ப.சிதம்பரம் எழுதும். pt
சிறப்புக் களம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |ஒருபுறம் கடல்பாறை – மறுபுறம் நீர்ச்சுழல்!

உலகிலேயே மிகப் பெரிதான இரு பொருளாதார நாடுகளுடன் வணிக உறவில் எதிரெதிரான இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது இந்தியா.

ப. சிதம்பரம்

‘ஸ்கைலா (ஆபத்தான பாறை), சாரிப்டிஸ் (ஆழமான நீர்ச்சுழல்) ஆகியவற்றுக்கு இடையே…’ என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டதன் காரணம் (BETWEEN SYCLLA AND CHARYBDIS) ஆங்கில மரபுச் சொற்களில் எனக்குள்ள புலமையைக் காட்டுவதற்காக அல்ல; சொல்லவந்த கருத்துக்கேற்ற பாதுகாப்பான தலைப்பாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ‘பெரும் பேய்க்கும் - ஆழமான கடலுக்கும் இடையில்…’ என்ற மரபுச் சொல் கூட உடனே நினைவுக்கு வரும். அப்படித் தலைப்பிட்டால், ‘நீங்கள் யாரைப் பேய் என்கிறீர்கள், யார் ஆழமான கடல்?’ என்று கேட்பார்கள். 

இந்த ஆண்டு ஏப்ரல் 2-இல் தொடங்கிய காப்புவரி விதிப்பு மோதலில் இரு பெரும் வல்லரசுகளிடமிருந்து இந்தியாவுக்குப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன: அவை அமெரிக்கா – சீனா. இந்த இரண்டில் ஒன்றுதான் கிரேக்க புராணக் கதையில் வரும் ‘ஸ்கைலா’, மற்றொன்று ‘சாரிப்டிஸ்’. நடப்பு உலக நிகழ்வுகளின் பின்னணியில் இரு நாடுகளுமே நமக்கு அவ்வளவாக மகிழ்ச்சியைத் தராத - வணிக உறவுக்கான - மாற்று வல்லரசுகளாகும்.

பிரச்சினையின் ஒரு பக்கம்…

அமெரிக்கா, சீனாவுடன் 2024-25-ல் இந்தியாவின் வணிக மதிப்பு பில்லியன் டாலர்கள் கணக்கில்:

உலகிலேயே மிகப் பெரிதான இரு பொருளாதார நாடுகளுடன் வணிக உறவில் எதிரெதிரான இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது இந்தியா.

 அமெரிக்காவுடன் நமக்கு வாணிபக் கணக்கில் உபரி இருக்கிறது. அமெரிக்காவுக்கு நாம் செய்யும் ஏற்றுமதிகளில் ஆபரணக் கற்கள், தங்க நகைகள், மருந்து-மாத்திரைகள், பொறியியல் சாதனங்கள், மின்னணுத் துறை பொருள்கள், சில வேளாண் விளைபொருள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மிகக் குறைந்த விலையில் மிகுந்த தரத்துடன் நாம் விற்கும் சில மருந்துகளைத் தவிர ஏனையவற்றை அமெரிக்கா நம்மிடமிருந்து வாங்காமலே இருக்க முடியும் அல்லது வேறு நாடுகளிடமிருந்து தருவித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் நாம் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு பொருளும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளைத் தருகின்றன. 

