ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களைப் பிரதமர் நரேந்திர மோடி படித்திருக்கக் கூடும் அல்லது படிக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய வார்த்தைகளில் உள்ள உண்மைகளை அப்படியே உள்வாங்கியிருக்கிறார்: ‘நட்புறவில் முகஸ்துதிக்கும் முக்கியப் பங்கிருக்கிறது’ (ஆறாவது ஹென்றி). அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கருதப்படும் இந்தியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுதல், விசாக்கள் (கடவுச் சீட்டு), வர்த்தக சமநிலை, காப்பு வரிகள், அணுவிசை, தென் சீனக் கடல் உரிமை விவகாரம், ‘பிரிக்ஸ்’ – ‘குவாட்’ அமைப்புகளின் நோக்கம், தடையற்ற வர்த்தக உடன்பாடு (எஃப்.டி.ஏ.) ஆகியவை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசுவதற்கு, அவரைப் புகழ்ந்து வைப்பது கைகொடுக்கும் என்று நினைக்கிறார் மோடி.
அதிபர் டிரம்புக்கு (அமெரிக்க அரசமைப்புச் சட்டப்படி) அதிகபட்சம் 4 ஆண்டுகள்தான் பதவிக்காலம் - அதற்கு மேல் வாய்ப்பில்லை; பிரதமர் மோடிக்கும் இன்னும் 4 ஆண்டுகள்தான் பதவிக்காலம் - அதற்குப் பிறகும் பிரதமராகத் தொடர அவருக்கு ஆசை இருப்பதாக நம்பப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும், பொதுவான இந்த நான்கு ஆண்டுகளுக்குள் தீர்வு கண்டுவிட முடியாது என்பது வெளிப்படை. அமெரிக்க அரசில் அடுத்து அதிபராகப் பதவியேற்கவிருப்பவர் குடியரசு அல்லது ஜனநாயக கட்சி ஆகியவற்றில் எதைச் சேர்ந்தவராக இருந்தாலும் டிரம்ப் சென்ற அதே பாதையில் பயணிக்க விரும்பாமல் மாறவும் வாய்ப்பு உண்டு.
இந்தியாவுக்கு இங்கேதான் முதல் பாடம் காத்திருக்கிறது. இரு தலைவர்களுக்கு இடையிலான ‘தனிப்பட்ட நட்புக்கும்’ அப்பால், இரு நாடுகளின் உறவுகள் குறித்துப் பார்த்தாக வேண்டும். இதற்கும் மேலாக, டிரம்பின் குணாதிசயங்களைப் பொருத்தவரை - அவருக்கு ‘நண்பர்’ எப்போது ‘பகையாளி’ ஆவார், ‘பகைவன்’ எப்போது ‘நண்பனாவார்’ என்று எவராலும் ஊகிக்கவும் முடியாது.
லெக்ஸ் பிரிட்மேன் என்ற ‘பாட்காஸ்டருக்கு’ அளித்த நேர்காணலில், டிரம்பின் ‘பணிவான குணம்’, ‘தோல்விகளிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் மீளும் திறன்’ குறித்து தாராளமாகப் புகழ்ந்திருக்கிறார் மோடி. ‘இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்ற காலத்தில் முன்பைவிட அதிக முன் தயாரிப்புகளோடு வந்திருக்கிறார், நன்கு வரையறுக்கப்பட்ட வழிமுறைகளுடன் – தனது இலக்கை அடைவதற்காக செல்ல வேண்டிய பாதையைப் பற்றி தெளிவான திட்டங்களுடன் இருக்கிறார் டிரம்ப்’ என்று கூறியிருக்கிறார்.
