தேசிய கீதம் பாடலான ‘ஜன கண மன’ பாடலுக்கு எந்த அளவு சட்டப் பாதுகாப்பு இருக்கிறதோ அதற்கு ஈடான அந்தஸ்து ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் அளிக்கப்பட்டு ‘தேசிய கெளரவம் மீதான அவமதிப்பு சட்டத்திருத்த மசோதா 2026’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாகினால், ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடும்போது உள்நோக்கத்துடன் தடுத்தல் அல்லது கூட்டமாகப் பாடும்போது அதற்கு தொந்தரவு செய்வதுபோல் நடந்தால், அது கிரிமினல் குற்றமாகும். 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மத்திய அரசு இந்த மசோதா குறித்துக் கூறுகையில் “தேசிய கீதத்துக்கு இணையான கெளரவத்தை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு வழங்க வேண்டும் என்று 1950ஆம் ஆண்டில் அரசியல்சாசனக் குழுவின் முடிவை இந்தச் சட்டத்திருத்தம் நிறைவு செய்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளது.
வங்காள எழுத்தாளர் பகிம் சந்திர சாட்டர்ஜி என்பவரால் 1882ஆம் ஆண்டு ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டது. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக மிகக்கூர்மையான அடையாளமாக இருந்தன. குறிப்பாக, 1905ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தின்போது வலிமையாக ஒலித்தது. இந்தப் பாடலின் முதல் இரு வரிகளை, ஆங்கிலயேர் ஆட்சியில்கூட, முஸ்லிம்களின் ஒருபகுதியினரும், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்த்தனர். இருவரிகளும், இந்தியாவை நேரடியாக இந்துப் பெண் தெய்வங்களான துர்கை, லட்சுமியாக உருவகப்படுத்தின.
இந்துக்கள் அல்லாத சமூகத்தினரை அந்நியப்படுத்துவதோடு, வகுப்புவாதப் பிளவை அதிகமாக்கி ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு ஏதுவாக இருக்கும் என பலர் வாதிட்டனர். 1937ஆம் ஆண்டு அக்டோபரில் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்கூட இந்த விவாதம் தீவிரமாக நடந்தது. இந்தப் பாடல் தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது, ஜவஹர்லால் நேருவால் மட்டும் அல்லாமல் பல முக்கிய தலைவர்களும் அங்கீகரித்தனர்.
ராஜேந்திர பிரசாத் தீர்மானத்தை முன்மொழிய வல்லபபாய் படேல் அதை ஆதரித்தார். காந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார், கூட்டத்தில் ரவீந்திரநாத் தாகூருடன் பாடல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அவர் கூறுகையில், “குறிப்பிட்ட மத உருவங்களைத் தூண்டாமல் நாட்டைக் கொண்டாட முதல் இரண்டு வரிகளைப் மட்டுமே பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்” என்று அறிவுறுத்தினார்.
தேசிய அளவில் மக்களைக் கூட்டுவதற்கு மட்டும் வந்தே மாதரத்தின் முதல் இரு வரிகளை பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஒருமனதாக முடிவு செய்தது. இந்த உடன்பாடு, பிற்காலத்தில் அரசியல்சாசன நிர்ணய சபையின் அணுகுமுறையை வடிவமைத்தது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவிப்பில், “'ஜன கண மன' தேசிய கீதமாக இருக்கும், சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக 'வந்தே மாதரம்' பாடலும் அதற்கு இணையான கௌரவம் பெறும்” என்று தெரிவித்தார். இருப்பினும், தேசிய கீதத்துக்கு அளிக்கப்பட்ட அதே அரசியலமைப்பு அந்தஸ்தைத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அரசமைப்புச் சபை வழங்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்பும் இந்த வேறுபாடு தொடர்ந்தது. அரசியலமைப்பின் 51ஏ(ஏ) பிரிவு, தேசியக் கொடி, தேசிய கீதம், அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை மக்கள் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அது தேசியப் பாடலைக் குறிப்பிடவில்லை. அதேபோல, தேசிய கெளரவம் மீதான அவமதிப்பு சட்டம் 1971இல் தேசிய கீதம், அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொடி ஆகியவற்றுக்கு சட்டப் பாதுகாப்பு அளித்ததே தவிர, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு வழங்கவில்லை. நீதிமன்றங்களும் இந்த வேறுபாட்டை அங்கீகரித்துள்ளன.
1986ஆம் ஆண்டு கேரள அரசு மற்றும் 'பிஜோ இம்மானுவேல்' இடையிலான வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தில், “மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாடுவதிலிருந்து விலகி இருக்க அவரின் அடிப்படை பேச்சு உரிமை, வழிபாட்டு உரிமை வகை செய்கிறது. ஆனால், அவர்கள் மரியாதையுடன் எழுந்து நிற்பது கடமை” என்று உத்தரவிட்டது. 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவிக்கையில், “அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தை அங்கீகரித்தாலும், சட்டப்படி 'தேசியப் பாடல்' என்ற கருத்து ஏதுமில்லை” எனக் குறிப்பிட்டது.
