சிறப்புக் களம்

கலப்பின பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாமா?

கலப்பின பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாமா?

Sinekadhara

இயற்கையாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் உடலுக்கு நல்லது. அதைத் தவிர ரசாயன உரங்கள் போட்டு வளர்த்த செடிகள் மரங்களைப் போலத்தான் கலப்பு இன தாவரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு தீமை விளைவிக்கும் என பெரும்பாலும் கூறக் கேட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக விதையில்லா கனிகளைப் பார்க்கும்போது அதில் எந்த சத்தும் இருக்காது என உடனே கூறிவிடுவார்கள்.
ஆனால் ஹைப்ரிட் என்று சொல்லப்படுகிற அல்லது கலப்பின உணவுகள் உண்மையிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான்.

கலப்பின தாவரங்கள் என்னவென்று தெரிந்தால் இப்படி சொல்லமாட்டார்கள். நெருங்கிய தொடர்புடைய அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தாவரங்களிடையே குறுக்கு மகரந்தச் சேர்க்கை நடைபெறும்பொழுதுதான் இந்த கலப்பினமாக்கல் நடைபெறுகிறது. இது இந்த டெக்னாலஜி உலகில்தான் நடக்கிறது என்றால் அதுவும் இல்லை. பல ஆண்டுகாலமாக இயற்கையாகவே நடந்துவருகிறது.

கலப்பின உணவுகள் சத்துமிக்கவையா?

இயற்கையாக விளையும் தாவரங்களைப் போன்ற சத்தான காய்கறிகளைக் கொடுக்கமுடியுமா என்றால் அதைவிட சிறப்பான முறையில் சத்தான உணவுகளைப் பெறலாம். விஞ்ஞானிகள், மண், சூரிய வளங்கள் மற்றும் வேர் அமைப்புகளை சிறப்பாக பயன்படுத்தி உருவாக்குவதால் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உருவாகின்றன. இதனால் இவை உடல் ஆரோக்யத்திற்கு கேடு விளைவிக்காது.



இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

ஒவ்வொரு சாகுபடியின் இறுதிலும் பன்மடங்கு உற்பத்தியைப் பெறமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கூடுதல் பராமரிப்பு மற்றும் தயாரிப்பின் காரணமாகத்தான் இதற்கு விலை சற்று அதிகம். மற்றபடி இந்த காய்கறிகளையும் பிற காய்களைப் போல நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சமைத்து சாப்பிடவேண்டியதுதான். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

இந்த கலப்பின வகைகள் மட்டும் இல்லாதிருந்தால் ப்ளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி கலப்பில் உருவான டேபெர்ரி, முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி கலப்பில் உருவான கோஸ், ப்ளம் மற்றும் பாதாமி கலப்பில் உருவான ப்ளூட் போன்ற பழங்களை நான் ருசித்திருக்க முடியாது. இவை உலகளவில் பலராலும் பாராட்டப்பட்டவை.

காலே மற்றும் ப்ரக்கோலியிலிருந்து உருவாக்கப்பட்ட ஊதாநிற காலிஃப்ளவரில் இருக்கும் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஊதா நிறம் அதிகளவு ஆன்டிஆக்ஸிடண்டினால் வருகிறது. இது இதயநோய் மற்றும் புற்றுநோய்க்கு மருந்தாகவே சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வர நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். மூளையின் ஆரோக்யத்தையும் மேம்படுத்தும்.

இதுபோன்ற தாவரங்கள் சத்துமிக்கவையாகவும், ஆரோக்யம் நிறைந்தவையாகவும்தான் இருக்கிறது. இனிமேல் ஹைப்ரிட் உணவுகளைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.