ப.சிதம்பரம் எழுதும் முகநூல்
சிறப்புக் களம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |எதிர்கொள்ள வேண்டிய ‘பேர வியாபாரி’..!

" டிரம்புடன் தனக்குள்ள ‘நட்புறவு’ காரணமாக இந்தியாவுக்கு ஆதரவாக அவர் இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கலாம். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. "

ப. சிதம்பரம்

இங்கிலாந்து மன்னர், 1215-இல் நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்ட ‘மகா சாசனம்’தான் குடிமக்களுக்கான முதல் ‘உரிமைப் பேராவணம்’ (Magna Carta) என்று நம்பப்படுகிறது. உலகின் முதல் நாடாளுமன்றம் ஐஸ்லாந்து நாட்டில் ‘அல்திங்’ என்ற இடத்தில்தான் 1262-இல் ஏற்படுத்தப்பட்டது. முதலாவது ‘ஈரவை (இரண்டு அவை) நாடாளுமன்றம்’ பிரிட்டனில் 1341-இல் செயல்படத் தொடங்கியது.

உலகின் முதலாவது ‘எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம்’ 1600-இல் சான் மரினோ குடியரசில் இடம் பெற்றது. நீதித்துறை, நிர்வாகத்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையே அதிகாரங்களைப் பிரித்தளிக்கும் கொள்கை, பிரெஞ்சு மெய்யியலாளர் மான்டெஸ்கியூ 1748-இல் வெளியிட்ட ‘ஒப்புநோக்கிய சட்டங்கள்’ என்ற அரசியல் ஆய்வால் விளைந்தது. ஒரு நாட்டின் நீதித்துறைக்கான முழு அதிகாரமென்பது முதல் முறையாக, அமெரிக்காவில் 1789 செப்டம்பர் 24இல் உச்ச நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டது.

நல்லவைகளுக்கெல்லாம் ஆபத்து!

அரசமைப்புச் சட்ட வரலாற்றில் உருவாக்கிய, நல்லதும் பெரியதுமான பாடங்கள் அனைத்தும் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டன, அவற்றைப் பல நாட்டினர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உள்பட நகலெடுத்து தங்களுடைய அரசமைப்புச் சட்டங்களில் இடம் பெறச் செய்தனர். போர், வறுமை, நோய்கள் ஆகியவற்றால் மக்கள் துன்புறாதபடிக்கு, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று அமெரிக்கா தலைமையில் பல சுதந்திர – ஜனநாயக நாடுகள் உலக சமுதாயத்துக்கு உறுதியளித்தன. பெருமளவுக்கு அதில் வெற்றியும் பெற்றன. புதிய உலக முறைமையால் உள்நாட்டுச் சண்டைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றாலும், தொடர்ந்து எண்பது ஆண்டுகளாக உலகில் அதுவரை இருந்திராத சமூக – பொருளாதார வளர்ச்சியும், பெருமளவில் வளமும், முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் ‘அமைதியான வாழ்வும்’ கிட்டின.

எனவேதான், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் உலக நிகழ்வுகள் – அதிலும் குறிப்பாக 2025, ஜனவரி 20 (அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள்) முதலானவை, உலகையே சுயநலக் களமாகவும் சர்வாதிகாரக் கூடாரமாகவும் மாற்றிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.  

அமெரிக்க நாட்டின் அதிபர் அலுவலகம் என்பது ‘வரையறுக்கப்பட்ட அதிகாரங்களும்’ – ‘வரையறுக்கப்படாத பேரதிகாரங்களும்’ கொண்ட தனித்துவமானது. அதிலும் அந்த நாடு உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு என்பது அந்தப் பதவிக்கே பேரந்தஸ்தை வழங்கிவிடுகிறது. முன்னர் அதிபராக இருந்த வில்லியம் மெக்கின்லி அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி போர்ட்டோ ரிகோ, குவாம், பிலிப்பின்ஸ், ஹவாய் ஆகியவற்றை அமெரிக்காவுடன் சேர்த்து அதன் பரப்பெல்லையை விரிவுபடுத்தினார். உட்ரோ வில்சனும் பிராங்ளின் டி ரூஸ்வெல்ட்டும் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கியதல்லாமல், வெளிநாட்டவர்களையும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்களையும் கைது செய்யவும் நாடு கடத்தவும் தங்களுடைய நிர்வாக அதிகாரத்தையே முழுக்கப் பயன்படுத்தினர். 1973-இல் இயற்றப்பட்ட ‘போர் அதிகார சட்டப்படி’, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே லிபியா மீது போர் தொடுத்தார் பராக் ஒபாமா. வேறு பலரும் அமெரிக்க அதிபர் பதவிக்கான உச்சபட்ச அதிகார வரம்பு எவ்வளவு என்று காட்ட, அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான பல செயல்களைச் செய்து அவற்றுக்குரிய தண்டனைகளோ கண்டனங்களோகூட இல்லாமல் தப்பியிருக்கிறார்கள்.

