model image chatgpt
சிறப்புக் களம்

காவிரி விவகாரம் | தமிழகம் - கர்நாடகம் இடையே என்னதான் சிக்கல்? நூற்றாண்டுகால வரலாறு ஓர் அலசல்!

காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கையும் இந்த விவகாரத்தை மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

போத்திராஜ்

தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே நிலவிவரும் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்னை இன்று, நேற்று நடப்பவை அல்ல. 125 ஆண்டுகளுக்கும் மேலாக இரு மாநிலங்களுக்கும் இடையே நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்னை இருந்து வருகிறது.

காவிரி நிதி வரலாறு

கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தலைக்காவிரியில்தான் காவிரி நிதி உற்பத்தியாகிறது. 802 கி.மீ நீளமுள்ள காவிரி நதி, தமிழகத்துக்குள் நுழைவதற்கு முன் 320 கி.மீ பயணத்தை முடித்து, கிழக்கு நோக்கி 416 கி.மீ பயணித்து, பூம்புகாரில் உள்ள வங்கக்கடலில் கலக்கிறது.

காவிரி விவகாரத்தின் சுருக்கமான வரலாறு

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, மைசூரு சமஸ்தானதுக்கும், மதராஸ் மாகாணத்துக்கும் இடையே காவிரி நதி நீரைப் பிரி்த்துக்கொள்வது தொடர்பாக முதல் ஒப்பந்தம் 1892ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் 1924ஆம் ஆண்டு 2ஆவது ஒப்பந்தம் கையெழுத்தானது. சுதந்திரத்துக்குப்பின், மதராஸ் மாகாணம், ஆந்திரா, தமிழகமாகப் பிரிந்தது. காவிரிப் படுகையில் இருக்கும் பகுதி கேரளா, புதுச்சேரியாக மாறியது. 1924ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு காலாவதியாகியது. அடுத்த ஒப்பந்தம் முடிவாக இருந்த நிலையில், கர்நாடக அரசு பின்வாங்கியது. சுதந்திரத்துக்கு முன் செய்யப்பட்ட ஒப்பந்த நதிநீர் பங்கீடு செல்லாது. அந்த ஒப்பந்தம், ஒருசார்பாக மதராஸ் மாகாணத்துக்குத்தான் சாதகமாக இருந்தது, ஆதலால், பேச்சுவார்த்தை மூலம் புதிய ஒப்பந்தம் வாயிலாகப் பங்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியது. ஆனால், தமிழக அரசு தரப்பில் 30 லட்சம் ஏக்கர் நிலங்கள், காவிரி நதிநீரை நம்பி பாசனத்துக்காக இருக்கிறது, ஒப்பந்தத்தில் எந்த மாற்றம் செய்தாலும் அது விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கும், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் நிற்கதியாகும் என்று வாதிட்டது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சு நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

supreme court

1990ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு, காவிரி நீர் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட்டது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நீர் நடுவர் தீர்ப்பாயம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “தமிழகத்துக்கான நீரின் சராசரி அளவு 10 ஆண்டு காலக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால், இதை கர்நாடகா நியாயமற்றதாகக் கருதினாலும், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியதால் அதற்குக் கட்டுப்பட்டது. 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயம், இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 419 டிஎம்சி நீரும், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி நீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் ஒதுக்கி அறிவித்தது. அது மட்டுமல்லாமல், மாதந்தோறும் எவ்வளவு நீரை தமிழகத்துக்குத் திறக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவித்தது.

