்பட்டால் சில சேவைகளும் அதைப் பின்பற்றி தடைக்கு ஆளாகும்.

டிரம்ப் ஒருதலைபட்சமாக தடாலடி நடவடிக்கையில் இறங்கினாலும் வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவை பாராட்டத்தக்க சுய கட்டுப்பாட்டுடன் நிதானமாக நடந்து வருகின்றன. டிரம்ப் ஏதோ மாயையில் மூழ்கியிருக்கிறார், தன்னுடைய செயல்களுக்கு உண்மையற்ற விளக்கங்களை அளிக்கிறார் என்பது வெளிப்படை. அமெரிக்காவின் பெருவாரியான மக்களால் நுகரப்படும் பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகப்படுத்துவதால், அமெரிக்க நாடும் மக்களும் அவற்றை அதிகம் செலவிட்டுப் பயன்பெற முடியாது. இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டால் பிற நாடுகளின் பொருள்கள் அமெரிக்காவுக்கு வருவது தடைப்படும், பிறகு அருகிவிடும். அவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படும், விலைவாசி மேலும் உயரும். ஏற்கெனவே அமெரிக்க நகரங்கள் பலவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.

விலைவாசி மேலும் உயரும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும் என்பதால் மேலும் பல்லாயிரவர் போராட்டங்களில் ஈடுபட வீதிகளுக்கு வருவார்கள். தனது முட்டாள்தனம் அம்பலப்படும்போது, முடிவுகளை மாற்றிக்கொண்டு பின்வாங்கிவிடுவார் டிரம்ப். அவருடைய காப்பு வரி அறிவிப்பால் உலகமே கொந்தளித்த உடன், தனது வரி உயர்வு முடிவுகளை 90 நாள்களுக்கு – சீனத்தைத் தவிர - ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்த முடிவுகள் மேலும் பல திருப்பங்களையும் திருத்தங்களையும் காணப்போகின்றன. இனி டிரம்ப் இரண்டு அறிகுறிகளைக் கவனமாக பார்த்துக் கொண்டிருப்பார். 1. அமெரிக்காவை மீண்டும் மிகப் பெரிய வல்லமையுள்ள நாடாக்குவோம் என்பதை அமெரிக்கர்கள் எப்படி வரவேற்கிறார்கள், 2. அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு உலகச் சந்தையில் என்ன ஆதரவு கிடைக்கிறது.  அந்த இரண்டுமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்று தெரிந்தால் சிறிதும் வெட்கப்படாமல் தனது கொள்கைகளை கவிழ்த்துப்போட்டுவிடுவார்.

பொருளாதாரம் கோலோச்சும்

டிரம்பின் நடவடிக்கைகள் தங்களுக்கு எதிரானவை என்ற போதிலும் கனடாவும் ஐரோப்பிய நாடுகளும் உறுதியாகவும் துணிவாகவும் எதிர்த்து நின்றன. பதிலடியாக அமெரிக்கப் பொருள்கள் மீதான சுங்க வரியைப் பல மடங்கு உயர்த்துவேன் என்று சீனம்தான் அடம் பிடிக்கிறது. அமெரிக்கா இந்த சுங்க வரி உயர்வு முடிவில் உறுதியாக இருந்தால், சீனமும் விட்டுக்கொடுக்காது. இந்த சுங்கவரி மோதல்கள் தொடர்பாக தன்னுடைய கருத்தை இதுவரை தெரிவிக்காத இந்தியா, அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் வர்த்தக பேர ஒப்பந்தங்கள் தொடர்பாகப் பேசிவருகிறது.

அதே சமயம், கோழைத்தனமாக அமெரிக்காவுக்குப் பணிந்துவிட்டது என்ற எண்ணத்தை இந்தியா உருவாக்கிவிடக்கூடாது. உலகப் பொருளாதாரத்துக்கு என்ன நேர்ந்தால் எங்களுக்கென்ன என்று அக்கறை இல்லாமல் இருப்பது போலவும் இந்தியா நடந்துகொள்ளக்கூடாது. அமெரிக்க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் உறுதியான நிலையை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் திருமதி உருசுலா வான் தேர் லெயின், மார்க் கார்னி, கீர் ஸ்டார்மர் ஆகியோர் இந்தியா பின்பற்றத்தக்க ஆளுமைகள்.

 தனது பொருளாதார தடாலடி முடிவுகளை அமல்படுத்தாமல் 90 நாள் அவகாசம் தந்திருப்பதால், டிரம்புக்கு அதற்குள் நல்ல புத்தி வரும் என்று உலகம் எதிர்பார்க்கலாம். ஒரு வேளை டிரம்ப் அந்த அவகாசத்தையே ரத்து செய்துவிட்டு, மீண்டும் அதே சுங்கவரி விதிப்பு முடிவுகளை அமல்படுத்த முனைந்தால் அது உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து நாசப்படுத்திவிடும். அப்படி நேர்ந்தால் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதார அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அப்படி நடந்தால் இந்தியாவுக்கு அதிகமான சேதம் ஏற்படும்; தொழில்துறை மந்தநிலை, விலைவாசி உயர்வு, குறைந்த அளவிலான ஏற்றுமதிகள், குறைந்த அளவிலான நிறுவன முதலீடுகள், நேரடி அன்னிய முதலீடுகள் என்று எல்லாவற்றிலும் பிரச்சினைகளே அதிகமாகும். இந்தியா இவற்றையெல்லாம் பரிசீலித்து தனது வர்த்தக நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்களுடன் வாணிபத்தைப் பெருக்க வேண்டும், டிரம்பின் முடிவுகள் தங்களைப் பாதிக்காமல் தடுக்க வேண்டும்.

இறுதியாக, பொருளாதாரக் கோட்பாடுகள்தான் டிரம்பை முறியடிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ‘தோற்றவர் பக்கத்தில் இருக்கும் நாடாக’ இந்தியா இருந்துவிடக்கூடாது!