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள உபரியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியப் பொருள்கள் மீதான காப்பு வரியை (சுங்க வரி) அதிகப்படுத்தும் நோக்கத்துக்குக் காரணம் இதுதான். காப்பு வரி உயர்வு முடிவு சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, சிலவகை இந்திய மருந்து-மாத்திரைகளுக்கும் தாற்காலிகமாக உயர் வரி விதிப்பிலிருந்து விலக்கு தரப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும், காப்பு வரி உயர்த்தப்படும் என்ற அவருடைய அறிவிப்பு இந்தியாவின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாகத் தொடர்கிறது. எச்சரித்தபடியே காப்பு வரி மேலும் உயர்த்தப்பட்டால் அது நம்முடைய ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு போய்விடும், அன்னியச் செலாவணி சேருவதும் கணிசமாகக் குறைந்துவிடும், அரசின் நடப்பு கணக்கு சமநிலையில் பற்றாக்குறையை அதிகப்படுத்தும். எனவே நாட்டின் நலனில் அக்கறை கொண்டு அமெரிக்காவுடன் பேசி, காப்புவரி உயர்வைத் தடுக்கப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பொருள்களின் இறக்குமதியைத் தடுப்பதால் அமெரிக்காவுக்கும் நன்மை இல்லை, டிரம்புக்கு அதுவும் தெரியும். இந்தியப் பொருள்களைத் தொடர்ந்து இறக்குமதி செய்து கொள்வதற்கு நிச்சயம் அவர் வழியைக் காண்பார். அதற்கும் முன்னால் இந்தியாவிடமிருந்து சில சலுகைகளைக் கறப்பதற்கும் வழியைக் காண்பார். அமெரிக்காவிடமிருந்து ராணுவ சாதனங்களையும் விமானங்களையும் அதிகம் வாங்க வேண்டும் என்று நிர்பந்திப்பார், அவை உலகிலேயே விலை அதிகமானவை. இரும்பு-உருக்கு, சில வகை ரசாயனங்கள் (வேதிப் பொருள்கள்), பிளாஸ்டிக்குகள், கனிம எரிபொருள்கள், கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள் போன்றவற்றை இதர நாடுகளிடமிருந்தும் வாங்கிக் கொள்ள முடியும். இருந்தாலும் அமெரிக்காவிடம் தேவைக்கேற்ப கொள்முதல் செய்வதில் இந்தியா விவேகமாகவே செயல்படும். அதிக விலையில் விற்கப்படும் அமெரிக்க ராணுவ சாதனங்களையும், விமானங்களையும் இன்னும் எவ்வளவுதான் இந்தியாவால் வாங்க முடியும் (இப்போது அணு உலைகளும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது?)

 காப்பு வரி அதிகரிப்பு தொடர்பாக சீண்டும் வகையிலும், கையை முறுக்கும் விதத்திலும் அமெரிக்கத் தரப்பில் இதுவரை பேசி வந்தாலும், உடனடியாக பதில் அளிக்காமல் சகித்துக்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. இறுதியில் வணிக உடன்பாட்டைத் தங்களுக்குச் சாதகமாகவே செய்துகொள்ளுமாறு டிரம்ப் நிச்சயம் தனது செல்வாக்கைச் செலுத்துவார்.

இன்னொரு பக்கத்தில்…

சீனத்துடன் இந்தியாவுக்கு இதே பிரச்சினை எதிர்விதத்தில் இருக்கிறது. சீனத்துக்கு விற்பதைவிட - சீனத்திடமிருந்து வாங்குவதுதான் பல மடங்காக இருப்பதால் வெளிவர்த்தக பற்று-வரவில் இந்தியாவுக்குத்தான் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டேவருகிறது… அதாவது, அமெரிக்க டாலர்களில் 10,000 கோடி டாலர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக்குகள், இரும்பு - உருக்கு ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திக்கு சீனத்திலிருந்து வரும் உள் பாகங்களையும், இடுபொருள்களையுமே அதிகம் சார்ந்திருக்கின்றன. இதற்குக் காரணம் சீனத்திலிருந்து வாங்கும் அனைத்துமே மிகவும் மலிவானவை அல்லது உண்மையான விலையை விட மிகவும் குறைவாக நிர்ணயித்து இந்தியாவுக்கு விற்கப்படுபவை. பிற நாடுகளிடமிருந்து இந்த அளவுக்கு விலை குறைவாகவும் விரைவாகவும் பொருள்கள் கிடைப்பதில்லை. இந்தியா தன்னுடைய உள்நாட்டு ஆலைகள் உற்பத்தியை ஊக்குவித்து பெருக்காவிடில், எப்போதும் சீனத்தை நம்பியிருக்க வேண்டியதுதான்: இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் இதன் பங்கு 13% முதல் 14% வரையில் இருக்கிறது.