உலகப் பொதுமுறைமைக்கு பேரபத்து!

உலகில் இதுவரை நிலவிவந்த பொது முறைமையை கடுமையாக சீர்குலைக்கும் வேலைகளில், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக பதவிக்கு வந்திருக்கும் டொனால்ட் ஜே டிரம்ப் இப்போது இறங்கியிருக்கிறார். எவ்வளவோ பிறழ்வுகளும் மீறல்களும் தவறான சாகசங்களும் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் கூட, சுதந்திரமான – ஜனநாயகம் நிலவும் பல நாடுகளுக்குத் தலைவராகவும், உலக முறைமையை ஆக்கப்பூர்வமாக நிலைநிறுத்தும் நாடாகவும் அமெரிக்காவைத்தான் அனைவரும் கருதிவந்துள்ளனர். சமாதானம், கல்வி வளர்ச்சி, சுகாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றைக் காக்க ஏராளமான உலக அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்த எட்டு வாரங்களுக்குள் அதிர்ச்சிகரமான பல அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிலிருந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிவாரணம், செயல் முகமையிலிருந்தும் (UNRWA) வெளியேறுவதாகவும் நிதி (சந்தா) தருவதை நிறுத்தப்போவதாகவும் எச்சரித்திருக்கிறார். உலகின் 12-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க அரசு அளித்து வந்த (யுஎஸ்-எய்ட்) சிறப்பு உதவிகளை ஒரேயடியாக நிறுத்திவிட்டார். அடுத்து வட அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள் அணியிலிருந்தும் (நேட்டோ), ஐரோப்பியக் கூட்டாளி என்ற நிலையிலிருந்தும் வெளியேறுவதாக அவர் அறிவிக்கக் கூடும்.

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் இடைவிடாத வற்புறுத்தலாலும் ஊக்குவிப்பாலும், அமெரிக்க அரசின் நிர்வாகக் கட்டமைப்பையே கலைக்கவும் - களையவும் முற்பட்டுவிட்டார். கூட்டரசுப் பணியிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை நீக்கிய டிரம்ப், கல்வித்துறையை முழுதாக மூடிவிடவும் நினைக்கிறார்.

டிரம்பின் அகராதியில், அமெரிக்காவின் நண்பர்களாக இருந்தவர்கள் (உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி) பகைவர்களாகவும் - பகைவர்களாக கருதப்படுபவர்கள் (ரஷ்ய அதிபர் புடின்) நண்பர்களாகவும் மாறுகின்றனர். அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா நாட்டை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். கிரீன்லாந்து நாட்டை, அமெரிக்காவுடன் சேருமாறு வெளிப்படையாகவே அழைத்திருக்கிறார், அத்துடன் ‘எந்த வழியிலாவது அதை அடைந்தே தீருவோம்’ என்றும் அறிவித்திருக்கிறார்.

எதிரிக்கும் (சீனா), நண்பனுக்கும் (இந்தியா) இடையே வித்தியாசம் எதையும் பார்க்க மறுக்கிறார் அதிபர் டிரம்ப். இரு நாடுகளுடனும் தொழில் – வர்த்தக பேரங்களைச் செய்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். மனை-வணிக வியாபாரியாகவே காலத்தைக் கழித்த அவர், ‘வாழ்நாள் முழுவதும் பேரம் பேசி நிறைய ஒப்பந்தங்களை செய்து அனுபவப்பட்டவன்’ என்று தன்னைப் பற்றி பெருமை கொள்கிறார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச வெள்ளை மாளிகைக்கு அழைத்துவிட்டு பிறகு அவமானப்படுத்தி மாளிகையைவிட்டே வெளியேற்றிவிட்டார்; டிரம்ப் விரும்பியபடி அரிய கனிமங்களை அமெரிக்காவுக்குக் குறைந்த விலையில் விற்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முடிவை எடுத்தற்காக ஜெலன்ஸ்கியைப் பாராட்டி, மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார், இதை ஒரு வகை ‘பதில் மரியாதை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகை சூழ்ந்துள்ள கருமேகங்கள்!

