நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபோது அதற்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இருபெரும் தேசியக்கட்சிகளுக்கு மாற்றாக, அகாலி தளம் போன்ற பாரம்பரிய மாநிலக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி மாற்று சக்தியாக உருவெடுத்திருந்தது. டெல்லியில் ஆம் ஆத்மியின் தொடர் வெற்றி இமயம் என்றால் பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றியை சிகரமாகச் சொல்ல முடியும்.
முதல்வராகப் பகவந்த் சிங் மான் பொறுப்பேற்றபோது அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஏராளம். அவரைக் குடிகாரனாகச் சித்திரித்து இணையத்தில் எழுந்த ட்ரோல் தனி ரகம். ஆனால், நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிலைமை மாறியிருக்கிறது. பஞ்சாபிகளின் இதயத்தில் இடம் பெற்றுள்ள முதல்வர் பகவந்த் சிங் மான், பாப்புலாரிட்டியில் ஆம் ஆத்மியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்கிறார்கள். என்னதான் நடந்தது?
கடந்த பத்தாண்டுகளாகப் பஞ்சாப் மாநிலத்தின் முக்கியமான பிரச்னையாக இருப்பது, போதைப் பொருள் நடமாட்டமும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும்தான். வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கான பிரச்னைகள் தொடர்ந்தாலும் போதைப் பொருள் அதிகரிப்புதான் மாநிலம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட விஷயம். அவற்றைத் தடுப்பதிலும், கண்காணிப்பதிலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கும் பெரிய சவால் காத்திருந்தது. மூன்று ஆண்டுகள் தட்டுத் தடுமாறி, நான்காவது ஆண்டில் கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது.
முதல் கட்டமாகப் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கவும், போதைப்பொருள் நடமாட்டத்தை முடக்கவும் மாநிலம் முழுவதும் 35 சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 ஆயிரம் பேர் கைது செய்யப்படுகிறார்கள். 12 ஆயிரம் வழக்குள் அமர்வு நீதிமன்றங்களால் விசாரிக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே தயக்கம் காட்டும் மாநில அரசுகளுக்கு மத்தியில் ஆம் ஆத்மியின் வெளிப்படையான நடைமுறை, வரவேற்கப்பட வேண்டியது. போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கூட விசாரணை சிக்கலாகிவிடும் என்பதால் அது குறித்து விஷயங்களை மறைக்கும் முயற்சிகள்தான் வழக்கத்தில் இருக்கின்றன. வழக்குப் பதிவு செய்வதோடு விசாரணையையும் துரிதப்படுத்துவதற்காகச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது என்னும் ஆம் ஆத்மி அரசின் முடிவு, ஒரு புதிய முன்னுதாரணம்.
போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே தயக்கம் காட்டும் மாநில அரசுகளுக்கு மத்தியில் ஆம் ஆத்மியின் வெளிப்படையான நடைமுறை, வரவேற்கப்பட வேண்டியது.
இன்னொரு பக்கம், போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளையும் ஆம் ஆத்மி அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அமிர்தசரஸ் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் எல்லை தாண்டி வந்த ராக்கெட் லாஞ்சர், ட்ரோன் உள்ளிட்ட சட்ட விரோத ஆயுதங்கள் தவிர ஏராளமான கிலோ ஹெராயின், அபின், மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டுக் கூட்டாளிகளுடன், உள்ளூர் குற்றவாளிகள் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
அடுத்து பொது விநியோக திட்டங்களிலும் ஆம் ஆத்மி கட்சி, ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பணமோ, பரிந்துரையோ தேவையில்லை என்கிற அடிப்படையில் (No Cash, No Farmaish) மாநிலம் முழுவதும் 10 லட்சம் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடைக்குப் போகும்போது கையில் பணமோ, ரேஷன் அட்டை எடுத்துச் செல்லவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய போனில் வந்துள்ள குறுஞ்செய்திகயை காட்டினால் போதுமானது.
வீட்டிற்கே நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகிப்பதுதான் அடுத்தக் கட்ட திட்டம். ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச கோதுமையுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 'மேரி ரசோய்' (எனது சமையலறை) ரேஷன் தொகுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்வதிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதிகாரிகளால் வீடு வீடாகச் சென்று சரிபார்க்கப்பட்டு ரேட்டிங் தரப்படும். போதுமான ரேட்டிங் இல்லாத குடும்பங்கள், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு, பின்னாளில் மீண்டும் பரிசீலிக்கப்படும்.