2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு, “நடுவர் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கக் கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 3 மாநிலங்களும் தொடர்ந்த மேல்முறையீட்டில், 2018, பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “தமிழகத்துக்கு 404.25 டிஎம்சி நீரும், கர்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி நீரும் ஒதுக்கியது, மற்ற மாநிலங்களுக்கான அளவை மாற்றாமல் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு 2018ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அமைத்தது. அதன்பின் 3 வாரங்களுக்குப்பின், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு உருவாக்கப்பட்டது. இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. குழுவிடமும், உச்ச நீதிமன்றத்திடமும் பல மறுஆய்வு மனுக்களும் விளக்கக் கோரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கையும் இந்த விவகாரத்தை மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரம் கடந்து வந்த பாதை

1892: பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த சென்னை மாகாணத்திற்கும், மைசூரு சமஸ்தானத்திற்கும் இடையே காவிரி நதிநீர்ச் சிக்கல் தொடங்கியது. பாசன வசதிகளை மேம்படுத்த மைசூரு சமஸ்தானம் முன்வைத்த திட்டத்தால் தமிழகத்திற்கான நீர்வரத்து பாதிக்கப்படும் என்று சென்னை மாகாணம் வாதிட்டு அதை எதிர்த்தது.

  • 1913-1916: 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணைகட்ட அனுமதிகோரி மைசூரு சமஸ்தானம், சென்னை மாகாணத்திற்குக் கடிதம் எழுதியது. இது, இரு மாநிலங்களுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மைசூரு சமஸ்தானதுக்கு பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்தது.

  • 1924: மைசூரு சமஸ்தானம் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்ட மைசூரு - சென்னை மாகாணம் இடையே ஒப்பந்தம் முடிவானது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும், அதன்பின் மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

  • 1929: கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட மேற்கொள்ளப்பட்ட 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தெளிவுபடுத்தி, சென்னைக்கு எவ்வளவு நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பதைத் துல்லியமாக வரையறுக்கவும் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை 1931-லும், மேட்டூர் அணை 1934-லும் பயன்பாட்டுக்கு வந்தன.

  • 1971: 1971ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு தரப்பில், காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயத்துக்கு மாற்றக் கோரி வலியுறுத்தப்பட்டது.

  • 1974: மதராஸ் மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானம் இடையே செய்யப்பட்ட 50 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

  • 1976: 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தமிழகத்துக்கு 489 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 177 டிஎம்சி மற்றும் கேரளா 5 டிஎம்சி என நீரைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். உபரி நீரில் 53% உரிமை கர்நாடகாவுக்கும், 30 % தமிழகத்துக்கும், மீதமுள்ள நீர் கேரளாவுக்கும் ஒதுக்கப்பட்டது. மத்திய நீர் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவரின் தலைமையில் 'காவிரி ஆணையம்' அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது; ஆனால், அரசியல் காரணங்களால் இந்தக் குழு ஒருபோதும் அமைக்கப்படவில்லை.

  • 1986: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

  • 1990: கடந்த 1970களில் இருந்து தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீதிபதி சித்தாதோஷ் முகர்ஜி தலைமையில் காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் மே மாதம் உத்தரவிட்டது.

  • 1990: 1990, ஜூன் 2ஆம் தேதி காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயம் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.

ஜெயலலிதா
  • 1991, ஜூன் 25: காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயம் அளித்த இடைக்கால உத்தரவில் தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும், கர்நாடக அரசு பாசன வசதி பெறும் விவசாய நிலத்தை 11 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகப்படுத்தக்கூடாது என்று தெரிவித்தது. இது இரு மாநிலங்களிலும் பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது.

  • 1991, டிசம்11: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்து, தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உறுதிசெய்தது. அந்தத் தீர்ப்பும் மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது.

  • 1993, ஜூலை: காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

  • 1998, ஆகஸ்ட்: காவிரி நதிநீர் சிக்கல் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவைச் செயல்படுத்த காவிரி நிதிநீர் ஆணையத்தை மத்திய அரசு அமைந்தது.

  • 2002, செப்-8: காவிரி நதிநீர் ஆணையம் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் கூடி, தமிழகத்துக்கு 0.8 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு அதிருப்தி தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்தது.

  • 2002, செப்-18: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிராக, கர்நாடக விவசாயி ஒருவர் கபிணி அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வாஜ்பாய்
  • 2003, அக்.12: கர்நாடகா, தமிழக மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சிக்கல்களில் தமிழகத்திற்கு உதவ இயலாத நிலையையும், தங்கள் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், காவிரி நதிநீர் ஆணையம் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதில் மத்திய அரசு போதிய முனைப்புடன் செயல்படவில்லை என மத்திய அரசின் நீர் வளத் துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.

