கட்டுரையாளர்: போத்தி ராஜ்
ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் நீரிணையைக் மூடிவிட்ட நிலையில், அடுத்ததாக, 'பாப் எல் மந்தீப் நீரிணை'யை மூட காய்நகர்த்தி வருகிறது. ஹார்முஸ் நீரிணையை மூடியதற்கே உலக எண்ணெய் வர்த்தகம் கொதித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கடுமையாக உயர்ந்துவிட்டது. இதில் பாப் எல் மந்தீப் நீரிணையை ஈரான் குறிவைத்தால், செங்கடல், ஏடன் வளைகுடா, அரபிக்கடல் வழியாகச் செல்லும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வர்த்தகமும் முடங்கும். பாப் எல் மந்தீப் நீரிணை எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன, அந்த நீரிணையை ஈரான் மூடினால் என்ன பாதிப்பு ஏற்படும், உலகப் பொருளாதாரம் எவ்வாறு மாறும் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே தாக்குதல் தொடங்கியபோது, 3 மாதங்களைக் கடந்து நடந்தது. இந்தப் போர் கடந்த ஜூன் 18ஆம் தேதி முடிவுக்கு வந்து, இரு நாடுகளும் 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தன. ஆனால், இந்த ஒப்பந்தம் 20 நாட்கள் மட்டுமே நீடித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது, ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்டொனால்டு ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணையில் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்குப் பதில் அளித்த ஈரான், “ஹார்முஸ் நீரிணை வழியே செல்லக்கூடிய அனைத்துக் கப்பல்களும், ஈரானை ஒட்டிய கடல் வழியேதான் செல்ல வேண்டும், அவ்வாறு செல்லும் கப்பல்களுக்குத்தான் பாதுகாப்பு அளிக்க முடியும்” எனத் தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்” எனவும் அறிவித்தார்.
இதற்குப் பதிலடியாக, “மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா தலையீட்டை நிறுத்தும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்படும், கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்படாது” என்று ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்தது. இதையடுத்து மீண்டும் போர் தொடங்கி, ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா தீவிரத் தாக்குதல் நடத்திவருகிறது,
இதற்கு பதிலடியாக ஜோர்டான், குவைத், பஹ்ரைனில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. ஹார்முஸ் நீரிணை அருகேயும், ஈரானிய கடற்பகுதி அருகே 12க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குவோம் என அமெரிக்க ராணுவம் மிரட்டியது.
இதற்குப் பதிலடியாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையில், “செங்கடல், ஏடன் வளைகுடா, அரபிக்கடல் பகுதிகளை இணைக்கும் பகுதிகளை மூட வேண்டியிருக்கும். அமெரிக்காவுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் உதவும் அனைத்து ஏற்றுமதி தளங்களையும் நாங்கள் மூடுவோம்” என எச்சரித்துள்ளது.
சிவன் கோயிலா.. கல்லறையா? எழுந்த சர்ச்சைகள்.. பாய்ந்த வழக்குகள்.. தாஜ்மஹாலைச் சுற்றி நடந்தது என்ன?
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ஈரானின் எரிசக்தி, உள்கட்டமைப்பு ஆகியவை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் கடல் போக்குவரத்தை மூடுவதற்குத் தயாராக இருங்கள்” என்று ஏமனின் ஹவுதி அமைப்பை ஈரான் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் எரிசக்தி, உள்கட்டமைப்பு ஆகியவை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் கடல் போக்குவரத்தை மூடுவதற்குத் தயாராக இருங்கள்ராய்ட்டர்ஸ்
இந்த வழித்தடத்தை மூடினால் உலக எண்ணெய் வர்த்தகப் போக்குவரத்துக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். பாப் எல் மன்தீப் நீரிணையை ஒட்டிய பகுதியில் வரும் அமெரிக்க ஆதரவுக் கப்பல்கள், வேற்றுநாட்டு சரக்குக் கப்பல்களை தாக்க ஹவுதி அமைப்பினரும் ஏவுகணைகள், ட்ரோன்களை குவித்து வருகிறார்கள்.
ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டது, அப்பகுதியில் சரக்குக் கப்பல்கள் ஏதேனும் சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மற்றொரு முக்கிய வழித்தடமான, செங்கடல், அரபிக்கடலை இணைக்கும் பாப் எல் மன்தீப் நீரிணையையும் மூடினால், மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து எந்த கச்சா எண்ணெய்யும் உலக நாடுகளுக்குச் செல்வதில் பெரிய சிக்கல் ஏற்படும், உலகளவில் அடுத்த சில வாரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்படலாம்.
பாகிஸ்தானிலிருந்து விடுதலை! ‘பலுசிஸ்தான் தனி தேசம்’ அங்கீகரிக்கப்படுமா? இந்தியா, சீனா நிலை என்ன?
பாப் எல் மன்தீப் என்பது ’துயரத்தின் கதவுகள்’ என அரபியில் அழைக்கப்படுகிறது. ஏமன், அரேபிய தீபகற்பம், ஜிபோட்டி, எரிட்ரியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் கப்பல் போக்குவரத்தின் நெரிசலான பகுதியாக பாப் எல் மன்தீப் நீரிணை இருக்கிறது. மத்திய தரைக்கடல் வழியாக செங்கடல், ஏடன் வளகுடா, இந்தியப் பெருங்கடல், சூயஸ் கால்வாய் ஆகியவற்றை இணைக்கும் பகுதியாக பாப் எல் மன்தீப் நீரிணை இருக்கிறது.
பாப் எல் மன்தீப் நீரிணை மிகக்குறுகிய பகுதி. இது, மொத்தமே 26 கிலோமீட்டர் (14 கடல் மைல்) அகலம்தான். இதனால், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்துக்கு உள்ளே வரவும், வெளியே செல்லும் கப்பல்களுக்கு 2 மைல் அகலம் மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, இந்த வழித்தடம் மூடப்பட்டால் இந்த வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள், ஆப்பிரிக்காவின் தென்கடற்பகுதியைத் தொட்டுத்தான் செங்கடல் செல்ல முடியும். இது கப்பலுக்கான எரிபொருள் செலவையும் அதிகப்படுத்தும், அதிக நாட்களும் செலவாகும். பாப் எல் மன்தீப் நீரிணை வழியாக தினசரி சராசரியாக 80 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதில் பாதிக்கு மேற்பட்ட கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கும், மற்றவை சீனா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பாரசீக வளைகுடாவிலிருந்து சூயஸ் கால்வாய் மூலம் குழாய்வழி வழியாக செல்லும் பெரும்பாலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகள் பாப் எல் மன்தீப் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 2ஆவது முக்கியமான நீர்வழித்தடமாக பாப் எல் மன்தீப் நீரிணை இருக்கிறது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 10 முதல் 12 சதவீதம் இந்த வழியாகவே நடக்கிறது. அது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் சர்வதேச, பிராந்திய மற்றும் கடல்சார் பாதுகாப்பில் இந்த நீரிணை முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் உலக நாடுகளின் தகவல் தொடர்புக்காகப் பயன்படும் கடலுக்கு அடியில் செல்லும் கண்ணாடி இழைக் கேபில்கள், பவர் கேபிள்கள் இந்தக் கடற்பகுதி வழியே செல்கின்றன.
