ஞாயிற்றுக்கிழமை தீபாவளி:
2026ம் ஆண்டிற்கான தீபாவளி நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளது. நான் சிறுவயதில் இப்படியான ஞாயிற்றுக்கிழமை தீபாவளிகளை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். பழைய நாட்காட்டியில் தேடினால் மூன்று தீபாவளிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடியிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால், அப்பொழுதெல்லாம் மறுநாள் விடுமுறை இருந்ததாக எனக்கு ஞாபகமில்லை; விடுமுறையானாலும் படித்துக்கொண்டிருந்திருப்பேன்.
2026ல் இந்தக் கட்டுரை பிரசுரமாகும் தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று ( நவம்பர் 9) அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு அவ்வளவு குஷி.
தீபாவளி என்றால் முதலில் மகிழ்ச்சி அடைவது குழந்தைகள் தான். புத்தாடைகளும், வெடிகளும், இனிப்புகளும் கூடுதலாக பள்ளி விடுமுறையும். அடுத்ததாக வியாபாரிகள், குறிப்பாக சாலையோர வியாபாரிகள். தீபாவளிக்கு முதல் நாள் ஆரம்பித்து தீபாவளி காலை வரை வியாபாரம் பார்ப்பார்கள். கையிலிருக்கும் பொருளை எப்படியாவது விற்றுவிட்டுப் பண்டிகையைக் கொண்டாடும் அவர்களது வாழ்வியல் மறக்கமுடியாத நாகரிகம். தீபாவளி பண்டிகையை முன் நிறுத்தி மக்களின் வாங்குதிறனைப் பலவழிகளில் ஊக்குவித்து நடக்கும் பொருளாதார நாகரிகம் அது.
அவர்களைத் தவிர குறிப்பாக மருத்துவமனைக்குள் தீபாவளிப் பண்டிகை எப்படியெல்லாம் இருக்கும் என்று கவனிக்க வேண்டும். சிறுவனாய் இருக்கும்பொழுது வெடி வைக்கும்பொழுது அவ்வளவு அறிவுரைகள் வந்துவிழும். அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், அண்ணன் அது போதாது என்று பக்கத்து வீடு எதிர்த்த வீடு என்று வெடிச்சத்தத்தை விட அறிவுரைகளின் குரல் ஓங்கி ஒலிக்கும். அவர்கள் பயமுறுத்தியபடியே அன்று இரவு தூர்தர்ஷன் செய்தியில் பட்டாசு வெடித்துக் காயம் பட்டவர்கள் பற்றி ஒளிபரப்புவார்கள். இப்பொழுதும் அப்படியானச் செய்திகளைக் காணலாம். அதற்கென்று தனி ' டூட்டி " போட்டு செவிலியர்களும் மருத்துவர்களும் அரசு மருத்துவமனைகளில் இருப்பார்கள் என்பதை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனக்கிருக்கும் மீச்சிறிய அனுபவங்களில் சிலவற்றை நினைத்துப்பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனை அது. வழக்கமாக ஓர் ஆன்ட்டிபயாடிக் ஊசி மருந்தை எங்கள் நிறுவனத்திடம் வாங்குவார்கள். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு மற்ற ஊர்களுக்கு லாரி வழியாகச் சேவை வழங்கமுடியாது என்பதால், வெளியூர் மருத்துவமனைகள் எல்லாம் முன் கூட்டியே தங்களுக்குத் தேவையான மருந்துகளைக் கைவசம் வைத்துக்கொள்வார்கள். அந்த மருத்துவமனையில் வழக்கத்தை விட அதிகமான நோயாளிகள் வந்துவிட இவர்களுக்குத் தேவையான ஆன்ட்டிபயாடிக் ஊசி தீபாவளிக்கு முதல் நாள் தீர்ந்துவிடுகிறது. அப்படித் தீர்ந்துவிடும் என்பதை மருந்தாளுனரால் கணிக்க முடியாத சூழ்நிலை அது. தீபாவளி தானே, யார் வரப்போகிறார்கள் என்று அவரும் தைரியமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுகிறார். ஆனால், தீபாவளிக்கு முதல் நாள் ஒரு நோயாளி அட்மிட் ஆக, மறுநாள் அறுவைச்சிகிச்சை என்று நேரம் குறிக்கிறார்கள். மருந்தாளுனருக்கு அழுத்தம் ஏற்பட்டு எனக்கு அலைபேசியில் அழைக்கிறார்.
நீங்கள் எவ்வளவு உயர் ரகமானப் பொருளை எல்லாம் விற்பனைக்குக் கொண்டுவாருங்கள், பிரச்னை இல்லை, வாடிக்கையாளன் கேட்கும் நேரத்தில் உங்களால் அதை விநியோகிக்க முடியவில்லை என்றால் உங்களால் விற்பனையில் சாதிக்க முடியாது.