‘அதிபர் டிரம்பின் தொலைநோக்குப் பார்வையை அமல்படுத்தும் முழு ஆற்றலோடு, வலிமையான நிர்வாகிகள் அணியைக் கொண்டிருக்கிறார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். டிரம்ப் தொடர்பாக மிகவும் தாராளமாக மோடி வழங்கியிருக்கும் புகழுரைகளை சரி என்று எல்லா அமெரிக்கர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவின் அனைத்து செனட்டர்களும் - மக்கள் பிரதிநிதிகளும் டிரம்ப் தேர்வு செய்திருக்கும் அமைச்சர்கள் திறமைசாலிகள் என்றோ வலிமையானவர்கள் என்றோ கருதவில்லை. டிரம்பின் ‘தொலைநோக்குப் பார்வை’ அமெரிக்காவுக்கோ அல்லது உலகுக்கோ நல்லது என்று அனைத்து அமெரிக்கர்களுமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
அதிபர் டிரம்ப் ஒருவேளை தன்னுடைய தொலைநோக்கு திட்டங்களை அமல் செய்யத் தொடங்கினால், அது இந்தியாவுக்கு நன்மையாக அமையாது. டிரம்ப் தன்னுடைய இலக்குகளை வெற்றிகரமாக எட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம், இவையெல்லாம் நடந்தே தீரும் –
எந்தவித முறையான ஆவணமும் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் (சுமார் ஏழு லட்சம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்) இந்தியாவுக்கே மீண்டும் திருப்பி அனுப்பப் படுவார்கள்:
பச்சைநிற அட்டையுடன் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்படும்
அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடிமக்களில் பெரும்பாலானவர்களால் அவர்களுடைய குடும்பங்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடியாது
தகுதிவாய்ந்த இந்தியர்களுக்கு அளிக்கப்படும் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்
ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள், போர்போன் விஸ்கி, ஜீன்ஸ் மற்றும் பிற அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் காப்பு வரியை (இறக்குமதி வரி) இந்திய அரசு கணிசமாகக் குறைக்கும்படி கட்டாயப்படுத்தப்படலாம்
இந்தியாவில் தயாராகும் அலுமினியம், உருக்கிரும்புப் பொருள்களும் இதர பொருள்களும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட முடியாமல், காப்பு வரியைக் கட்டாயமாக்கி தங்களுடைய நாட்டுக்குள் இந்தியப் பொருள்கள் அதிகம் வந்துவிடாமல் அமெரிக்காவால் தடுக்க முடியும்
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் திறக்கும் வகையிலான அமெரிக்க தனியார் முதலீடுகளுக்கு டிரம்ப் அரசு ஆதரவு தராமல், அதை சொந்த நாட்டிலேயே தயாரிக்குமாறு வலியுறுத்தக் கூடும்
தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்க நாட்டுக்கே அதிக சாதகம் ஏற்படும் வகையில் பேச்சு வார்த்தையின்போது நெருக்குதல் தரப்படலாம் அல்லது அமெரிக்காவுடனான வர்த்தக முயற்சிகளே கைகூடாமலும் போகலாம்.
அதிபர் டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டையோ இலக்குகளையோ மாற்றிக்கொள்ள மாட்டார் என்பதே இப்போதைய நிலை என்று அரசியல் சூழல் தெரிவிக்கிறது. அமெரிக்காவை மீண்டும் மகோன்னதமாக மாற்றுவேன் அல்லது அமெரிக்க நலனுக்கே முதலிடம் என்ற டிரம்பின் கொள்கையை, மோடி கொண்டிருக்கும் தனிப்பட்ட நட்போ - முகஸ்துதியோ நிச்சயம் மாற்றிவிடாது.
புவிசார்ந்த அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா எடுக்கும் முடிவுகளுக்கு மோடியின் எதிர் விளைவு என்னவாக இருக்கும்? – விரைவாகவும் அதிகம் ரத்த சிந்த இடம் கொடாமலும் பனாமா கால்வாயை அமெரிக்கா தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால் மோடி என்ன சொல்வார்? இப்போது உள்ளபடியே எந்த நாட்டுக் கப்பலும் அதன் வழியாகச் செல்லலாம் என்றால் இந்தியாவும் சரி வேறு எந்த நாடும் சரி எதிர்க்க வாய்ப்பே இல்லை; ஆனால் சர்வதேச சட்டங்களுக்கு முரணான பிரதேச ஆக்கிரமிப்பாகத்தான் அச்செயல் இருக்கும்.