ஆம் ஆத்மி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், தேர்தலுக்குக் கைகொடுக்குமா? இவை அனைத்துமே ஆட்சிக்கு வந்து நான்காவது ஆண்டில் கொண்டு வரப்பட்டவை. முதல் மூன்று ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். இன்று மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி செல்வாக்கு பெற்றிருப்பதற்குக் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும், எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தங்களும்தான் காரணம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழல், ஆம் ஆத்மிக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 13 நாடாளுமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றிப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சி, 3 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
பஞ்சாப் மாநில தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாகக் கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்ளாமல் அனைத்து கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் சரிசமமான வாக்கு வங்கி இருக்கிறது. இரு கட்சிகளுமே 26 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். ஆனால், நான்கு முனைப்போட்டி என்பதாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி இருந்த காரணத்தாலும் காங்கிரஸ் கட்சியால் 7 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாகத் தேர்தல்களைச் சந்திக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு. சிரோமணி அகாலி தளமும், பாஜகவும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. நகரங்களில் பாஜகவுக்கும் கிராமங்களில் சிரோமணி அகாலி தளத்திற்கும் நல்ல செல்வாக்கு உண்டு. இந்தியா கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் ஏக பொருத்தம். இரண்டில் எந்தக் கூட்டணி வலுவான கூட்டணியோ அதற்குத்தான் வெற்றி வாய்ப்பு என்கிறார்கள்.
2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட 'வோட் வைப்' கருத்துக்கணிப்பின்படி, ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜகவை விடச் சற்றே முன்னிலையில் உள்ளது. இரண்டு கட்டங்களாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் ஆம் ஆத்மியும் இரண்டாமிடத்தில் காங்கிரஸ் கட்சியும் 3.8% வித்தியாசத்தில் இருந்தன. இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பில் 5.9% வித்தியாசம் பதிவாகியுள்ளது.
சமீபத்திய அதிரடி நடவடிக்கைகள், ஆம் ஆத்மி அரசுக்குப் பெருமளவில் கைகொடுத்துள்ளன. ஆட்சிக்கு எதிரான சொற்ப வாக்குகளையும் காங்கிரஸ், அகாலி தளம், பாஜக பிரித்துவிடுவதால் ஆம் ஆத்மி வலுவான நிலையில் இருக்கிறது.
பகவந்த் மான் செல்வாக்கு, அவரது கட்சியின் செல்வாக்கை விட மிஞ்சி நிற்கிறது.
அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்பதில் 36% ஆதரவோடு பகவந்த் மான் முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகச் சரண்ஜித் சிங் சன்னி 19% ஆதரவோடு இரண்டாமிடத்திலும் அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதல் 14% ஆதரவுடன் மூன்றாமிடத்திலும் பாஜகவின் கேவல் சிங் தில்லான் 10% ஆதரவோடு நான்காமிடத்திலும் இருக்கிறார்கள்.
சமூக ரீதியாகப் பார்க்கும்போது பஞ்சாப் அரசியலில் எந்த மாற்றமும் இல்லை. 45% தலித் வாக்காளர்களின் ஆதரவு, ஆம் ஆத்மி பக்கமுள்ளது. ஜாட் சீக்கியர்களிடையே காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன. நகரங்களில் பாஜகவும், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் செல்வாக்கோடு தொடர்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் வோட் சோரி பிரச்சாரம், பெரிய அளவில் எடுபட்டுள்ளது. ஆனால், அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு ஆம் ஆத்மி முதலிடத்தில் நிற்கிறது.
பகவந்த் மான் முதல்வராகத் தொடரவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கேள்வியாக இருக்கப்போகிறது. அதற்கேற்ப, காங்கிரஸ் கட்சியும் அவர் மீதான விமர்சனத்தில் கடுமையைக் காட்டுகிறது. முதல்வருக்கு எதிரான தாக்குதலில் ராகுல் காந்தியே களமிறங்கிவிட்டார்.
பகவந்த் மான், டெல்லியில் இருந்த காலத்தில் நாடாளுமன்றத்திற்குக் காலையில் வந்ததும் நன்றாகப் பேசுவார். ஆனால், 11 மணிக்கு பின்னர் அவரது பேச்சுத் தெளிவில்லாமல் போய்விடும். அவரிடமிருந்து மது வாடை வரும். மது அருந்தக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால், போதைப் பொருளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்க எடுக்கவேண்டுமென்றால் உங்களுடைய முதல்வர் தினமும் மாலையில் போதையில் இருக்கக்கூடாது என்றார், ராகுல் காந்தி. நியாயமான விஷயம்தான்!