 சீனத்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்களில் நுகர்பொருள்கள், கனிமம் மற்றும் பெட்ரோலிய எரிபொருள்கள், கடல் உணவுகள், பருத்தி இழை, சில வேளாண் பொருள்கள்தான் அதிகம். சீனத்தால் உள்நாட்டில் தயாரிக்க முடியாத அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளும் பொருள்களை மதிப்பு கூட்டியவையாகத் தயாரித்து இந்தியா ஏற்றுமதி செய்யலாம். இந்தியாவின் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமே உற்பத்தித் தொழில்பிரிவின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுக்காமல் மோடி அரசு இதுவரை காட்டி வந்த அலட்சியம்தான். இந்தியாவிடமிருந்து அதிக பொருள்களை வாங்கத் தயார் என்று சீனம் அறிவித்திருக்கிறது. ஆனால் அதை ஏற்று அதிக ஆதாயம் அடையும் நிலையில் நாடு இருக்கிறதா என்பது விவாதத்துக்குரியது.  சீனத்துக்கு விற்பதைவிட, சீனத்திடமிருந்து வாங்குவது பல மடங்காக இருப்பதுதான் வெளிவர்த்தக பற்று வரவை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் அம்சமாக மாறிவிட்டது. இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய பெரிய ஆபத்தாக மாறிவிட்டது. அமெரிக்காவுடனான வெளிவர்த்தகத்தில் நிலவும் உபரியானது, ஒரு வகையில் சீனத்துடனான பற்றாக்குறையைத் தணிப்பதாக இருக்கிறது. அறிவித்தபடி காப்பு வரி விகிதங்களை டிரம்ப் அதிகப்படுத்தினால், அமெரிக்காவுடனான உபரியே கரைந்துவிடும் என்பதால், சீனத்துடனான வெளிவர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறை மேலும் பல மடங்காகி இந்தியாவின் பொருளாதார நிலையை  வலுவற்றதாக்கிவிடும்.

‘குவாட்’ அவ்வளவுதானா?

எல்லா அரசியல் கணக்கையும் தவிடு பொடியாக்கக் கூடிய இன்னொரு அம்சமும் இருக்கிறது: அதுதான் ‘குவாட்’ (QUAD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் - சில நாடுகளுக்கு இடையிலான - பாதுகாப்பு பேச்சு வார்த்தைக்கான அமைப்பு. இந்த அமைப்பில் உள்ள  அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ராணுவ நோக்கிலான உத்தியில் நிலவும் முன்னுரிமைக்கும், இந்தியாவின் முன்னுரிமைக்கும் நிச்சயம் பெரிய வேறுபாடு இருக்கிறது. ராணுவ ரீதியில் சீனம் மேலும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளாமல் தடுக்கும் அமைப்பாக ‘குவாட் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பும். கடல்வழி பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு, புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் உறுப்பு நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமைப்பாக ‘குவாட்’ இருக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். ஆனால் அதை சீனத்துக்கு எதிரான ராணுவக் கூட்டமைப்பைப்போல மாற்றும் முயற்சிகள் தெரிகின்றன. ‘சீன நலன்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் (ராணுவ) ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடு எதுவாக இருந்தாலும் அதற்கான விலையைத் தந்தே தீர வேண்டும்’ என்று எச்சரித்திருக்கிறது சீனா. பெருமளவுக்கு மூலதனத்தையும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அமெரிக்காவுக்கும், இடைநிலைப் பண்டங்கள், மூலதனப் பண்டங்கள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றும் சீனத்துக்கும் இடையில் சமநிலையிலான தோழமையுடன் இந்தியா பங்காற்ற வேண்டும். இந்திய நிலத்தில் கணிசமான பரப்பை ஆக்கிரமித்துள்ள சீனம், நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பக்கத்து நாடாகவும் இருக்கிறது. இதுவரை ‘குவாட்’ அமைப்பில் இந்தியாவின் பங்கேற்பு மிகவும் அளவாகவும், செயல்திட்டங்களுக்கு ஏற்பவுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள ‘வலதுசாரி சக்திகள்’ சீனத்துடன் இந்தியாவை மோதல் போக்கில் தள்ளிவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

இவை போக சுவாரசியமான இன்னொரு அம்சமும் இருக்கிறது: 2029 ஜனவரி 20-ஆம் நாளுடன் டிரம்பின் பதவிக்காலம் முடிந்துவிடும். சீன அதிபர் ஜி ஜின் பிங் அந்தப் பதவியில், தான் விரும்பும் வரையில் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. எதிலும் முரட்டுத்தனமாகவும், மொண்ணையாகவும் நடந்துகொள்வார் டிரம்ப். தந்திரமாகவும் ஓசைப்படாமலும் காரியங்களைச் செய்துவிடுவார் ஜி ஜின்பிங். மோடி அரசு இதுவரை கடைப்பிடித்துவந்த - உள்நாட்டுத் தொழில்களை வெளிநாட்டுப் போட்டிகளுக்குத் திறந்துவிடாத – காப்பு வரிக் கொள்கைகளால் எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை டிரம்பின் திடீர் சாகச அறிவிப்புதான் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதுவரை நடந்த பாதையிலிருந்து மோடி திரும்பியாக வேண்டும். அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் அமல்படுத்துவதிலும் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும். அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும், எதிர்க்கட்சிகளை ‘எதிரிகளாகவே’ கருதி நடத்தும் விரோத மனோபாவத்தைக் கைவிட வேண்டும்