தேசிய கெளரவம் மீதான அவமதிப்பு சட்டம் 1971, என்பது, இந்திய தேசிய அடையாளங்களை அவமதிப்பதற்கு எதிரான தாய்ச்சட்டமாகும். இது கடந்த 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, தேசியக் கொடி, தேசிய கீதம், அரசியலமைப்புச்சட்டம் ஆகியவற்றுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கியது. தேசிய அடையாளங்களான இவற்றை அவமரியாதை செய்தால், 3 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும், அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
பிரிவு-2இன்படி, தேசியக் கொடியை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பொதுவெளியில் எரித்தாலோ, அவமதிப்பு செய்தாலோ, அழித்தாலோ, கிழித்தாலோ, சேதம் விளைவித்தாலோ சட்டப்படி குற்றமாகும். பிரிவு-3இன்படி, தேசிய கீதம் பாடும்போது உள்நோக்கத்துடன் ஒரு தடுத்தலும், கூட்டமாகக் கூடிநின்று தேசிய கீதம் பாடும்போது அதற்கு இடையூறு செய்தாலும் குற்றமாகும். பிரிவு 3ஏ என்பது, பின்னாலில் சேர்க்கப்பட்டது, இதன்படி, அதைத் தொடர்ந்து செய்தால், கடுமையான தண்டனை வழங்கவும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கெளரவம் மீதான அவமதிப்பு சட்டம் 1971இல் பிரிவு 3இல் மாற்றம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில், பிரிவு-3இல், தேசிய கீதம் பாடலை பாடும்போது உள்நோக்கத்துடன் அதற்கு இடையூறு செய்தல், ஒரு கூட்டத்தினர் தேசிய கீதம் பாடலைப் பாடும்போது இடையூறு செய்தல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, ஏற்கெனவே இருக்கும் பிரிவில், புதிய பகுதி சேர்க்கப்பட்டு, தேசிய கீதத்துக்கு இருக்கும் அதே சட்டப் பாதுகாப்பு, தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை நடந்தபோது, கூறிய காரணங்கள், நோக்கங்களை அடிப்படையாகவைத்து, மத்திய அரசு இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. அரசியல் நிர்ணயசபையில் பேசிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், “ ‘வந்தே மாதரம பாடலை இயற்றிய பக்கிம் சந்திர சாட்டர்ஜியும், தேசிய விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்களிப்பு செய்துள்ளார். ஆதலால், ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான அந்தஸ்தை தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு வழங்க வேண்டும்” என்றார். இருந்தபோதிலும், தேசிய கீதத்துக்கு இருக்கும் சட்டப்பாதுகாப்பு, அங்கீகாரம் 'வந்தே மாதரம்' பாடலுக்கு இல்லை. புதியச் சட்டத்திருத்தத்தின் மூலம் தேசிய கீதம், தேசியப் பாடல் இரண்டுக்கும் இருக்கும் இடைவெளி நீக்கப்பட்டுள்ளது, இரண்டு பாடலையும் அவமதித்தாலோ அல்லது பாடும்போது இடையூறு செய்தாலோ, உள்நோக்கத்துடன் அவமதித்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
இல்லை. வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று புதிய சட்டத்திருத்த மசோதாவில் இல்லை. ஆனால், தேசிய கீதத்துக்கு வழங்கும் மரியாதை, கெளரவம் அனைத்தையும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் மக்கள் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தேசிய கீதம் பாடவிருப்பம் இல்லாவிட்டாலும்கூட, அது பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்று கூறியது, தேசிய பாடலுக்கும் இனிப் பொருந்தும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளோடு தொடர்புடைய அமைப்புகள் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீண்டநாளாக கோரிக்கையாக கூறி வந்தன. இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் பல மாநிலங்களில் பள்ளிகள், சட்டப்பேரவை மற்றும் பொது நிறுவனங்களில் 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதை, இசைப்பதை ஆதரித்தன. அதைக் கட்டாயமாக்கும் செயலையும் செய்தன. இம்மசோதாவை ஆதரிப்பவர்கள், இரு தேசியச் சின்னங்களுக்கு இடையிலான சட்டரீதியான வேறுபாட்டை நீக்கியிருக்கிறது என வாதிடுகின்றனர்.
‘வந்தே மாதரம்’ மசோதாவை காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்தன, நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. எதிர்க்கட்சிகளி்ன் கூற்றுப்படி, “இந்துத்துவா திட்டத்தை முன்னெடுக்க பாஜக அரசு செய்யும் மற்றொரு நடவடிக்கை. இந்தியத் தேசியவாதத்தை வெளிப்படையான இந்துப் பெரும்பான்மைவாதக் கண்ணோட்டத்தில் மறுவரையறை செய்வதற்கான மற்றொரு முயற்சியாகவும் பார்க்கிறது” என விமர்சித்தனர்.
'வந்தே மாதரம்' பாடலைப் பயன்படுத்துவது குறித்து 1937ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் வரலாற்றை பாஜக தவறாகச் சித்தரிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
மாநிலங்களவையில் சிபிஐ(எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், பேசுகையில், “அரசியலமைப்பும் நாடாளுமன்றமும் தேசியப் பாடலையும் தேசிய கீதத்தையும் ஒரே சட்ட அந்தஸ்தில் வைக்காமல் வேண்டுமென்றேதான் வேறுபடுத்தி வைத்துள்ளன. தேசிய கீதத்திற்கு இணையான கௌரவம் 'வந்தே மாதரம்' பாடலுக்கும் அளிக்கப்படும் என்று ராஜேந்திர பிரசாத் சட்டப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. இரு பாடல்களுக்கும் ஒரே மாதிரியான சட்டப் பாதுகாப்பை வழங்கும் வகையில் அரசியல் நிர்ணய சபை எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. இப்போது தேசியப் பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கியது மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, மனசாட்சி மற்றும் மதச் சுதந்திரம் உள்ளிட்ட அரசியலமைப்பின் 14, 19(1)(ஏ), 21 மற்றும் 25 ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாக அமையும்” எனத் தெரிவித்தார்.