  • 2006, ஏப்.13: தமிழக, கர்நாடக விவசாயிகளுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 6 சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

  • 2007, பிப்5: 16 ஆண்டுகளுக்குப்பின், காவிரி நதிநீர் சிக்கல் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதில் 1892, 1924 ஒப்பந்தங்களையும் தீர்ப்பாயம் நிறுத்திவைத்தது. இறுதித் தீர்ப்பில் கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, தமிழத்துக்கு 419 டிஎம்சி , கேரளாவுக்கு 30 டிஎம்சி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  • 2007, மார்18: காவிரி நதிநீர் சிக்கல் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிடக் கோரி ஒருநாள் உண்ணாவிரதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடைபிடித்தார்.

  • 2012, மே 19: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  • 2012, செப்.19: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதல்முறையாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டியது. தமிழகத்துக்கு பில்லிகுண்டுவில் 9ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். ஆனால், இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இருவரும் ஏற்க மறுத்துவிட்டனர்.

  • 2013 பிப்.29 : காவிரி நீர் சிக்கல் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

  • 2013, மார்ச் 19: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

மன்மோகன் சிங்
  • 2013, மே10 : காவிரி நதி நீர் முறைப்படி திறக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு சிறப்புக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • 2013, மே 28 : காவிரி நதிநீர் சிக்கல் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றாததால், ரூ.2,480 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

  • 2013, ஜூன்1 : மத்திய நீர்வளத்துறை செயலர் காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்தி தமிழகத்துக்கு முறையான பங்கு நீர் வழங்கப்படுகிறதா என கண்காணிக்க உத்தரவிட்டார்.

  • 2013, ஜூன் 15: தமிழக முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தை அணுகி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  • 2013, செப்.8 : காவிரியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது, குறிப்பாக, நீர்மின் நிலையங்களை அமைக்க தமிழகத்தின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும், மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் தலையிட முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

  • 2014, ஜூலை : புதுடெல்லியில் காவிரி நதிநீர் சிக்கல் தீர்ப்பாயம் 3ஆவது முறையாகக் கூடியது. அப்போது, 2007, பிப்ரவரி 5ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நீர் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி 3 மாநிலங்களும் மனுத் தாக்கல் செய்தன.

  • 2016, செப்.5 : தமிழகத்துக்கு அடுத்த 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

  • 2017, ஜன.10 : 2012-13ஆம் ஆண்டில் காவிரி நீர் திறந்துவிடப்படாததால் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு ரூ.2,500 கோடி இழப்பீடு கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் விசாரிக்கப்படவுள்ள சாட்சிகளின் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • 2017, செப்.20 : காவிரி நதிநீர் தீர்ப்பாயம் 2007இல் அளித்த நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 3 மாநிலங்களும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

  • 2018, பிப்.16 : உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “கர்நாடகவுக்கு 284 டிஎம்சியும், தமிழகத்துக்கு 2007இல் தீர்ப்பாயம் வழங்கிய அளவில் இருந்து 14.75 டிஎம்சி குறைத்து, 404.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.

  • 2023, ஆகஸ்ட் : டெல்டா பகுதியில் கருகும் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் தேவையைக் கருதி, தினசரி 24,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு தமிழக அரசு கர்நாடகாவைக் கேட்டுக்கொண்டது. ஆனால், நீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி கர்நாடகா அதற்கு மறுத்துவிட்டது

  • 2023, செப் : தமிழகத்துக்கு தினசரி 5 ஆயிரம் கனஅடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிடுமாறு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகா மீறியதாகக் குற்றம்சாட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தது. இதையடுத்து, மேலாண்மை ஆணையத்திடம் மன்னிப்புக் கோரி 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது.

  • 2025 நவ.13: மேகதாது அணைத் திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவை விரிவான திட்ட அறிக்கையை மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.