மருந்து விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு இன்று தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் கதை சொல்வது விற்பனை அறம் கிடையாது. தீபாவளி அன்று இருசக்கர வாகனத்தில் முன் பக்கம் பெட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று மருந்தை விநியோகித்தால், ஒட்டு மொத்த மருத்துவமனையும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது, ஒரே ஒரு வித்தியாசம் செவிலியர்கள் வழக்கமான சீருடையில் இல்லாமல் சிலர் வண்ண நிற உடையில் இருந்தார்கள். செவிலியர் ஒரு தங்கை, "அண்ணா, தீபாவளியப்ப டிஸ்டர்ப் பண்ணிட்டோமாண்ணா?" என்றார்.
"எமர்ஜென்சி, ஆப்ரேஷன் னு சொல்றப்ப எப்படி வராம இருக்கமுடியும்" என்று கொஞ்சம் 'கிரிஞ்ச்' கலந்து பதில் சொன்னவன் தான் நான். ஆனால் எதார்த்தமும் அது தான்.
மருந்தை 'சப்ளை 'செய்துகொண்டிருந்த போதே அறுவைச்சிகிச்சைக்கு உரிய மயக்கவியல் மருத்துவர் காரிலிருந்து விரைந்து சென்று கொண்டிருக்க, அறுவைச்சிகிச்சை உடையில் உதவி செய்யும் செவிலியர் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தார்.
மருந்தாளுனரிடம் 'உங்களுக்குத் தீபாவளிக்குலாம் லீவு கிடையாதா?" என்றேன்.
'டூட்டி மாத்திக்குவோம் சார், இன்னைக்கு இன்னொருத்தர் லீவு கேட்டார். அவருக்குத் தலை தீபாவளி, அதுனால அவருக்கு லீவு கொடுத்துட்டு நான் வந்துட்டேன், சாயங்காலம் போய் கொண்டாடனும், நாலு வயசுப்பையன் ட்ரஸ் போட மாட்டுறானாம், இப்பத்தான் வீட்ல இருந்து ஃபோன் வந்தது, சாயங்காலம் போய் அவனோட வெடி வெடிக்கனும்' என்றார் .
எல்லாருமே பணத்திற்காகத் தான் வேலை செய்கிறார்கள், நான் கூட அன்றைய தினம் 'கிரிஞ்ச்' பதிலைத் தந்தாலும், மருந்து விற்றால் எனக்குப் பணம் வரும் என்று தான் ஓடியிருக்க வேண்டும். ஆனால், தீபாவளி, எனக்கு விடுமுறை, என் அலுவலக ஊழியர் விடுமுறை, அலுவலகத்தைத் திறக்க முடியாது, சப்ளை செய்ய ஆள் இல்லை போன்ற காரணங்களைச் சொல்ல எனக்கு வாய்ப்பு இருந்தது தான். மேலும், மாத வியாபாரத்தில் ஒரு சதவீதம் கூட இல்லை அன்றைய விற்பனை. என்னைப் போலவே அந்த மருந்தாளுனரும் இருக்கிறார், அவரைப் போலவே அந்தத் தங்கையும், அந்த மயக்கவியல் மருத்துவரும், அவர் பின் ஓடிய அந்த அறுவைச்சிகிச்சை சீருடையில் ஓடிய செவிலியரும் இருக்கிறார்கள்.
நாணயத்தின் இரு பக்கங்கள் போல, பணத்திற்காக மட்டும் வேலை பார்ப்பவர்களைப் போல , படிப்பிற்காகவும், சேவைக்காகவும் இங்கு வேலை பார்ப்பவர்கள் உண்டு.
நீங்கள் எதைக் தேடுகிறீர்களோ, அதைக் கண்டடைவீர்கள்.
இன்னொரு தீபாவளி பருவம் அது. தீபாவளிக்கு ஒரு வாரம் இருந்தது. அந்த மருத்துவமனைக்கு வேலை நிமித்தம் சென்றிருந்தேன். எழுபது வயதைத் தாண்டிய கணவன் மனைவி இருவரும் அந்த ஊரில் பிரபலமான மருத்துவமனையை நடத்திக்கொண்டு வந்தனர். அந்த ஆண் மருத்துவரைச் சுற்றி எப்பொழுதும் நான்கு நோயாளிகள் அமர்ந்திருப்பர். ஒவ்வொருவராக பக்கத்தில் இருக்கும் அறையில் வைத்துப் பரிசோதித்து கலந்தாலோசித்துவிட்டு மறுபடியும் அவருடைய அறையில் அமர்ந்து மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு அடுத்த நோயாளியைப் பார்க்க ஆரம்பிப்பார். சில மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்க்கும் நேரத்தின் இடைவெளியிலேயே மருந்து விற்பனைப் பிரதிநிதிகளைச் சந்திப்பதுண்டு.
அப்படி நான் சென்ற தருணம், என்னையும் எதிரே இருக்கும் நாற்காலியில் அமரச்செய்துவிட்டு, நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு இண்டர்காமில் அவரது மனைவி அழைத்து ஏதோ சொல்ல, " ஆமா, மறந்துட்டேன்ல..." என்றவர் சிரித்தபடி ஃபோனை கீழே வைத்தார்.
" வீட்ல நெட் வேல பாக்கல, " மேடம் திட்டுறா பழனி..." என்றார்.