பாப் இன் மன்தீப் இப்போது ஏமனில் உள்ள ஹவுதி புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இந்த ஹவுதிக்களை ஈரான் கட்டுப்படுத்தி வருகிறது. ஆதலால், மறைமுகமாக இந்த நீரிணையையும் ஈரான்தான் கட்டுப்படுத்துகிறது. ஏற்கெனவே செங்கடல் வழியாகச் செல்லும் ஏராளமான சரக்குக்கப்பல்களை அடிக்கடி தாக்குவதை ஹவுதி படையினர் வழக்கமாக வைத்துள்ளனர். இப்போது ஈரான் கொம்பு சீவிவிட்டிருப்பதால், அப்பகுதி வழியே செல்லும், எண்ணெய்க் கப்பல்கள், எல்என்ஜி டேங்கர் கப்பல்கள், எல்பிஜி டேங்கர் கப்பல்கள், சரக்குக் கப்பல்களை இனி தீவிரமாகத் தாக்குவார்கள் என உலக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வாறு ஹவுதிக்கள் மன்தீப் நீரிணை பகுதியில் வரும் சரக்குக் கப்பல்களை தாக்கத் தொடங்கினால், ஆப்ரிக்கா பகுதியில் உள்ள, ‘கேப் ஆஃப் குட் ஹோப்’ பகுதி வழியாகத்தான் கப்பல்கள் செல்ல நேரிடும். இந்த வழியே சரக்கு கப்பல்கள் சென்றால், வழக்கத்தைவிட 15 நாட்கள் கூடுதலாகும், செலவும் அதிகரிக்கும்.
ஓமன் வளைகுடா பகுதி கடற்கரை ஈரான், ஓமன் இரு நாடுகளையும் பிரிக்கிறது என்பதால், அங்கும் ஈரான் படைகள் ஆதிக்கம் இருக்கும். ஓமன் கடற்பகுதியில் ஈரானின் எச்சரிக்கையை மீறி கப்பல்கள் செல்லும்பட்சத்தில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களையும் ஈரான் நடத்தலாம். ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் அடைவதற்கு முன்பே, ஈரான் அவற்றின் மீது ட்ரோன்களை ஏவி, அவற்றின் பயணப் பாதையைத் தடுக்கவோ அல்லது குறைந்தது சீர்குலைக்கவோ முடியும்.
சிறப்புக்கட்டுரை | அடுத்த ஐன்ஸ்டீன்.. 12 வயதில் குட்டி விமானம்.. யார் இந்த சப்ரினா பாஸ்ட்டர்ஸ்கி?
உலக அரசியல் வல்லுநர்கள் கூறுகையி்ல், “வளைகுடா பகுதியில் இருந்து கச்சா எண்ணெய்யில் குறிப்பிடத்தகுந்த அளவு செங்கடல் வழியாக, கடலுக்கு கீழே பைப் மூலம் சவுதி அரேபியா அனுப்புகிறது. கப்பல்கள் மூலம் 7% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கிறது. ஒருவேளை, ஹவுதி படையினர் ஈரானுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தினால், சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் ஆப்பிரிக்கா சுற்றித்தான் செல்ல வேண்டும். சவுதி அரேபியா தனது எண்ணெய் வர்த்தகத்தில் 70% பங்கை, செங்கடல் பகுதியில் உள்ள யான்பு துறைமுகம் வழியாக நடத்துகிறது. இந்தப் பகுதியில் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினால், உலக எண்ணெய் வர்த்தகம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு, பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். ஈரானில் உள்ள ஆளும் மதகுருக்கள், அமெரிக்காவுக்கு வேறுவிதத்தில் அழுத்தம் தர திட்டமிட்டுள்ளனர்.
ஒருவேளை, ஹவுதி படையினர் ஈரானுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தினால், சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் ஆப்பிரிக்கா சுற்றித்தான் செல்ல வேண்டும்.
அதாவது, செங்கடல் வழியாக நடைபெறும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து மற்றும் சவுதி எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல் விடுத்து, உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாகும். இந்தப் பகுதியில் ஹவுதி படையினர் அமெரிக்க எதிர்ப்பின் அச்சாணியாக விளங்குகிறார்கள். ஏற்கெனவே ஈரானுக்கு ஆதரவாக லெபானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஈராக்கின் ஷிட்டி கிளர்ச்சிப் படையினரும் சேர்ந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் போரிட்டு வருகிறார்கள். இன்னும் ஹவுதி படையினர் போரில் இணைவதாக முறைப்படி தெரிவிக்கவில்லை. ஒருவேளை, ஹவுதிக்கள் போரில் இணைந்தால், உலக எண்ணெய் வர்த்தகம் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்” எனத் தெரிவிக்கிறார்கள்.