இப்படி தன் நாட்டின் சொந்த நலனை மட்டுமே கருதி, பேரம் பேசி ஆதாயம் காணும் ஒப்பந்தங்களைச் செய்வதிலேயே துடியாக இருக்கும் அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளால் உலகம் இனி எங்கே செல்லும்? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?

உலகைப் பொருத்தவரையில், சர்வாதிகார ஆட்சி நடத்தும் மூன்று பெரிய வல்லரசுகளின் தலைவர்கள் டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புடின், ஷீ ஜின்பிங் ஆகியோர் புதிய நட்புறவுக் கழகத்தை நிறுவுவார்கள். தங்களுடைய நாடுகளை விரிவுபடுத்த அவர்கள் பிற நாடுகளைக் கைப்பற்றுவார்கள். பனாமா கால்வாய், கனடா, கிரீன்லாந்து, காசா (பாலஸ்தீனம்) ஆகியவற்றின் மீது அமெரிக்கா ஒரு கண் வைக்கத் தொடங்கிவிட்டது. கிரீமியா, அப்காசியா தெற்கு ஆசேஷியா ஆகியவற்றை ஏற்கெனவே தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுவிட்ட ரஷ்யா, அடுத்து உக்ரைனையும் ஜார்ஜியாவையும்  சேர்த்துக் கொள்ள விரும்புகிறது. திபெத், ஹாங்காங் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக தன் நாட்டுடன் இணைத்துக் கொண்ட சீனம் அடுத்து தைவான், இந்தியாவின் முக்கியப் பகுதிகள், தென் சீனக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளைத் தனதாக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற ஆவலை பல முறை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது. இந்த மூன்று நாடுகளும் தங்களுக்கான உலகப் பகுதிகளைக் கூறுபோட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள அபாரமான கனிம வளங்களையும் பிற செல்வங்களையும் தங்களுக்கு உரியதாக்கிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தப் பார்க்கும்.  சீனத்தால் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் இருக்கிறது இந்தியா, அப்படி நேரும்போது அமெரிக்காவோ ரஷ்யாவோ இந்தியாவின் உதவிக்கு வராது.

அமெரிக்காவிடமிருந்துதான் அதிக அளவில் ராணுவ சாதனங்களை வாங்க வேண்டும் என்று இந்தியா இனி கட்டாயப்படுத்தப்படுமச். அத்துடன் குறைந்த இறக்குமதி வரி விதிப்பில் அதிக பொருள்களை அமெரிக்காவிடமிருந்துதான் கொள்முதல் செய்தாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ‘பகையுணர்வு கைவிடல்’ (Détente) ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து ‘குறைந்த விலையில்’ கச்சா பெட்ரோலிய எண்ணெய் கிடைக்காது.

‘பிரிக்ஸ்’ அமைப்பின் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளும்படி இந்தியாவிடம் கூறப்படும். ‘குவாட்’ அமைப்பின் சீன எதிர்ப்புணர்வு மங்கச் செய்யப்படும். பாகிஸ்தானும் வங்கதேசமும் தங்களுடைய ‘பொதுவான புரவலரான’ அமெரிக்காவுடன் மேலும் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும். காப்பு வரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை டிரம்ப் தீவிரப்படுத்தினால், உலக அளவிலேயே வர்த்தக உறவுகளும் பரிமாற்றங்களும் சீர்குலையும் இந்தியாவின் பொருளாதாரம் நாசமாக்கப்படும். ஜெர்மனியும் பிரான்ஸும் இதை உணர்ந்துவிட்டதைப்போல, இந்தியாவும் தனக்கான வழியைக் கண்டாக வேண்டும்.

 டிரம்புடன் தனக்குள்ள ‘நட்புறவு’ காரணமாக இந்தியாவுக்கு ஆதரவாக அவர் இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கலாம். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. அதிபர் டிரம்ப் சுயநலவாதி, கர்வம் பிடித்தவர், உலகப் பொருளாதாரம் குட்டிச்சுவராவது குறித்து அவர் கவலையே படமாட்டார். “ஐயோ உலகமே - நீ இன்னும் நான்கு ஆண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்!”