எல்லா வீட்டிலயும் இது போலத்தான் நடக்கும் என்று நான் சொல்லவா முடியும். கேட்டுக்கொண்டேன்.
" OP வந்தாலே உலகத்த வீட்ட மறந்துரேனு மேடம் ஏசுறாப்பா.." என்றார் மருத்துவர்.
நான் மட்டுமல்ல, அங்கிருந்த மூன்று நோயாளிகளும் சிரித்தோம்.
" எந்த நெட் கம்பெனி னு சொல்லுங்க டாக்டர், கஷ்டமர் கேர் நம்பருக்கு நான் வேணும்னா கம்ப்ளைண்ட் பண்றேன்" என்றேன்.
" உனக்கு எதும் தொந்தரவு இல்லையே" என்றார்.
" நீங்க கொடுங்க டாக்டர், பாத்துக்கலாம்" என்று சொல்லியபடி அவரது எண்ணை வாங்கிக்கொண்டு ரிஜிஸ்டரும் செய்துவிட்டேன்.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன் மருத்துவர் அழைத்து சரி செய்துவிட்டார்கள் என்றும் இங்கிலாந்தில் மகள், மருமகன், பேத்தியுடன் தீபாவளி அன்று வீடியோ காலில் பேசவேண்டும் அது தான் அவர்களது அவசரமென்றும் கூறி நன்றி சொன்னார்.
சரியாக தீபாவளிக்கு முதல் நாள் அவரது வீட்டில் இணைய சேவை முடங்கிவிட்டது. பற்றாக்குறைக்கு அவரது மகள் இந்தியா வந்த போது இவர்களுக்கு வீடியோ கால் எப்படிச் செய்வது என்று வைத்துச்சென்ற லேப்டாப்பும் காலை வாரியது. மருத்துவர் அழைத்தார்.
"மொபைலில் பேசினால் பேசுனமாதிரி இருக்காதுப்பா, மேடம் அப்செட், நெட் கம்பெனி நம்பர் உன்ட இருக்கா?" என்று கேட்டார் .
சில நிமிடங்கள் கழித்து நானே அழைத்து, சரியாகிவிட்டதா என்று விசாரித்தால், தீபாவளி கழித்துத்தான் சரி செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று சொன்னார்.
எனக்கு மனது கேட்கவில்லை. அவர் சம்மதித்தால் தீபாவளியன்று நேரம் சொல்லுங்கள், என் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னேன். நான் வற்புறுத்திய பிறகு காலை 11 மணிக்கு வரச்சொன்னார்.
தீபாவளி காலை 11 மணி க்கு அவரது அந்தப் பெரிய பங்களாவின் ஹால் நடுவே லேப்டாப்பை வைத்து மொபைல் மூலமாக இணையம் பெற்று தயாராக்கிக்கொண்டிருந்தேன்.
மேடம் என்னருகே அமர்ந்திருந்தார். சார் ஒரு டீ சர்ட், ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு கொசு பேட்டை வைத்துக்கொண்டு என்னருகே கொசு பறந்ததினால் அதை அடித்துக்கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"உங்க டாக்டர ஸ்டெத்தோட, FORMAL லயே பாத்துட்டு இப்ப இப்டி பாக்க உனக்குச் சிரிப்பா இருக்குல" என்றார் அவரது மனைவி.
நான் பதில் சொல்வதற்குள் கணவர் பதில் சொன்னார்,
" பழனிக்குமார், எனக்கு வாரத்துல ஆறு நாள் லீவு ப்பா, ஹாஸ்பிடல் போயிருவேன், ஒரு நாள் தான் வொர்க் அது வீட்ல இருக்குற நாள்."
எவ்வளவு பெரிய தத்துவம். வேலையை விடுமுறையைப் போல மனதோடு இயைந்து செய்வது தான் அவரது வெற்றிக்குக் காரணமாகப்பட்டது.
ஒருவழியாக பேத்தியுடன் பத்து நிமிடம் வீடியோ காலில் பேசினார்கள். தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பும்பொழுது, " நவம்பர் டிசம்பர் காய்ச்சல் காலம்ப்பா, எங்கருந்தோ குழந்தைய தூக்கிட்டு வருவாங்க, மத்த மாசம்னா டூட்டி டாக்டர் போட்டுச் சமாளிச்சிரலாம், இப்ப நம்ம முகத்த பாக்கனும்னு சனங்க வந்து நிப்பாங்க, இத்தனை குழந்தைகள தவிக்கவிட்டுட்டு நான் அங்க போயி என் குழந்தையோட இருந்தாலும், மனசு முழுக்க இங்க தான் இருக்கும், அதான் போகல" என்றார்.
"உங்கட்ட இருந்து இந்த அர்ப்பணிப்ப கத்துக்கிறேன் டாக்டர் " என்றேன்.
" உனக்கும் வீட்ல திட்டு விழும் டா" என்று சிரித்தபடியே ஒரு ஸ்வீட் பாக்ஸைத் தந்தார்.
அர்ப்பணிப்புகள் இனிப்புகளைத் தானே தரும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
அர்ப்பணிப்புகள் தொடரும்....