அடுத்தபடியாக, கிரீன்லாந்து நாட்டை – ‘ஏதோ ஒரு வகையில்’ – அமெரிக்கா கைப்பற்றி தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுவிட்டால் மோடியின் எதிர்வினை என்னவாக இருக்கும்? கிரீன்லாந்து நமக்கு மிகவும் தொலைவில் உள்ள பிரதேசம் – அங்கு எது நடந்தாலும் நமக்கு பாதிப்பில்லை என்று இந்தியாவால் சொல்ல முடியுமா? இப்படி அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்காமல் மன்னித்துவிட்டுவிட்டால் நாளை பிற நடவடிக்கைகளை எப்படி எதிர்ப்பது? உக்ரைனை ரஷியாவும் - தைவானை சீனாவும் கைப்பற்றிக் கொண்டால் எப்படி எதிர்வினையாற்றுவது? இந்தியாவின் அக்சாய்-சின் பகுதியையோ, அருணாசலப் பிரதேசத்தையோ கைப்பற்றும் முயற்சியில் சீனம் ஈடுபடாமல் தடுக்கப்போவது எது? அதிக ரத்தம் சிந்தும் அளவுக்கான பெரும் போர் அடுத்து மூளும். அப்போது எந்த நாடு இந்தியாவுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கும்?
நவீனகால வெளியுறவுக் கொள்கையில், தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நட்புறவைவிட - ராஜதந்திர நடவடிக்கைகள்தான் முக்கியம். மோடியோ இந்தியாவோ அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியுடனான உறவை முழுதாக முறித்துக் கொண்டு, டிரம்ப் ஒருவரை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது.
எது எப்படியானாலும் 2029 ஜனவரி 19-க்குப் பிறகு, அமெரிக்க அதிபராக டிரம்ப் இருக்கப் போவதில்லை. அடுத்து அதிபராக வரப் போகிறவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். இதற்கிடையில், அமெரிக்காவுடன் இப்படி முழுதாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால் கனடா, ஐரோப்பிய நாடுகள் – குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், டென்மார்க் – ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா அந்நியப்பட்டுவிடும்.
கடந்த பத்தாண்டுகளாக, உள்நாட்டுத் தொழில் – வாணிபத்தைக் காக்க இறக்குமதி வரியை அதிகம் விதிக்க வேண்டும் என்ற காப்பு வரிக் கொள்கையை வலுவாக ஆதரித்தவர் பிரதமர் மோடி. அதை அவர் ‘ஆத்மநிர்பரதா’ என்றே அழைத்தார். அரவிந்த் பனகாரியா உள்பட பலரின் நல்ல பல ஆலோசனைகளுக்கு எதிராக, ஐந்நூறுக்கும் மேற்பட்ட பண்டங்களின் இறக்குமதி மீது அதிக இறக்குமதி வரியையும் அளவுக் கட்டுப்பாடுகளையும் விதித்தது அரசு. இந்தியப் பண்டங்கள் மீது அமெரிக்க அரசு இறக்குமதி வரியை அதிகப்படுத்தும் என்ற அறிவிப்புக்கு மோடி எதிர்ப்பு தெரிவித்தபோது, அதைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை டிரம்ப். ஏப்ரல் 2, 2025 முதல், காப்பு வரிக்கான போரை (நடவடிக்கைகள் மூலம்) தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துவிட்டார் டிரம்ப். என்னதான் நட்புறவு இருந்தாலும் அளவுக்கு அதிகமாக டிரம்பை நேர்காணலில் மோடி புகழ்ந்திருந்தாலும், இந்த காப்பு வரி விதிப்புகளில் இந்தியாவுக்கு எந்தவித தனி விலக்கையும் அமெரிக்கா அளிக்கப்போவதில்லை; இந்தியா என்ன செய்யும் - பதிலுக்கு காப்பு வரியை அதிகப்படுத்துமா?
சர்வதேசக் கொள்கைகள் அடிப்படையில் பிற நாட்டுடன் தொடர்பு கொள்வதும், பேசுவதும்தான் ராஜதந்திரமாகும்… முகஸ்துதி அல்ல. ஜெர்மனியில் அடுத்து நிர்வாகத்துக்கு வரவிருக்கும் பிரடெரிக் மெர்ஸ், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் தெர் லெயின் ஆகியோர் 27 நாடுகளை வெற்றிகரமாகத் தங்களுடன் இணைத்துக் கொண்டு, சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதிக்கும் டிரம்பின் ‘வாடி வாசல் துள்ளோட்டத்தை’ வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப் போகின்றனர்.
நல்லறிவாளர்களின் குரல்களுக்கு ஆதரவாக, இந்தியா நிற்க வேண்டும்!